Thursday, June 18, 2026

POTA கண்டு அஞ்சும் GOTA! (குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில் நிம்மதி கொள்வது என்பது ஏது - இலங்கையின் இன்றூள்ள அரசியல் சூழல் பற்றிய அவதானிப்பொன்று!)


முன்னாள் இலங்கையின் அதிபர் ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவால் அறிமுகம் செய்யப்பட்ட பயங்கரவாதத் தடைச் சட்டம் (PTA -Prevention of Terrorism Act)  , அது அறிமுகமான காலத்திலிருந்து, ஆட்சி செய்த கடந்த கால அரசுகளால் மக்கள் மீதான அதிகாரத்தைத் தம் அதிகாரத்தைத்  தப்ப வைப்பதற்காகக் கடுமையாகப் பாவிக்கப்பட்டு வந்திருக்கின்றது. இலங்கை அரசுக்கெதிராக ஆயுதம் ஏந்திய சிங்கள, தமிழ்ப் போராளிகள் மீது அது பாய்ந்திருக்கின்றது. குறிப்பாகக்கடந்த கால இலங்கை அரசுகள் தமிழ் மக்களின் உரிமைப்போராட்டங்களைத் தம் நாட்டு மக்களின் போராட்டம் என்று கருதாமல்,தம் நாட்டுக்கு எதிரானவர்களின் போராட்டம் என்று இனரீதியாக முன்னெடுத்ததால் தமிழ் மக்கள் பல்வேறு வழிகளிலும் கொடுமையான அடக்குமுறைகளுக்கு உள்ளானார்கள். முடிவு தொடர்ச்சியான இனக்கலவரங்கள், முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை என அது எடுத்த உயிர்ப்பலி நாகரிக மனித இனமே நாணத்தக்கது. 

போர்ச்சூழல் நிலவிய காலகட்டத்தில்  மக்கள் குறிப்பாகத் தமிழ் மக்கள் மீது புரியப்பட்ட மனித உரிமை மீறல்கள், யுத்தக் குற்றங்ங்கள் இலங்கை வரலாற்றில் களங்கம் மிக்க துயரக் காலகட்டம்.இன்று முன்னாள் அதிபரும், ஆட்சிக்கு வந்த இரு வருடங்களிலேயே மக்களால் விரட்டியடிக்கப்பட்டவருமான கோத்தபாயா ராஜபக்ச மீதும் அது பாய்ந்திருக்கின்றது. எந்தப் பயங்கரவாதத் தடுப்புத் சட்டத்தை மக்கள் மீது பாவித்துக் கொடிய அடக்குமுறைகளைப் புரிந்தாரோ அதே சட்டத்தைத் தனக்கெதிராகப் பாவிக்கக்கூடாது என்று கோரிக்கை விட்டிருக்கின்றார் கோத்தபாயா ராஜபக்ச. இதனைத்தான் வரலாறு திரும்புகின்றது என்பர். எப்பொழுதுமே வரலாறு  என்னும் நதி ஒரே மாதிரி ஓடுவதில்லை. கொடிகட்டிப் பறந்த எத்தனையோ சாம்ராச்சியங்களைக் கூண்டோடு அழித்துச் சென்ற நதி இது. இப்போது ராஜபக்சக்களின் காலம். 

மகிந்த ராஜபக்சவைப்பொறுத்தவரையில் சிங்கள மக்களைப் பொறுத்தவரையில் இன்னும் மிகுந்த ஆதரவைப்பெற்ற தலைவர். காரணம் - அவர்களைப்பொறுத்தவரையில் அவர் நவீனத் துட்டகைமுனு. எந்த மக்கள் கோத்தபாய அரசைத்தூக்கியெறிந்து , தேசிய மக்கள் சக்தியின் அநுர குமார திசாநாயக்க அரசைப் பதவியில் அமர்ந்தினார்களோ அதே மக்கள் அநுர அரசையும் தூக்கியெறியத் தயங்க மாட்டார்கள். இந்நிலையில் இதனை அநுர அரசு உணர்ந்திருக்கின்றது. அதனால் அவர்கள் மிகவும் நிதானமாகச் சட்டத்தைப் பாவித்துச் செயற்படுகின்றார்கள். இதனைப் பொறுக்க மாட்டாத, அதிகாரத்தை இழந்த கட்சியினர் மீண்டும் கடுமையாக இனவாதத்தைக் கைகளிலெடுத்திருக்கின்றார்கள். இந்த இனவாதத்தை முறியடித்து முன்னைய அரசுகளின் ஊழல், மனித உரிமை மீறல்களைக் குறிப்பாக ஈஸ்டர் தேவாலயக் குண்டு வெடிப்புத்தாக்குதல்கள் போன்றவற்றை அநுர அரசு கையாள வேண்டும்.

