Monday, March 19, 2018

பொன் குலேந்திரனின் 'முகங்கள்' - வ.ந.கிரிதரன் -

கனடாவில் வசிக்கும் எழுத்தாளர் பொன்.குலேந்திரனின் 'முகங்கள்' சிறுகதைத்தொகுதியினை வாசிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. 'ஓவியா பதிப்பகம்' (தமிழகம்) வெளியீடாக , அழகான அட்டையுடன் வெளிவந்திருக்கின்றது. தான் வாழ்வில் சந்தித்த பல்வேறு மனிதர்களை மையமாக வைத்து அவரால் எழுதப்பட்ட 21 சிறுகதைகளின் தொகுப்பிது.

இத்தொகுப்பிலுள்ள சிறுகதைகளை பின்வருமாறு வகைப்படுத்த முடிகிறது: குறிப்பிட்ட ஆளுமை மிக்க ஒருவர் பற்றிய விவரணச்சித்திரங்களாச் சில கதைகள் அமைந்துள்ளன. சந்திக்கடை சங்கரப்பிள்ளை, வைத்தியர் வைத்திலிங்கம், சண்டியன் சங்கிலி இஸ்மாயில், நாட்டாண்மை நாச்சிமுத்து, நாவிதர் நாகலிங்கம், பியூன் பிரேமதாசா, அரசாங்க அதிபர அபயசேகரா, சின்னமேளக்காரி சிந்தாமணி போன்ற சிறுகதைகளை இவ்வகையில் அடக்கலாம். இவ்விதமான சிறுகதைகள் பொதுவாக ஒருவரைப்பற்றி அல்லது ஒரு பிரதேசமொன்றினைப்பற்றிய விவரணைகளாக, ஆரம்பம் , முடிவு போன்ற அம்சங்களற்று அமைந்திருக்கும். இதற்கு நல்லதோர் உதாரணமாகப் 'புதுமைப்பித்தனின்' புகழ் பெற்ற சிறுகதைகளிலொன்றான 'பொன்னகரம்' சிறுகதையினைக் குறிப்பிடலாம்.

இன்னும் சில சிறுகதைகள் குறிப்பிட்ட ஆளுமை மிக்க ஒருவரைபற்றிய விவரணையாக இருக்கும் அதே சமயம், எதிர்பாராத திருப்பமொன்றுடன், அல்லது முக்கியமானதொரு நீதியினைப் புகட்டும் கருவினைக்கொண்டதாக அமைந்திருப்பதை அவதானிக்க முடிகின்றது.
இவ்விதம் அமைந்துள்ள கதைகளின் மேலும் சில அம்சங்கள் முக்கியமானவை. கதைகள் கூறும் நடை, மற்றும் கதைகளில் விரவிக்கிடக்கும் பல்வகைத்தகவல்கள். எளிமையான ஆனால் ஆற்றொழுக்குப் போன்ற நடை ஆசிரியருக்குக் கை வந்திருக்கின்றது. அந்நடையில் அவ்வப்போது அளவாக நகைச்சுவையினையும் ஆசிரியர் கலந்து வெளிப்படுத்தியிருக்கின்றார். தொகுப்பிலுள்ள பல்வேறு ஆளுமைகளும் பல்வேறு காலகட்டங்களைச் சேர்ந்தவர்கள். அவர்களது காலங்களில் நிலவிய சமூகப்பழக்க வழக்கங்கள், குறிப்பிட்ட இடம் அல்லது கட்டடங்கள் பற்றிய வரலாற்றுக்குறிப்புகள் எனப்பல்வகைத்தகவல்கள் இக்கதைகள் எங்கும் பரந்து கிடக்கின்றன.

உதாரணமாக 'பொலிஸ்காரன் பொடி அப்புகாமி' சிறுகதையினை எடுத்துக்கொண்டால்....  பொலிஸ்காரன் பொடி அப்புகாமி தன் காதலனுடன் திருமணத்தை எதிர்நோக்கியிருந்த பெண்ணொருத்தியைப் பலவந்தமாகப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி விடுகின்றான். அவ்விதம் இறந்த பெண்ணொருத்தியின் ஆவி ஊரின் ஒரு புறத்தேயிருந்த ஆலமரமொன்றில் குடியிருப்பதாக ஊரில் கதை அடிபடுகிறது. இந்நிலையில் பொடி அப்புகாமியை அவனது சிநேதிதனான பண்டா என்பவன் பல வருடங்களுக்குப்பின்னர் சந்திக்கின்றான். அவர்களது உரையாடலில் இந்த அந்தப்பெண் பற்றியும் அடிபடுகிறது. அப்பொழுது பண்டா கேட்பான் 'உனக்கும் அந்தப்பெண்ணுக்குமிடையில் ஏதோ உறவு நிலவியதாக. அது உண்மையா? என்று.அதற்கு அப்புகாமி அதை மறுப்பதுடன் தனக்கு ஆவிகள் பற்றிய சந்தேகங்கள் ஏதுமில்லை என்றும் கூறுகின்றான். உடனே பண்டா அப்புகாமியிடம் சவாலொன்றினை விடுகின்றான். பொடி அப்புகாமியால் நள்ளிரவில் அந்த ஆலமரம் உள்ள இடத்துக்குப் போய் வரமுடியுமா? என்று.அதற்கு அப்புகாமியோ தன்னால் முடியுமென்று அச்சவாலினை ஏற்றுக்கொள்கின்றான். ஆனால் அவ்விதம் அப்புகாமி அந்த ஆலமரமுள்ள பகுதிக்கு நள்ளிரவில் செல்கின்றான். ஆனால் அச்சமயம் இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்கிறது.  திடீரென பேரிடியொன்று இடித்தபடி வீழ்கிறது. அந்த இடிக்குப் பலியாகி அவன் இறந்து விடுகின்றான். அவனால் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டு, அதன் காரணமாகவே தற்கொலை செய்ததாகக்கருதப்படும் மொனிக்கா என்னும் அந்தப்பெண்ணின் ஆவிதான் அவனை இவ்விதம் பழி வாங்கி விட்டதா? இவ்விதமும் முக்கிய கேள்வியொன்றினை எழுப்பும் சிறுகதை  'அரசன் அன்று கொல்லுவான். தெய்வம் நின்று கொல்லும்' என்னும் சிறுதை.

