Sunday, March 18, 2018

நா.பா.வின் 'நித்திலவல்லி' தந்த நினைவுகள்... வ.ந.கிரிதரன் -


கடந்த சில வருடங்களில் கல்கி, நா.பார்த்தசாரதி போன்ற பல எழுத்தாளர்களின் படைப்புகள் தமிழக அரசினால் நாட்டுடமையாக்கப்பட்டுள்ளதால் அவை தமிழகத்தின் பல பதிப்பகங்களுக்கும் அவர்களது வியாபாரத்துக்கு உதவி வருகின்றன. அண்மையில் டொராண்டோ நூலகத்தில் நா.பார்த்தசாரதியின் 'நித்திலவல்லி' 'கபாடபுரம்' போன்ற நாவல்களின் கவிதா பதிப்பக வெளியீடுகளாக வெளிவந்த புதிய பதிப்புகளைப் பார்த்தேன். அழகாக அச்சிட்டு, வெளியிட்டிருக்கின்றார்கள். இவற்றில் 'நித்திலவல்லி'  நாவலை, ஓவியர் கோபுலுவின் அழகான ஓவியங்களுடன் எனது மாணவப் பருவத்தில் ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்தபோது வாசித்திருக்கின்றேன். வெகுசன படைப்புகளைத் தந்த எழுத்தாளர்களில் எனக்கு நா.பார்த்தசாரதியும் பிடித்த எழுத்தாளர்களிலொருவர். அவரது சமூக மற்றும் சரித்திர நாவல்களான குறிஞ்சிமலர், பொன்விலங்கு, மணிபல்லவம், நித்திலவல்லி போன்ற நூல்களை நான் அன்று விரும்பி வாசித்திருக்கின்றேன். நா.பா.வின் எழுத்து வாசிப்பதற்கு இனிமையானது. அவர் ஒரு தமிழ்ப் பண்டிதர் என்பதால் நெஞ்சைனையள்ளும் இனிய தமிழில் அவரது படைப்புகள் விளங்கும். அந்தத்தமிழுக்காகவே வாசிக்கலாம். உதாரணமாக 'நித்திலவல்லி' பின்வருமாறு தொடங்குகின்றது:

".. வாதவூர் எல்லையைக் கடக்கும்போதே கதிரவன் மலைவாயில் விழுந்தாயிற்று.  மருத நிலத்தின் அழகுகள் கண்கொள்ளாக் காட்சியாயிருந்தன. சாலையின் இருபுறமும் பசுமையான  நெல் வயல்களும், தாமரைப் பொய்கைகளும்,  சோலைகளும், நந்தவனங்களும்,  மூங்கில்கள் சிலிர்த்தெழுந்து  வளர்ந்த மேடுகளுமாக  நிறைந்திருந்தன.  கூடடையும் பறவைகளின்  பல்வேறு  விதமான ஒலிகளும், மூங்கில் மரங்கள் ஒன்றோடொன்று  காற்றில் உராயும் ஓசையும், செம்மண் இட்டு மெழுகினாற் போன்ற  மேற்கு வானமும் அந்த இளம் வழிப்போக்கனுக்கு உள்ளக் கிளர்ச்சி அளித்தன."


நா.பா.வின் சரித்திர நாவல்கள் ஏனையவர்களிலிருந்து சில சமயங்களில் வேறுபட்டும் காணப்படுகின்றன. அவரது 'மணி பல்லவம்' (கல்கியில் தொடராக வெளிவந்த விரிந்த நாவல்)  சாதாரண சங்க காலத்து மாந்தர்களின் வாழ்வை விபரிப்பது. இளங்கோவடிகள் சாதாரண மாந்தர்களை வைத்துக் குடிமக்கள் காப்பியமாக வடித்த சிலம்புக்கொப்ப நா.பா.வும் சாதாரண மாந்தர்களை வைத்து மேற்படி 'மணி பல்லவம்' வரலாற்று நாவலைப் பின்னியிருக்கின்றார்.

