Friday, July 24, 2026

கிடைக்கப் பெற்றேன்: எழுத்தாளர் நடேசனின் நான்கு நூல்கள்!


புகலிடத் தமிழ் இலக்கியத்தில் எழுத்தாளர் நடேசனின் பங்களிப்பு முக்கியமானது. நாவல், சிறுகதை, விமர்சனம், பயணக்கட்டுரை என இவரது பங்களிப்பு பன்முகத்தன்னை மிக்கது. எளிமையான சிறு வசனங்களால் ஆன செறிவான இவரது மொழி வாசிப்புக்கு இனிமையூட்டுவது. எழுத்து தவிர சமூக, அரசியற் செயற்பாட்டாளராகவும் இருப்பவர். பல்லாண்டுகளாக ஆஸ்திரேலியாவில் உதயம் என்னும் பத்திரிகையை நடத்தி வருபவர். 

பதிவுகள்  இணைய இதழில் இவரது பயணக்கட்டுரைகள் தொடர்ச்சியாக வெளியாகின்றன. பல்வேறு நாடுகளுக்குச் செல்லும் வாய்ப்புகள் வாய்க்காதவர்களுக்கு அந்நாடுகளுக்குச் சென்ற அனுபவங்களைத் தரும் கட்டுரைகள். இவரது, தமிழ் இலக்கியப் பரப்பில் பலர்தம் கவனத்துக்குள்ளாகிய 'அசோகனின் வைத்தியசாலை' நாவல் மற்றும் பயண நூலான 'நைல் நதிக்கரையில் ஆகியவை  பதிவுகள் இணைய இதழில் தொடராக வெளிவந்தவை என்பதும் , ' குறிப்பிடத்தக்கது.

இவரது 'நாலு கால் சுவடுகள்', 'பண்ணையில் ஒரு மிருகம்', 'தாத்தாவின் வீடு',  'வெளிகள் ஆயிரம்' நூல்கள் நேற்று எனக்குக் கிடைத்தன. அதற்காக நடேசனுக்கு நன்றி.

இவற்றில் 'நாலு கால் சுவடுகள்' கால்நடை மருத்துவரான இவரது அனுபவங்களின் கட்டுரைத்தொகுப்பு என்றாலும், இக்கட்டுரைகள்  அனைத்தும் சிறுகதைகளாகவும் இலக்கியத்தரம் அடைந்திருக்கின்றன என்பதை மேலோட்டமாக ஓரிரு பக்கங்களைப் புரட்டிப்பார்க்கையில் அவதானிக்க முடிகின்றது. 

'பண்ணையில் ஒரு மிருகம்'  இவர் கறுப்பு ஜூலையைத்  தொடர்ந்து தமிழகத்தில் தங்கியிருந்த காலத்தில் எழுதப்பட்ட நாவல். 'அசோகனின் வைத்தியசாலை' போல் முக்கியமான புகலிட நாவல்களில் ஒன்று.  தமிழகச் சமூகச் சீர்கேடுகள், தமிழக வாழ்வு என்பவற்றை அடிப்படையாகக் கொண்ட நாவல்.

'தாத்தாவின் வீடு' நாவல் விரிந்த நாவல். இன்னுமொரு முக்கியமான புகலிட நாவல். புகலிடத்திலிருந்து மீண்டும் சொந்த மண்ணும் செல்லும் ஒருவரின் கடந்த  காலம் பற்றிய நனவிடை தோய்தல்கள் பற்றிய நாவலில் மாயா யதார்த்தவாதக் கூறுகளும் அடங்கியுள்ளன. இவரது ஏனைய நாவல்களான பண்ணையில் ஒரு மிருகம், அசோகனின் வைத்தியசாலை நாவல்களிலும் இவ்விதமானதொரு போக்கினை அவதானிக்கலாம்.  

புகலிட , பிறந்தமண் மீதான நனவிடை தோய்தல்கள் பற்றிப் படரும் இவரது படைப்புகளின் இன்னுமொரு சிறப்பு கால்நடை மருத்துவர் என்னும் இவர் பணியின் அனுபவங்களும் கலந்து வெளிப்படுவதாகும். 

'வெளிகள் ஆயிரம்'  நவகால இலங்கை, புகலிடத் தமிழ் எழுத்தார்களை ,அவர்கள் தம் படைப்புகளை அறிமுகப்படுத்தும் கட்டுரைகள்.
 
நூல்களை அனுப்பிய நடேசனுக்கு என் நன்றி. நிச்சயம் இந்நூல்கள் பற்றிய விரிவான கருத்துகளை எழுதுவேன்.





No comments:

யாழ்ப்பாணம் போவோமா?

[Disclosure: This post contains Amazon affiliate link. As an Amazon Associate, I earn from qualifying purchases.] https://link.amazon/B0dJT...