Tuesday, June 30, 2026

பறத்தலை நிறுத்திய வானம்பாடி: கவிஞர் புவியரசு மறைந்தார்!

கவிஞர்  புவியரசு!

வானம்பாடி கவிதை இயக்கத்தின் பிதாமகன் என அழைக்கப்படுபவரும், கவிஞரும், சிறந்த மொழிபெயர்ப்பாளருமான கவிஞர் புவியரசு அவர்கள் தனது தொண்ணூற்றாறாவது வயதில் மறைந்த செய்தியினை அறிந்தேன். மூப்பின் காரணமாக மறைந்த மார்க்சியவாதியான கவிஞர் புவியரசுவின் மறைவு  தவிர்க்க முடியாதது என்றாலும் பேரிழப்பே. அவர் மறைவால் துயரில் ஆழ்ந்திருக்கும் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல்.

அவர் நினைவாக , முகநூலில் கலை,இலக்கிய விமர்சகரும், கவிஞருமான இந்திரன் அவர்கள் பகிர்ந்திருந்த கவியரசர் புவியரசு பற்றிய ஆவணத்திரைப்படத்துக்கான இணைய இணைப்பை இங்கு பகிர்ந்து கொள்கின்றேன் - https://youtu.be/voUc3CTs4lI

அத்துடன்  கவிஞர் புவியரசு பற்றிய விக்கிபீடியாக் குறிப்பையும், கவிஞரின் மொழிபெயர்ப்பில் வெளியான கரமசோவ் சகோதரர்கள் பற்றி நான் முன்பு எழுதியிருந்த குறிப்பினையும் பகிர்ந்து கொள்கின்றேன்.
1. கவிஞர் புவியரசின் மொழிபெயர்ப்பில் தஸ்தயேவ்ஸ்கியின் கரமசோவ் சகோதரர்கள்.....  - வ.ந.கிரிதரன் -

'கரமசோவ் சகோதரர்கள்' தஸ்தயேவ்ஸ்கியின் மிகச்சிறந்த நாவல் மட்டுமல்ல. உலக இலக்கியத்தின் சிறந்த நாவலாகவும் கருதப்படுவது. இதன் தமிழ் மொழிபெயர்ப்பினை 'நியூ செஞ்சுரி புக்ஸ்' பதிப்பகமும் (கவிஞர் புவியரசு மொழிபெயர்ப்பிலும்) , காலச்சுவடு பதிப்பகமும் (நேரடியாக ருஷ்ய மொழியிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்து 'கரமஸாவ் சகோதரர்கள் என்னும் தலைப்பில்) வெளியிட்டுள்ளன.

நம்மவர்கள் பலர் அவ்வப்போது ஏன் அவரைப்போல் அல்லது இவரைப்போல் எழுத முடியவில்லையே என்று கண்ணீர் வடிப்பதுண்டு. அவர்கள் முதலில் தஸ்தயேவ்ஸ்கியின் படைப்புகளை வாசிக்கும் பக்குவத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். அவ்விதம் வாசித்தால் அவர்கள் 'அவர்கள், இவர்கள்' என்று விதந்துரைக்கும் எழுத்தாளர்கள் பலரால் தஸ்தயேவ்ஸ்கியின் படைப்புகளைப்போன்ற படைப்புகளை ஏன் வழங்க முடியவில்லை என்பது புரிந்து நிச்சயம் கண்ணீர் விடுவார்கள்.

மானுட வாழ்வின் இருப்பை, இருப்பின் சவால்களை, இருப்பின் இன்பதுன்பங்களை, இருப்பின் நன்மைக்கும் தீமைக்குமிடையிலான மோதல்களை, இருப்பின் நோக்கம் பற்றிய தேடலை தஸ்தயேவ்ஸ்கி எழுதியதுபோல் வேறு யாருமே இதுவரையில் எழுதவில்லை என்பது இதுவரையிலான என் வாசிப்பின் அடிப்படையில் எழுந்த கருத்து. தஸ்தயேவ்ஸ்கியின் படைப்புகளின் ஒவ்வொரு பக்கத்தையும் ஒதுக்கித்தள்ள முடியாது. அது அவரது எழுத்தின், சிந்தனையின் சிறப்பு.

வக்கிரமான உணர்வுகளும், காமமும் மிகுந்த ஒரு பணக்காரத்தந்தை, அவரது மூன்று வகைக்குணவியல்புகளுள்ள மூன்று புத்திரர்கள், அவருக்கும் பிச்சைக்காரியொருத்திக்குமிடையில் முறை தவறிப்பிறந்ததாகக் கருதப்படும் இன்னுமொரு புத்திரன், அவரது வேலைக்காரன், மூன்று புத்திரர்கள் வாழ்விலும் புகுந்துவிட்ட பெண்மணிகள், அந்தப்பெண்மணியிலொருத்திக்கும் மூத்த புத்திரனுக்கும், தந்தைக்குமிடையிலுமான காதல், காம உணர்வுகள், மேலுமிரு சகோதரர்களுக்குமிடையில் வரும் இன்னுமொரு பெண்மணி , ஒரு துறவி என வரும் முக்கியமான பாத்திரங்களை உள்ளடக்கிப் பின்னப்பட்டிருக்கும் மகாநாவல் கரமசோவ் சகோதரர்கள். 

