Sunday, March 18, 2018

கலாப்ரியாவின் 'உருள் பெருந்தேர்' ஓடிய என் மனப்பாதையில் அது பதித்த தடங்கள்.... வ.ந.கிரிதரன் -


  எழுத்தாளர்களின் பால்ய காலத்து அனுபவங்களை, வாசிப்பு அனுபவங்களை, மொத்தத்தில் அவர்கள்தம் வாழ்க்கை அனுபவங்களை வாசிப்பதில் எனக்கு எப்பொழுதுமே ஆர்வமுண்டு. முக்கிய காரணம் எழுத்தாளர்களின் வாழ்க்கை அனுபவங்கள் வெறும் அபுனவுகளாக  மட்டும் இருந்து விடாமல் இலக்கியச்சிறப்பு மிக்கதாக, கலைத்துவம் மிக்கதாகவும் இருக்கும். ஒளிவு, மறைவு இல்லாமல் அவர்கள் எழுத்தில் வெளிப்படும் நேர்மை நெஞ்சினைத்தொடும்.

எழுத்தாளர்களின் அபுனைவுகளில் மட்டுமல்ல அவர்கள்தம் புனைவுகள் கூட சிறப்பாக இருப்பதற்குக் காரணம் அவர்களது வாழ்க்கை அனுபவங்களின் வெளிப்பாடாக அப்புனைவுகள் இருந்து விடுவதுதான். புகழ் பெற்ற உலகப்பெரும் எழுத்தாளர்களின் சிறப்பான படைப்புகள் அவர்கள் சிந்தனைகளின், வாழ்க்கை அனுபவங்களின் வெளிப்பாடாகவே அமைந்திருப்பதை அவர்களது படைப்புகளை வாசிக்கும்போது அறிய முடிகின்றது.

மேலும் அவர்களது வாழ்க்கை அனுபவங்கள் தெரிவிக்கும் புதுத்தகவல்கள் ஒரு காலகட்ட வரலாற்றுச்சின்னங்களாக விளங்கும். காலமாற்றத்தில் காணாமல் போனவற்றையெல்லாம் அவர்கள்தம் எழுத்துகளில் வாசிக்கும்போது வாசிப்பின்பத்துடன் எம்மையும் எம் கடந்த காலத்துக்கே அழைத்துச்சென்று விடுகின்றன.

அண்மையில் என் நெஞ்சினைத்தொட்டதொரு எழுத்தாளரின் வாழ்க்கை அனுபவங்களினை வெளிப்படுத்தும் புத்தகமொன்றாக எழுத்தாளர் கலாப்ரியாவின் வாழ்வு அனுபவங்களின் தொகுப்பான '  ' என்னும் நூலினைக் குறிப்பிடலாம். இன்றுதான் டொராண்டோவிலுள்ள நூலகக் கிளையொன்றில் அதனை இரவல் பெற்றேன். வாசித்துக் கொண்டிருக்கின்றேன். இதுவரை வாசித்த நூலில் வரும் அவர் வாழ்வில் வந்து போன மனிதர்கள் பற்றிய அனுபவங்கள் நெஞ்சினைத்தொட்டன என்று மட்டும் கூறிவிடமுடியாது. வாசித்த பின்னரும் நெஞ்சினை வாட்டும் வகையில் கலாப்ரியாவின் அனுபவங்கள் நெஞ்சினை உலுக்கு விட்டன என்றே கூற வேண்டும். உதாரணத்துக்கு அவர் வாழ்வில் வந்து போன குடும்பமொன்று பற்றிய விபரிப்பினைக் கூறலாம்.
இந்தக் குடும்பம் இருப்பதோ ஒரு குச்சு வீட்டில்.

மகால் , மகால் என்று அழைக்கப்படுகின்ற சிறுமியொருத்தி. பெயர் மகாலட்சுமி. அவள் அப்பாவின் செல்லம். அப்பாவோ ஓட்டலொன்றின் சரக்கு மாஸ்ட்டர். அவள் அம்மாவை உரிச்சு வைத்திருக்கின்றாள். அவள்தான் மூக்கம்மா மதினி. அவள் வீட்டிலிருந்தே தீப்பெட்டித்தொழிற்சாலையொன்றுக்காக தீப்பெட்டியில் நீலக்கலர் தாளை ஓட்ட வேண்டும். மதினிக்கு இலேசான மாறுகண். ஆனால் கட்டான உடல்வாகும் , அழகான் நிறமும் கொண்டவள். சிறுவனான கலாப்ரியா அவரது நண்பர்களெல்லாரும் அவளுக்குப் போட்டிபோட்டி உதவுவார்கள். அவர்களது அக்காலகட்ட வளரும் பருவத்துணர்வுகளை நேர்மையாகப் பதிவு செய்திருப்பார் கலாப்ரியா.