அவரது 'நித்திலவல்லி' வரலாற்று நாவலும் கி.பி.மூன்றாம் நூற்றாண்டிலிருந்து ஆறாம் நூற்றாண்டு வரை பாண்டிய நாட்டைக் களப்பிரர்கள் ஆணட காலத்தை விபரிப்பது. அந்தக் காலத்தைப் பாண்டியர்களின் 'இருண்ட காலமாக' வரலாற்று `ஆசிரியர்கள் குறிப்பிடுவார்கள். அந்த இருண்ட காலத்தைப் பின்னணியாக வைத்து, அக்காலத்தில் மீண்டும் பாண்டியர்களின் ஆட்சியைக் கொண்டு வருவதற்காக, களப்பிரர்களுக்கெதிராக நடைபெற்ற பாண்டிய மக்களின் விடுதலைப் போராட்டத்தை விபரிக்கும் நாவல் 'நித்திலவல்லி..
`
''நித்திலவல்லி'யை அண்மையில் நூலகத்திலிருந்து இரவல் வாங்கிப் படித்துப் பார்த்தேன். மனம் அன்றைய காலகட்டத்துக்கே சிறகடித்துப் பறந்து விட்டது.. களைப்பிரர்கள் தம்மிடம் அடிமைப்பட்டிருந்த பாண்டிய நாட்டை எவ்விதம் மீண்டும் பாண்டியர் ஆட்சி தோன்றிவிடாமலிருப்பதற்காகக் கொடிய அடக்குமுறைகளுக்குள் வைத்திருக்கின்றார்கள் என்பதை விபரித்தபொழுது எனக்கு உடனடியாக ஆயுதப் போராட்டம் மெளனிக்கப்பட்ட ஈழத்தமிழர்களின் இன்றைய நிலைதான் சிந்தையிலெழுந்தது. நா.பா.வின் களப்பிரர் ஆட்சி பற்றிய சித்திரிப்பைச் சிறிது பார்ப்போம்:

".. நீங்களும், நானும், இவ்வூராரும் எல்லோருமே பாண்டிய குலம் ஒளி பெறத்தான் பாடுபடுகிறோம். இப்படிப் பாடுபடுகிறவர்களை அவர்கள் எங்கிருந்தாலும்  தேடித் தேடிக் கொல்வதற்காகவே களப்பிரர்கள் பூத பயங்கரப் படையை ஏவியிருக்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா?  மீண்டும் பாண்டியராட்சி  மலரப் பாடுபடுகிறவர்களின்  இருப்பிடத்தை ஒற்றறிவது, பாண்டியருடைய குலத்தின் மேல்  விசுவாசம் உள்ளவர்கள்  அகப்பட்டால் எந்த நீதி விசாரணையும் இன்றி அவர்களை  உடனே கொன்று விடுவது  ஆகிய காரியங்களைச் செய்வதற்காகவே  பூத பயங்கரப்படை உண்டாக்கப்பட்டிருக்கிறது."

இதனை வாசித்தபொழுது ஆயுதப் போராட்டம் மெளனிக்கப்பட்டபின்னர் ஈழத்தின் தமிழ்ப் பகுதிகளில் நிறைந்திருக்கும் படையினரும், உளவுப் படையினரும், தோன்றி மறைந்த 'கிறிஸ் பூதங்களும்', தொடரும் மர்மப் படுகொலைகளும், இவற்றுக்கு மத்தியில் இயலுமான வழிகளில் தம் உரிமைப் போராட்டத்தினை முன்னெடுத்துச் செல்லும் ஈழத்தமிழர்களும்தாம் நினைவுக்கு வந்தார்கள். ஆனால் அதே சமயத்தின் இருளுக்குப் பின்னர் தெரியும் ஒளியைப் போல், நம்பிக்கைக் கீற்றோன்றும் தோன்றாமலில்லை. அது: மூன்று நூற்றாண்டுகள் வரையில் பாண்டிய நாட்டை அடிமையிருளில் வைத்திருந்தும், கொடிய அடக்குமுறைகளைப் பிரயோகித்தும் களப்பிரர்களால் பாண்டிய நாட்டின் விடுதலைப் போராட்டத்தை அணைக்க முடியவில்லை. அம்மண்ணைக் களப்பிரமயப்படுத்த முடியவில்லை என்பதுதான் அது.

No comments:

வ.ந.கிரிதரன் பாடல் - காலவெளிக் குழந்தைகள் நாம்

இசை & குரல்: AI SUNO | ஓவியம் : AI காலவெளிக் குழந்தைகள் நாம் விரிந்து கிடக்கிறது பேர் அண்டம். புரிந்து கொள்ளவே முயற்சி செய்கின்றேன். இரு...

பிரபலமான பதிவுகள்