Sunday, May 4, 2025

வெகுசனப் படைப்புகளின் முக்கியத்துவம் பற்றி....


ஒருவரின் வாசிப்புப் படிக்கட்டில் அம்புலிமாமாக் கதைகளுக்கும் ஒரு தேவையுண்டு. அது போன்றதுதான் வெகுசனப் படைப்புகளின் முக்கியத்துவமும். யாரும் நேரடியாகத் தீவிர வாசிப்புக்குள் குதித்து விடுவதில்லை. எல்லோருமே திருஞானசம்பந்தராக இருந்து விடுவதில்லை.

சுஜாதாவின் முக்கியத்துவம் அவரது மொழி, அறிவியலை எளிய மொழியில் தமிழுக்குள் கொண்டு வந்தது, தமிழில் மர்மக்கதை இலக்கியப் பிரிவுக்கான அவரது பங்களிப்பு எனக் கூறலாம். வெவ்வேறு வாசிப்புப் படிக்கட்டுகளில் உள்ள வாசகர்களுக்கான தேவைகளை இவ்விதமான வெகுசனப் படைப்புகள் பூர்த்தி செய்கின்றன.

நம் படைப்பாளிகள் பலருக்கு ஒரு குணம் உண்டு. அவர்கள் தம் பால்ய, பதின்மப் பருவங்களில் வெகுசனப் படைப்புகளில் மூழ்கிக் கிடப்பார்கள். அவற்றினூடு வளர்ந்து வந்திருப்பார்கள். வாசிப்பின் அடுத்த கட்டத்துக்கு வந்ததும் , தம்மை வளர்த்த இவ்வகையான வெகுசனப் படைப்புகளைப் பற்றிக் கூறுவதைத்தவிர்த்து விடுவார்கள். பதிலாக இவ்வகையான படைப்புகளைப் பற்றி இளக்காரமாகப் பேசத்தொடங்கி விடுவார்கள். அது அவர்களது பெருமை அல்ல சிறுமை என்பேன்.

Monday, April 28, 2025

வானியலில் ஆர்வம் மிக்க வழக்கறிஞர் செந்தில்நாதனும், அவரது வானியல் பற்றிய நூலும்!


எனக்கு  இவருடன் நேரில் பழக்கமில்லை. ஆனால் என் பதின்ம வயதுகளில்  என் கவனத்தை ஈர்த்த ஆளுமைகளில் இவரும் ஒருவர்.  அதற்குக் காரணம் இவரது வானியல் மீதான ஆர்வம்தான். 

இவரது வீடு கஸ்தூரியார் வீதியில், நாவலர் வீதிக்குச் சிறிது தெற்காக இருந்தது. மாடி வீடு. மொட்டை மாடியில் ஒரு தொலைக்காட்டி எப்பொழுதும்  விண்ணை ஆராய்வதற்குரிய்  வகையில் தயாராகவிருக்கும். அதுதான் என் கவனத்தை இவர் ஈர்க்கக் காரணம்.  அதனால் அந்த வீடு அக்காலகட்டத்தில் யாழ்ப்பாண நகரில் முக்கியமானதொரு நில அடையாளமாக விளங்கியது.  

Saturday, April 26, 2025

கிடைக்கப்பெற்றோம் - எழுத்தாளர் ஜோதிகுமாரின் 'அசோகமித்திரனின் 18ஆவது அட்சக்கோடு: ஓர் கலை தரிசனம்? இன்னும் சில எழுத்துக்கள்'


பதிவுகள்
இணைய இதழில் வெளியான 'நந்தலாலா' ஜோதிகுமாரின் கட்டுரைகள் சில தொகுக்கப்பட்டு, 'அசோகமித்திரனின் 18ஆவது அட்சக்கோடு: ஓர் கலை தரிசனம்? இன்னும் சில எழுத்துக்கள்' என்னும் தலைப்பில் தொகுப்பு  வெளிவந்துள்ளது. இத்தொகுப்பினை சவுத் விஷன் புக்ஸ் (சென்னை) , நந்தலாலா (இலங்கை) ஆகிய பதிப்பகங்கள் இணைந்து வெளியிட்டுள்ளன. நூலின் அட்டை ஓவியத்தை வரைந்திருப்பவர் சதானந்தன். நந்தாலா படைப்புகளை வெளிவர் உதவி செய்யும் திரு.சி.ராதாகிருஷ்ணன் இந்நூல் வெளிவருவதற்கும் உதவியுள்ள விபரத்தை ஜோதிகுமார் முன்னுரையில் தெரிவித்துள்ளார். ஜோதிகுமார் தனது முன்னுரையில் கட்டுரைகளை வெளியிட்ட பதிவுகள் இணைய இதழுக்கு மறக்காமல் நன்றி தெரிவித்துள்ளார். அதற்காக பதிவுகள் சார்பில்  நன்றி.