அநுர அரசைப்பொறுத்தவரையில் அதன் ஆரோக்கியமான அம்சங்களில் ஒன்று, அதுவும் முக்கியமான ஒன்று - அது இந்நாட்டு மக்களின் அனைத்துப் பிரிவினரின் ஆதரவையும் வேறெந்தக் கடந்தகால அரசுகளையும் விடப் பெற்றிருக்கின்றது.  அடுத்த இன்னுமோர் அம்சம் - அது நாட்டின் பெரும்பான்மையான மக்களின் வர்க்கத்தைப்பிரதிநிதிப்படுத்தும் அரசு. தென்னிலங்கையின் குக்கிராமங்களில் வாழும் பெரும்பான்மையான மக்களின் வர்க்கத்தைப் பிரதிநிதிப்படுத்தும் அமைச்சு. இந்த அரசைக் காலம் கொண்டு வந்திருப்பது காலத்தின் ஆரோக்கியமான விளைவு, இந்த அரசு இனவாதிகளைச் சரியாகக் கையாள்வதும், மக்கள் மத்தியில் உடனுக்குடன் அவர்கள்தம் முகத்திரைகளைக் கிழித்தெறிவதும் அவசியம். அதே சமயம் கடந்த கால அரசுகளின் ஊழல், மனித உரிமை மீறல்களைச் சட்டரீதியாக முன்னெடுப்பதும் அவசியம்.

அதே சமயம் இந்த அரசினால் தமிழ் மக்களின் பிரச்சினைகள் அனைத்தையும் தீர்க்க முடியும் என்று நம்பவில்லை. போரினால் நாட்டு மக்கள் அனைவரும் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள். மக்கள் பொதுவாக இனவுணர்ச்சி, பெருமை மிக்கவர்கள். அவ்வுணர்வுகள் இயல்பானவை. அவற்றைத் தம் அரசியல் நலன்களுக்காக அரசியல்வாதிகள் பாவித்ததன் விளைவுகளே இலங்கையின் கடந்த கால மனித மீறல்களும், தமிழ் மக்களின் விடுதலைப்போரும். அவர்களின் வர்க்கச்சார்புச் செயற்பாடுகளின் விளைவுகளே ஜேவிபியினரின் ஆட்சிக்கெதிரான ஆயுதப் புரட்சிகள்.

இந்நிலையில் மீண்டுமொரு யுத்தச்சூழல் ஏற்படாத வகையில் நாட்டை முன்னெடுத்துச் செல்லல் அவசியம். அதற்கு அனைத்து மக்கள் மீதும் சட்டம் சமமாகப் பிரயோகிப்படுகின்றது என்னும் நிலையை ஏற்படுத்துவது முக்கியம். நாட்டில் மக்கள் அனைவர் மீதும் சட்ட இன, மத, மொழி வேறுபாடற்றுப்பிரயோகிக்கப்படும்போது மக்கள் அனைவரும் அந்நாட்டின் குடிமக்கள் என்று உணர்வார்கள்.

ஆகக்குறைந்தது இந்த அரசு சட்டரீதியாகக் கடந்த கால ஊழல்கள், ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் போன்ற விடயங்களைக் கையாள்வதும், அவற்றை உடனுக்குடன் மக்களுக்கு விளங்கப்படுத்துவதும், குற்றவாளிகள் தண்டனை அடைவதை உறுது  செய்வதும் முக்கியம்.  மக்கள் எதிர்நோக்கும் ஏனைய பிரச்சினைகள் , இனப்பிரச்சினைகள் உட்பட, அனைத்தையும் மீண்டும் பற்றியெரிய விடாமல் பார்ப்பதும், காலப்போக்கில் அவற்றைப் படிப்படியாகக் குறைக்கும் நடவடிக்கைகளை  முன்னெடுப்பதும் அவசியம்.

டிஜிட்டல் ஓவியம் - AI

No comments:

POTA கண்டு அஞ்சும் GOTA! (குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில் நிம்மதி கொள்வது என்பது ஏது - இலங்கையின் இன்றூள்ள அரசியல் சூழல் பற்றிய அவதானிப்பொன்று!)

முன்னாள் இலங்கையின் அதிபர் ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவால் அறிமுகம் செய்யப்பட்ட பயங்கரவாதத் தடைச் சட்டம் (PTA -Prevention of Terrorism Act)  , அது அற...