Tuesday, July 28, 2026

வர்க்கவிடுதலையே வர்ண விடுதலை என்று நம்பியவர் எழுத்தாளர் எஸ். அகஸ்தியர்! - வ.ந.கிரிதரன் -

எழுத்தாளர் அகஸ்தியர்

இலங்கை முற்போக்குத் தமிழ் இலக்கியத்தின் முக்கிய ஆளுமையாளர்களில் ஒருவர் எழுத்தாளர் அகஸ்தியர்.  நாவல் , சிறுகதை, நாடகம், கட்டுரை, திறனாய்வு , நாட்டுக் கூத்து , மிருதங்க இசை எனப் பன்முகக் கலை, இலக்கிய  ஆளுமை மிக்க படைப்பாளி  அவர். அவர் தான் ஏற்றுக்கொண்ட  மார்க்சியச் சிந்தனையைத் தான் நம்பும் தத்துவமாக வரித்துக்கொண்டவர் அவர். அவர் படைத்தது மக்கள் இலக்கியம். சமூக, வர்க்கப்பிரிவுகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக எழுந்த புரட்சிக் குரல் அவருடையது.  இவ்விடயத்தில் எவ்விதச் சமரசங்களும் அற்று ச் செயற்பட்டார்.  

ஆயுதங்களில் மிகச்சிறந்த ஆயுதம் எழுத்தாளரின் பேனா.  மக்களைச் சிந்திக்கவைக்க, எழுச்சி கொள்ள வைக்க அதனால்தான் முடியும். தாம் வாழும் சமுதாயத்தைச் சுட்டெரிக்கும் அநீதிகளுக்கெதிராக தம் எழுத்துகளைப் பாவிக்கும் எழுத்தாளர்கள் சமூக, அரசியற் போராளிகள். அவ்விதமான போராளிகளில் ஒருவர்தான் எழுத்தாளர் அகஸ்தியரும்.  தான் பிறந்த மண்ணில் நிலவிய வர்ண, வர்க்க வேறுபாடுகளால் பல்வகைகளிலும் துன்புறும் மக்கள் நிலைகண்டு அவர் பேசாமல், மெளனமாக இருக்கவில்லை. எழுதத்தொடங்கிய காலத்திலிருந்து  அந்திம காலம் வரையில் அவரது புரட்சிக் குரலை , எதிர்ப்புக் குரலை, எழச்சிக் குரலை வெளிப்படுத்திக்கொண்டிருந்தன அவரது எழுத்துகள். அநீதி கண்டு பொங்கியெழுந்த அவரது ஆரம்ப கால முயற்சிகள் கவிதைகளாகவே இருந்தன. 

"கவிதையே என் முதல் இலக்கிய எழுத்து. கவிதை இலக்கணம் 1944 – 1945 காலப்பகுதியல் எழுதத் தொடங்கினேன்."  (எழுத்தாளர் எஸ். அகஸ்தியர், சந்திப்பு- லெ .முருகபூபதி தினகரன் வாரமஞ்சரி 31.12.1995 பக் 23)

அகஸ்தியர்  வர்ண, வர்க்க வேறுபாடுகளால் பற்றி எரிந்து கொண்டிருந்த மானுட உலகைக்கண்டு பொங்கியெழுந்தவர். அவரது சீற்றம் வெறும் உணர்ச்சி மயமானது அல்ல. தெளிந்த சிந்தனையுடன் கூடிய தத்துவார்த்தப் பின்னணி மிக்கது. பொருளாதாரமே அனைத்துப் பிரச்சனைகளுக்கும் அடிப்படைக்காரணம் என்னும் மார்க்சியச் சிந்தனையை உள் வாங்கியதால் ஏற்பட்ட தெளிவு அது.  ‘இலக்கியத்தில் ஒழுக்க வாதம் அல்லது நடுநிலைமை வாதம்’  என்னும் கட்டுரையில் அவர் தெரிவித்திருக்கும் பின்வரும் கூற்று அதற்கு நல்லதோர் எடுத்துக்காட்டு:

"இன்றைய இந்தச் சமூக அமைப்பு இரண்டு முரண்பட்ட வர்க்கங்களாக அமைந்திருக்கின்றன. இது உழைப்பாளிக்குப் பாதகமாகவும், உடமைவாதிக்குச் சாதகமாகவும் அமைக்கப் பட்டிருக்கின்றது. இத்தகையச் சமூக அமைப்பில் வர்க்க பேதங்கள் இருப்பதால்தான் பொருளாதாரப் பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இந்தப் பொருளாதார ஏற்றுத் தாழ்வுகளே கொலை, களவு, கற்பழிப்பு, கீழ்த்தர குருர உணர்ச்சி, வறுமை ஆகியவைகள் சமுதாயத்தில் ஏற்படுவதற்கு அடிப்படைக் காரணங்களாக அமைந்திருக்கின்றன. "

