Sunday, March 18, 2018

வேலணையூர் தாஸின் 'மழைக்காலக்குறிப்புகள்' பற்றி.... வ.ந.கிரிதரன் -

வேலணையூர் தாஸின் 'மழைக்காலக் குறிப்புக்கள்' நூலினை அண்மையில் பெற்றுக்கொண்டேன். வேலணையூர் தாஸ் 'யாழ் இலக்கியக் குவியம்' அமைப்பின் ஸ்தாபகர். இணைய இதழ்கள், அச்சிதழ்கள் பலவற்றில் இவரது கவிதைகள் வெளியாகியுள்ளன. 'யாழ் இலக்கியக் குவியம்' அமைப்பின் அழகிய வெளியீடாக மேற்படி நூல் வெளியாகியிருப்பது திருப்தியைத்தருவது. நூலின் ஆரம்பத்தில் 'பதிவுகள்' இணைய இதழுட்பட தனது படைப்புகள் வெளிவந்த ஊடகங்களுக்கு நன்றியினை நூலாசிரியர் தெரிவித்திருப்பது வரவேற்கத்தக்கது.

இத்தொகுப்பிலுள்ள கவிதைகள் பல,விடயங்களை பாடுபொருளாகக் கொண்டிருக்கின்றன. யுத்தத்தில் தந்தையை இழந்த, மகனை இழந்த, கணவனைஇழந்த எனப் பல்வேறு இழப்புகளைப் பற்றிக் கவிதைகள் விபரிகின்றன. காதல், மழைக்காலத்து அனுபவங்கள், இழந்த நிலம், அன்னை மீதான அன்பு, மழை அனுபவங்கள் எனக் கவிதைகள் பன்முகத்தன்மை மிக்கவை. கவிதைகளும் சொற் சிக்கனம் மிகுந்தவை, சொற்சிக்கனம் சிறிது தளர்ந்தவை எனப்பன்முகமானவை.

நூலின் முதற் கவிதையான 'என் நிலம்' போரினால் இழந்த நிலத்துக்குத் தன் இறுதிக்காலத்தில் மீண்டவரின் அனுபவத்தை விவரிக்கும்.

'காலப் பிரளயமோ
கண்பட்டுப் போனதுவோ
போர் வந்துதான் துரத்த
பிரிந்தேன் தாய் நிலத்தை'

என்று போரின் விளைவினை விபரிக்கும் கவிதை போரின் முடிவுக்குப் பின்னர் தனது சொந்த மண்ணுக்குத் திரும்பும் ஒருவரை

'சுற்றிவர முட்கம்பி
இரும்புத்தூண் அரண்கள்,
விளங்கா மொழியினிலே
பெயர்ப்பலகை'

எனச்சொந்த மண் வரவேற்கும். சொந்த மண்ணே அந்நியமாகிப்போன சோகத்தின் பதிவு இக்கவிதை.

மேலும் இத்தொகுப்பு காணாமல் போனவர்கள் பலரைப்பற்றிய குறிப்புகளை வெளிக்கொணர்கின்றது, உதாரணமாகக் 'காலம் அவளைத்தேடிக்கொண்டிருக்கிறது' கவிதை காதல் உணர்வுகள் பொங்கும் பருவத்தினளான இளம் பெண்ணொருத்தியின் கனவுகள் எவ்விதம் சிதைக்கப்பட்டன என்பது பற்றி விபரிக்கும். ஊற்றெடுக்கத்தொடங்கிய காதல் இசையில் அவள் மிதந்து கிடக்கின்றாள். இந்நிலையில்

'வானமும் நதியும் பறவைகளும்
காடும் அவள் பாடலை மீளவும் பாடின..
அந்த இசையில் மிதந்து கொண்டிருந்த

ஓர் நாளில் அவள் காணாமல் போகின்றாள். '. இங்கு 'ஒரு நாளில்' என்று வந்திருக்க வேண்டும். ஆயினும் கவிஞர் காரணத்துடன் 'ஓர் நாளில்' என்றுபாவித்திருப்பதற்குத் தர்க்கரீதியிலான காரணம் இருப்பின் அது என்னவென்று யான் அறியேன், அவர்தான் கூற வேண்டும்.
'இரவும் வானமும்
தென்றலும் மின்மினிகளும்
அதற்குப்பின்
அமைதியாய் இல்லை.
அவளைத்தேடி
அலைந்து கொண்டிருந்தது காலம்' என்று கவிதை முடிகிறது.

இன்னுமொரு கவிதையான 'உன் கனவுகள் கொன்றவர் வாழிய நீடி' கணவனை இழந்த பெண்ணொருத்தியின் துயரைப் பற்றியது.

கடும் இருள் விரவிய இரவில்
உன் கணவனை இழுத்துச் சென்றனர்.
கதறிய உன் குரலும் தேய்ந்து காற்றினில் அழிந்தது
உன் வாழ்க்கையும் கூட.

கணவனை இழந்ததினால் அவளது தேகம் இளைத்தது; அவளது கனவுகள் கொல்லப்பட்டன; காலம் அவளைத்தெருவினில் எறிந்தது. இதனைப்பின்வருமாறு கவிதை விபரிக்கும்"

ஏங்கியே இழைத்தது தேகம்
உன்னை தெருவினில் எறிந்தது காலம்.
உன் துயர் அகலுமோ தோழி.
உன் கனவுகள் கொன்றனர் வாழிய நீடி,'

இங்கு இளைத்தது என்று வந்திருக்க வேண்டும். தட்டச்சுப்பிழையாக இழைத்தது என்று வந்திருக்கின்றது.

