Sunday, March 18, 2018

எம்.வி.வி'யின் 'வேள்வித் தீ' பற்றிச் சில அறிமுகக் குறிப்புகள்.... வ.ந.கிரிதரன் -

- எம்.வி.வெங்கட்ராம் -
அண்மையில் எம்.வி.வெங்கட்ராமின் 'வேள்வித் தீ' வாசித்தேன். காலச்சுவடு வெளியீடாக வெளிவந்துள்ள நாவலிது. மணிக்கொடி எழுத்தாளரான எம்.வி.வெங்கட்ராம் தமிழ் இலக்கிய உலகின் முக்கிய படைப்பாளிகளிலொருவர். எம்.வி.வெங்கட்ராம் அப்பாவுக்குப் பிடித்த எழுத்தாளர்களிலொருவர். எழுபதுகளில் ஆனந்த விகடனில் மாத நாவலென்றொரு தொடர் வெளிவந்துகொண்டிருந்தது.  அதில் பல எழுத்தாளர்களின் மாத நாவல்கள் தொடராக வெளிவந்தன. நான்கு அல்லது ஐந்து அத்தியாயங்களில் முடியும் தொடர்களவை. அம்மாத நாவல்களிலொன்றினை எம்.வி.வெங்கட்ராம் எழுதியிருந்ததாக நினைவு. அத்தொடர் கோபுலுவின் ஓவியங்களுடன் வந்ததாகவும் நினைவு. அம்மாத நாவலின் பெயர் 'தேவி மகாத்மியம்' என்றிருந்ததாகவும் ஞாபகம். அந்நாவலினை அப்பா விரும்பி வாசித்ததாகவும் ஞாபகம். ஆனால் நான் அந்நாவலை வாசித்ததாக ஞாபகமில்லை என்றுமொரு ஞாபகம். அவ்விதம்தான் எனக்கு எம்.வி.வெ'யின் அறிமுகம் ஏற்பட்டதாகவும் ஞாபகம். அண்மையில் எம்.வி.வெ'யின் 'வேள்வித்தீ' நாவலை வாசித்தபொழுது எம்.வி.வெ பற்றிய , ஆழ்மனதில் ஆழ்ந்து கிடந்த மேற்படி ஞாபகப்பறவைகளெல்லாம் மெல்ல மெல்லச் சிறகடித்து மன வானில் பறக்க ஆரம்பித்தன.

