Tuesday, June 16, 2026

முனைவர் கே.எஸ்.சுப்ரமணியன் ஆங்கில மொழிபெயர்ப்பில் பெருந்தொற்றுக் கவிதைத்தொகுப்பு 'Lockdown Lyrics'!


முனைவர் கே.எஸ்.சுப்ரமணியன் மொழிபெயர்த்துத் தொகுத்த ஆங்கிலக் கவிதைத்தொகுப்பு 'Lockdown Lyrics'. 'டிஸ்கவரி புக் பேலஸ்' பதிப்பக வெளியீடாக வெளிவந்த ஆங்கிலக் கவிதைத்தொகுப்பு. கொரோனா ஊரடங்குச் சூழல் அனுபவங்களைப் பதிவு செய்யும் 103 தமிழ்க் கவிஞர்களின் கவிதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்பு. நூலின் இறுதியில் கவிஞர்களின் புகைப்படங்களுடன் அவர்களைப்பற்றிய சுருக்கமான குறிப்புகள் இடம் பெற்றிருக்கின்றன.

இது கொரோனா பெருந்தொற்றுக்காலத்து அனுபவங்களைப் பதிவு செய்திருக்கும் தொகுப்பு என்னும் வகையில் முக்கியத்துவம் பெறுகிறது.

இதில் எனது கவிதையொன்றும் உள்ளது. அதன தலைப்பு ' A Walk Through Corona - Wrapped Night'

கொரோனா ஊரடகுச் சூழலால் 'டொரோண்டோ' வூட்பைன் குளக்கரையருகில் மனிதர்களின் நடமாட்டம் குறைந்த நிலையைப் பயன்படுத்தி, நரியொன்று தனக்கொரு வளையமைத்துக் குட்டிகளையீன்று வாழத்தொடங்கியதை இம்மாநகரத்து மக்கள் வியப்புடனும், அன்புடனும் பார்த்தார்கள். மான்கள் நகரின் மையத்தில் நடமாடின.

அதுவரை பதுங்கிக் கிடந்த மிருகங்களெல்லாம் நகரத்தின் மையத்துக்கே வரத்தொடங்கியிருந்தன. உலகின் பல பகுதிகளில் இவ்விதமான காட்சிகளைக் காண முடிந்தது. கொரோனா என்றால் எனக்கு அந்த நரிக்குடும்பமும் நினைவுக்கு வரும். அக்குடும்பம் ஓரடையாளம். இக்கவிதையிலும் அந்நரிக்குடும்பத்தைப் பதிவு செய்துள்ளேன். 

இக்கவிதைத்தொகுப்பில் 103 கவிஞர்களின் கவிதைகள் இடம் பெற்றுள்ளன. அதன் காரணமாக அவர் தொகுப்புக்காகச் சேகரிக்கப்பட்ட கவிதைகளின் நீளத்தைக் குறைத்துமிருக்கின்றார். சில வரிகளைத் தவிர்த்திருக்கின்றார். என் கவிதைக்கும் அந்நிலை ஏற்பட்டிருந்தது. இருந்தாலும் கவிதையின் அர்த்தம், தொனி , வெளிப்படுத்தும் உணர்வு குறையாத வரையில் கவிதைகளின் நீளத்தைக் குறைத்திருக்கின்றார் என்பதை உணர முடிகின்றது. அது பற்றிக் குறிப்பிட்டு எனக்கொரு கடிதத்தையும் எழுதி அவருக்கு இவ்விடயத்தில் சுதந்திரத்தை வழங்குவேன் என்று நம்புவதாகவும் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். அக்கடிதத்தையே இங்கு காண்கின்றீர்கள்.

தொகுப்பு வெளியாகி எனக்கும் ஒரு பிரதி அனுப்பிச் சிறிது காலத்தில் அவர் அமராகி விட்டது எதிர்பாராதது. வருத்தத்தைத் தந்த திடீர் மறைவு.