மதினியும், ஓட்டல் சரக்கு மாஸ்ட்டரான அவளது கணவர் அண்ணாச்சியும் ஒருவருக்கொருவர் தொட்டுக்கொள்வதில்லை. அதற்கொரு கதை இருக்கிறது. அக்கதையைக் கலாப்ரியா விபரிக்கும் பாணி மிகவும் இயல்பாக அமைந்துள்ளது. ஒருமுறை அண்ணாச்சி ஓட்டலிலேற்பட்ட விபத்தொன்றினால் படுத்த படுக்கையாகவிருக்கின்றார். மார்பெல்லாம் தீக்கொப்புளங்கள். ஓட்டலில் தோசை ஊத்தும்போது கயிறு அறுந்து அப்படியே கொதிக்கும் கல்லின் மீது விழுந்து விட்டார். அது பற்றிய கலாப்ரியாவின் விபரிப்பு வருமாறு:

"ஒரு வாழை இலையை வைத்து மதினி விசிறிக்கொண்டிருந்தாள். ஒரு பாட்டிலில் ஜெனிஷியன் வயலட் களிம்பும், ஈர்க்குச்சியில் சுற்றின பஞ்சும் இருந்தது. - தம்பி இந்த களிம்பைக் கொஞ்சம் புண்ணு மேலே போட்டு விடுதீங்களா - என்றாள் மதினி.  - நோய் நோக்காடு வந்தாக் கூடவா தொடக்கூடாது. ஏதோ ஒரு தரம் உங்க தம்பி மேலே ஆசப்பட்டுட்டேன். அவனும் தான் போய்ட்டானே. - என்று அழுதாள். மகால் ஏற்கனவே அழக்காத்திருந்தது போல அழ ஆரம்பித்தது." [பக்கம் 53]

அண்ணாச்சி படுத்த படுக்கையாகவிருக்கும் சமயம் பார்த்து வீட்டின் சொந்தக்காரர்கள் அவர்களை வீட்டைக் காலி பண்ணச்சொல்லி விட்டார்கள்.

அது  பற்றிய விபரிப்புடன் இக்குடும்பம் பற்றிய 'வேனல்...' என்று தலைப்பிடப்பட்ட ஐந்தாவது அத்தியாயம் முடிகின்றது இவ்வாறு:

"அந்தப்புண் குணமாவதற்கு முன்பே அவர்கள் வீட்டைக் காலி செய்து விட்டார்கள். நமசுவின் அண்ணன் , எனக்கு ஓரளவு புரிந்ததை தெளிவாக்கினார். அவர்கள் காலி செய்து போகும்போது தெருவில் பிள்ளைகள் தங்கள் வேனல் விடுமுறையைக் கொண்டாடிக்கொண்டிருந்தார்கள். அவர் அந்தக் குழந்தைகளையும் எங்களையும் பார்த்துச் சிரித்தார்.  மதினி, மகால் அவள் தோளில் தூங்குவது போல் சாய்ந்து கொண்டிருந்தாள். தலையை மட்டும் 'போய்ட்டு வாரோம்' என்று ஆட்டினாள்." {பக்கம் 54]

இத்துடன் திடீரென்று அவர்களைப்பற்றிய விபரிப்பு முடிந்து விடுகின்றது. எப்பொழுதுமே தொடக்கம், முடிவு என்று புனைவுகளை வாசித்துப் பழகி விட்ட மனதுக்கு ஆறவில்லை. அந்தக் குழந்தை மகால் பற்றிய நினைவுகளே நெஞ்சிலே மீண்டும் மீண்டும் வந்தன. வேனல் விடுமுறைக்காகக் குழந்தைகள் எல்லாரும் தெருவில் விளையாடிக்கொண்டிருக்கையில் இந்தக் குழந்தைக்கு இருந்த இடத்தை விட்டே, சடாரென்று அதுவரை வாழ்ந்த வாழ்வை முறித்துக்கொண்டு, உறவுகளை முறித்துக்கொண்டு செல்ல வேண்டிய நிலை. அந்தக் குடும்பத்தை அவ்விதம் அவர்களது இக்கட்டான சமயத்தில் இவ்விதம் காலி செய்யச்சொல்லிய வீட்டுச்சொந்தக்காரர் அரக்கக் குணம் மிக்கவர்களாகத் தென்பட்டார்கள். இதற்குத்தான் 'கம்யூனிசம்' அவசியம் என்றொரு எண்ணமும் வந்து சென்றது.

அடுத்து எழுதும் அவரது வாழ்க்கை நினைவுகளில் இக்குடும்பத்துக்கு அதன் பின்னர் என்ன நேர்ந்தது? கலாப்ரியா அவருக்குத் தெரிந்திருந்தால் எழுத வேண்டுமென்று கூறவேண்டுமென்று மனதில் எண்ணிக்கொண்டேன்.

ஆயிரக்கணக்கான பக்கங்களில் நாவல்களை உற்பத்தி செய்யும் எழுத்தாளர்கள் மலிந்து விட்ட இக்காலகட்டத்தில், தனது அபுனைவொன்றின் சிறு அத்தியாயத்தின் மூலம் வாசிப்பவர்கள் நெஞ்சங்களை அதிர வைத்து விட்டாரே கலாப்ரியா. அதனால்தான் இந்த அபுனைவு இலக்கியச்சிறப்பு மிக்கதொரு பிரதியாக அமைந்திருக்கின்றது.. எழுதிய கலாப்ரியாவுக்கும், வெளியிட்ட 'சந்தியா பதிப்பக'த்தாருக்கும் வாழ்த்துகள்.

ngiri2704@rogers.com


No comments:

வ.ந.கிரிதரனின் 'அழியாத கோலங்கள்' ( பால்ய, பதின்மப் பருவத்து நனவிடை தோய்தல்)

அண்மையில் நண்பரும் எழுத்தாளருமான டானியல் ஜீவா அவர்கள் 'ஏன் நீங்கள் உங்கள் பால்ய பருவத்து அனுபவங்களை நூலாக்கக் கூடாது? நீங்கள் எழுதும் வவ...

பிரபலமான பதிவுகள்