எண்பதுகளில் நானும் , நண்பர் அருட்செல்வனும் முழங்காவில் பகுதியில் செயற்பட்டுக்கொண்டிருந்த குழாய்க்கிணறுத்திட்டத்தைப் பார்ப்பதற்காகச் சென்றிருந்தோம். அங்கு மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தில் , குடிசார் பொறியியல் தொழில் நுட்பம் கற்றுக்கொண்டிருந்த நண்பர் சிறீ பணியாற்றிக்கொண்டிருந்தார். அவரின் அழைப்பின்பேரில் சென்றிருந்தோம். சங்குப்பிட்டி சென்று ம், அங்கிருந்து வத்தையில் பூநகரி செனறு முழங்காவில் சென்றோம். இப்போது வத்தைக்குப் பதில் பாலம் உள்ளது. மகாதேவா தாம்போதி என்று அழைக்கப்படும் அப்பாலம் பல வருடங்களாகக் கட்டப்பட்டு, இறுதியில் எண்பதுகளின் நடுப்பகுதியில் முடிக்கப்பட்டது . இவ்விதம் அமைக்கப்படும் கடற்பாதைகள் தாம்போதிகள் என அழைக்கப்பட்டன. பொன்னாலைப் பாலம், பண்ணைப்பாலம் என்பவையும் இவ்வகையான ஏனைய தாம்போதிகள்தாம்.
அப்பொழுதுதான் அப்பகுதியில் அமைந்திருந்த பல்லவராயன் கட்டு, 'கரியாலை நாகபடுவான்' குளம் போன்றவற்றைப் பற்றி முதன் முதலில் அறிந்தேன். முதற் பார்வையிலேயெ , முதல் அனுபவத்திலேயே எனக்கு அக்காட்டுப்பகுதி , குறிப்பாகக் கரியாலை நாகபடுவான் குளம் அமைந்திருந்த பகுதியும், இயற்கைச்சூழலின் வனப்பும் பிடித்துப்போனது. 'நாகபடுவான்' என்பதிலேயெ படுவான் என்னும் சொல் குளத்தைக் குறித்தாலும், அது சங்ககாலச் சொல் என்பதால் 'நாகபடுவான் குளம்' என்றே வழக்கில் அழைப்பார்கள், 'சுனாமி' ஆழிப்பேரலை என்பதைப்போல. 'சுனாமி'என்றாலே ஜப்பானிய மொழியில் ஆழிப்பேரலை என்றாலும் அதனைக்குறிப்பிடுகையில் சுனாமி ஆழிப்பேரலை என்பது பொதுவான வழக்கு.
உண்மையில் முதன் முதலில் நான் கேள்விப்பட்ட பெயர் கரிகாலன் நாகபடுவான் குளம் என்பதுதான்.
அப்போது அங்கிருந்த சங்கக்கடை மனேஜர் காட்டுப் பகுதியில் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த பழைய அழிபாடுகள் இருப்பதாகக் கூறியதை அடுத்து, ஒரு நாள் முழுவதும் அவருடன் அக்காட்டுப் பகுதியில் அவ்வழிபாடுகளைப் பார்ப்பதற்காக அலைந்து திருந்தோம். ஆனால் அது பயனற்றுப்போனது. விரிந்திருந்த காட்டுப் பகுதியில் அன்று எம்மால் அவர் ஏற்கனவே கண்டிருந்த அழிபாடுகளைக் காண முடியவில்லை.
ஆனைகள் அலைந்து திரியும் காட்டுப்பகுதி அது. நாங்கள் சென்றிருந்தபோதும் , அங்கு சில நாட்கள் முன்பு ஒருவர் ஆனை அடித்துக்கொல்லப்பட்டார் என்னும் செய்தியினையும் கேள்விப்பட்டிருந்தோம். செல்லும் வழியிலும் சில இடங்களில் யானை சென்றிருந்த பாதத்தடங்களைப் பார்த்திருந்தோம். இருந்தாலும் அன்று ஆனை பற்றிய பயமெதுவும் அற்று அக்காட்டுப்பகுதியில் அலைந்து திரிந்ததை இப்போது நினைத்தாலும் வியப்பாக இருக்கிறது.
முழங்காவில் என்றதும் நினைவுக்கு வரும் இன்னுமொரு விடயம் - மயில்கள். அங்கு அதிகாலைகள் விழிப்பது மயில்களின் அகவல்கள் மூலமே. அக்காட்டுப் பகுதியில் நிறைய மயில்கள் காணப்பட்டன.
