Thursday, March 22, 2018

அ.ந.க.வின் 'குருட்டு வாழ்க்கை' சிறுகதையும், 'மனக்கண்' நாவலும் பற்றிய சிந்தனைகள்! - வ.ந.கிரிதரன் -


அறிஞர் அ.ந.கந்தசாமியின் முதலாவது சிறுகதையினை அண்மையில் வாசிக்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டது. எழுத்தாளர் செங்கை ஆழியான் தொகுத்து பண்பாட்டலுவல்கள் திணைக்களம் (கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை அமைச்சு, வடக்கு - கிழக்கு மாகாணம், திருகோணமலை) வெளியிட்டிருந்த 'ஈழகேசரிச் சிறுகதைகள்' தொகுப்பு நூல் உள்ளடக்கியுள்ள 'குருட்டு வாழ்க்கை' என்னும் சிறுகதைதான் அது. 17.5.1942 ஈழகேசரிப்பிரதியில் வெளியான சிறுகதை இது. இதனை எழுதியபோது அ.ந.க.வுக்கு வயது பதினேழு. இதுவே அவரது முதலாவது சிறுகதை என்று செங்கை ஆழியான நூலின் முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார். அதே சமயம் சிறுகதை வெளியாகியுள்ள பக்கத்தில் அ.ந.க 'சிப்பி' என்னும் புனைபெயரில் 'பகல் வெள்ளி' (1941) என்னுமொரு சிறுகதையினையும் ஈழகேசரியில் எழுதியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். இதன்படி 'பகல்வெள்ளி'யே அ.ந.க.வின் முதலாவது சிறுகதையாகவிருக்க வேண்டும். 'குருட்டு வாழ்க்கை' வெளியான ஆண்டு 1942. 'பகல் வெள்ளி' வெளியான ஆண்டு 1941. அ.ந.க.வின் பிறந்த ஆண்டு 1924 என்பதால் (ஆகஸ்ட் 8, 1924) இச்சிறுகதை வெளியானபோது அவருக்கு வயது பதினேழு.

இச்சிறுகதையை வாசித்த போது இன்னுமொர் உண்மையினையும் அவதானிக்க முடிந்தது. அ.ந.க எழுதி தினகரனில் தொடராக வெளியான ஒரேயொரு நாவல் 'மனக்கண்'. இந்நாவலின் கதையமைப்பும், 'குருட்டு வாழ்க்கை' சிறுகதையின் கதையமைப்பூம் ஒரே மாதிரியானவை. குருட்டு வாழ்க்கை சிறுகதையில் வரும் நாயகன் அம்மை நோயினால் கண் பார்வையினை இழக்கின்றான். இது போலவே மனக்கண் நாவலிலும் நாயகன் ஶ்ரீதர் கண் நோயினால் கண் பார்வையினை இழக்கின்றான். இரண்டிலுமே கண் பார்வை இழந்த நாயகர்களின காதலிகள் நாயகர்களை ஒதுக்கி விடுகின்றார்கள். இரண்டிலுமே நாயகர்களின் பெற்றோர்கள் அவர்களது காதலிகள் என்று கூறி வேறு பெண்களை அவர்களுக்கு மணம் முடித்து வைத்து விடுகின்றார்கள். இரண்டிலுமே நாயகர்களுக்கு கண் சத்திர சிகிச்சை செய்து பார்வை திரும்புகின்றது. இரண்டிலுமே உண்மை அறிந்த நாயகர்கள் தாம் பெற்ற பார்வையினைத் தாமே பறித்து விடுகின்றார்கள். அவ்விதம் செய்வதன் மூலம் காதலிகள் அல்லாத மனைவியர்களுடன் குடும்பத்தை நடாத்த அவர்களால் முடிகின்றது. ஆனால் குருட்டு வாழ்க்கை சிறுகதை இந்நிலையுடன் நின்று விடுகின்றது. மனக்கண் நாவலிலோ கதை மேலும் தொடர்கின்றது. மனக்கண் நாவலில் நாயகன் தன்னை மணந்து கொண்ட பெண்ணைப்பற்றி மேலும் சிந்திக்கின்றான். அவளது தியாகத்தின் அளவை உணர்ந்துகொள்கின்றான். மீண்டும் கண் பார்வையைப் பெற விரும்புகின்றான். செல்வந்தரும், செருக்கும் மிக்க அவனது தந்தையார் இறுதியில் தன் கண்களைக் கொடுத்து அவனைக் காப்பாற்றி மறைந்து விடுகின்றார்.
குருட்டு வாழ்க்கை சிறுகதையைப்பற்றிக் குறிப்பிடுகையில் செங்கை ஆழியான் 'ஈழகேசரித் தொகுப்பு நூலில் 'நல்லதொரு சினிமாப்பாணிக் கதை. ஆனால் வாசித்ததும் வலிக்கிறது' என்று குறிப்பிட்டுள்ளார். மனக்கண் நாவலின் இறுதியில் அ.ந.க எழுதிய முன்னுரையில் அ.ந.க ஏன் அவ்விதமானதொரு சுவை மிகுந்த கதையினைப் பின்னினார் என்பதற்கும், தான் நாவலில் பாவித்த சுவையான நடையினைப்பற்றியும் விளக்கம் தந்திருக்கின்றார்.  அதில் அவர் பின்வருமாறு கூறுவார்:

"நாவலிலே நாம் எதிர்பார்ப்பது சுழல்கள் நிறைந்த ஒரு கதை; உயிருள்ள பாத்திரங்கள்; கண் முன்னே காட்சிகளை எழுப்பும் வர்ணனைகள் என்பனவாம். கதை இயற்கையாக நடப்பது போல் இருக்க வேண்டும். ஆனால் அதே சமயத்தில் அந்த இயற்கை சட்டமிடப்பட்ட ஒரு படம் போல் ஓர் எல்லைக் கோடும் அழுத்தமும் பெற்றிருக்க வேண்டும். இன்னும் எந்தக் கதையுமே மனிதனிடத்தில் நெஞ்சை நெகிழ வைக்கும் ஓர் இரக்க உணர்ச்சியைத் தூண்டல் வேண்டும். இதில்தான் ஒரு நாவலின் வெற்றியே தங்கியிருக்கிறதென்று சொல்லலாம். உண்மையில் மனித உணர்ச்சிகளில் இரக்கமே மிகவும் சிறந்ததென்றும் அதுவே ஒருவனது உள்ளத்தைப் பயன்படுத்தி அவனை நாகரிகனாக்குகிறதென்றும் கூறலாம். டேனிஸ் சேனாரட் (Denis Sanarat) என்ற அறிஞர் நாவலின் இத்தன்மையைப் பற்றிப் பேசுகையில் “காதலர்களின் நெஞ்சுடைவைப் பற்றி வாசிக்கும் வாசகன் தன் கண்ணில் நீர் பெருக்கிறானே, அது தான் நாவலாசிரியன் தன் உழைப்புக்குப் பெறும் பெரும் பரிசாகும்” என்று கூறுகிறார். ஷேக்ஸ்பியருக்குப் பின்னால் பாத்திர சிருஷ்டியின் பரப்பிலே ஆங்கில மொழி கண்ட மகாமேதை என்று கருதப்படும் சார்லஸ் டிக்கென்ஸ் (Charles Dickens)  பெற்ற வெற்றிக்கு, அவர் கதைகளில் இவ்வித இரக்க உணர்ச்சி விஞ்சியிருப்பதே காரணம், டிக்கென்ஸின் கதைகளில் இரண்டு பண்புகள் தலை தூக்கி நிற்கின்றன. ஒன்று அனுதாப உணர்ச்சி, மற்றது உற்சாகமூட்டும் நகைச்சுவை. உண்மையில் மனித வாழ்க்கைக்கே மதிப்பும் இன்பமும் நல்குவன இவ்விரு பண்புகளுமே. விக்டர் ஹியூகோவின் “ஏழை படும் பாடு”ம் இவ்விரு பேருணர்ச்சிகளையுமே பிரதிபலிக்கிறது. “மனக்கண்”ணைப் பொறுத்த வரையில் நாவல் பற்றிய மேற்கூறிய பிரக்ஞையுடனேயே நான் அதனை எழுதியிருக்கிறேன். வாசகர்களுக்குச் சுவையான ஒரு கதையைச் சொல்ல வேண்டும்; அது அவர்கள் அனுதாபத்தையும் இரக்க உணர்ச்சியையும் தூண்ட வேண்டும்; அதே நேரத்தில் முடிந்த இடங்களில் வாழ்க்கையில் பிடிப்பைத் தரும் நகைச்சுவை, வேடிக்கை போன்ற உணர்ச்சிகளுக்கும் இடமிருக்க வேண்டும்; சூழ்நிலை வர்ணனையையும் பாத்திர அமைப்பும் சிறந்து விளங்க வேண்டும்; கதைக்கு இடக்கரில்லாது வரும் அறிவுக்கு விருந்தான விஷயங்கள் இடம் பெற வேண்டும் என்பன போன்ற நோக்கங்கள் இந்நாவலை எழுதும்போது என்னை உந்திக் கொண்டேயிருந்தன. இன்னும் உலகப் பெரும் நாவலாசிரியர்களான டிக்கென்ஸ், டால்ஸ்டாய், சோலா, டொஸ்டோவ்ஸ்கி, கல்கி, தாகூர், விகடர் ஹியூகோ போலத் தெட்டத் தெளிந்து ஒரு வசன நடையில் அதைக் கூற வேண்டுமென்றும் நான் ஆசைப்பட்டேன். இன்று தமிழில் ஒரு சிலர் - முக்கியமாகக் கதாசிரியர் சிலர் இயற்கைக்கு மாறான சிக்கலான ஒரு தமிழ் நடையை வலிந்து மேற்கொண்டு எழுதுவதை நாம் பார்க்கிறோம். இப்படி யாராவது எழுத முயலும்போது அவர்கள் வசன நடை முன்னுக்கு வந்து பொருள் பின்னுக்குப் போய்விடுகிறது."