 இந்த்தெளிவு காரணமாக வர்க்கமற்ற பொதுவுடமைச் சமுதாயமே அனைத்துக்குமான தீர்வு என்னும் மார்க்சியத்தை ஏற்றுக்கொள்கின்றார். எழுத்தாளர்கள் பொருளாதாரமே அடிப்படைப்பிரச்சனை என்பதைப்புரிந்து கொண்டு, அதனடிப்படையில் மானுட சமுதாயத்தில் நடக்கும் குற்றச் செயல்களை அணுக வேண்டும் என்கின்றார்:

"ஒரு உண்மைக் கலைஞன், மனித வாழ்க்கை முன்னேற்றத்திற்காக எழுதுகின்றவன். பொருளாதார ரீதியில் வாழ்க்கைப் பிரச்சினைகளை அலசி ஆராயுந் திறனும், தன்மையும் பெற்றிருக்க வேண்டும். அப்படிப்பட்டவனால்தான் இன்றைய ஒழுக்கம் சுரண்டலின் மேல் கட்டப்பட்ட கோபுரம் என்பதை உணர்ந்து வறுமையை உற்பத்தி பண்ணுகின்ற முதலாளித்துவத்தின் கொடுமைகளை அம்பலப் படுத்தி, மக்களுக்கு ஒழுக்கத்தைக் காட்ட முடியும். ஆனால் இன்று இலக்கியத்தில் ஒழக்கவாதம் பேசுகின்றவர்களோ, வறுமையின் சிருஷ்டிகர்த்தாக்கள் யாரென்பதைத்  தெரியாமலும், ஒழுக்கக் கேட்டுக்குக் காரணத்தைப் புரிந்து கொள்ளாமலும் , ஒழக்கத்தைப் பற்றி; போதனைகளைப் பண்ணுகின்றார்கள். இவர்களெல்லாம் ‘ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும், ஒவ்வொரு காரணமுண்டு’ என்பதைத் தெரிந்து கொள்ளாத கண்மூடிக் கலைஞர்கள்ழ்......   முதலாளித்துவத்தின் அழிவில்தான் வறுமை அழியும். வறுமையின் அழிவில்தான் கொலை, களவு, கற்பழிப்பு போன்ற குரூர தீச் செயல்கள் அழிந்து புதிய சமுதாயம் - பொதுமை சமுதாயம் மலரும். அந்தச் சமுதாயத்தில்தான் அன்பு, சமாதானம், ஒழுக்கம் ஆகிய இவைகள் தூய்மை பெற்று வாழும். அதற்காக மக்கள் இலக்கியச் சிருஷ்டிப்பாளர்கள் இலக்கியத்தில் சமூகப் பார்வையைக் கையாளவேண்டும்." ( கட்டுரை: ‘இலக்கியத்தில் ஒழுக்க வாதம் அல்லது நடுநிலைமை வாதம்’- அகஸ்தியர்)

இவ்விதம் அகஸ்தியர் வர்ண விடுதலைக்காக, வர்க்க விடுதலைக்காக அறைகூவல் விடுக்கும் ஓர் இலக்கியவாதியாக இருப்பதற்கு முக்கியமானவர் மார்க்சிய அடிப்படையிலான புர்ட்சியை ருஷ்யாவில் உருவாக்கிய  ருஷ்யாவில் லெனின். லெனினின் வாழ்க்கையும், சிந்தனைகளும் அவரை மார்க்சிய வழியில் செயற்பட வைத்தன. அவரது மறைவுக்குப் பின்னர் அவரது மகளும், எழுத்தாளருமான நவஜோதி ஜோகரட்னம் வெளியிட்ட 'லெனினின் பாதச் சுவடுகள்' (லெனினின் வாழ்க்கையை விபரிக்கும் கதைகளின் தொகுப்பு)  இதற்கு நல்லதொரு சான்று. இந்நூலின் அணிந்துரையில் பேராசியர் சி. தில்லைநாதனின் பின்வரும் கூற்றும் இதனை வெளிப்படுத்தும்:

"சோவியத் நாட்டில் லெனின்  முன்னெடுத்த கோட்பாடுகளும், அவரது சாதனைகளும் யாழ்ப்பாணத்து ஆனைக்கோட்டையைச் சேர்ந்த அகஸ்தியர் என்ற இளைஞரின் கவனத்தை ஈர்த்தனவென்றால்  அதற்குக் காரணம் அகஸ்தியரது சமுதாயப் பிரக்ஞையும், மானிட நேயமும் என்றே கூறவேண்டும்." (லெனினின் பாதச் சுவடுகள்'  நூலுக்கான அணிந்துரையில்)

அகஸ்தியர்தம் எழுத்துகள் , அவை புனைவுகளாக இருக்கட்டும், அல்லது அபுனைவுகளாக  இருக்கட்டும் ,  இவ்விதமான அவரது  சிந்தனைகளை வெளிப்படுத்துபவை. இறுதிவரை இவற்றிலிருந்து விலகாமல், தளும்பாமல்  உறுதியுடன் இருந்தவர்.

