ஈழத்துத்தமிழ் இலக்கிய உலகில் செங்கை ஆழியானுக்கும் முக்கியமானதோரிடமுண்டு. ஈழநாடு சிறுகதைகள், மறுமலர்ச்சி சிறுகதைகள், சுதந்திரன் சிறுகதைகள் போன்ற தொகுப்புகளை வெளியிட்டதன் மூலம், ஈழத்துத்தமிழ் இலக்கிய உலகினை ஆவணப்படுத்தி மிகுந்த பயனுள்ள பங்களிப்பினை வழங்கியுள்ளார்.
புனைவு, அபுனைவு என இவரது பங்களிப்பு பரந்தது. ஈழத்தமிழர்தம் வரலாறு பற்றி இவர் எழுதிய கட்டுரைகளும், நூல்களும் முக்கியமானவை. புனைவுகளிலும் சமுகக்கதைகளுடன், வரலாற்றுக்கதைகளையும் எழுதியுள்ளார். அத்துடன் 'ஆச்சி பயணம் போகின்றாள்', 'நடந்தாய் ஆறு வழுக்கியாறு!' மற்றும் 'கொத்தியின் காதல்' ஆகிய நகைச்சுவைப்புனைவுகளையும் எழுதியிருக்கின்றார்.
இலங்கை அரச படைகளினால் யாழ்ப்பாணம் எரியுண்டபோது நீலவண்ணன் என்னும் பெயரில் அவற்றை ஆவணப்படுத்தும் அபுனைவுகளை எழுத்தாளர் அமரர் வரதர் அவர்களின் வேண்டுகோளின்பேரில் எழுதியிருக்கின்றார்.
இவ்விதமாக அவரது பங்களிப்பு பரந்தது; இழப்பும் பெரியது.
'செங்கை ஆழியான் அவர்களின் இலக்கியப்பங்களிப்பு' பற்றிய இலக்கிய ஆளுமைகளின் புரிதலை வெளிப்படுத்தும் கட்டுரைகளைக்கொண்ட தொகுப்பு நூலானது 'செங்கை ஆழியான் வாழ்வும், படைப்புகளும்' என்னும் நூலாக வெளிவந்துள்ளது. இதனை வாசிக்க விரும்புகின்றீர்களா? வாசிக்கலாம் , வாருங்கள்.
பதிவு 1.செங்கை ஆழியான் பற்றிய நினைவுகள்...
'பதிவுகள்' இணைய இதழில் வெளியாகும் தனது பத்திக்காக எழுத்தாளர் முருகபூபதி அனுப்பிய கட்டுரையில் செங்கை ஆழியானைப்பற்றி எழுதியிருந்தார். அதிலவர் குறிப்பிட்டிருந்த ஒரு விடயம் அதிர்ச்சியைத்தந்தது. செங்கை ஆழியான் அவர்கள் சுகவீனமுற்று, பேசுவதற்கும் முடியாமல் வீட்டில் முடங்கிக்கிடப்பதாகக்குறிப்பிட்டிருந்த விடயமே அது.
இலங்கைத்தமிழ் இலக்கியத்தைப்பொறுத்தவரையில் செங்கை ஆழியானுக்கு (கலாநிதி. க. குணராசா) அவர்களுக்கு முக்கியமான பங்குண்டு. புனைகதை, தமிழர்தம் வரலாறு பற்றிய ஆய்வு, அரசியல் மற்றும் இலக்கிய ஆவணச்சேகரிப்பு ஆகிய துறைகளில் அவரது பங்களிப்பு முக்கியமானது. புனைகதையைப்பொறுத்தவரையில் சமூக (வாடைக்காற்று, காட்டாறு, , வரலாறு (கடற்கோட்டை, யாழ்கோட்டை, நந்திக்கடல், கந்தவேள் கோட்டம் ) மற்றும் நகைச்சுவை (ஆச்சி பயணம் போகின்றாள், கொத்தியின் காதல், நடந்தாய் வாழி வழுக்கியாறு போன்ற) ஆகிய துறைகளில் பல முக்கியமான நாவல்களை அவர் படைத்துள்ளார். 1977 மற்றும் 1981 காலகட்டத்தில் யாழ் நகரம் பொலிஸாரினால் எரிக்கப்பட்டபோது அவற்றைப் பதிவு செய்ய வரதரின் வேண்டுகோளின்பேரில் ஆவணப்படைப்புகளாக உருவாக்கினார். அவற்றை அவர் நீலவண்ணன் என்னும் புனை பெயரில் எழுதியுள்ளார்.
