கடந்த சில வருடங்களில் கல்கி, நா.பார்த்தசாரதி போன்ற பல எழுத்தாளர்களின் படைப்புகள் தமிழக அரசினால் நாட்டுடமையாக்கப்பட்டுள்ளதால் அவை தமிழகத்தின் பல பதிப்பகங்களுக்கும் அவர்களது வியாபாரத்துக்கு உதவி வருகின்றன. அண்மையில் டொராண்டோ நூலகத்தில் நா.பார்த்தசாரதியின் 'நித்திலவல்லி' 'கபாடபுரம்' போன்ற நாவல்களின் கவிதா பதிப்பக வெளியீடுகளாக வெளிவந்த புதிய பதிப்புகளைப் பார்த்தேன். அழகாக அச்சிட்டு, வெளியிட்டிருக்கின்றார்கள். இவற்றில் 'நித்திலவல்லி' நாவலை, ஓவியர் கோபுலுவின் அழகான ஓவியங்களுடன் எனது மாணவப் பருவத்தில் ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்தபோது வாசித்திருக்கின்றேன். வெகுசன படைப்புகளைத் தந்த எழுத்தாளர்களில் எனக்கு நா.பார்த்தசாரதியும் பிடித்த எழுத்தாளர்களிலொருவர். அவரது சமூக மற்றும் சரித்திர நாவல்களான குறிஞ்சிமலர், பொன்விலங்கு, மணிபல்லவம், நித்திலவல்லி போன்ற நூல்களை நான் அன்று விரும்பி வாசித்திருக்கின்றேன். நா.பா.வின் எழுத்து வாசிப்பதற்கு இனிமையானது. அவர் ஒரு தமிழ்ப் பண்டிதர் என்பதால் நெஞ்சைனையள்ளும் இனிய தமிழில் அவரது படைப்புகள் விளங்கும். அந்தத்தமிழுக்காகவே வாசிக்கலாம். உதாரணமாக 'நித்திலவல்லி' பின்வருமாறு தொடங்குகின்றது:
".. வாதவூர் எல்லையைக் கடக்கும்போதே கதிரவன் மலைவாயில் விழுந்தாயிற்று. மருத நிலத்தின் அழகுகள் கண்கொள்ளாக் காட்சியாயிருந்தன. சாலையின் இருபுறமும் பசுமையான நெல் வயல்களும், தாமரைப் பொய்கைகளும், சோலைகளும், நந்தவனங்களும், மூங்கில்கள் சிலிர்த்தெழுந்து வளர்ந்த மேடுகளுமாக நிறைந்திருந்தன. கூடடையும் பறவைகளின் பல்வேறு விதமான ஒலிகளும், மூங்கில் மரங்கள் ஒன்றோடொன்று காற்றில் உராயும் ஓசையும், செம்மண் இட்டு மெழுகினாற் போன்ற மேற்கு வானமும் அந்த இளம் வழிப்போக்கனுக்கு உள்ளக் கிளர்ச்சி அளித்தன."





