Thursday, March 8, 2018

Jerzey kosinskiயின் Being There! - வ.ந.கிரிதரன் -

- இந்தக் கட்டுரை சுபமங்களா, மார்ச் 1995 இதழில் வெளிவந்தது. -

'போலிஸ் அமெரிக்க'ரான எழுத்தாளர் ஜேர்சி கொசின்ஸ்கியின் புகழ்பெற்ற நாவலான Being There பற்றிய அறிமுகக் கட்டுரை. பின்னர் பதிவுகள், திண்ணை ஆகிய இணைய இதழ்களிலும் மீள்பிரசுரம் செய்யப்பட்டது. ஜேர்சி கொசின்ஸ்கியின் இன்னுமொரு புகழ்பெற்ற நாவல் 'நிறமூட்டப்பட்ட பறவைகள்' (The Painted Birds). இது நவீன அமெரிக்க இலக்கியத்தின் முக்கியதொரு படைப்பாகக் கருதப்படுகிறது.  இரண்டாம் உலக யுத்தக் காலகட்டத்தில் , யூதச் சிறுவனான ஜேர்சி கொசின்ஸ்கி ஐரோப்பிய நாடுகள் பலவற்றில் அலைந்து திரிந்திருக்கின்றார். அக்காலகட்டத்தில் அவரடைந்த அனுபவங்களை மையமாக வைத்து எழுதிய நாவல் 'நிறமூட்டப்பட்ட பறவைகள்'. ஜேர்சி கொசின்ஸ்ஜியின் வாழ்வும் தற்கொலையிலேயே முடிந்து போனது சோகமானது. - வ.ந.கி]  அண்மையில் Jerzy kosinski எழுதிய Being There என்ற கைக்கடக்கமான சிறியதொரு நாவலைப் படிக்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டது. கடுகு சிறிது காரம் பெரிது என்பதற்கொப்ப அளவில் சிறியதானாலும் இந்நாவல் உள்ளடக்கத்தில் கனதியானது. மனிதனைப் பாதிக்கும் நிலைமைகளை ஒருவித கிண்டல் பாணியில் நோக்கி விமர்சிக்கும் வகையிலமைந்த நாவலை 'சட்டயர்' (Satire) என்போம். Being There அந்த வகையான நாவல்களில் குறிப்பிடத்தக்கதொன்று. உள்ளடக்கத்தைப் பொறுத்தவரையில் இச்சிறுநாவல் இன்றைய மனிதனைப் பலமாகப் பாதிக்கும் உலக, உள்நாட்டு அரசியல் மற்றும் குறிப்பாகத் தொலைகாட்சி பற்றிப் பலமாகவே விமர்சனத்தை முன்வைக்கின்றது. உருவத்தைப் பொறுத்த வரையில் கிறிஸ்த்தவ தத்துவ சமயநூலான பைபிளினது பாதிப்பு மிக அதிகமாகவே தெரிகின்றது.

