Wednesday, March 21, 2018


அண்மையில் மறைந்த 'புதிய பார்வை' சஞ்சிகையின் ஆசிரியரான ம.நடராஜனுக்கு இலக்கியம், அரசியல் என இரு முகங்கள். கலை, இலக்கியரீதியில் அவரது 'புதிய பார்வை' சஞ்சிகைக்கு முக்கியமானதோரிடமுண்டு. அந்த வகையில் அதன் ஆசிரியரான ம.நடராஜனும் தமிழ் இலக்கிய வரலாற்றில் தடம் பதித்தவர்களிலொருவராகின்றார். முனைவர் ம.நடராஜன் தி.மு.க மற்றும் அ.தி.மு.க ஆகிய இரு கட்சிகளிலும் அப்பிமானம் பெற்றவர். 'மகளிர் முன்னேற்றத்தில் இதழ்களின் பங்கு' என்னும் தலைப்பில் ஆய்வினை மேற்கொண்டு முனைவர் பட்டம் பெற்றவர். அரசியலைக் கடந்து கலை, இலக்கியவாதிகள் மத்தியிலும் நட்பினைப் பேணியவர். 1967இல் தமிழகத்தில் நடைபெற்ற தனது மாணவப்பருவத்தில் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் பங்கு பற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. தொண்ணூறுகளில் கோமல் சுவாமிநாதனை ஆசிரியராகக் கொண்டு 'சுபமங்களா' வெளிவந்துகொண்டிருந்த காலகட்டத்தில் , அதே சாயல் மிக்க வடிவமைப்புடன் வெளியான சஞ்சிகை 'புதிய பார்வை'. அக்காலகட்டத்தில் அதன் இணை ஆசிரியரான பாவை சந்திரனின் 'நல்ல நிலம்' நாவல் தொடராக வெளியாகிக்கொண்டிருந்தது.

புதிய பார்வை சஞ்சிகை விடயத்திலும், அதன் ஆசிரியர் ம.நடராஜன் மீதும் என் மனத்தில் மென்மையான உணர்வுமுண்டு. அதற்குக் காரணமுமுண்டு. 1996இல் தமிழகத்தில் ஸ்நேகா பதிப்பகம் மங்கை பதிப்பகத்துடன் (கனடா) இணைந்து வெளியிட்ட எனது நூலான 'அமெரிக்கா' (அமெரிக்கா சிறு நாவல் மற்றும் சிறுகதைகளை உள்ளடக்கிய தொகுப்பு) வெளியானபோது புதிய பார்வை அதற்கு புத்தக மதிப்புரையொன்றினை எழுதி தனது மே 1997 இதழில் வெளியிட்டிருந்தது. அதனை ஜி.சுவாமிநாதன் என்பவர் எழுதியிருந்தார். 'அமெரிக்கா'தான் தமிழகத்தில் வெளியான எனது முதலாவது நூல். ஆனால் அந்த நூலுக்கு மதிப்புரை எழுதி என் நூலுக்கு வரவேற்பு கொடுத்திருந்த 'புதிய பார்வை' சஞ்சிகை மீது அந்த விடயத்தில் எனக்கு எப்பொழுதுமே மதிப்புண்டு. குறை நிறைகளுடன் அமைந்திருந்த அந்த விமர்சனம் வெளியான 'புதிய பார்வை' சஞ்சிகைப்பக்கத்தினையே இங்கு நீங்கள் காண்கின்றீர்கள்.
இதழாசிரியர் ம.நடராஜனின் மறைவு அவர் பற்றிய , 'புதிய பார்வை' சஞ்சிகை பற்றிய நினைவுகளைத் தோற்றுவித்து விட்டது. முனைவர் ம.நடராஜனின் அரசியல் பல்வேறு விமர்சனங்களைக் கொண்டதாகவிருந்தாலும், அவரது கலை, இலக்கியப்பங்களிப்பு, மொழி மீதான பற்றுதல் போன்றவற்றை யாரும் சந்தேகிக்க முடியாது. இத்தருணத்தில் அவர் தனது சஞ்சிகையான 'புதிய பார்வை' மூலம் தமிழ் இலக்கியத்துக்கு வழங்கிய ஆரோக்கியமான , விதந்திடவேண்டிய பங்களிப்பினை நினைவு கூர்கின்றேன்.
'புதிய பார்வை' மே 1997 இதழில் வெளியான 'அமெரிக்கா' பற்றிய நூல் மதிப்புரை:

No comments:

வ.ந.கிரிதரன் - நவீன விக்கிரமாதித்தனின் 'காலம்'!

எழுத்தாளர் மாலன் , இந்திய சாகித்திய அமைப்புக்காகத் தொகுத்த  'புவி எங்கும் தமிழ்க் கவிதை'த் தொகுப்பில் இடம் பெற்றுள்ள  எனது கவிதையான ...

பிரபலமான பதிவுகள்