இந்நூலில் ஜோதிகுமார் தான் சந்தித்த முக்கிய ஆளுமைகள் சிலரைப்பற்றிய அனுபவங்களை விபரித்துள்ளார். தான் வாசித்த நூல்கள் சிலவற்றைப்பற்றி, அவற்றுக்குப்பின்னால் மறைந்துள்ள அரசியல் பற்றிய தன்  பார்வைகளை  வெளிப்படுத்தியுள்ளார். இலக்கியவாதிகளைப்பற்றி எழுதியிருக்கின்றார். மலையகம் தந்த முக்கிய இலக்கியவாதியான ஸி.வி.வேலுப்பிள்ளையின் சமரசமற்ற போக்கினைப்பற்றி எடுத்துரைத்திருக்கின்றார்.

குறிப்பேடாக விளங்கிய 'சி.ஆர்.கொப்பி' (CR)


எண்பதுகளில் என் உணர்வுகளின் வடிகால்களாக இருந்தவை எழுத்துகளே. அப்பொழுதுதான் மார்க்சிய நூல்களை  வாசிக்கத் தொடங்கியிருந்தேன். ஒரு வித வெறியுடன் வாசிக்கத் தொடங்கியிருந்தேன். அதுவரை சமூகம், அரசியல், தேசியம் , மதம் என்பவற்றை நான் பார்த்த பார்வையை  மாற்றி அமைத்தன மார்க்சிய நூல்கள். சிந்தனை அதுவரை அடைத்திருந்த  வேலிகளை உடைத்துக்கொண்டு வெளியேறிய காலமது. அப்போது என் உணர்வுகளைக் கவிதைகளாக, கட்டுரைகளாக எழுதிக்கொட்டினேன். அவற்றுக்கு வடிகால்களாக இருந்தவை இங்கு நீங்கள் காணும் சி.ஆர் கொப்பிகளே.

நீண்ட பக்கங்களைக் கொண்ட  'கொப்பி'களாக இவை இருந்ததால்  அதிக விபரங்களை ஒரு பக்கத்தில் எழுதுவதற்கு உதவியாக இருந்தன. அதனால் என் பிரியத்துக்குரிய குறிப்பேடுகளாக இவை விளங்கின.

Friday, April 25, 2025

வாழ்த்துகள்: அமெரிக்க சுற்றுச்சூழல் பொறியியலாளர்கள் மற்றும் அறிவியலாளர்கள் கழகத்தின் (AAEES ) சுற்றுச்சூழல் பொறியியல் மற்றும் அறிவியற் துறையில் சிறந்த கல்வியாளருக்கான விருது பெறுகின்றார் பேராசிரியர் கந்தையா இரமணிதரன்!


வாழ்த்துகள்:
அமெரிக்க சுற்றுச்சூழல் பொறியியலாளர்கள் மற்றும் அறிவியலாளர்கள் கழகத்தின் (AAEES ) சுற்றுச்சூழல் பொறியியல் மற்றும் அறிவியற் துறையில் சிறந்த கல்வியாளருக்கான  விருது பெறுகின்றார் பேராசிரியர் கந்தையா இரமணிதரன்!  

அமெரிக்க சுற்றுச்சூழல் பொறியியலாளர்கள் மற்றும் அறிவியலாளர்கள் கழகத்தின் (AAEES ) சுற்றுச்சூழல் பொறியியல் மற்றும் அறிவியற் துறையில் சிறந்த கல்வியாளருக்கான  விருதினைப் பேராசிரியர் கந்தையா இரமணிதரன் பெற்றுள்ளார்.  வாழ்த்துகள் இரமணி! இவ்விருதினைப் பற்றிய மேலதிகத் தகவல்களுக்கு -
https://www.aaees.org/e4saward

தற்போது ஒஹியோ மாநிலத்திலுள்ள 'சென்ரல் ஸ்டேட் 'யுனிவேர்சிடி' (Central State University) இல் சுற்றுச்சூழல் பொறியியல் துறைப் பேராசிரியராகப் பணியாற்றி வரும் இரமணிதரன் இலங்கைப் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் குடிசார்ப் பொறியியற் துறையில் இளமானிப் பட்டம் பெற்றவர் என்பதும்  குறிப்பிடத்தக்கது. அத்துடன் சீனாவிலுள்ள Hohai University இல் நீர்வள மற்றும் சுற்றுச்சூழல் பொறியியற் துறையில் முதுமானிப்பட்டம் பெற்றவர். Tulane University இல் குடிசார்ப்பொறியியலில் கலாநிதிப் பட்டம் பெற்றவர்.