இவரது பல குறுநாவல்கள் தமிழகத்துச் சஞ்சிகைகளில் பரிசுகளைப்பெற்றுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவை தவிர மறுமலர்ச்சி, சுதந்திரன், மல்லிகை மற்றும் ஈழநாடு சிறுகதைகளைத்தொகுத்திருக்கின்றார். அத்தொகுப்புகளுக்காக நிச்சயம் ஈழத்தமிழ் இலக்கிய உலகம் எப்பொழுதும் நன்றியுடன் நினைவு கூரும்.
இவரது நாவலான 'வாடைக்காற்று' ஈழத்தில் வெளியான தமிழத்திரைப்படங்களிலொன்று. அதன் மூலம் ஈழத்துத் தமிழ்த்திரைப்பட உலகிலும் அவரது பங்களிப்பு முக்கியத்துவம் பெறுகிறது.
இவரது மூத்த அண்ணனான புதுமைலோலனும் ஈழத்தமிழ் இலக்கியத்துக்குப் பங்களிப்புச் செய்த இன்னுமோர் எழுத்தாளரே. புதுமைலோலன் தமிழரசுக்கட்சிக்காக அரசியலில் ஈடுபட்டவர். காலிமுகத்திடல் சத்தியாக்கிரகத்தில் பங்குபற்றி அடியுதைபட்டு காயங்களுக்குள்ளாகியவர்தான் அவர். அவரது மகனும் தமிழர் விடுதலைப்போராட்டத்தில் போராடி மடிந்தவர்களிலொருவர்.
என் மாணவப்பருவத்தில் நான் வாசித்த ஈழத்துத் தமிழ் எழுத்தாளர்களில் முதன்மையானவர் செங்கை ஆழியான். இவரது நந்திக்கடல் நூல் என்னிடமிருந்தது. சிரித்திரனில் தொடராக 'ஆச்சி பயணம் போகின்றாள்' நகைச்சுவை நாவல் தொடராக வெளியானபோது விரும்பி வாசித்திருக்கின்றேன். அக்காலகட்டத்தில் சிரித்திரனில் வெளியான 'நடந்தாய் வாழி வழுக்கியாறு', வீரகேசரி பிரசுரமாக வெளியான 'வாடைக்காற்று', , அவரது சிறுகதையான ஈழநாடு வாரமலரில் வெளியான 'கங்குமட்டை' இவையெல்லாம் என்னை மிகவும் கவர்ந்தவை. ஈழத்தமிழர்தம் வரலாறு பற்றிய அவரது நூல்களும் முக்கியத்துவம் வாய்ந்தவை.
செங்கை ஆழியான் என்றதும் எனக்கு ஞாபகம் வரும் இன்னுமொரு முக்கியமான விடயம். அவரது அண்ணரான புதுமைலோலன் யாழ் நவீன சந்தைக்கு முன் நடாத்திய 'அன்பு புத்தகசாலை'தான். என் சிறுவயதில் நான் 'வெற்றிமணி' சஞ்சிகையினை வாங்குவதற்காக அங்கு செல்வதுண்டு. செங்கை ஆழியானின் 'நந்திக்கடல்' நாவலினையும் நான் அங்குதான் வாங்கினேன். அங்கு பணிபுரிந்த இளைஞரொருவர்தான் (பெயர் சரியாக ஞாபகமில்லை) தன்னிடமிருந்த மார்க்சிம் கோர்க்கியின் 'தாய்' நாவலை (தமிழ் மொழிபெயர்ப்பு) எனக்குத்தந்தார். அந்த நாவலின் அறிமுகம் எனக்கு அதன் மூலம்தான் கிடைத்தது.
செங்கை ஆழியான் அவர்கள் விரைவில் மீண்டும் பூரண சுகமடைந்து எழுத்துப்பணியில் ஈடுபட வேண்டுகின்றோம். அவரைப்பற்றி எழுத்தாளர் முருகபூபதி 'பதிவுகள்' இணைய இதழில் எழுதியுள்ள கட்டுரையினைக்கீழுள்ள இணைப்பில் நீங்கள் வாசிக்கலாம்.
http://www.geotamil.com/pathivukalnew/index.php?option=com_content&view=article&id=2886:2015-09-25-23-43-24&catid=52:2013-08-19-04-28-23&Itemid=68
பதிவு 2. செங்கை ஆழியானின் 'நடந்தாய் வாழி, வழுக்கியாறு!'
