Sunday, June 7, 2026

விசுவநாதன் டீச்சர் (திருமதி தவமணி விசுவநாதன்) மறைவு!


யாழ்  இந்து மகளிர் கல்லூரியின் முன்னாள் ஆசிரியையும், முன்னாள் யாழ் மேயர் திரு.இராசா விசுவநாதனின் மனைவியுமான விசுவநாதன் டீச்சர் மறைந்ததாக வாட்ஸ் அப்பில் என் சகோதரிகளில் ஒருவர் தகவல் அனுப்பியிருந்தார்.

விசுவநாதன் டீச்சர் அம்மாவின் (நவரத்தினம் டீச்சர்) சிநேகிதிகளில் என் நினைவுக்கு உடனடியாக வரும் இருவரில் ஒருவர். மற்றவர் முன்னாள் யாழ்  இந்த மகளிர் கல்லூரி அதிபரான   இராமநாதன் டீச்சர்.

என் அப்பாவின் மறைவின்போது இறுதிச் சடங்குகளில் கலந்து கொள்ள வந்திருந்தார். அம்மாவுடன் அழுதபடி நின்ற தோற்றம் மனக்கண்ணில் தெரிகிறது. 

அம்மாவின் பால்யப் பருவத்திலிருந்து பின்னர் யாழ் இந்து மகளிர் கல்லூரி ஆசிரியையாக எனத்  தொடர்ந்த நட்பு தொடர்ந்து நீடித்தது. அம்மாவின் பிரியத்துக்குரிய சிநேதிகளில் ஒருவர் என்னும் வகையில் இவரை நான் அறிவேன். அது தவிர தனிப்பட்டரீதியில் எனக்குத் தொடர்பேதுமில்லை. ஆனால் இவரது இரண்டாவது புத்திரன் சிவகுமார் சிறிது காலம் நான் சென்ற க.பொ.த (உயர்தரம்) பாடமொன்றுக்கான டியூசன் வகுப்பில் சிறிது காலம் படித்தது நினைவுக்கு வருகின்றது. இவரும், மூத்த சகோதரர் உருத்திரகுமாரும் யாழ் மத்திய கல்லூரி மாணவர்கள் என்பதாலும், நான் யாழ் இந்துக் கல்லூரி மானவன் என்பதால் ஒன்றாகப் படிக்கும் சந்தர்ப்பம் வாய்க்கவில்லை. மூத்த சகோதரரை அவரது இளமைக்காலத்தில் கே.கே.எஸ் வீதி வழியாக சைக்கிளில் செல்வதைக் கண்டிருக்கின்றேன்.  அண்மையில்தான் நூலகத்தில் பழைய ஈழநாடு பத்திரிகையின் மாணவர் மலர்களை மேய்ந்து கொண்டிருந்தபோது அவரும் மாணவப்பருவத்தில் ஈழநாடு மாணவர் மலரில் எழுதியிருப்பதை அறிய முடிந்தது.

மறக்க முடியாத இன்னுமொரு சம்பவம் - என்னுடைய புது ரலி சைக்கிள் யாழ் பொதுசன நூலகத்தில் காணாமல் போனது சம்பந்தமான நீதிமன்ற வழக்குத் தவணைகளில் என்னைப் பிரதிநிதிப்படுத்துவதற்காக அம்மா இவர்களது வீட்டுக்குக் கூட்டிச் சென்று அவரைக் கேட்டபோது அவர் அதற்குச் சம்மதித்தார். அந்தச் சைக்கிள் பற்றிய எனது அனுபவங்களை முன்பொரு தடவை விரிவாக முகநூலில் எழுதியிருக்கின்றேன்.

விசுவநாதன் டீச்சரின் மறைவுச் செய்தியினைக் கேட்டபோது இவையெல்லாம் சிந்தையில் வலம் வந்தன.  இவரது மறைவால் துயரில் ஆழ்ந்திருக்கும் குடும்பத்தவர், உறவினர், நண்பர்கள்  அனைவருக்கும் என் அம்மாவின் சார்பில் ஆழ்ந்த இரங்கல்.


அமரர் விசுவநாதன் டீச்சர், கணவர் திரு.இராசா விசுவநாதனுடன் தொண்ணூறுகளில் கனடா வந்திருந்தபோது அம்மாவை வந்து பார்த்தார். அப்போது எடுத்த புகைப்படமிது. 
 
இடமிருந்து வலமாக: முதலில் இருப்பவர் யாரென்று தெரியவில்லை., அடுத்து அம்மா, விசுவநாதன் டீச்சர் & திரு.இராசா விசுவநாதன்.


No comments:

''மஞ்சு வந்து , கொஞ்சுகின்ற மலை அழகு! (மேற்குத் தொடர்ச்சி மலை)'' - எழுத்தாளர் ஶ்ரீராம் விக்னேஷ்!

''மஞ்சு வந்து , கொஞ்சுகின்ற மலை அழகு! (மேற்குத் தொடர்ச்சி மலை)'' என்று குறிப்பிட்டு,  என் பால்யப் பருவத்து நண்பரும், ஶ்ரீராம...