நாவலின் பின்பகுதியில் வரும் தந்தையின் மரணமும் , 

சந்தர்ப்பசூழ்நிலைகளால் மூத்தமகன் குற்றஞ்சாட்டப்படுவதும், உண்மையில் அக்கொலையின் சூத்திரதாரியான முறைதவறிப்பிறந்த புத்திரன் தற்கொலை செய்வதும், இருந்தும் நீதிமன்றத்தால் மூத்தவன் தண்டிக்கப்படுவதும், அது பற்றி நிகழும் நீதிமன்ற வாதிப்பிரதிவாதங்களும் வாசித்து அனுபவித்து மகிழ வேண்டியவை.

இந்நாவலின் பக்கங்களில் விரியும் மானுடத்தேடல் பற்றிய உரையாடல்கள், எண்ணங்கள், மானுடத்துயரத்திற்கான தீர்வு பற்றிய சிந்தனைகள் (மதமா அல்லது சோசலிசம் போன்ற அரசியல் தீர்வுகளா என்பவை பற்றிய), மானுடத்தின் உணர்வுரீதியிலான இயல்புகள் (நன்மை, தீமை, காதல், காமம் என்பவற்றால் சதா மோதல்களுக்குள்ளாகிக்கொண்டிருக்கும் உணர்வுகள் பற்றிய) பற்றிய தேடல் மிக்க எண்ணங்கள் என விரியுமிந்த நாவலை வாசிப்பதே ஓர் அனுபவம்.

தஸ்தயேவ்ஸ்கியைப்பற்றிக்குறிப்பிடும்போது அவரைப்போல் மனிதரைப்பற்றி இவ்வளவு விரிவாக எழுதியவர் யாருமிலர் என்று குறிப்பிடுவார்கள். அவரது குற்றமும், தண்டனையும், அசடன் மற்றும் கரமசோவ் சகோதரர்கள் ஆகிய நாவல்களைப்படிப்பவர்கள் அக்கூற்று எவ்வளவு தூரம் உண்மையென்பதைப்புரிந்து கொள்வார்கள்.

இந்நாவலை அதன் ஆங்கில மொழிபெயர்ப்பில் வாசித்திருக்கின்றேன். அதன் பின்னர் அண்மையில் கவிஞர் புவியரசுவின் மொழிபெயர்ப்பில் வெளிவந்த பிரதியை வாங்கி வைத்துவிட்டு ஒரு சில பக்கங்களை வாசித்துவிட்டு அவ்வளவு ஆர்வமின்றி வைத்திருந்தேன். மீண்டும் அண்மையில் மீண்டும் எடுத்து ஆறுதலாக வாசித்துப்பார்த்தேன். அப்பொழுதுதான் புரிந்துகொண்டேன் எவ்வளவு அற்புதமாக நாவலைத்தமிழில் கவிஞர் புவியரசு தந்திருக்கின்றார் என்பதை. இங்கு நான் நாவலை மூலத்துடன் ஒப்பிட்டு ஆராயவில்லை. தமிழ்ப்படைப்பின் மொழியின் சிறப்பை மையமாக வைத்துக்கூறுகின்றேன். கவிஞர் புவியரசு தமிழில் பாண்டித்தியம் பெற்றவராதலால், தேவையற்ற ஆங்கிலப்பிரயோகம் ஏதுமற்று, இலக்கணச்சிறப்பு மிக்க தமிழில் நாவலைத் தமிழில் வழங்கியிருக்கின்றார். அவரது தமிழில் நாவலை வாசிப்பதும் இன்பமே

விக்கிபீடியாக் குறிப்பு: புவியரசு (1930 - 30 சூன் 2026) தமிழ்க் கவிஞரும் மொழிபெயர்ப்பாளரும் ஆவார். இவர் 2009-இன் தமிழுக்கான சாகித்திய அகாதமி விருது பெற்றவர்.