பினாக்கைக்குளம் மாரிகாலத்தில் நிரம்பி வழியும்போது , அந்த மேலதிக நீர் அக்குளத்தின் தென்புறமாக நதியாக உருவாகி, அராலிப் பாலத்தினூடு , காக்கைத்தீவுக் கடலினை அடைகின்றது. அதுவே யாழ்ப்பாணத்தின் ஒரேயொரு ஆறான வழுக்கியாறு. முகத்தார், மயிலர், செல்லத்துரை, அப்பையர் ஆகியோர் அந்நதிப்புறமாகக் காணமல் போன சிவலையனைத்தேடி (சிவலையன் - மாடு) அவ்வழுக்கியாறு வழியாகச் செல்வதே 'நடந்தாய் வாழி வழுக்கியாறு!' நூலாக வெளிவந்திருக்கிறது. அவர்களது பயணத்தில் நாமும் இணைந்து முத்தெடுப்போம் வாருங்கள்
பதிவு 3: செங்கை ஆழியானின் 'வாடைக்காற்று'
எனக்கு எழுத்தாளர்களின் புனைவுகளைப்போல் அபுனைவுகளும், குறிப்பாக அவர்கள் தம் படைப்புகளை மற்றும் வாழ்வனுபவங்களைப் பற்றி எழுதும் அபுனைவுகளை மிகவும் பிடிக்கும். அண்மையில் எழுத்தாளர் செங்கை ஆழியானின் 'நானும் எனது நாவல்களும்' நூலினை வாசித்துக்கொண்டிருந்தபொழுது அதில் குறிப்பிடப்பட்டிருந்த ஒரு விடயம் என் கவனத்தைக்கவர்ந்தது.
அதிலவர் ஒருமுறை இலங்கை வந்திருந்த நடிகர் மேஜர் சுந்தர்ராஜன் அச்சமயம் இலங்கையில் திரைப்படமாக வெளியாகியிருந்த 'வாடைக்காற்று' திரைப்படத்தைப்பார்த்துப் பாராட்டி, , அந்நாவலின் பிரதியொன்றினைப்பெற்று, தான் இந்தியாவில் மீண்டும் அந்நாவலைத் திரைப்படமாகத்தயாரிக்கப்போவதாகக்கூறிச் சென்ற விபரத்தினைப்பகிர்ந்திருக்கின்றார். அது பற்றி மேலும் தனது நூலில் அவர் குறிப்பிட்டுள்ள விடயத்தைப்பாருங்கள்:
"மேஜர் சுந்தரராஜன் எடுத்துச்சென்ற நாவலை என்ன செய்தார் என்பதோ, அவர் பார்த்து ரசித்த ரசனையை என்ன செய்தார் என்பதோ எனக்குத்தெரியாது. ஆனால் தென்னிந்தியப்படவுலகில் முன்னணி இயக்குநர் கே.பாரதிராஜாவின் 'கல்லுக்குள் ஈரம்' என்ற படத்தைப்பார்க்க நேர்ந்தது. எவ்வளவு அற்புதமாக வாடைக்காற்று திருடப்பட்டிருக்கிறது என்பதைப்புரிந்துகொள்ள முடிந்தது. வாடைக்காற்றில் இரண்டு மீனவர்கள் மீன் பிடிப்பதற்காக ஒரு கிராமத்துக்கு வருகின்றார்கள். கல்லுக்குள் ஈரத்தில் இரு வாலிபரகள் ஒரு கிராமத்திற்குத் திரைப்படம் பிடிப்பதற்காக வருகின்றார்கள். அக்கிராமத்தில் வாடைக்காற்றில் வருவதுபோல் இரு பெண்கள். வாடைக்காற்றின் வித்தியாசமான பாத்திரமான கையில் கூர் ஈட்டி ஏந்திய விருத்தாசலம், கல்லுக்குள் ஈரத்திலும் கூர் ஈட்டியுடன் வருகின்றான். உணர்வு பிறழ்ந்த சண்முகம் இங்கும் வருகிறான். அதே கதை; அதே சம்பவங்கள். பாரதிராஜா தயாரித்திருந்தார். யாரிடம் போய் முறையிடுவது இந்த மோசடியை?"
செங்கை ஆழியானின் படைப்புகளில் எனக்கு மிகவும் பிடித்த நாவல் 'வாடைக்காற்று'. பிடித்த சிறுகதை: 'கங்குமட்டை". இந்தச்சிறுகதையை ஈழத்தில் வெளியான சிறுகதைகளில் முக்கியமான சிறுகதைகளிலொன்றாகக்கருதுகின்றேன். இவரது 'ஆச்சி பயணம் போகின்றாள்' எனக்கு மிகவும் பிடித்த நகைச்சுவை நாவல்களிலொன்று.