புனைவுகளைப் பொறுத்தவரையில் '‘எரிநெருப்பில் இடைபாதை இல்லை’ என்னும்  அவரது நாவல் முக்கியமான படைப்பு. இதனை இலங்கையில் வெளியான முதலாவது தலித்திய நாவலாகவும் திறனாய்வாளர்கள் சிலர் கருதுவர். தீண்டாமைக்கெதிராகக் குரல் கொடுக்கும் இந்நாவல் பல எதிர்ப்புகளுக்கு மத்தியில் , அவற்றுக்கு முகம் கொடுத்து வெளியானது.  இந்நாவல் பற்றி. 'மானிடத்தை இதய சுத்தியோடு நேசித்த முதுபெரும் எழுத்தாளர் எஸ். அகஸ்தியர்!' என்னும் கட்டுரையில்  கலாநிதி க.அருணாசலம் பின்வருமாறு  குறிப்பிடுவார்:

"அகஸ்தியரின் ஆக்கங்கள் சில, சனாதனிகள் பலரின் தீவிர கண்டனத்திற்குள்ளாகின. அவற்றுள் வில்லூன்றி மயானமாக 1953 ஆம் ஆண்டில் தோன்றிப் படிப்படியாக வளர்ந்து 1992 ஆம் ஆண்டு எரிநெருப்பில் இடைபாதை இல்லை என்னும் நாவலாக விஸ்வரூபமெடுத்த ஆக்கம் விதந்து கூறக்கூடியதொன்றாகும். இவ்வாக்கம் காரணமாக 1953ஆம் ஆண்டு முதல் இற்றைவரை சனாதனிகள் பலர் அகஸ்தியருக்கு வசைபாடிக் கொண்டிருப்தையும் முற்போக்குவாதிகள் புகழ்ந்துகொண்டிருப்பதையும்  அவதானிக்கலாம். அதே சமயம் இவ்வாக்கம் 'எரிகோளம்' என்னும் பெயரில் வெளிவந்தபோது ஈழநாடு பத்திரிகையின் விசேட பரிசையும் பெற்றுக் கொண்டமையும் குறிப்பிடத்தக்கது."

தாம் வாழ்ந்த சமூகத்தின் அனைத்துப் பிரச்சனைகளுக்கும், குறிப்பாக வர்ண விடுதலைக்குமான  தீர்வு மார்க்சிய அடிப்படையிலான வர்க்க விடுதலையே, பொதுவுடமைச் சமுதாயமே என்று நம்பியவர் மட்டுமல்லர் அவ்விதமே தம் எழுத்துகளில் வெளிப்படுத்தியவர் எழுத்தாளர் எஸ்.அகஸ்தியர். அவ்வகையில் இலங்கை முற்போக்குத் தமிழ் இலக்கியத்தின் முக்கிய கலை, இலக்கிய ஆளுமையாளர்களில் ஒருவராக அவர்  விளங்குகின்றார்.

உசாத்துணைப் பட்டியல்:

1. லெனினின் பாதச்சுவடுகலில்... - எஸ்.அகஸதியர் (கதைகள்)
2. எரிநெருப்பில் இடைபாதை இல்லை - எஸ்.அகஸ்தியர் ( நாவல்)
3.  'மானிடத்தை இதய சுத்தியோடு நேசித்த முதுபெரும் எழுத்தாளர் எஸ். அகஸ்தியர்!' -   கலாநிதி க.அருணாசலம் (கட்டுரை)
4. எழுத்தாளர் எஸ். அகஸ்தியர், சந்திப்பு- லெ .முருகபூபதி தினகரன் வாரமஞ்சரி 31.12.1995 பக் 23)
5. ‘இலக்கியத்தில் ஒழுக்க வாதம் அல்லது நடுநிலைமை வாதம்’- எஸ்.அகஸ்தியர் (கட்டுரை)

*டிஜிட்டல் ஓவியம் - கூகுள் நனோ பனானா வழி வநகி
girinav@gmail.com

No comments:

யாழ்ப்பாணம் போவோமா?

[Disclosure: This post contains Amazon affiliate link. As an Amazon Associate, I earn from qualifying purchases.] https://link.amazon/B0dJT...