கதை இதுதான்: 'தற்செயல்' (Chance) என்ற தோட்டக்காரனின் வாழ்வில் நடக்கும் நிகழ்வுகளை விவரிப்பதுதான் நாவலின் பிரதானமான பணி. இவனுக்குச் 'சான்ஸ்; என்ற பெயர் வந்ததற்குக் காரணமே பூமியில் இவனது பிறப்பு தற்செயலானது என்பதுதான். இவன் ஒரு முட்டாள். இவனால் எழுதப் படிக்க முடியாது. பொதுவாகத் தன்னுணர்வு, சுய பிரக்ஞை என்பதேயற்றவன். இவன் ஒரு செல்வந்தனின் வீட்டுத் தோட்டகாரனாகப் பல வருடங்களாகப் பணி புரிந்து வருகின்றான். இவனது ஒரே வேலை அச்செல்வந்தனது தோட்டத்தைப் பராமரிப்பதுதான். மிகுதி நேரத்தில் தனக்கென்று ஒதுக்கிய பகுதியில் இருந்தபடி டெலிவிஷனைப் பார்ப்பதுதான். பல வருடங்களாக இவன் அச்செல்வந்தனது வீட்டில் வேலை பார்த்து வந்தபோதும் இவனிற்கென்று இவன் இருந்ததற்கான அத்தாட்சிப் பத்திரங்களோ , ஆளடையாளப் பத்திரங்களோ எதுவுமே இவனிடமில்லை. இவனது இருப்பிற்கான (Being) எதுவித தடயங்களுமே இவனைத் தவிர இவ்வுலகில்லை. திடீரென இவனது முதலாளியான அச்செல்வந்தன் இறந்து விடவே இவனுக்குப் பிரச்சனை உருவாகின்றது. இவன் அவ்வீட்டில் நீண்டகாலம் இருந்ததற்கான எதுவிதத் தடயங்களுமே இல்லாத நிலையில் செல்வந்தனது சட்டத்தரணிகளால் வீட்டை விட்டு வெளியேற நிர்பந்திக்கப்படுகின்றான். முதன் முதலாக இவன் அந்தத் தோட்டத்தைவிட்டு ஏனைய மனிதர்கள் வாழும் வெளியுலகுக்கு வருகின்றான். செல்வந்தனால் இவனுக்கு அளிக்கப்பட்ட உயர்ரக ஆடைகள் அணிந்தபடி பார்வைக்கு உயர்குடிக் கனவான் போன்ற தோற்றத்துடன் வெளியுலகில் காலடி எடுத்து வைக்கும் இவனை அமெரிக்க அரசியல் வர்த்தக மட்டத்தில் மிகுந்த செல்வாக்குடன் விளங்கும் சுகவீனமுற்றுப் படுக்கையிலிருக்கும் பிரமுகர் ஒருவரின் மனைவியான 'எலிஸபெத் ஈவ்' (Elizabeth Eve) என்பவள் மோதி விடுகின்றாள். அதற்குப் பிராயச்சித்தமாக இவனை அப்பெண்மணி தனது மாளிகைக்குக் கொண்டு சென்று தனது குடும்ப வைத்தியரின் உதவியுடன் பராமரிக்கின்றாள். இவனது உடையலங்காரத்தைப் பார்த்து இவனை ஓர் உயர்குடிக் கனவானாக எண்ணி விடும் அப்பெண்மணி இவனது பெயரைக் கேட்கும் பொழுது அதற்கு இவன் தனது பெயர் 'சான்ஸ் கார்டினர்' ( சான்ஸ் தோட்டக்காரன்)" எனப் பதிலிறுக்கின்றான். அதனை அப்பெண்மணி Chauncy Gardiner என் விளங்கிக் கொள்கின்றாள். இவ்விதமாகச் Chauncy Gardiner ஆக உருமாறிவிட்ட Chance Gardener அப்பெண்மனியின் உதவியால் அமெரிக்க ஜனாதிபதியைச் சந்திக்கும் வாய்ப்பைப் பெறுகின்றான். ஒருமுறை தொலைக்காட்சியில் ஒலிபரப்பப்பட்ட நிகழ்வொன்றில் அமெரிக்க ஜனாதிபதி நாட்டுப் பொருளாதார நிலைமைகளைப் பற்றிக் கேட்ட கேள்வியொன்றிற்குப் பதிலளிக்கையில் தோட்டம் தவிர வேறெந்த அறிவுமற்ற முட்டாளான சான்ஸ் தனது தோட்டத்தை எண்ணிக் கொண்டு பதிலிறுக்கின்றான். 'பருவங்கள் மாறிவரும்' என்கின்றான். இதனைப் பொருளாதார நிலைமை மாறும் எனக் கூறுவதாக எண்ணிக் கொண்ட ஜனாதிபதி மகிழ்சியடைகின்றார். இவ்விதமாக Chanuncey Gardinerஐ அமெரிக்க அரசியல் வட்டாரத்தில் முக்கிய புள்ளியாக தொலைக்காட்சி உருமாற்றி விடுகிறது. இவ்விதம் முக்கிய புள்ளியாக உருமாறி விட்ட 'சான்ஸி கார்டின'ரின் நட்பைப் பெற ருஷ்ய தூதரக அதிகாரி முயல்கின்றார். 'சான்ஸி கார்டின'ரின் இருப்பினை உறுதிப்படுத்தும் எந்தவிதப் பத்திரங்களையும் பெற முடியாத தனது உளவுப்படையினர் மேல் சீற்றமுறும் அமெரிக்க ஜனாதிபதி 'சான்ஸி கார்டினர்' சோவியத் உளவாளியாகயிருக்கக் கூடுமோவென ஐயுறுகின்றார். அதே சமயம் 'Chance'ஐப் பல்கலைக்கழகமொன்றின் துணை வேந்தராக்கவும் முயற்சிகள் நடைபெறுகின்றன. இச்சிறு நாவலிம் பிரதானமான நிகழ்வுகள் இவைதான்.

முதன் முதலில் இச்சிறு நாவலின் உருவமைப்பைச் சமயம் எவ்விதம் பாதித்துள்ளதென்பதைப் பார்ப்போம். விவிலிய நூல் கூறும் படைப்புத் தத்துவத்தின்படி 'படைப்பு' ஏழு நாட்களில் நடைபெறுகின்றது. இந்நாவலும் ஏழு அத்தியாயங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. கிறித்தவ சமயத் தத்துவப்படி 'ஈடன் பூங்கா'வில் படைக்கப்பட்ட ஆதாமும் , ஏவாள் இருவருக்கும் ஆரம்பத்தில் மரணமற்ற வாழ்க்கைதானிருந்தது. அவர்களைப் படைத்த கர்த்தரின் எச்சரிக்கைகளையும் பொருட்படுத்தாமல், பாம்பினால் தூண்டப்பட்ட ஏவாளின் வற்புறுத்தலின்பேரில் ஆதாமும் ஏவாளும் ஈடன் தோட்டத்திலிருக்கும் நன்மை தீமைகளை அறிவிக்கும் விருட்சத்தின் கனியைப் புசிக்கின்றார்கள். அவர்கள் வாழ்க்கையில் பாவ,புண்ணியம் புகுந்து கொள்கிறது. இச்சிறு நாவலில் வரும் பெண்மணிக்கும் பெயர் Eve, Elizabeth. ஈடன் பூங்காவைப் போல் இந்நாவலிலும் ஒரு பூங்கா வருகின்றது. இந்நாவலின் உருவத்தில் சமயத்தின் பங்களிப்பை இவை கூறி நிற்கின்றன.

