ஜோன்.எஃப்.கென்னடி மறைந்த காலகட்டத்தில் ஆனந்த விகடன் அவரது வாழ்க்கை வரலாற்றை ஒரு நூலாக வெளியிட்டிருந்தது. அந்த நூலின் அட்டைப்படம்தான் இது. எழுதியவர் மயன். மயன் அக்காலத்தில் விகடன் ஆசிரியர்களில் ஒருவராகவும், பிரபலமான விகடனின் தொடர்கதையாசிரியராகவுமிருந்த எழுத்தாளர் மணியன் என்று ஊகிக்கின்றேன்.
இந்த நூலின் படத்தைத் தற்செயலாக இணையத்தில் பார்த்ததும் பால்யப் பருவத்து நினைவுகள் சில சிறகடித்தன. நான் முதன் முதலில் ஜான் எஃப். கென்னடி பற்றி வாசித்த நூல் இந்த நூல். யாழ் புகையிரத நிலையத்திலிருந்த புத்தகக் கடையில் தொங்கிக்கொண்டிருந்த நூல்களில் என்னைக் கவர்ந்த நூல். இத்தனைக்கும் கென்னடியைப் பற்றி எதுவுமே அந்த வயதில் தெரியாமல் இருந்த போதிலும், அந்த வசீகரமான முகத்தின் ஈர்ப்புக் காரணமாக அம்மாவை வற்புறுத்தி வாங்கிப்படித்தேன்.
பளபளப்பான தாள்களில் , JFKயின் அழகான குடும்பப்புகைப்படங்கள் அடங்கிய நூல். கென்னடியின் வெள்ளை மாளிகை அலுவலகத்தில் ,கென்னடி சக அதிகாரிகளுடன் உரையாடிக்கொண்டிருக்கும் சமயத்தில் மேசைக்கு அடியில் ஒளிந்திருக்கும், தந்தையின் இறுதிச் சடங்குகளின்போது சல்யூட் அடிக்கும் அவரது குழந்தை JFK ஜூனியரின் புகைப்படங்களை உள்ளடக்கியிருந்த நூல். இரண்டாவது உலக மகாயுத்தத்தில் பங்கு பற்றியவர் JFK. அவர் சென்றுகொண்டிருந்த படகு பிடி 109 ஜப்பானியப் போர்க்கப்பலால் தாக்கப்பட்டபோது படகு இரண்டாகப் பிரிந்து விடுகின்றது. அவருடன் பயணித்த படைவீரர் இருவர் மரணித்த நிலையில், காயம்பட்ட இன்னுமொருவரின் லைஃப் ஜாக்கட்டைப் பற்களால் இறுக்கிப்பிடித்தபடி , பல மணி நேரம் நீந்தி, அருகிலிருந்த தீவுக்கு நீந்திச்சென்றவர் JFK என்பது குறிப்பிடத்தக்கது. இப்படகில் JFK இருக்கும் காட்சியைக்கொண்ட புகைப்படமும் மேற்படி நூலில் இருந்ததாக நினைவு. இதன் காரணமாகவே கென்னடி தன் வாழ்நாள் முழுவதும் முதுகு வலியால் அவதிப்பட்டுக்கொண்டிருந்தார்.
இந்நூலின் அட்டைப்படம் இந்நினைவுகளை மீண்டும் எழுப்பின. குறை நிறைகளுடன் என்னை மிகவும் கவர்ந்த அமெரிக்க ஜனாதிபகளாக ஆபிரகாம் லிங்கனையும், JFK ஐயும் கூறுவேன்.
No comments:
Post a Comment