Sunday, December 14, 2025

இலக்கிய ஆளுமையாளர் ஒருவரை வெளிப்படுத்துமோர் அரிய காட்சி!


இலக்கிய ஆளுமைகள் அவர்கள் பணி புரியும் ஊடக நிறுவனங்களில் தம் பணியில் மூழ்கியிருக்குக் காட்சிகளை உள்ளடக்கிய புகைப்படங்கள் அரிது. அவ்விதமானதொரு காட்சியினை அண்மையில் 'வரலாறு பேசும் பொற்கணங்கள் – வீரகேசரியின் 75 ஆண்டு கொண்டாட்டத் தொகுப்பு' என்னும் வீரகேசரி நிறுவனம் வெளியிட்ட காணொளியில் கண்டேன்.

அதில் பிரபல எழுத்தாளரும், ஊடகவியலாளருமான யாழ்நங்கை (அன்னலட்சுமி இராஜதுரை) அவர்கள் தம் பணியில் மூழ்கிக் கிடக்கும் காட்சியினைக் கண்டேன். அதைத்தவறவிடக்கூடாதென்பதற்காக அக்காட்சியினைக் 'கூகுள் நனோ பனானா' செயற்கை நுண்ணறிவு கொண்டு 'டிஜிட்டல்' ஓவியமாகப் பதிவு செய்தேன். அதனையே இங்கு காண்கின்றீர்கள்.


 

பாட்டு கேட்கும் நேரம்: 'என்ன சொல்லப் போகின்றாய்?'



படம்: கண்டு கொண்டேன். கண்டு கொண்டேன்.
இசை: ஏ.ஆர்.ரகுமான்
பாடகர்: சங்கர் மகாதேவன்
வரிகள்: கவிஞர் வைரமுத்து
நடிப்பு: அஜித்குமார் & தபு

['டிஜிட்டல் ஓவியம்' (கூகுள் நனோ பனானா) உதவி: வநகி}

https://www.youtube.com/watch?v=Gep0IzKTcFI



Friday, December 12, 2025

அழியாத கோலங்கள்: யாழ் இந்துக் கல்லூரியின் மறக்க முடியாத விளையாட்டு வீரன் ஏ.எச்.எம்.ஜவ்ருல்லா!


 

நான் யாழ் இந்துக்கல்லூரியில் ஒன்பதாம் வகுப்பிலிருந்தபோது விளையாட்டு வீரன் ஒருவனின் பெயர் மாணவர்கள் மத்தியில் மிகவும் பிரபல்யமாகவிருந்தது.  

யாழ் மாவட்ட விளையாட்டுச் சங்கத்தினால் , யாழ் மாவட்டப் பாடசாலைகளுக்கிடையில் நடத்தப்பட்ட 100 மீற்றர், 200 மீற்றர் ஓட்டப்போட்டிகள், நீளம் பாய்தல் ஆகியவற்றில் , 16 வயதுக்குட்பட்ட பிரிவில் சாதனைகளுடன் கூடிய முதலிடங்களைப் பெற்று அவ்வருடச் சாம்பியன் பட்டம் பெற்ற  விளையாட்டு வீரன் இவன்.  பெயர் ஏ.எச்.எம்.ஜவ்ருல்லா என்னும் மாணவனே அவன்.

அதன் பிறகு என் கவனம் உதைபந்தாட்டம் , துடுப்பெடுத்தாட்டம் போன்றவற்றில் திரும்பி விட்டது. இம்மாணவனின் பெயரையும் அதன் பிறகு கேட்டதாக நினைவிலில்லை. ஆனால் பசுமையாக சாம்பியன் பட்டம் பெற்ற இவனது பெயரும், போட்டிகளும் இன்னும் நினைவில் பசுமையாக உள்ளன.  

அண்மையில் பழைய ஈழநாடு பத்திரிகைப் பிரதிகளை நூலகம் தளத்தில் மேய்ந்து கொண்டிருக்கையில் மீண்டும் ஒரு தடவை அப்போட்டிகள் பற்றி வெளியான செய்திக்குறிப்பு (!2.8.1972 வெளியான) கண்ணில் தட்டுப்பட்டது. மீண்டும் இவன் பற்றிய நினைவுகள் எழுந்தன.

யாருக்காவது இம் மாணவன் பற்றிய  மேலதிகத் தகவல்கள், புகைப்படங்கள் இருந்தால் பகிர்ந்துகொள்ளுங்கள்.

[டிஜிட்டல் ஓவியத் தொழில் நுட்ப (Google Nano Banada) உதவி : VNG]

நெஞ்சைத்தொட்ட ஒரு பயண அனுபவம்!


