எம் பால்யப் பருவத்தில் சோமசுந்தரப்புலவரின் கத்தரி வெருளி, இலவு காத்த கிளி, ஆடிப்பிறப்பு, வெண்ணிலா, பவளக்கொடி போன்ற பாலர் பாடல்களுடன் வளர்ந்தவர்கள் நாம். அப்போது நான் வவுனியா மகாவித்தியாலயத்தில் படித்துக்கொண்டிருந்தேன்,. குருமண்காட்டிலிருந்து ஸ்டேசன் வீதி வழியாகப் பாடசாலை செல்வோம். ஸ்டேசன் வீதியில் ராமச்சந்திரன் டீச்சர் வீடு வரையில் , வீதியின் வலப்பக்கத்தில் வயல் பசுமையாக விரிந்திருந்தது. அதில் ஒரு கத்தரி வெருளி வைத்திருந்தார்கள். அதைப்பார்த்துத்தான் பாடசாலை செல்வோம். அதனால் அக்கத்தரி வெருளி எம் மனத்தில் நிலையாகப் பதிந்து விட்டது,. அதனால் அதனை நினைத்ததும் சோமசுந்தரப் புலவரின் கத்தரி வெருளி நினைவுக்கு வரும். அதுபோல் புலவரின் பாடலை நினைத்ததும் அந்தக் கத்தரி வெருளி நினைவுக்கு வரும்.
இன்னுமொரு விடயத்திலும் புலவரின் இந்தக் கத்தரி வெருளி பாடல் எனக்குப் பிடிக்கும், அதற்குக் காரணம் கத்தரி வெருளியூடு புலவர் கூறும் நீதி. பாடலின் இறுதியில் வரும் பின்வரும் வரிகள் இப்பாடலின் சிறப்பை மேலும் அதிகரிக்கும்:
"தூரத்திலே யுனைக் கண்டவுட னஞ்சித்
துண்ணென் றிடித்ததென் நெஞ்சகம் - மிகத்
துண்ணென் றிடித்ததென் நெஞ்சகம்
சேரச் சேரப் போலி வேடக்காரனென்று
தெரிய வந்ததுன் வஞ்சகம் - நன்று
தெரிய வந்ததுன் வஞ்சகம் .....
சிங்கத்தின் தோலினைப் போர்த்த கழுதைபோல்
தேசத்திலே பலர் உண்டுகாண் - இந்தத்
தேசத்திலே பலர் உண்டுகாண்
அங்கவர் தம்மைக்கண் டேமாந்து போகா
அறிவு படைத்தனன் இன்றுநான் - உன்னில்
அறிவு படைத்தனன் இன்றுநான்"
உண்மைதான் கத்தரி வெருளி போன்ற போலி வேடக்காரர்தாம் எத்தனை பேர்! சிங்கத்தின் தோலினைப் போர்த்த கழுதைகள்தான் எத்தனை பேர்!
புலவர் கத்தரி வெருளியூடு பாலருக்கு மகிழ்ச்சியளிக்கும் பாடலைத் தந்தார். கூடவே சமுதாயத்தில் போலி வேடத்தில் மறைந்திருக்கும் போலி வேடதாரிகளையும் அம்பலப்படுத்தினார். நீதிக்கருத்தினை எவ்வளவு அற்புதமாகப் பாலர் பாடலில் கையாண்டுள்ளார் புலவர்! பிரச்சாரமற்ற கலைத்துவம் என்பது இதனைத்தான்!
சோமசுந்தரப் புலவர் பாடல் - கத்தரி வெருளி!
வ.ந.கிரிதரன் குரலில், இசைத்துப் பாடியது SUNO 5.5.
ஓவியம்: சாட்ஜிபிடி வழி வநகி
கத்தரித் தோட்டத்து மத்தியிலே நின்று
காவல் புரிகின்ற சேவகா! - நின்று
காவல் புரிகின்ற சேவகா!
மெத்தக் கவனமாய்க் கூலியும் வாங்காமல்
வேலை புரிபவன் வேறுயார்! - உன்னைப்போல்
வேலை புரிபவன் வேறுயார்?