திருகோணமலையைச் சேர்ந்த இவர் எனக்கு அறிமுகமானது எழுத்தாளராகத்தான்.  பதிவுகள் இணைய இதழின் ஆரம்பக் காலகட்டத்தில் அதில் நடைபெற்ற விவாதங்களில் திண்ணைதூங்கி என்னும் பெயரில் அறிமுகமானார். பதிவுகள் விவாத  அரங்கின் இறுதிக்காலத்தில் அதனை என்னுடன் சேர்ந்து நிர்வகிப்பவர்களில் ஒருவராகவும் இருந்தார். திண்ணைதூங்கி, சித்தார்த்த சேகுவேரா என்னும் புனைபெயர்களில் இவர் எழுதிய கவிதைகள், சிறுகதைகள் பதிவுகள் உட்படப் பல்வேறு இலக்கியச் சஞ்சிகைகளில் வெளிவந்துள்ளன. தொண்ணூறுகளில் வீரகேசரி நடத்திய இரசிகமணி கனக செந்திநாதன் குறுநாவல் போட்டியிலும் இவரது குறுநாவல் விருதினைப்பெற்றதாக ஞாபகம். பதிவுகளின் படைப்பாளிகளில் ஒருவர் என்னும் ரீதியில் பதிவுகள் சார்பிலும் வாழ்த்துகளைத்  தெரிவித்துக்கொள்கின்றேன்.

Thursday, April 24, 2025

கவிதை: ஏ! விரிவானே! உன்னைத்தான் விரிவானே! - வ.ந.கிரிதரன் -

* ஓவியம் AI


ஏ! விரிந்திருக்கும் விரிவானே!
நீ எப்போதும் போல் இப்போதும்
என் சிந்தையை விரிய வைக்கின்றாய்.
என் தேடலைப் பெருக வைக்கின்றாய்.

உன்னைப் புரிதல் என் தேடலின் ஊற்று.
உன் விரிவு , ஆழம், தொலைவு
என்னை எப்போதும் வியப்பிலாழ்த்துகின்றன.
வியப்பினூடு விடைகள் எவையும் கிடைக்குமா
என்று முயற்சி செய்கின்றது மனது.

விடைகள் கிடைக்கப்போவதில்லை என்பது
அயர்வினைத் தந்தாலும் உனை, உன் வனப்பை
அயராது இரசிப்பதில் ஒருபோதும் எனக்கு
அயர்வில்லை. அயர்வற்ற இரசிப்புத்தான்.

இருப்பின் இருப்பறிய இருப்பது நீ ஒன்றுதான்
என்கின்றது எப்போதும் தேடிக்கொண்டிருக்கும்
என் நெஞ்சம்.

உன்னில், உன் விரிவில் சஞ்சரித்தவாறு
கீழே பார்க்கின்றேன்.
விண்ணிலிருந்து மண்ணைப் பார்க்கின்றேன்.
எத்துணை அற்பம்! அற்பத்துக்குள்
எத்துணை அதிசயம்! படைப்பில்
எத்துணை அற்புதம்!
எத்துணை நேர்த்தி!
எத்துணை ஞானம்!

எழுத்தாளர் ஜெயகாந்தன் நினைவாக....


பொதுவாக ஒருவரின் வாசிப்பனுபவத்தில் பால்ய பருவம், பதின்மப் பருவம், இளமைப்பருவமென்று பருவங்களுக்கேற்ப வாசிப்பனுபவமும் வளர்ந்துகொண்டே செல்லும். சிலரின் எழுத்துகள் மட்டும் அனைத்துப் பருவத்தினரையும் கவரும் தன்மை மிக்கவை. ஆனால் அவற்றின் அர்த்தங்கள் பருவங்களின் மாறுதல்களுக்கேற்ப மாறிக்கொண்டே செல்லும். உதாரணத்துக்கு மகாகவி பாரதியாரின் எழுத்துகளைக் குறிப்பிடலாம்.  

என் பால்ய பருவத்தில்  என் அப்பா வாங்கித் தந்த பாரதியாரின் கவிதைகள் பிடிக்கும். ஆனால் அப்போது நான் இரசித்த அவரது எழுத்துகளை நான் புரிந்து கொண்டதற்கும், பின்னர் வளர்ந்த பின் வாசித்தபோது அடைந்த இன்பத்திற்கும், புரிதலுக்கும் இடையில் மிகுந்த வித்தியாசமுண்டு. அப்போது அவரது சொற்களின் நேரடி அர்த்தம் , இனிமையில் மயங்கிய மனது, பின்னர் வளர்ந்ததும் அவற்றின் பின்னால் மறைந்து கிடக்கும் அர்த்தங்கள் கண்டு பிரமித்துப்போனது.

வ.ந.கிரிதரனின் பாடல்: இன்று புதிதாய்ப் பிறந்தேன் நான்.

வ.ந.கிரிதரனின் பாடல்: இன்று புதிதாய்ப் பிறந்தேன் நான். வ.ந.கிரிதரனின் குரலில் இசையமைத்துப் பாடுவது SUNO 5.5 ட்ஜிட்டல் ஓவியம் - சாட் ஜிபிடி வ...