ஜோன்.எஃப்.கென்னடி மறைந்த காலகட்டத்தில் ஆனந்த விகடன் அவரது வாழ்க்கை வரலாற்றை ஒரு நூலாக வெளியிட்டிருந்தது. அந்த நூலின் அட்டைப்படம்தான் இது. எழுதியவர் மயன். மயன் அக்காலத்தில் விகடன் ஆசிரியர்களில் ஒருவராகவும், பிரபலமான விகடனின் தொடர்கதையாசிரியராகவுமிருந்த எழுத்தாளர் மணியன் என்று ஊகிக்கின்றேன்.
இந்த நூலின் படத்தைத் தற்செயலாக இணையத்தில் பார்த்ததும் பால்யப் பருவத்து நினைவுகள் சில சிறகடித்தன. நான் முதன் முதலில் ஜான் எஃப். கென்னடி பற்றி வாசித்த நூல் இந்த நூல். யாழ் புகையிரத நிலையத்திலிருந்த புத்தகக் கடையில் தொங்கிக்கொண்டிருந்த நூல்களில் என்னைக் கவர்ந்த நூல். இத்தனைக்கும் கென்னடியைப் பற்றி எதுவுமே அந்த வயதில் தெரியாமல் இருந்த போதிலும், அந்த வசீகரமான முகத்தின் ஈர்ப்புக் காரணமாக அம்மாவை வற்புறுத்தி வாங்கிப்படித்தேன்.