கண்ணு மிமையாமல் நித்திரை கொள்ளாமல்
காவல் புரிகின்ற சேவகா! - என்றும்
காவல் புரிகின்ற சேவகா!
எண்ணி உன்னைப்போல் இரவுபகலாக
ஏவல் புரிபவன் வேறுயார்? - என்றும்
ஏவல் புரிபவன் வேறுயார்?
வட்டமான பெரும் பூசினிக்காய் போல
மஞ்சள் நிற உறு மாலைப்பார்!- தலையில்
மஞ்சள் நிற உறு மாலைப்பார்!
கட்டியிறுக்கிய சட்டையைப் பாரங்கே
கைகளில் அம்பொடு வில்லைப்பார்!-இரு
கைகளில் அம்பொடு வில்லைப்பார்!
தொட்டு முறுக்காத மீசையைப்பார்! கறைச்
சோகிபோலே பெரும் பல்லைப்பார்! - கறைச்
சோகிபோலே பெரும் பல்லைப்பார்!
கட்டிய கச்சையில் விட்டுச் செருகிய
கட்டை உடைவாளின் தேசுபார்! - ஆகா
கட்டை உடைவாளின் தேசுபார்!
கத்தரித் தோட்டத்து மத்தியிலே நின்று
காவல் புரிகின்ற சேவகா! - நின்று
காவல் புரிகின்ற சேவகா!
பூட்டிய வில்லுங் குறிவைத்த பாணமும்
பொல்லாத பார்வையுங் கண்டதோ ? - உன்றன்
பொல்லாத பார்வையுங் கண்டதோ ?
வாட்ட மில்லாப்பயிர் மேயவந்த பசு
வாலைக் கிளப்பிக்கொண் டோடுதே - வெடி
வாலைக் கிளப்பிக்கொண் டோடுதே
கள்ளக் குணமுள்ள காக்கை உன்னைக்கண்டு
கத்திக் கத்திக் கரைந்தோடுமே - கூடிக்
கத்திக் கத்திக் கரைந்தோடுமே
நள்ளிரவில் வருகள்வனுனைக் கண்டு
நடுநடுங்கி மனம் வாடுமே - ஏங்கி
நடுநடுங்கி மனம் வாடுமே
கத்தரித் தோட்டத்து மத்தியிலே நின்று
காவல் புரிகின்ற சேவகா! - நின்று
காவல் புரிகின்ற சேவகா!
ஏழைக் கமக்காரன் வேளைக் குதவிசெய்
ஏவற்காரன் நீயே யென்னினும் - நல்ல
ஏவற்காரன் நீயே யென்னினும்
ஆளைப்போலப் போலி வேடக்காரன் நீயே
ஆவதறிந்தன னுண்மையே - போலி
ஆவதறிந்தன னுண்மையே
தூரத்திலே யுனைக் கண்டவுட னஞ்சித்
துண்ணென் றிடித்ததென் நெஞ்சகம் - மிகத்
துண்ணென் றிடித்ததென் நெஞ்சகம்
சேரச் சேரப் போலி வேடக்காரனென்று
தெரிய வந்ததுன் வஞ்சகம் - நன்று
தெரிய வந்ததுன் வஞ்சகம்
கத்தரித் தோட்டத்து மத்தியிலே நின்று
காவல் புரிகின்ற சேவகா! - நின்று
காவல் புரிகின்ற சேவகா!
சிங்கத்தின் தோலினைப் போர்த்த கழுதைபோல்
தேசத்திலே பலர் உண்டுகாண் - இந்தத்
தேசத்திலே பலர் உண்டுகாண்
அங்கவர் தம்மைக்கண் டேமாந்து போகா
அறிவு படைத்தனன் இன்றுநான் - உன்னில்
அறிவு படைத்தனன் இன்றுநான்.
கத்தரித் தோட்டத்து மத்தியிலே நின்று
காவல் புரிகின்ற சேவகா! - நின்று
காவல் புரிகின்ற சேவகா!
மெத்தக் கவனமாய்க் கூலியும் வாங்காமல்
வேலை புரிபவன் வேறுயார்! - உன்னைப்போல்
வேலை புரிபவன் வேறுயார்?
No comments:
Post a Comment