வாழ்க்கைக் குறிப்பு

புவியரசு உடுமலைப்பேட்டைக்கு அருகிலுள்ள லிங்கவநாயக்கன் புதூர் கிராமத்தில் சுப்பையா என்பவருக்கு மகனாகப் பிறந்தவர். இவரது இயற்பெயர் சு. ஜெகநாதன். ஜெகநாதன் என்ற சமஸ்கிருத வார்த்தையின் தமிழாக்கம் தான் புவியரசாகும். இவரின் பெற்றோர் கிராமத்திலிருந்து குடிபெயர்ந்து கோயம்புத்தூரில் வசித்தனர். இவர் இடைநிலைப் பட்டத்தைக் கோயம்புத்தூர் அரசுக் கலைக் கல்லூரியிலும் தமிழ் வித்வான் பட்டத்தைப் பேரூர் தமிழ்க் கல்லூரியிலும் பெற்றார். இவர் 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆசிரியராகப் பணிபுரிந்தார். 

இவரது படைப்புகள் 1952-இலிருந்து வெளிவரத் தொடங்கின. இவர் அரசியல்ரீதியாக ஒரு மார்க்சிசவாதி. திராவிடக் கட்சிகளுக்கு எதிரானவர். இவர் தமிழ்மொழியைத் தமிழ்நாட்டின் ஆட்சிமொழியாக்குவதற்கு நடந்த போராட்டங்களிலும் எல்லைப் போராட்டங்களிலும் ஈடுபட்டுச் சிறை சென்றவர். சிறிதுகாலம் மட்டும் இயங்கிய வானம்பாடி இலக்கிய இயக்கத்தைத் தோற்றுவித்தவர்களில் இவரும் ஒருவர். 

தனது இலக்கியப் பயணத்தில் 80-இற்கும் மேற்பட்ட படைப்புகளைத் தந்துள்ளார். ஷேக்ஸ்பியர், கலில் கிப்ரான், உமர் கய்யாம், ஓஷோ, ஃபியோடார் டாஸ்டோவ்ஸ்கி, ரவீந்திரநாத் தாகூர் ஆகியோரின் படைப்புகளைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். இவரது சில கவிதைகள் ஆங்கிலம், உருசிய, அங்கேரி, சிங்கள மொழிகளிலும் இந்திய மொழிகளான மலையாளம், கன்னடம் மற்றும் இந்தியிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இவரது கவிதை புரட்சிக்காரன் 2007-இல் மொழிபெயர்ப்புக்கான சாகித்திய அகாதமி விருது பெற்றது. இக்கவிதை காஜி நஸ்ருல் இஸ்லாம் எழுதிய தி ரெவலூஷனரி என்ற கவிதையின் தமிழ் மொழிபெயர்ப்பாகும். இவரது கவிதைத் தொகுப்பான கையொப்பம் 2009-இன் தமிழுக்கான சாகித்திய அகாதமி விருது பெற்றது. தமிழ் ஆசிரியர்களுக்கு முறையான பயிற்சி அளிப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட அறக்கட்டளையானது, புவியரசு வளர்ச்சி மையம் என இவரது பெயரால் அழைக்கப்படுகிறது.

கோயம்புத்தூரில் வசித்து வந்த கவிஞர் புவியரசு 2026 சூன் 30 அன்று காலமானார்.

எழுதிய நூல்கள் (முழுமையானதல்ல)

மொழிபெயர்ப்புகள்

தி புக் ஆஃப் மிர்டாட் - மிகய்ல் நய்மா (ஓஷோவினால் பாராட்டப்பட்ட இப்புத்தகத்தை 'மிர்தாதின் புத்தகம்' என தமிழில் மொழி பெயர்த்தார்.) !
தி பிரதர்ஸ் கரமஸவ் (கரமசௌ சகோதரர்கள்) - ஃபியோடார் டாஸ்டோவ்ஸ்கி
ஹாம்லெட்
ஒத்தல்லோ
ரோமியோ அண்ட் ஜூலியட்
உமர் கய்யாமின் ருபாயத்
நாடகங்கள்
மனிதன்
மூன்றாம் பிறை

விருதுகள்

சாகித்திய அகாதமி விருது (மொழிபெயர்ப்பிற்கு) - 2007
கலைஞர் பொற்கிழி விருது - 2008
சாகித்திய அகாதமி விருது (தமிழுக்கு) - 2009
சாகித்திய புரஸ்கார் விருது - கேரள பண்பாட்டு மையம்
தமிழ்நாடு அரசின் சிறந்த நூலாசிரியர் பரிசு

இவர் எழுதிய "முக்கூடல்" எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2004 ஆம் ஆண்டிற்கான சிறந்த நூல்களில் புதுக்கவிதை எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.

No comments:

பறத்தலை நிறுத்திய வானம்பாடி: கவிஞர் புவியரசு மறைந்தார்!

கவிஞர்  புவியரசு! வானம்பாடி கவிதை இயக்கத்தின் பிதாமகன் என அழைக்கப்படுபவரும், கவிஞரும், சிறந்த மொழிபெயர்ப்பாளருமான கவிஞர் புவியரசு அவர்கள் தன...