Monday, March 19, 2018

செங்கை ஆழியானின் 'நந்திக்கடல்' - வ.ந.கிரிதரன் -

'செங்கை ஆழியானின் 'நந்திக்கடல்' நாவல் அவரது முதலாவது நாவல். 'கலைச்செல்வி' நாவல் போட்டியில் பாராட்டுப்பெற்ற நாவல். பின்னர் யாழ் இலக்கிய வட்ட வெளியீடாக நூலாக வெளிவந்த நூல். என் மாணவப்பருவத்தில் நான் வாங்கி வைத்திருந்த இலங்கையைச்சேர்ந்த வரலாற்று நாவல்களிலொன்று 'நந்திக்கடல்' . அதனை செங்கை ஆழியானின் தமையனாரான புதுமைலோலனின் 'அன்பு புத்தகசாலை'யில் வாங்கியிருந்தேன். அடுத்த வரலாற்று நாவல் வ.அ.இராசரத்தினத்தின் 'கிரெளஞ்சப்பறவைகள்'. ஒரு ஞாபகத்துக்காக இந்த நந்திக்கடல் நாவலைத் தேடிக்கொண்டிருந்தேன். இந்த நாவல் யாழ்ப்பாண இராச்சியத்தைப் பின்னணியாகக் கொண்டு , சங்கிலிகுமாரனை நாயகனாகக் கொண்டு எழுதப்பட்ட நாவல்.

ஒருமுறை நூலகம் கோபி நூலகம் பற்றிய பதிவினையிட்டிருந்தபோது அந்நூலைப்பற்றியும் தெரிவித்திருந்தேன். உடனேயே 'நந்திக்கடல்' யாரிடமாவது இருந்தால் நூலகத்துக்குத் தந்து உதவவும் என்று அவர் முகநூலில் அறிவித்திருந்தார். அண்மையில் அவரிடமிருந்து வந்த தகவலில் மகிழ்ச்சிக்குரிய விடமொன்றிருந்தது. அது: 'தற்போது நூலகத்தில் 'நந்திக்கடல்' நூல் வாசிக்கக் கிடைக்கிறது என்பதுதான்.

ஈழத்து எழுத்தாளர்கள் பலரின் படைப்புகள் இன்னும் நூலுருப்பெறாமல் பல்வேறு சஞ்சிகைகள், பத்திரிகைகளில் முடங்கிக் கிடக்கின்றன. அவையெல்லாம் படிப்படியாக 'நூலகம்' தளத்தில் பதிவேற்றப்பட்டு வருகின்றன ( 'மறுமலர்ச்சி', 'கலைச்செல்வி' இதழ்கள் உட்பட).
இவ்விதமாக 'நூலகம்' தளமானது ஈழத்துத் தமிழ் இலக்கியத்தின் ஆவணச்சுரங்கமாக உருமாறிக்கொண்டிருக்கின்றது. இலங்கைப்பல்கலைக்கழகங்களில் தமிழ்த்துறையில் கல்வி கற்கும் பட்டப்படிப்பு மாணவர்களை அவர்களை வழி நடாத்தும் பேராசிரியர்கள் 'நூலகம்' போன்ற தளங்களைப்பாவித்து, ஈழத்துத்தமிழ்ப்படைப்பாளிகள் பற்றி, ஈழத்தில் வெளியான தமிழ் நூல்கள், சஞ்சிகைகள் பற்றி ஆய்வுகளைச்செய்யத்தூண்ட வேண்டும். அவ்விதம் செய்யப்படும் ஆய்வுகளை நூலாக வெளியிட வேண்டும். அவ்விதம் செய்தால் ஈழத்துத் தமிழ் இலக்கியத்துக்கு மிகுந்த வளம் சேர்த்ததாக அவ்வாய்வுகள் அமையும்.

செங்கை ஆழியானின் 'நந்திக்கடல்' நூலினைக் கீழுள்ள இணைப்பினில் வாசிக்கலாம்:
http://noolaham.net/project/172/17152/17152.pdf

'நந்திக்கடல்' நாவலை இலேசாகப்புரட்டியபோது அதனொரு பக்கத்திலிருந்த கீழுள்ள வசனங்கள் ஒருகணம் நெஞ்சினை அதிர வைத்தன:

"இக்கடலுக்கு நந்திக்கடல் என்று பெயர்! நந்தி போன்று மிகவும் அமைதியான கடல்... குமுறலற்ற கடல்.. ஆனால் , சில காலங்களில் வெறி கொண்டது போல குமுறத்தொடங்கும்... அக்காலங்களில் இம்மாளிகையின் அடித்தளம் வரை கடலலைகள் தவழ்வதுண்டு." (பக்கம் 25)

அண்மையில் நந்திக்கடலில் முடிவுற்ற ஈழத்தமிழர்களின் ஆயுதப்போராட்டம்தான் ஒரு கணம் நினைவுக்கு வந்தது.

நந்திக்கடல்.. எவ்வளவு பொருத்தமான பெயர். இன்னுமொரு விடயம்: நாவலில் மேற்படி கூற்றுக்குச்சொந்தக்காரன் காக்கை வன்னியன்.

பதிவுகள்.காம் 18 June 2016

No comments:

வ.ந.கிரிதரன் - நவீன விக்கிரமாதித்தனின் 'காலம்'!

எழுத்தாளர் மாலன் , இந்திய சாகித்திய அமைப்புக்காகத் தொகுத்த  'புவி எங்கும் தமிழ்க் கவிதை'த் தொகுப்பில் இடம் பெற்றுள்ள  எனது கவிதையான ...

பிரபலமான பதிவுகள்