எம்ஜிஆரைப் பொறுத்தவரையில் தன் இரசிகர்களை மிகவும் மதிப்பார். இரசிகர்களின் வர்க்கப்பின்னணியையோ, சமூகப்பின்னணியையோ வைத்து அவர்களை அணுக மாட்டார். அவரைக்காண வரும் இரசிகர்களை அன்புடன் அரவணைத்து வரவேற்பார். முகம் சுளிக்க மாட்டார்.
ஒரு முறை 'இதயக்கனி' படப்பிடிப்பின்போது , நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த அவரது இரசிகர்களான இளைஞர்கள் இருவர் அவரைப்பார்க்க வேண்டுமென்று நீந்தி வந்து அவரை ஆச்சரியப்பட வைக்கின்றார்கள். அவரை எவ்விதம் எம்ஜிஆர் வரவேற்றார் என்பதை இப்புகைப்படக் காட்சி காட்டுகின்றது.
இத்தகவலை வெளியிட்ட 'த இந்து ' பத்திரிகை பின்வருமாறு இச்சம்பவத்தை விபரிக்கின்றது:
" M.G.R. மீது ரசிகர்களும் அடித்தட்டு மக்களும் தங்கள் உயிரையே வைத்திருந்தனர். இது ஏதோ கண்மூடித்தனமான பக்தியால் திடீரென ஒரே நாளில் ஏற்பட்டது அல்ல. அந்த அளவுக்கு ரசிகர்களையும் சாதாரண மக்களையும் எம்.ஜி.ஆர். நேசித்தார். சில நேரங்களில் அவர்கள் தன்னிடம் வரம்பு மீறி நடந்து கொண்டாலும் அதை அவர்களின் அன்பின் வெளிப்பாடாகவே எடுத்துக் கொள்வார்.எம்.ஜி.ஆர். நடித்த ‘இதயக்கனி’ படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் சிதம்பரம் அருகே உள்ள பிச்சாவரம் முகத் துவார பகுதியில் எடுக்கப்பட்டன. அது வரை எந்தப் படங்களிலும் இடம்பெறாத அபூர்வ லொகேஷன் அது. அதேநேரம், மனித நடமாட்டத்தை அதிகம் பார்க்க முடியாத, மீனவர்களேகூட அப்போது போக அஞ்சிய இடம். எம்.ஜி.ஆர். வந்திருப்பதை அறிந்து அங்கும் மக்கள் வந்துவிட்டனர்.அந்தக் காட்சியில் எம்.ஜி.ஆர். மாறு வேடத்தில் இருப்பார். படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தபோது, இரண்டு இளைஞர் கள் எம்.ஜி.ஆரை காண வேண்டும் என்ற ஆவலில் தண்ணீரில் குதித்து நீந்தி அவர் இருந்த இடத்துக்கு வந்துவிட்டனர். அந்த இளைஞர்களை அழைத்த எம்.ஜி.ஆர்., அவர்களிடம் நலம் விசாரித்தார். அப் போது, ஒரு இளைஞர் எதிர்பாராமல் எம்.ஜி.ஆரை கட்டிக்கொண்டு முத்தமிட்டார். கொஞ்சம்கூட முகம் சுளிக்காமல் அந்த இளைஞரின் அன்பை எம்.ஜி.ஆர். ஏற்றுக்கொண்டார்."
* டிஜிட்டல் ஓவியம் - கூகுள் நனோ பனானா வழி வநகி
நன்றி - தமிழ் இந்து,.

No comments:
Post a Comment