படைப்பிலக்கியவாதி ஒருவர் எழுதும் பயண அனுபவங்களுக்கும், சாதாரணமான ஒருவர் எழுதும் பயண அனுபவங்களுக்குமிடையில் அதிக வித்தியாசம் இருக்கும். படைப்பிலக்கியவாதி எழுதும் அனுபவங்களில் இலக்கியச் சுவை இருக்கும். உணர்வுகளின் வெளிப்பாடு இருக்கும். அதனால் அவை இலக்கியத் தரம் மிக்கதாக அமைந்து விடுகின்றன. 

உதாரணத்துக்கு எழுத்தாளர் நடேசன் எழுதும் பயண அனுபவங்களைக் குறிப்பிடலாம். தற்போது  பதிவுகள் இணைய இதழில் வெளியாகியுள்ள அவரது இந்தியப் பயணத்தொடரில் இம்முறை மத்திய பிரதேசத்திலுள்ள  பீம்பேத்கா (Rock Shelters of Bhimbetka) குகை ஓவியங்களைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கின்றார். ஆதி மனிதர்களால் பல்வேறு காலகட்டங்களில் வரையப்பட்ட ஓவியங்களை உள்ளடக்கிய குகைகள். 

Thursday, December 11, 2025

சூழலை மீறிய பெருங்கவிஞன் , விடுதலைக் கவிஞன் பாரதி!



டிசம்பர் 11, மகாகவி பாரதியாரின் பிறந்ததின  நினைவு தினம்! 

"மாயை பொய்யெனல் முற்றிலும் கண்டனன்;
மற்றும் இந்தப் பிரமத் தியல்பினை
ஆய நல்லருள் பெற்றிலன்;தன்னுடை
அறிவி னுக்குப் புலப்பட லின்றியே
தேய மீதெவ ரோசொலுஞ் சொல்லினைச்
செம்மை யென்று மனத்திடைக் கொள்வதாம்
தீய பக்தி யியற்கையும் வாய்ந்திலேன்.' - பாரதியார் -

என்னைக் கவர்ந்த, பாதித்த மகாகவிஞர் பாரதியார். தன் குறுகிய இருப்பில் இவர் சாதித்தவை அதிகம். ஆச்சரியமூட்டுபவை. தன் இருப்பைப்பற்றி, தன் பிறந்த மண்ணைப் பற்றி, தன் நாட்டைப்பற்றி,  தான் வாழ்ந்த சமுதாயச் சூழல் பற்றி, அதன் சீர்கேடுகள் பற்றி, பெண் விடுதலை பற்றி, தேசிய, வர்க்க, சமூக விடுதலை பற்றி, மானுட விடுதலை பற்றி, மார்க்சிய அரசியல் தத்துவங்கள் பற்றியென்று இவர் சிந்திக்காத விடயமெதுவுமில்லை. 

தீவிர வாசிப்பாளர். எழுத்தாளர்.  சிந்தித்தலுடன் நின்று விடாத செயல் வீரரும் கூட. இவரது சிந்தனையின் முரண்பாடுகளை இவர்தம் அறிவுத்தேடலின் வளர்ச்சிப்படிக்கட்டுகளாகவே கருதுவேன். இவரது  எழுத்தின் ஆழமும், தெளிவும் என்னை மிகவும் கவர்ந்தவை.


 

[டிஜிட்டல் ஓவியத் தொழில் நுட்ப (Google Nano Banada) உதவி : VNG]


எழுத்தாளர் சுகுணா திவாகரின் , எழுத்தாளர் இரா முருகவேளின் 'நக்சல்பாரி' நூல் பற்றிய முகநூற் குறிப்பு!


எழுத்தாளர் இரா முருகவேளின் 'நக்சல்பாரி' இயக்கத்தைப்பற்றிய 'நக்சல்பாரி' நூல் பற்றிய நல்லதோர் அறிமுகத்தைத் தருகின்றது எழுத்தாளர் சுகுணா திவாகரின் இந்த முகநூற் பதிவு. 

நக்சல்பாரி இயக்கத்தை  முன்னெடுத்தவர் சாரு மஜூம்தார் . நக்சல்பாரி என்பது மேற்கு வங்கக் கிராமம் ஒன்றின் பெயர். இப்பதிவை முழுமையாகக் கீழே தந்துள்ளேன். 



சுகுணா திவாகர் Singer Diwakar எழுதிய முகநூற் பதிவு:
·

நூலாசிரியர் இரா முருகவேள் 


சுகுணா திவாகர் 
2022ல் ஆனந்த விகடனில் சாரு மஜூம்தாரைப் பற்றி ஒரு விரிவான கட்டுரை எழுதினேன். சாரு கொல்லப்பட்ட 50வது ஆண்டு அது. மார்க்சிய-லெனினிய இயக்கத்தில் இருந்த, இருக்கும் பல தோழர்களுக்கு சாரு மஜும்தார் பற்றிய கட்டுரை ஆனந்த விகடன் போன்ற ஒரு வெகுஜன இதழில், அதுவும் நான்கு பக்கங்களுக்கு வெளியானது ஓர் இன்ப அதிர்ச்சி. பலரும் நெகிழ்ச்சியுடன் தொடர்புகொண்டு பாராட்டினர்.

