Tuesday, June 9, 2026

கலாமோகனின் 'காதல் கதைகளும், சில காதலிகளும்' சிறுகதை பற்றி.....

 எழுத்தாளர் க.கலாமோகன் 

கடந்தவாரம் ஸ்கார்பரோவில் நடைபெற்ற 'துவாரம்'  சிறுகதைத் தொகுப்பின் வெளியீட்டில் உரையாற்றியவர்கள் தொகுப்பிலுள்ள 'காதல் கதைகளும், சில காதலிகளும்' சிறுகதை ப்ற்றிக் கூறிய கருத்துகளைக் கேட்டபோது  அவர்களில் எவருமே அக்கதையைச் சரியான கோணத்தில் புரிந்து கொண்டார்களா என்றொரு கேள்வி என் மனத்தில் எழந்தது. 

அந்தக் கதை காதல் கதைகள் எழுதும் வயோதிப் எழுத்தாளர் ஒருவர் பற்றிய கதை சொல்லியின் விபரிப்பு. அதன்படி அக்கதை பற்றி உரையாடியவர்கள் அவ்வயோதிப எழுத்தாளின் பல்வேறு காதலிகளைப்பற்றியும், இவ்விதமான சமூகப் பிறழ்வுகள் அன்றாடம் நடப்பவைதாம் என்றும், ஆனால் அவை பொதுவாகச் சமூகம் அறியாதவகையில் மறைக்கப்பட்டு விடுகின்றன என்றும் குறிப்பிட்டார்கள். ஆனால் உண்மையில் அந்தக் கதை என்ன கூறுகின்றது? அவ்வெழுத்தாளரின் காதலிகளைப் பற்றி யார் கூறுகின்றார்கள்? அவற்றில் உள்ள உண்மைத் தன்மை என்ன? இவை போன்ற விபரங்களை அவர்கள் அச்சிறுகதையூடு  ஆராய்ந்தார்களா? இவை பற்றிய கட்டுடைப்புகளே இச்சிறு பதிவு.

அந்தக்கதையை மிகவும் இலாகவமாகக் கலாமோகன் பின்னியிருக்கின்றார். கதைகளை இவ்விதம் பின்னுவதில் சிறப்பான இடத்தில் இருப்பவர் கலாமோகன்.அவரது பல சிறுகதைகள் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள தலைப்புக் கதையான 'துவாரம்'  உட்படப் பல்வேறு தொகுப்புகளுக்காகத்  தேர்ந்தெடுக்கப்படக் கூடியவை. சரி விடயத்துக்கு மீண்டும் வருவோம்.

மேற்படி கதையின் ஆரம்பத்தில் கதை சொல்லி எழுத்தாளருடன் சம்பாஷிக்கின்றார். அதன் பின்னர் அவர் மனைவியைச் சந்திக்கின்றார். சந்திக்கையில்   அவரிடம் திருமணத்துக்குப் பின்னரான வாழ்வில், எழுத்தாளரின் காதலிகளைப் பற்றிக் கேட்கின்றார்.  அவர் கணவரின் காதலிகளைப் பற்றிக் கூறுகின்றார். அவர்களில் ஒருத்தி இளம் பெண். அடுத்து அவரைச் சந்திக்கின்றார். பின்னர் எழுத்தாளரின் காதலி எனப்படும் விலைம்கள் ஒருத்தியைச் சந்திக்கின்றார். அதன் பின் இறுதியாக வரும் நொண்டிப்பெண் தானும் அவர் காதலி என்கின்றார். அதன் விளைவாகத்  தான் ஒரு தாய் என்கின்றாள். தான் நொண்டியானதற்குக் காரணமும் அவரே என்கின்றாள். அதற்கான காரணம் கதையில் விபரிக்கப்படவில்லை.  அவள் ஒருத்திதான் எழுத்தாளரின் காதலிகள் குழந்தைக்குத் தாயான ஒரே ஒருத்தியாகக்  கதையில் சித்திரிக்கப்படுகின்றாள்.

உண்மையில் கதை சொல்லும் எழுத்தாளரின் காதலிகள் பற்றிய விபரிக்களெல்லாம் உண்மையானவைதாமா அல்லது கதைக்காகப் பின்னப்பட்ட சுவாரசியமான சம்பவங்களா என்னும் எண்ணம்தான் கதையைப் படித்து முடித்த பின் எனக்கு ஏற்பட்டது. ஏன்?

கதையின் ஆரம்பத்தில் எழுத்தாளரின் மணவாழ்க்கையைப் பற்றி விபரிக்கையில் கிடைக்கும் விபரங்கள்: அவரும் அவரது மனைவியும் 50 ஆண்டுகளாகக் கூடி வாழ்கின்றார்கள். அவருக்கு நடைபெற்றது பேசிச் செய்த  திருமணம். அவர் காதலைப்பற்றி அறிந்து கொண்டதே  திருமணத்தின் பின்னர்தான். மனைவியின் மூலமே அந்தக் காதலை அவர் அறிகின்றார். திருமணத்துக்குப் பின்னரே அவர் காதலின் முக்கியத்துவத்தை உணர்கின்றார். பேசிச்செய்யும் திருமணத்துக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்கின்றார். அதற்குக் காரணம் - அவரது மனைவி  தினம் தினம் பல பெண்களைப் பற்றிக் கூறிய கதைகள்தாம். 