மேலும் அ.ந.க.வின் மனக்கண் நாவல் விரிந்ததொரு நாவல். இலக்கியச்சுவை மிகுந்த நாவல். சுவையான மொழி நடையில் படைக்கப்பட்டதொரு நாவல். பல்வேறு இலக்கியத் தகவல்களையெல்லாம் உள்ளடக்கியுள்ளதொரு நாவல். பாத்திரங்கள் உயிர்த்துடிப்புடன் வடிக்கப்பட்டுள்ளதொரு நாவல்.  கிரேக்க நாடகாசிரியனன சொபாக்கிளிஸ் எழுதிய புகழ்பெற்ற நாடகமான 'எடிப்பஸ் ரெக்ஸ்’ நாடகத்தில் எவ்விதம் நாயகன் தன் கண்களைத்தானே குருடாக்கிக்கொள்கின்றானோ அவ்விதமே மனக்கண் நாயகனும் தன் கண்களைக்குருடாக்கிக்கொள்கின்றான் என்பதை இலக்கிய நயத்துடன் மனக்கண் நாவலில் வெளிப்படுத்தியிருப்பார் அ.ந.க. காரணங்கள் வேறானைவையாக இருந்தபோதிலும் விளைவு ஒன்றாகவேயிருந்ததை மையமாக வைத்து மனக்கண் நாவலைச் சுவையாகப்பின்னியிருப்பார் அ.ந.க.

'ஈழகேசரிச்சிறுகதைகள்' தொகுப்பு நூலினை நூலகம் இணையத்தளத்தில் வாசிக்கலாம்:  http://noolaham.org/wiki/index.php/%E0%AE%88%E0%AE%B4%E0%AE%95%E0%AF%87%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D

அ.ந.க.வின் 'மனக்கண்' நாவலைப் 'பதிவுகள்' இணைய இதழில் வாசிக்கலாம்: http://www.geotamil.com/index.php?option=com_content&view=section&layout=blog&id=25&Itemid=47

ngiri2704@rogers.com

No comments:

வ.ந.கிரிதரன் பாடல் - காலவெளிக் குழந்தைகள் நாம்

இசை & குரல்: AI SUNO | ஓவியம் : AI காலவெளிக் குழந்தைகள் நாம் விரிந்து கிடக்கிறது பேர் அண்டம். புரிந்து கொள்ளவே முயற்சி செய்கின்றேன். இரு...

பிரபலமான பதிவுகள்