"சில விசயங்கள் ஆச்சரியமானதுதான். அவ்வப்போது உதிரியாக இதழ்களில் சில கதைகளைப் படித்திருக்கிறேன். ஓரிண்டு கவிதைகளும் அதிலடங்கும். ஆனால், அவர் ஈழத்து இலக்கியப் பரப்பில் முக்கியமானவர்தான். ஆர்வமூட்டும் கதைசொல்லி. அவருடைய கதைகள், கவிதைகள் தொகுப்பாக்கம் செய்யப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டிருக்க வேண்டும். ஈழத்து இலக்கிய வெளியில் தொகுப்பாக்கம் செய்வதே பெரும் சவாலான விசயம். சிலர் அதை அவ்வளவாக பொருட்படுத்துவதே இல்லை. "
இங்கு விமர்சகர்கள் என்ற பெயரில் உலா வருபவர்களில் பலர் தம் அங்கீகாரத்துக்காக தம் சிஷ்யகோடிகளாகச்சிலரைத்தூக்கிப் பிடிப்பார்கள். சிஷ்யகோடிகளும் அவர்களைத்தூக்கிப்பிடிப்பார்கள். ஒருவரையொருவர் முதுகு சொறிந்து கொள்வதில் குளிர்காய்வார்கள். இவர்கள் வெளியிடும் தொகுப்புகளும் அவ்விதமாகவே இருப்பதில் ஆச்சரியமெதுவுமில்லை. ஆனால் யாருக்கும் அடி பணியாத, வளைந்து கொடுக்காதவர்களை இந்த முதுகு சொறியும் கூட்டம் கண்டு கொள்வதில்லை. மேலும் அவர்களும் இவர்களின் அங்கீகாரத்தை எதிர்பார்ப்பதில்லை. மேலும் வளைந்து கொடுக்காதவர்களைப்பற்றி அங்கீகாரத்தை நாடுமொரு விமர்சகர் தூக்கி வைத்து எழுதினாலும், தம்மை அவ்விதம் எழுதி விட்டார்களே என்று வளையாதவர்கள் பதிலுக்கு அவர்களைத்தூக்கி வைப்பதில்லை வழக்கமான சிஷ்யகோடிகளைப்போல். இதனால் அவ்வகை விமர்சகர்களுக்கு எந்தவித ஆதாயமுமில்லை. ஆனால் உண்மையான படைப்பாளிகளை அவர்களது படைப்புகளினூடு தரமான வாசகர்கள் கண்டு கொள்வார்கள். இன்று நீங்கள் கண்டு கொண்டதைப்போல. அவ்விதமான படைப்புகள் கால ஓட்டத்தில் நின்று பிடிக்கும்.
மேலும் இக்காலத்தில் தொகுப்புகள் வரவில்லையே என்று குறைபடுபவர்கள் தேடுதலற்றவர்கள். அதிகமான படைப்புகளை இணையத்தில் காண முடியும். தேடினால் இணையத்தில் நிறையவே கிடைக்கிறது. தொகுப்புகள் வந்தால்தான் வாசிப்பேன் என்று அடம் பிடிக்காதீர்கள். இணையத்தில் தேடிப்பாருங்கள். கண்டு பிடியுங்கள். வாசியுங்கள். இன்று ப்ரதிலிபி போன்ற தளங்களின் எழுத்தாளர்களின் மின்னூல்கள் வெளியாகின்றன. பல எழுத்தாளர்கள் வலைப்பதிவுகளை வைத்திருக்கின்றார்கள். பலர் இணைய இதழ்களில் எழுதி வருகின்றார்கள். தொகுப்புகளில் வரும் படைப்புகளை விடப்பல மடங்கு அதிகமான படைப்புகளை இணையத்தில் தேடுதல் மிக்க ஆய்வாளர் ஒருவரால் கண்டு பிடிக்க முடியும்.
மேலும் இது அச்சு ஊடகங்களிருந்து டிஜிட்டல்' ஊடகங்களுக்கு மாறும் கால கட்டம். ஆய்வு செய்ய விரும்புவோர், விமர்சகர்களாக வர விரும்புவோர் தேடலை வெறும் அச்சூடகங்களுடன் மட்டும் நிறுத்திவிடக்கூடாது. ஏனென்றால் தற்போது எவ்வளவோ நல்ல படைப்புகள் இணையத்தில்தான் வெளிவருகின்றன. அதிக அளவில் குப்பைகள் வருவதால், இணையத்தில் வெளியாகும் நல்ல படைப்புகளை ஒதுக்கி விட முடியாது. மேலும் இணையத்தில் காணப்படும் நூலகங்களில் அதிக அளவில் மின்னூல்களை (ஏற்கனவே வெளியான நூல்கள், சஞ்சிகைகள், பத்திரிகைகள் மற்றும் வெளிவராத புதிய மின்னூல்களை) வாசிக்க முடியும். கையில் கிடைக்கும் ஓரிரு நூல்களை வாசித்து விட்டு ஆய்வு செய்வதற்குப்பதிலாக, அதிக அளவில் நூல்களை, சஞ்சிகைகளை, பத்திரிகைகளை, வலைப்பதிவுகளை, இணைய இதழ்களை, இணையத்தில் மட்டுமே வெளியான மின்னூல்களை, முகநூல் பக்கங்களில் வெளியாகும் பதிவுகளை என வாசித்து ஆய்வுக்குட்பட முடிவதால், அவ்விதமான ஆய்வுகள் சிறப்பு மிக்கவையாக இருப்பதற்கான சாத்தியங்கள் அதிகம்.