 கீழ்வெண்மணி படுகொலைகளை நிகழ்த்திய கோபாலகிருஷ்ணநாயுடுவைக் கொன்ற நக்சல்பாரி தோழர்கள் குறித்த வெப்சீரிஸ் திரைக்கதைக்காக, கீழ்த்தஞ்சையில் கள ஆய்வு செய்தபோது அந்த அழித்தொழிப்புடன் தொடர்புடைய பல தோழர்களைச் சந்திக்க நேர்ந்தது. அவர்கள் பகிர்ந்துகொண்ட பல தகவல்கள் வெளிப்படையாகச் சொல்ல முடியாத ஆச்சர்யமானவை என்பது ஒருபுறம். இன்னொருபுறம் இயக்கம் தொடர்பான தகவல்களிலும் ஒருவர் சொன்னதற்கும் இன்னொருவர் சொல்வதற்குமிடையில் முரண்பாடுகள் இருக்கும். காரணம் நக்சல்பாரி இயக்கம் ஒரு தலைமறைவு இயக்கம். அந்த இயக்கத்தில் இருந்தவர்கள் பற்றிய முறையாக  ஆவணப்படுத்தப்பட்ட, தொகுக்கப்பட்ட வரலாறு கிடையாது. பல விஷயங்கள் செவிவழிச்செய்திகள்தான்.

Tuesday, December 9, 2025

'டொராண்டோ' தமிழ்ப் புத்தகக் கண்காட்சியிலிருந்த (Toronto Tamil Book Fair 2025) 'நூலகம்' சாவடி!


'டொராண்டோ'  தமிழ்ப் புத்தகக் கண்காட்சியிலிருந்த 'நூலகம்' சாவடியில் நூலகம் நிறுவனத்தின் கனடாக் கிளையில் இயங்கும், சமூகம் அரசியற் செயற்பாட்டாளர் மீரா பாரதி நிற்கும் காட்சி.  எண்ணிம நூலகமான 'நூலகம்'  நிறுவனம் மிகப்பெரிய பணியினைச் செய்து வருகின்றது. நூல்கள், சஞ்சிகைகள், பத்திரிகைகள், நினைவு மலர்கள், பல்வகைச் சிறப்பு மலர்கள், புகைப்படங்கள், காணொளிகள், பல்வகையான குறுவட்டுகள், இறுவட்டுகள் எனப் பலவற்றைச் சேகரித்து வருகின்றது. நூலகமாகவும், ஆவணக்காப்பகமாகவும் நூலகம் ஆற்றிவரும் பணி தமிழர்களைப் பொறுத்தவரையில் முக்கியமானது. 

ஏன் இவ்விதமான நிறுவனங்கள் தேவை?

ஒரு காலகட்டத்து வரலாற்று, கலை, இலக்கிய  ஆவணங்களைப் பாதுகாத்து எதிர்காலத்  தலைமுறையினருக்குக் கடத்துவதென்பது  ஓர்  இனத்தின் வரலாற்றை முறையாகப்பதிவு செய்யும் முக்கியமானதொரு செயற்பாடு. அரிய பணி.  அறிவினை அனைவருடனும் பகிர்ந்து கொள்ளும் அரிய பணியினையும் இத்தகைய நிறுவனமொன்று செய்கின்றது.  பல்வகை ஆய்வுகளுக்கும் உசாத்துணைகளாக இவ்விதம் பேணப்படும் ஆவணங்கள் விளங்குகின்றன.  இனக்குழுக்களின் சமூக, தனிநபர் அடையாளங்களை இவை தலைமுறை கடந்து கடத்துகின்றன.  இவை முக்கியமான காரணங்கள்.  இதனால் தமிழர்களான எம்மைப் பொறுத்தவரையில் எம் மத்தியில் இவ்விதப் பணிகளைச்  செய்யும் நூலகம் நிறுவனத்தின் சேவை தொடர்வது அவசியமானது.

வ.ந.கிரிதரன் பாடல் - உழைப்பவர் உருவாக்குவதே வரலாறு.

வ.ந.கிரிதரன் பாடல் - உழைப்பவர் உருவாக்குவதே வரலாறு. இசை & குரல்: AI SUNO  | ஓவியம்: AI வரலாறு என்பது தனிமனிதர் வரலாறு அல்ல. வரலாறு  உற்ப...