முழு முட்டாளான Chanceஐ வெற்றிகரமான டி.வி. பேர்சனால்டியாக' தொலைக்காட்சி உருமாற்றி விடுகின்றது. தொலைக்கட்சியில் காட்டப்படும் இவனது உருவத்தைப் பற்றி ஒரு பெண்மணி பின்வருமாறு எண்ணுகின்றாள்:

Manly; Well-Groomed;
Beautiful voice;
Sort of a Gary Grant.
He is not one of these phony idealists.."( பக்கம் 58).


- Jerzy Kosinski -
உண்மையில் இவன் ஒரு வடிகட்டின முட்டாள். இதுதான் தொலைக்காட்சியினால் சமுதாயத்தில் ஏற்படுகின்ற பெரிய பாதிப்பு. பொய்யான பிம்பங்களைத் தொலைக்காட்சி உண்மையைப் போல் காட்டி விடுகின்றது. உண்மையாகவே வெளிப்புற உருவை மட்டும் தான் தொலைக்காட்சி வெளிப்படுத்துகிறது. ஆழத்தே புதைந்து கிடக்கும் உண்மையை அது வெளிப்படுத்துவதேயில்லை. உண்மையில் யதார்த்தத்தைத் திரித்துக் காட்டுவதன் மூலம் போலியான வெளிப்பாட்டையே தொலைக்காட்சி உருவாக்குகின்றது. அது மட்டுமல்ல. தொலைக்காட்சி எந்த நிகழ்வையுமே ஒரு பொழுதுபோக்கு என்ற நிலைமைக்குச் சுருக்கி விடுகின்றது. அண்மையில் நடைபெற்ற வளைகுடா யுத்தத்தில் நேசநாடுகள் குண்டுகள் பொழிவதை ஒரு திரைப்படத்தைப் பார்ப்பதைப்போல பார்த்தோமே தவிர, அதன் பின்னாளி
ருக்கும் மனித அழிவுகளையோ, வேதனையையோ உணர முடியவில்லையே. உண்மையில் இந்நாவல் அமெரிக்க ஜனாதிபதியாக ரீகன் தெரிவாவதற்கு முன்னால்தான் எழுதப்பட்டது. இந்நாவலில் வரும் முட்டாள் தோட்டக்காரனை அமெரிக்க அரசியல் வட்டாரத்தில் முக்கிய புள்ளியாக எவ்விதம் தொலைக்காட்சி மாற்றி விடுகின்றதோ அந்த நிலைமைதான் ரொனால்ட் ரீகனுக்கும் ஏற்பட்டது என்று சில இலக்கிய விமர்சகர்கள் ஒப்பிடாமலுமில்லை.

அமெரிக்க ஜனாதிபதி, சோவியத் தூதுவர் ஆகிய பாத்திரங்களினூடு அணுவாயுதப் போட்டி பற்றியும், விரயமாகும் பணம் பற்றியும் விமர்சனத்தை முன் வைத்தாலும் இந்நாவலின் பிரதானமான நோக்கம் தொலைக்காட்சியினால் உருத்திரிக்கபப்ட்ட உண்மைகளை உண்மைகளாக ஏற்றுக் கொள்ளூம் சமுதாயமொன்றில் உருவாகக் கூடிய ஆபத்துக்களை எச்சரிக்கை செய்வதே. இத்தகைய முட்டாள்களின் கைகளில் அதிகாரம் அகப்பட்டு விடுவதால் ஏற்படக் கூடிய விளைவுகள் முழுமனித இனத்தையே பாதித்து விடும் என்பதைத்தான் மறைமுகமாக இச்சிறுநாவல் உணர்த்தி வைக்கின்றது. ஹெமிங்வேயின் 'கடலும் கிழவனும்', ஆல்பேர்ட் காம்யுவின் 'அந்நியன்' மற்றும் ஸ்டீன் பேக்கின் 'முத்து' போன்று அளவில் சிறியதானாலும் உருவத்திலும், உள்ளடக்கத்திலும் காத்திரமானதொரு நாவல்தான் Being There. தமிழ் இலக்கிய ஆர்வலர்கள் நிச்சயம் படிக்க வேண்டியதொரு நாவல் என்று கூறினால் அது மிகையில்லை.

நன்றி: சுபமங்களா, மார்ச் 1995 ,பதிவுகள்.காம், திண்ணை.காம்

ngiri2704@rogers.com

No comments:

வ.ந.கிரிதரன் - நவீன விக்கிரமாதித்தனின் 'காலம்'!

எழுத்தாளர் மாலன் , இந்திய சாகித்திய அமைப்புக்காகத் தொகுத்த  'புவி எங்கும் தமிழ்க் கவிதை'த் தொகுப்பில் இடம் பெற்றுள்ள  எனது கவிதையான ...

பிரபலமான பதிவுகள்