[ * தொகுப்பில் என் கவிதையிலொரு தட்டச்சுப் பிழை - Fox என்பது Fax என்றிருக்கின்றது. ]

' A Walk Through Corona - Wrapped Night' By V.N.Giritharan (Tamil) & Dr. K.S.Subramaniyan (English Translation)

I came out
in a midnight.
The city was immersed in slumber.
The impact of virus.
The city remained curled up.
Why not a spin in the bicycle.
Yes, I did.

My city sojourn continues.
At a distance in majestic response
Lake Ontario.
On the bank cuddling its young one
a mother fox.

It seems
Ozone hole has shrunk.
The flowing Ganges turned clean.
In a life ruled by essentials
the fancy purchases of non - essentials
have shrunk.

While returming
after the city round
my heart seized by a mild grief.
The rivers going to lose their
limpidity.
The hole in ozone layer
waiting to enlarge again.....

When at all would the world
rise from helpless slumber?
When would slumber
of the mankind cease
and a newdawn blosom?


கவிதை: கொரோனா சூழ் இரவொன்றில் நகர்வலம்! ( தமிழ்க் கவிதையின் முழு வடிவம்) - வ.ந.கிரிதரன் -

மாநகர் துஞ்சும் நள்ளிரவில்
வெளியே வந்தேன்.
நுண்கிருமியின் தாக்கம்.
சுருண்டு கிடந்தது மாநகர்
உந்துருளியில் நகர்வலம்
வந்தாலென்ன? வந்தேன்.
வாகனவெள்ளம் பாயும் நதிகள்
வற்றாதவை வற்றிக்கிடந்தன.
கட்டடக்காட்டில் இருள்
கவிந்து கிடந்தது.
நிசப்தம் நிலவியது நகரெங்கும்.

சமூக அடையாளம் சிதைத்த
சமூக இடைவெளி!
முகமூடி நீக்கிய மாநகரில்
முகமூடி மானுடர் சிலர்!

இயற்கையைச் சுகித்துறங்குகிறதா
இந்த மாநகர்?

என் நகர்வலம் தொடர்கிறது.
தொலைவில் ஒண்டாரியொ வாவி
விரிந்து கிடந்தது.
வாவிக்கரையில் குழந்தையை
வாரிமுகர்ந்தபடி நரி அன்னை..
வீதியை ஊடறுத்து மான்கள் சில
விரைந்து மறைந்தன.
மானுடரின் மெளனத்தில்
மிருகங்களின் புத்துயிர்ப்பு
மாநகரெங்கும்.

ஓசோன் துவாரம் சிறுத்ததாம்;
ஓடும் கங்கை நீர் தெளிந்ததாம்.
அத்தியாவசியச் செலவில் வாழ்வில்
அத்தியாவசியமற்ற செலவுகள்
அருகினவாம்..

நகர்வலம் முடிந்து மீள்கையில்
மென்துயரில் தோயந்ததென்
நெஞ்சம்.

கிடைத்த விடுதலையின் நிரந்தரமின்மையினை
உணராத வாய்பேசாத் தோழர்களை,
தெளிவிழக்கப்போகின்ற நதிகளை,
மீண்டும் விரியப்போகின்ற ஓசோன்
துவாரத்தை,
உலகை எண்ணினேன்.
உறக்கமற்று உழன்றதென்
நெஞ்சம்.
உறக்கம் நீங்கியெழுவதுதான் எக்காலம்?
மானுடர்தம் உறக்கம் நீங்கியெழுவதுதான்
எக்காலம்?

No comments:

முனைவர் கே.எஸ்.சுப்ரமணியன் ஆங்கில மொழிபெயர்ப்பில் பெருந்தொற்றுக் கவிதைத்தொகுப்பு 'Lockdown Lyrics'!

முனைவர் கே.எஸ்.சுப்ரமணியன் மொழிபெயர்த்துத் தொகுத்த ஆங்கிலக் கவிதைத்தொகுப்பு 'Lockdown Lyrics' . 'டிஸ்கவரி புக் பேலஸ்' பதிப...