இந்நாவலைப் பற்றிக் குறிப்பிடும் அனைவரும் இந்நாவல் செளராஷ்டிரப் பிராமணர் சமூகம பற்றியும், அவர்களது நெசவுத் தொழில் பற்றியும், அவர்களது வரலாறு பற்றியும் பல விபரங்களைப் பதிவு செய்திருப்பதாகக் குறிப்பிடுவார்கள். அவையே இந்நாவலின் முக்கியத்துவத்தை அதிகரிப்பதாகவும் குறிப்பிடுவார்கள். ஆனால் இவை எல்லாவற்றையும் மீறி இந்நாவல் முக்கியத்துவம் பெற்றிருப்பது மானுட உறவுகளின் உளவியலை அற்புதமாகப் பதிவு செய்திருப்பதில்தான் என்று எனக்குத்தோன்றுகிறது. இருப்புக்காகப் போராடும் மானுட வாழ்வை, அவர்கள் மத்தியில் நிலவும் உறவுகளை, அவற்றாலேற்படும் உளவியல் பாதிப்புகளை இவையெல்லாவற்றையும் அழகாக, கலைத்துவம் மிக்கதாக வெளிப்படுத்தியிருப்பதுதான் இந்நாவலின் வெற்றியாக எனக்குப் படுகிறது.
கதைச்சுருக்கம் இதுதான்: கண்ணன் செளராஷ்ட்டிர சமூகத்தைச் சேர்ந்தவன். அவனது தகப்பனார் அச்சமூகத்துக்குரிய நெசவுத் தொழிலினைச் செய்து வருகின்றார். அவனது மூத்தசகோதரர்களும் நெசவுத்தொழிலில் ஈடுபட்டிருக்கின்றனர். தந்தைக்கோ கண்ணனைப் படிக்க வைக்க வேண்டுமென்று ஆசை. கண்ணனுன் நன்கு படிப்பில் தன் திறமையினைக் காட்டிக்கொண்டிருந்தான். இந்நிலையில் அவனது சகோதரர்கள் அவனது படிப்பை இடைநிறுத்தி, அவனைத் தங்கள் நெசவுத்தொழில் சேர்த்து விடுகின்றார்கள். இந்நிலையில் அவனது தந்தையாரும் இறந்துவிடவே, தனித்து விடப்பட்ட தாயாரைப் பராமரிக்காமல் சகோதரர்கள் தம் குடும்பங்களுடன் ஒதுங்கி விடவே, கண்ணன் தாயைத் தன்னுடன் வைத்துக்கொண்டு நெசவுத்தொழிலினைத் தொடர்கின்றான். ஆரம்பத்தில் இன்னுமொரு முதலாளிக்கு வேலை பார்க்கும் அவன், தாயார் இறந்து விடவே, கெளசல்யா என்னும் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு சொந்தமாகத் தொழில் செய்ய ஆரம்பிக்கின்றான். அவர்களுக்குக் குழந்தையொன்றும் பிறக்கிறது. இக்காலகட்டத்தில் அவர்களது வாழ்வில் எதிர்ப்படுகின்றாள் ஹேமா . ஹேமா அவளது இளவயதிலேயே சாந்தி முகூர்த்தமும் காணாமல் தன் கணவனை இழந்தவள். பொருளியல்ரீதியில் கண்ணனை விட மேல் நிலையிலிருப்பவள். கெளசல்யாவுடன் சிநேகிதியாக அவர்களது வாழ்வில் குறுக்கிடும் ஹேமா கண்ணன் மீது காதல் வயப்படுகின்றாள். கண்ணன் குடும்பம் பெருமழை போன்ற இயற்கை அழிவுகளால் பாதிக்கப்பட்டுள்ள சமயங்களில் பொருளியல்ரீதியில் உதவுகின்றாள். இவ்விதம் வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கும் சமயம் கெளசல்யாவின் தந்தையார் இறந்துவிடவே அவள் ஊருக்குச் செல்கின்றாள். அச்சமயத்தில் ஹேமா கண்ணனை நாடி வருகின்றாள். அவர்கள இணைகின்றார்கள். இச்சமயத்தில் ஊரிலிருந்து கெளசல்யா சிறிது சீக்கிரமாகவே திரும்பி விடுகின்றாள். கெளசல்யாவுக்கு உண்மை புரிந்து அதிர்ச்சி அடைகின்றாள். கணவன்/ மனைவியருக்கிடையில் மனத்தாங்கள் ஏற்படுகின்றது. அதன் விளைவு கெளசல்யா தன் குழந்தையுடன் குளத்தில் விழுந்து தற்கொலை செய்வதில் முடிகின்றது. அதன் பின் அவர்களது பிரிவால் வாடும் கண்ணனின் வாழ்க்கையில் மீண்டும் ஹேமா நுழைந்து விடுகின்றாள். அத்துடன் நாவல் முடிகின்றது.

இந்நாவலின் முக்கியமான சிறப்புகளிலொன்று பாத்திரப்படைப்பு. கண்ணன்,  அவன் மனைவி கெளசல்யா, அவர்களது வாழ்க்கையில் குறுக்கிடும் ஹேமா இவர்கள்தாம் முக்கியமான பாத்திரங்கள்.

ngiri2704@rogers.com

பதிவுகள்.காம்   14 November 2014

இவர்களது உளவியல்ரீதியிலான போராட்டங்கள் நாவலில் நன்கு வெளிப்பட்டிருக்கின்றன. இந்நாவல் கூறும் பொருள், பாத்திரப்படைப்பு ஆகியன பற்றி விரிவாகவே தர்க்கிக்க முடியும். நாவல் விரிந்த நாவலல்லவென்றாலும், நாவலொன்றுக்குரிய முழுமை பெற்ற நாவல்.

No comments:

வ.ந.கிரிதரனின் 'அழியாத கோலங்கள்' ( பால்ய, பதின்மப் பருவத்து நனவிடை தோய்தல்)

அண்மையில் நண்பரும் எழுத்தாளருமான டானியல் ஜீவா அவர்கள் 'ஏன் நீங்கள் உங்கள் பால்ய பருவத்து அனுபவங்களை நூலாக்கக் கூடாது? நீங்கள் எழுதும் வவ...

பிரபலமான பதிவுகள்