மேலும் அவ்வெழுத்தாளர் பற்றி ஆரம்பத்தில் விபரிக்கப்படும் அவர் பற்றிய ஆளுமைக் குறிப்புகள் வருமாறு:

1. திருமணத்துக்கு முன்னர் அவருக்குக் காதல் அனுபவம் இல்லை./
2. காதலை அவர் உணர்ந்து கொண்டது அவர் மனைவி மூலமே.
3.அவருக்குக் காதலி ஒருத்தி இருந்திருந்து , அவளுடன் சென்று வாழ மனைவி கூறினால் ஏற்றுக்கொள்வீர்களா என்ற கேள்விக்கு அவர் கூறுவது 'இல்லை'. ஏன் என்பதற்கு அவர் கூறுவது காதலின் அர்த்தம்தனை அவருக்கு உணர்த்தியது மனைவிதான். 

இப்பொழுது ஒரு கேள்வி எழுகின்றது. திருமணம் செய்த பின்னர் காதலி  ஒருவர் இருந்திருக்கும் பட்சத்தில் மனைவியே செல்ல அனுமதிக்கும் பட்சத்தில் கூடச் செல்ல மாட்டேன் என்று  கூறும் எழுத்தாளர் பின்னர் அவர் மனைவி, மற்றும் ஏனைய பெண்கள் கூறுவது போல் பல பெண்களைக் காதலிகளாகக் கொண்டிருக்கும் சாத்தியங்கள் உண்டா? 

மேலும் அவர் தினம் தினம் மனைவி ஏனைய பெண்கள் பற்றிக் கூறும் கதைகள் மூலம் காதலை ஆதரிக்கின்றார். அதனால்தான் அவர் கதைகளில் காதலை ஆதரித்தும், பேசிச்செய்யும் திருமணத்துக்கு எதிராகவும் ஒரு நிலைப்பாட்டை எடுக்கின்றார். அதே சமயம் அவர் மனைவியே அவருக்குக் காதலை உணர்த்துகின்றார். அதன் விளைவாக அவர்கள மணவாழ்க்கை 50 ஆண்டுகளாக நீடிக்கின்றது. இந்நிலையில் அவர் மனைவியும், ஏனைய பெண்களும் அவர் பற்றிக் கூறும் கதைகளில் எவ்வளவு தூரம் உண்மை இருக்கும் என்றும் சிந்திக்கலாமல்லவா? அவை உண்மையில் வாசகருக்குத்  தெரிய வருவது கதைசொல்லியின் மூலமே. ஏன் அக்கதை சொல்லியின் விபரங்கள் பொய்யாக இருக்கக்கூடாது?

ஆரம்பத்தில் எழுத்தாளரைப்பற்றி விபரிக்கப்படும் அவரது ஆளுமைபற்றிய தகவல்களின் அடிப்படையில் நான் இந்தக் கதையைக் கட்டுடைத்துப் பார்க்கின்றேன்., அதன் படி நான் வந்த முடிவுகள் வருமாறு:

எழுத்தாளரின் ஆளுமை பற்றிய  ஆரம்ப விபரிப்புகள் உண்மையாக இருந்தால், பின்னர் அவர் பற்றி விபரிக்கப்படும் ஏனைய விபரிப்புகள் எல்லாம் அப்பெண்களின் கூற்றுகள்  வாயிலாகக் கதை சொல்லியால், அல்லது அப்பெண்களால்  உருவாக்கப்பட்ட கற்பனைச் சோடிப்புகள். ஒருவேளை எழுத்தாளரின் ஆரம்பத்தில் விபரிக்கப்பட்ட ஆளுமை விபரிப்புகள் பொய்யாக இருந்து அப்பெண்கள் அல்லது கதைசொல்லியின்  அவரைப்பற்றி எடுத்துரைக்கும் விபரங்கள் உண்மையாக இருந்தால் அந்தக் கோணத்தில்தான் அன்று அங்கு பேசியவர்களின் பார்வை இருந்தது. அந்தப் பார்வைக்கோணத்துக்கு  எதிராக இன்னுமொரு கோணமும் இருக்கலாம் என்பதையே கதையை வாசித்து முடித்தப்போது எனக்குத் தோன்றியது.

இந்த்தொகுப்பின் தலைப்புக்கதையான 'துவாரம்' சிறப்பானதொரு சிறுகதை. அது பற்றிய என் பார்வையினை இன்னுமொரு சமயம் எழுதுவேன்.

No comments:

நூல் பெயர்: குற்றமும் தண்டனையும் (பெங்குயின் கிளாசிக்ஸ் டீலக்ஸ் பதிப்பு) ஆசிரியர்: ஃபியோதர் தஸ்தாயெவ்ஸ்கி

[Disclosure: This post contains Amazon affiliate links. As an Amazon Associate, I earn from qualifying purchases.] [செயற்கை நுண்ணறிவு தயாரித...