இது போன்ற இன்னுமொரு சிறுகதை 'மங்கையம்மாள்'. மங்கையம்மாள் பீல் பிரதேசத்திலுள்ள தொடர்மாடிக்கட்டடமொன்றில் தனித்து வாழும் விதவைப்பெண்; பிராமணப்பெண். சமையல் நன்கு கைவரபெற்ற மங்கையம்மாள் அதனைத்தொழிலாகவும் பாவிக்கின்றாள். அதே நேரத்தில் தனிமையில் வாடும் அவளுக்குரிய பொழுதுபோக்காகவுமிருக்கின்றது. இருந்தாலும் தனிமை அவளை வாட்டுகிறது. இந்நிலையில் அவள் வாழும் தொடர்மாடிக்கட்டடத்தில் நடத்தப்படும் தியான வகுப்பொன்றில் அவள் அங்கு வசிக்கும் ஏனையவர்களுடன் கலந்துகொள்கின்றாள். அத்தியான வகுப்புகள் அவளுக்கு வாழ்க்கை பற்றிய பரந்த அறிவினைக்கொடுக்கின்றது. அவளினுள் மறைந்திருக்கும் திறமைகளை வெளிப்படுத்த ஊக்குவிக்கிறது. அதனால் அவள் கவிதைகள் எழுத , இயற்கையினை இரசிக்க என்று தன் தனிமையைப்பயனபடுத்தத்தொடங்குகின்றாள். இவ்விதம் ஒருநாள் அவள் அருகிலிருந்த பாலமொன்றில் நின்று , அதன் கீழிருந்த நீரோடையில் நீந்திக்கொண்டிருக்கும் வாத்துகளைப்பார்ப்பதில் பொழிதினைக் கழித்துக்கொண்டிருக்கின்றாள். அங்கு அவளுக்கு அறிமுகமாகின்றான் இளைப்பாறிய பொலிஸ்காரனான ஜான் என்னும் வெள்ளையின முதியவர். அவர் தன் மனைவியையும் புற்றுநோய்க்குப் பலி கொடுத்தவர். அவரும் மங்கையம்மாள் போல் இயற்கையை இரசிப்பதில் நாட்டமுள்ளவர். அவரும் நீரோடை வாத்துகளை இரசிக்கின்றார். இவ்விதமாக அவர்களிருவருக்குமிடையில் நட்பு பூக்கிறது. மங்கையம்மாள் அந்த முதியவருடன் சேர்ந்து வாழத்தொடங்குகின்றாள். 'அவர்கள் இருவரது தனிமை படிப்படியாக மறைந்தது.  கணவன், மனைவியாக அல்லாமல், நண்பர்களாக ஜோனும், மங்கையும் வாழ்ந்தனர்' என்று கதை முடிகிறது. புலம் பெயர்ந்த புதிய சூழலில் எவ்விதம் ஒருவரின் சிந்தனை விரிவடைகின்றது என்பதை, காலத்துக்கொவ்வாத சிந்தனைகளை நீக்கி, மனித நேயம் மிக்க சிந்தனைகளை வரவேற்று வாழ்த்துப்பா பாடுகிறது 'மங்கையம்மாள்' சிறுகதை.