இலங்கையின் பூர்வகுடிகளில் நாகரும் ஓரினத்தவர். யாழ்ப்பாணம் நாகநாடு , நாகதீபம் என்று அக்காலத்தில் அழைக்கப்பட்டதற்கு வரலாற்றுச் சான்றுகள் உள்ளன. மகாவம்சம் போன்ற பாளியில் எழுதப்பட்ட வரலாற்று நூல்கள், மணிமேகலை என்னும் தமிழ்க்காப்பியம், பயணக்குறிப்புகள் மற்றும் தொல்லியம் ஆய்வுகள் போன்றவையே இவ்வரலாற்றுச் சான்றுகள்.
யாழ்ப்பாணத்தில் நாகர்களின் தலைநகராக விளங்கிய கதிரைமலையே கந்தரோடை என்பதும் வரலாற்று அறிஞர்களின் கருத்தாகும். நாகநாடு என்று அழைக்கப்பட்ட இலங்கையின் வடபகுதியில் நாக வழிபாட்டை மேற்கொண்ட நாகர்கள் தமிழர்கள் என்பதும் அவ்வரலாற்றறிஞர்கள்தம் கருத்தாகும்.
கரியாலை நாகபடுவான் பற்றிய வரலாற்றறிஞர் கலாநிதி பரமு புஷ்பரட்ணத்தின் கருத்து வருமாறு:
"இங்கே நாகபடுவான் என்ற இடப்பெயரின் பழமை, அதன் பொருள் ஆய்வுக்கு உரியது. நாகபடுவான் என்ற பெயர் ஐரோப்பியர் ஆட்சியில் பூநகரியில் ஒரு பரந்த பிரதேசத்திற்குரிய பெயராக இருந்தது. காலப்போக்கில் இப்பிரதேசத்தின் ஒருபகுதி பயிர்ச்செய்கைக்கு பயன்படாது போனதால் அந் நிலப்பகுதி கரியலை நாகபடுவான் என தனியொரு கிராமத்தின் இடப்பெயராக அழைக்கப்படுகின்றது. பெருங்கற்காலப் பண்பாட்டின் முக்கிய பண்பாட்டு அம்சங்களில் ஒன்று குளத்தை மையப்படுத்திய கிராமக் குடியிருப்புகளின் தோற்றமாகும். பிராமிக் கல்வெட்டுகளிலும், சமகாலப் பாளி இலக்கியங்களிலும், பெருங்கற்கால மையங்களை அண்டிய இடப்பெயர்கள் குளத்தைக் குறிக்கும் ஆவி, வாவி, மடு, குளம், பழை, வேலி முதலான பின்னொட்டுச் சொற்களுடன் முடிவதற்கு இதுவே காரணமாகும்... இங்கே நாகபடுவான் என்ற இடப்பெயர் நாககுளம் என்ற பொருளிலேயே பயன்படுத்தப்பட்டுள்ளது. படுவம், படுவான் என்பது பழமையான தமிழ்ச்சொல். இது சங்க இலக்கியத்தில் ஆழமான குளம், பெரிய குளம் என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனால் நாககுளம் என்ற பொருளைக் கொண்ட இடப்பெயரே இன்றும் மாற்றம் அடையாது நாகபடுவான் என்ற பண்டைய தமிழ்ச் சொல்லில் அழைக்கப்படுகிறது எனலாம். கலாநிதி இரகுபதி, நாகபடுவான் என்ற இடப்பெயர் ஆதியில் இங்கு நாகத்தைக் குல மரபாகக்க கொண்ட மக்கள் வாழ்ந்ததன் காரணமாகத் தோன்றியது எனக் கூறுகிறார். "
இந்த நாகபடுவான் குளமும் இலங்கைத் தமிழர்களின் வரலாற்றை வெளிப்படுத்தும் முக்கியமானதொரு வரலாற்றுச் சின்னம்,. மரபுரிமைச்சின்னம். பாதுகாக்கப்பட வேண்டிய பகுதி. இப்பகுதியில் மேலும் தொல்லியம் ஆய்வுகள் தொடரப்பட வேண்டும். அதே சமயம் இயற்கையின் தாலாட்டில் தூங்கும் இப்பகுதியை , இதன் வனப்பை, வரலாற்று முக்கியத்துவத்தைச் சிதைக்காமல் சுற்றுலாப்பயணிகளின் விருப்புக்குரிய சுற்றுலா நகராகப் பராமரிப்பதும் அவசியம்.
**டிஜிட்டல் ஓவியம் - கூகுள் நனோ பனானா வழி வநகி
No comments:
Post a Comment