பதிவு 4. செங்கை ஆழியானின் 'ஆச்சி பயணம் போகின்றாள்'
செங்கை ஆழியானின் 'ஆச்சி பயணம் போகின்றாள்'தமிழில் வெளிவந்த நகைச்சுவை நாவல்களில் ஈழத்தில் வெளியான நகைச்சுவை நாவல்களுக்குமிடமுண்டு. அந்த வகையில் செங்கை ஆழியானின் 'ஆச்சி பயணம் போகின்றாள்' நாவல் முக்கியமானது. தன் வாழ்நாளில் ஒரு தடவை கூடப் புகையிரதத்தில் ஏறாத ஆச்சிக்கு அந்தச் சந்தர்ப்பம் அவரது முதிய பருவத்தில் ஏற்படுகிறது. கதிர்காமம் செல்வதற்காக அவரை அழைத்துக்கொண்டு ஆச்சியின் கடைசி மகன் சிவராசனும், சிவராசனுக்காகக் காத்திருக்கும் ஆச்சியின் தம்பி மகள் செல்வியும் (இவள் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் படிப்பவள்) செல்கின்றார்கள். ஆச்சியின் புகைவண்டிப் பயணமும், இளங்காதலர்களின் பொய்ச்சிணுங்கல்களும், மகிழ்ச்சியான தருணங்களும், நாவல் முழுக்க விரவிக்கிடக்கும் யாழ்ப்பாணத்துப் பேச்சுத் தமிழும், அவற்றுக்கு மேலும் துணையாக விளங்கும் ஓவியர் செளவின் ஓவியங்களும் வாசிப்பவரைக் குலுங்கிக் குலுங்கிச் சிரிக்க வைக்கின்றன. இந்நாவல் முதலில் 'விவேகி' மாத சஞ்சிகையில் தொடராக வெளிவந்தது. தொடர் முடிவதற்குள் இதன் முதற் பதிப்பு (ஏப்ரில் 1969) யாழ் இலக்கிய வட்டத்தினரால் நூலாக வெளியிடப்பட்ட இந்நாவல் அதன் பின்னர் சிரித்திரன் சஞ்சிகையில் தொடராக வெளிவந்திருக்கின்றது. அதன் பின்னர் நாவலின் இரண்டாவது பதிப்பு (அக்டோபர் 1978) ஶ்ரீலங்கா பதிப்பகத்தினரால் வெளியிடப்பட்டுள்ளது. என்னிடமிருப்பது நாவலின் மூன்றாவது பதிப்பு. செங்கை ஆழியானின் 'கமலம் பதிப்பகத்தினரா'ல் மே 2001இல் வெளியிடப்பட்ட பதிப்பு. ஓவியர் 'செள'வின் ஓவியங்களுடன் நேர்த்தியாக வெளியான பதிப்பு. நூலின் முன்னுரையில் எழுத்தாளர் செம்பியன் செல்வன் இதுவே இலங்கையில் வெளியான முதலாவது நகைச்சுவை நாவலென்று குறிப்பிட்டிருக்கின்றார்.
என்னைப் பொறுத்தவரையில் எனக்கு மிகவும் பிடித்த நகைச்சுவை நாவலென்று இதனைக் கூறுவேன். நூலாசிரியரின் 'நடந்தாய் வாழி வழுக்கி ஆறு'வும் எனக்குப் பிடித்த ஆசிரியரின் இன்னுமொரு நகைச்சுவை விவரணச்சித்திரம்.
எனக்கு முதன் முதலில் செங்கை ஆழியான் அறிமுகமானது அவரது 'கங்குமட்டை' சிறுகதை மூலம்தான். ஈழநாடு தனது பத்தாவது ஆண்டினையொட்டி நடாத்திய சிறுகதைப் போட்டியில் முதற்பரிசு பெற்ற சிறுகதை 'கங்குமட்டை' செ.யோகநாதன் தொகுத்த ஈழத்துச் சிறுகதைத்தொகுப்பான 'வெள்ளிப்பாதரசம்' தொகுப்பிலும் இடம் பெற்றுள்ள சிறுகதையது.
ngiri2704@rogers.com
பதிவுகள்.காம் 29 February 2016
No comments:
Post a Comment