"அவர் ஈழத்து இலக்கியப் பரப்பில் முக்கியமானவர்தான். ஆர்வமூட்டும் கதைசொல்லி. அவருடைய கதைகள், கவிதைகள் தொகுப்பாக்கம் செய்யப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டிருக்க வேண்டும்" என்றும் றியாஸ் குரானா கூறியிருக்கின்றார். உண்மையில் தமயந்திக்கு அறிமுகம் தேவையேயில்லை என்பதுதான் என் கருத்து. அவரைப்பலர் ஏற்கனவே அவரது படைப்புகளினூடு அறிந்திருக்கின்றார்கள். குரானா தொகுப்புகளினூடு படைப்புகளைத்தேடுவதால்தான் சிறிது தாமதமாகத் தமயந்தியைக்கண்டு பிடித்திருக்கின்றார் என்றெண்ணுகின்றேன்.
மேலும் தமயந்தியின் பரப்பு விசாலமானது. கதை, கவிதை போன்ற இலக்கிய வடிவங்களுடன், கூத்து மற்றும் புகைப்படக்கலையிலும் இவரது பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்தது.
றியாஸ் குரானா முயன்றால் இணையத்தில் , முகநூலில் கிடைக்கும் தமயந்தியின் படைப்புகளை, அவரது பதிவுகளை ஆதாரங்களாக வைத்தே நல்லதொரு ஆய்வினை எழுத முடியும். தொகுப்புகளின் வருகைக்காகக் காத்திருக்கத்தேவையில்லை.
றியாஸ் குரானாவின் முழு முகநூல் பதிவும் கீழே:
தமயந்தி
தமயந்திசில விசயங்கள் ஆச்சரியமானதுதான். அவ்வப்போது உதிரியாக இதழ்களில் சில கதைகளைப் படித்திருக்கிறேன். ஓரிண்டு கவிதைகளும் அதிலடங்கும். ஆனால், அவர் ஈழத்து இலக்கியப் பரப்பில் முக்கியமானவர்தான். ஆர்வமூட்டும் கதைசொல்லி. அவருடைய கதைகள், கவிதைகள் தொகுப்பாக்கம் செய்யப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டிருக்க வேண்டும். ஈழத்து இலக்கிய வெளியில் தொகுப்பாக்கம் செய்வதே பெரும் சவாலான விசயம். சிலர் அதை அவ்வளவாக பொருட்படுத்துவதே இல்லை. அப்படி ஒருவர்தான். தமயந்தி. அனேகமாக இந்த ஆண்டு அவரின் தொகுப்புக்கள் வெளிவந்துவிடும் என நம்புகிறேன். அவரின் கவிதை ஒன்றை உங்களுக்காக...
கோணல் முகங்கள்
- தமயந்தி -
வண்ணத்துப் பூச்சிகளின் கனவுகளில்
அப்பப்போ வந்துபோகும்
சிறு பாத்திரம் எனது
வாயிற் காவலனாக,
தூதுவனாக,
குதிரை மேய்ப்பவனாக,
வண்ணத்துப்பூச்சிகளை தலையில் சுமந்து
ஆற்றைக் கடந்து அக்கரையில் சேர்ப்பவனாக,
பூமரங்களுக்கு
நீர் பாய்ச்சுபவனாக,
பேறுகாலங்களில் பரிகரிப்பவனாக
இப்படி
அவ்வப்போது பாத்திரங்கள் மாறும்.
ஆயினும்
எல்லாவற்றிலும் பணியாளன் பாத்திரம்தான்.
அதிலொன்றும் குற்றமில்லை.
இன்று அதிகாலைக்கு சற்று முன்னதாக
உலகத்தின் எல்லா
வண்ணத்துப் பூச்சிகளின் கனவுகளிலும்
ஒரே சமயத்தில் தோன்றுவதான பாத்திரம்
இன்பகரமானதாக இருந்தது.
அவற்றின் சிறகுகளில்
நிறங்கள் தீட்டுவதும்,
வகை வகையான ஓவியங்கள் வரைவதும்.
எல்லா வண்ணத்துப்பூச்சிகளும்
விரும்பிக் கேட்ட ஓவியம்
மனித முகங்களை
கோணல் கோணலாக
தமது சிறகுகளில் வரையும்படிக்கு.
ngiri2704@rogers.com
பதிவுகள்.காம் 16 January 2016
No comments:
Post a Comment