பெண் எழுத்தாளர் எஸ்.லட்சுமி சுப்பிரமணியம்
 |
எழுத்தாளர் எஸ்.லட்சுமி சுப்பிரமணியம் |
அறுபதுகளில் ,எழுபதுகளில் எஸ்.லட்சுமி சுப்பிரமணியம் புகழ்பெற்ற எழுத்தாளராக விளங்கியவர். இவரது சிறுகதைகள் கல்கியில் சிறப்புச் சிறுகதைகளாக வெளிவந்துள்ளன. இவரது நாவலான 'பொன் மாலைப்பொழுது 'தினமணிக்கதிரில் அறுபதுகளின் இறுதியில் அல்லது எழுபதுகளின் ஆரம்பத்தில் வெளியானது. எனக்கு மிகவும் பிடித்த நாவலாக அப்போது இருந்தது. அதில் வரும் நடுத்தர வயது சோமு இன்னும் நினைவில் நிற்கின்றார்.
16.10.1966 கல்கி சஞ்சிகையில் வெளியான பெண் எழுத்தாளர் எஸ்.லட்சுமி சுப்பிரமணியத்தின் படத்துடன் கூடிய அவரது சிறுகதையான அக்கினிப் பிரவேசம் கதையின் பக்கத்தினை இங்கு பகிர்ந்துகொள்கின்றேன் ஒரு தகவலுக்காக.
இதே பெயரில் ஆண் எழுத்தாளர் ஒருவரும் எழுதி வருகின்றார். அவரது பெயரில் இதயம் சஞ்சிகையில் பல பயணக்கட்டுரைகள் வெளியாகியுள்ளன. இவர் வேறு அறுபதுகளில் நான் வாசித்த பெண் எழுத்தாளரான எஸ்.லட்சுமி சுப்பிரமணியம் வேறு,. அவர்தான் கல்கி வெள்ளிப் போட்டியில் சிறுகதைக்காகப் பரிசு பெற்றவர். இவர்,, ஆண் எஸ்.லட்சுமி சுப்பிரமணியம், அல்லர்.
பெண் எழுத்தாளரான எஸ்.லட்சுமி சுப்பிரமணியம் பற்றி அறிந்தவர்கள் தம் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
ஆண் எழுத்தாளர் எஸ்.லட்சுமி சுப்பிரமணியம்
எஸ்.லட்சுமி சுப்பிரம்ணியம் என்னும் பெயரில் ஆண் எழுத்தாளர் ஒருவரும் உள்ளார். இவர் இதயம் சஞ்சிகையில் பல பயணக்கட்டுரைகள் எழுதியவர். சென்னை நூலகம் இவரைப்பற்றிப் பின்வருமாறு கூறுகின்றது:
 |
எழுத்தாளர் எஸ்.லட்சுமி சுப்பிரமணியம் |
"எழுத்தாளர் எஸ். லட்சுமி சுப்பிரமணியம் அவர்களின் இயற்பெயர் ஆர்.சுப்பிரமணியம். இவர் 1930 ஆம் ஆண்டு நவம்பர் 2 ஆம் தேதி பிறந்தார். 1947ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி, நமது சுதந்திர தினத்தன்று இவரது முதல் சிறுகதை ‘காவேரி’ மாத இதழில் வெளிவந்தது. ஆனந்த விகடன், கல்கி, கலைமகள், தினமணி கதிர், தீபம், அமுதசுரபி, இதயம் பேசுகிறது, மங்கையர் மலர், ஞானபூமி, மயன், காலைக்கதிர், உங்கள் நலம், ஹெல்த் போன்ற பத்திரிகைகளில் இவரது நாவல், சிறுகதைகள், கட்டுரைகள், பேட்டிக் கட்டுரைகள், தொடர்கதைகள் வெளிவந்துள்ளன. இவரது சுமார் 20 நாவல்கள், 40 குறுநாவல்கள், 1000 சிறுகதைகள், 1500 கட்டுரைகள் வெளிவந்துள்ளன. கற்பனை இலக்கியம், ஆன்மிகம், மருத்துவம், மனோ தத்துவம், பயணக் கட்டுரை, இலக்கியம், சுயசரிதம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் எண்பத்தைந்து புத்தகங்களை எழுதியுள்ளார். ஆனந்த விகடன் வெள்ளி விழா, கல்கி வெள்ளி விழா ஆகியவற்றில் சிறுகதைப் பரிசுகளையும், கலைமகள் இதழின் நாராயணசாமி ஐயர் நாவல் பரிசையும் பெற்றுள்ளார். ‘இலக்கிய சிந்தனை’ இவரது சிறுகதையைப் பாராட்டிப் பரிசு அளித்திருக்கிறது. அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர் சங்கம் 1998ஆம் ஆண்டு இவரது ஐம்பத்தோர் ஆண்டு தமிழ் எழுத்துப் பணியைப் பாராட்டி விழா நடத்திக் கௌரவித்தது.... ‘ஞானபூமி’ ஆன்மிக மாத இதழில் துணை ஆசிரியராகவும், பின்னர் ஆசிரியராகவும் பணியாற்றி உள்ளார். ‘உங்கள் நலம்’ மருத்துவ மாத இதழின் ஆசிரியராக இரண்டரை ஆண்டுகள் பணியாற்றி உள்ளார். சுமார் 100 மருத்துவ நிபுணர்களைப் பேட்டி கண்டு கட்டுரைகளைத் தொகுத்துள்ளார். .. பகவான் ஸ்ரீசத்ய சாயிபாபாவின் தொண்டனாக நாற்பது ஆண்டுகளாகப் பணியாற்றி, அவரது அருளுரைகளைத் தொகுத்துள்ளார். சமுதாய நலப்பணிகளிலும் பங்கெடுத்துள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூர் ஆலத்தைப் புதுப்பிக்கும் பணி, ஸ்ரீரங்கம் ராஜகோபுரத்தை உருவாக்கும் பணி ஆகியவற்றின் தலைமைப் பொறியாளராக திறம்பட பணியாற்றியுள்ளார்"
இதில் பல தகவல்கள் தவறானவை. குறிப்பாக 'ஆனந்த விகடன் வெள்ளி விழா, கல்கி வெள்ளி விழா ஆகியவற்றில் சிறுகதைப் பரிசுகளையும், கலைமகள் இதழின் நாராயணசாமி ஐயர் நாவல் பரிசையும்' பெற்றவர் பெண் எழுத்தாளரான எஸ்.லட்சுமி சுப்பிரமணியம். அவரது புகைப்படத்துடன் , 16.10.1966 கல்கி சஞ்சிகையில் வெளியான அவரது 'அக்கினிப் பிரவேசம்' சிறுகதையின் பக்கத்தையே இங்கு காண்கின்றீர்கள்.
'1947ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி, நமது சுதந்திர தினத்தன்று இவரது முதல் சிறுகதை ‘காவேரி’ மாத இதழில் வெளிவந்தது. ஆனந்த விகடன், கல்கி, கலைமகள், தினமணி கதிர் ' போன்றவற்றில் எழுதியவர் பெண் எழுத்தாளரான எஸ்.லட்சுமி சுப்பிரமணியம். மேற்படி நூலகக்குறிப்பு பெண் எழுத்தாளர் எஸ்.லட்சுமியின் எழுத்துலகப் பங்களிப்புகளையெல்லாம் ஆண் எழுத்தாளர் எஸ்.லட்சுமி சுப்பிரமணியத்தின் படைப்புகளாகக் குறிப்பிட்டிருக்கின்றது.
No comments:
Post a Comment