நாலு பக்கச்சிறுகதையான 'கிளாக்கர் கிருஷ்ணப்பிள்ளை' முக்கியமான சிறுகதைகளிலொன்று. 'கிளாக்கர் கிருஷ்ணப்பிள்ளை' பற்றிய  விவரணச்சித்திரமாக இச்சிறுகதை இருந்தபோதும், எதிர்பாராத இறுதி வடிவம் இதனை விவரணக்கதை என்பதிலும் பார்க்க நீதியொன்றினை வலியுறுத்தும் சிறுகதைகளிலொன்றெனவே கூறலாம். சிங்களம் நன்கு தெரிந்த கிளாக்கர் கிருஷ்ணப்பிள்ளை , இராணுவத்துக்கு உதவி செய்ததாகக் கருதப்பட்டு, இயக்கமொன்றின் வீரர்களால் கொல்லப்படுகின்றார். சிறுகதை இவ்விதம் முடிகிறது: 'கடமை தவறாது உழைத்த கிருஷ்ணபிள்ளைக்கு  இறுதியில் கிடைத்தது விளக்கு கம்பத்தில் கட்டி வைத்த துப்பாக்கிச் கட்டி வைத்துச்சுப்பாக்கிச்சூடு. தன் திருமணமாகாத மூன்று பெண்களுக்குத்திருமணம் செய்து வைக்காமல் பரிதவிக்க விட்டு விட்டு கண்களை மூடினார் கிருஷ்ணபிள்ளை. மரணத்துக்கு அரசு கொடுத்த வெகுமதி இலட்சம் ரூபாய்கள்." ஈழத்தமிழர்களின் விடுதலைக்கான ஆயுதப்போராட்டத்தின் போது , துரோகிகள் என்று சுட்டுக் கொல்லப்பட்டவர்களைப் பற்றிய விமர்சனமாகவும் இக்கதையினைக்கருதலாம். அப்பாவியான கிளாக்கர் தவறாகத் துரோகியாக்கப்பட்டுக்கொல்லப்படுகின்றார்.

'பொறியியலாளன் சு.மகாதேவா' தொகுப்பிலுள்ள இன்னுமொரு சிறுகதை. பொறியியல் பட்டதாரியான மகாதேவன் கனடாவுக்குப் புலம் பெயர்கின்றான். அவ்விதம் வந்தவனை அவனது நண்பனொருவன் ஆதரித்து, உதவி செய்கின்றான். இங்குள்ள நிலைக்கு ஏற்ப அவனைத்தயார் செய்கின்றான். அவன் சிறு வேலைகளில் ஆரம்பித்துப்படிப்படியாக முன்னேறுகின்றான். பின்னர் அமெரிக்காவில் பிரபல நிறுவனமொன்றில் நல்ல ஊதியத்துடன் வேலை கிடைத்து அங்கு செல்கின்றான். அங்கு சென்றதும் அவன் பணத்தில் புரள ஆரம்பிக்கின்றான். அவன் தன் கடந்த காலத்தை, கடந்த கால உறவுகளை எல்லாம் படிப்படியாக மறக்கின்றான். அங்கு வெள்ளையினப் பெண்ணொருத்தியை மணந்து வாழ்கின்றான். தனக்காகக் காத்திருக்கும் தனது மாமன் மகளையும் மறந்து விடுகின்றான். இவ்விதம் புது மனிதனாக மாறிய அவன் செப்டம்பர் 11, 2001இல் நியுயோர்க்கில் உலக வர்த்தக மையத்தில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் பலியாகிவிடுகின்றான். 'இதனால்தான் விதி வலியது' என்பார்கள் என்று கதை முடிகின்றது.  மனிதன் எவ்வளவு திட்டங்கள் போட்டுச்செயற்பட்டாலும் , விதியின் முன் தப்ப முடியாது என்ற கருத்தைக் கருவாக்கிப் படைக்கப்பட்ட சிறுகதையிது.

இது போல் இன்னுமொரு சிறுகதையான 'வேலுப்பிள்ளையின் வேள்வி' ஆலயங்களில் நடைபெறும் மிருக வேள்வியினைக் கேள்விக்குட்படுத்துகிறது. இருதய நோயாளியான மனைவி குணமடைவதற்காக, உரு வந்து ஆடிய பூசாரி ஒருவரின் ஆலோசனைக்கேற்ப தான் வளர்த்த வீட்டுக் கிடாயொன்றினை வைரவருக்குப் பலி கொடுத்து விட்டு, இறைச்சியுடன் வீடு திரும்பும் போது அவரது மனைவி இறந்துவிட்ட செய்தி வருகிறது. மிருக வேள்வி என்பது வெறும் மூட நம்பிக்கை என்பதை மறைமுகமாகச் சாடுகின்றது இக்கதை.

இவ்விதமாகத்தொகுப்பிலுள்ள கதைகள் ஆசிரியர் சந்தித்த ஆளுமைகள் பற்றிய விவரணச்சித்திரங்களாக, மற்றும் ஒரு குறிப்பிட்ட கருத்தினை அல்லது நீதியினை வலியுறுத்துவதாக அமைந்திருப்பதைக் காண முடிகிறது.

 பதிவுகள் .காம்   06 December 2015

 

No comments:

வ.ந.கிரிதரன் பாடல் - காலவெளிக் குழந்தைகள் நாம்

இசை & குரல்: AI SUNO | ஓவியம் : AI காலவெளிக் குழந்தைகள் நாம் விரிந்து கிடக்கிறது பேர் அண்டம். புரிந்து கொள்ளவே முயற்சி செய்கின்றேன். இரு...

பிரபலமான பதிவுகள்