இன்னுமொரு கவிதை 'கொல்லும் கனவுகள்' எவ்விதம் இயற்கையுடன் கொஞ்சி விளையாடிய மானுடர் வாழ்ந்த பூமி புதைகுழிகள் நிறைந்த நிலமாக மாறி விடுகின்றதென்பதை விபரிக்கும். கையொன்று அறுந்த தன் பிள்ளையினை ஏந்தி அழுகின்றாள் அவள். அவள் தன் துயரத்தைக்கூட ஆற்றிட முடியாத வகையில் இழுத்துச்செல்லப்படுகின்றாள். அவள் கண்ணீர் நதி நெருப்பாகி எரிகிறது. நேரடியான கவிதை. ஆனால் கூறும் பொருள் நெஞ்சினைச் சுடுகின்றது.

'காற்றிறந்த காலம்' கவிதை சொற்சிறப்பும், சிக்கனமும் மிக்க கவிதை. உயிர்ப்பின்றி நகரும் காலத்தில் 'நெருப்பெரிந்து நீறாகிக் கிடக்கிறது நிலம்' 'காற்றிறந்த வெளியில்; நீர் வேண்டி அலைகிறது ஒற்றைக்குருவி'. 'குவியும் சாம்பல் மேடுகளில் இருந்து எழுந்து பறக்கும் துகள்களில்..' அதன் துணையின் .சிறகினைத்தேடுகிறது. இத்தொகுப்பின் சிறந்த கவிதைகளில் இதுவுமொன்று. இந்தக் கவிதை இன்னுமொரு விடயத்திலும் குறிப்பிடத்தக்கது. படிமத்தில் சிறந்து விளங்கும் கவிதைகளிலொன்று இது. தன் துணையினைத்தேடி அலையும் ஒற்றைக்குருவி யார் என்பதை ஊகித்து அறிந்து உணர்கையில் கவிதை சிறக்கிறது.

மழைக்காலமொன்றில் யுத்தச்சூழலினால் காணாமல் போன தந்தையைப்பற்ற்க் கூறும் கவிதை 'அப்பா'.

'மழைக்கால இரவொன்றில்
என் ஒரு கன்னத்தில் முத்தமிட்டீர்கள்.
உங்களை யாரோ அழைக்கின்றார்கள்.
மறு கன்னத்து முத்தத்திற்காய்க்
காத்திருந்தேன்.
அதற்குப்பின்
நீங்கள் திரும்பவே இல்லை.
அந்த இரவு எல்லோருக்கும்
விடிந்தது.
எனக்கும் அம்மாவிற்கும்
மட்டும்..'

என்று காணாமல் போன தந்தையைப்பற்றியும், காணாமல் போன கணவனைப்பற்றியும் அதன் விளைவாக விடியாத இரவாக மாறிய அவர்கள்தம் வாழ்க்கையைப்பற்றியும் கூறும் கவிதை 'அப்பா'. எல்லோருக்கும் இரவு விடிவதுண்டு. ஆனால் இவர்களுக்கோ வாழ்க்கையே விடியாத இரவாகிப்போகிறது. விடிவற்ற இரவாகிய வாழ்க்கையைப் பற்றியும், அதற்குக்காரணமான குடும்பத்தலைவனின் இழப்பு பற்றியும் கூறும் கவிதை 'அப்பா'.

முள்ளிவாய்க்கால் பேரழிவின்போது அங்கிருந்த மக்களுடன் தங்கியிருந்து தம் மருத்துவப்பணி புரிந்த மருத்துவர்கணின் சேவையினைப்பற்றி எடுத்துக்கூறும் கவிதை 'கடவுளானவர்கள்'.

தொகுப்பின் இன்னுமொரு முக்கிய கவிதை: சிலுவைப்பாடுகள்'. மழை அனுபவங்களை மையமாகக்கொண்ட கவிதைகளிலொன்று 'மழை அனுபவங்கள்'. அனைவருக்கும் மழையென்றால் எப்பொழுதும் பிடிக்கும். எனக்கு இரவு மழை மிகவும் பிடிக்கும். ஓட்டுக்கூரை 'சட்டச்சட'வென்று சப்தமிடக்கொட்டும் மழை பெய்யும் நள்ளிரவில் வயற்புறத்தவளைக்கச்சேரிகளை இரசித்தபடி படுக்கையில் புரண்டிருக்கும் அனுபவம் அற்புதமானது. இங்கும் கவிஞர் அத்தகைய தனது அனுபவத்தை விபரிக்கின்றார்

'இரவுத்தூக்கத்தில்
தொடரும் மழையில் போர்வை இறுக்கி
அதன் ஓவென்ற ஓசைலயத்தில்
மனமொன்றி
வருகின்ற தூக்கமும் சுகமும்
மிகப்பிரியமானதல்லவா?:

இவ்விதம் விபரிக்கும் கவிஞர் கவிதையின் இறுதியில் பின்வருமாறு விபரிக்கின்றார்.

இதைவிட
இப்படியும் ஓர் அனுபவம் இருக்கிறது
தெரியுமா?
நடுநிசி நேரம்
வெளியே ஷெல் விழும்
உயிர் நடுங்கும்
மழை கொட்ட ஆரம்பிக்கும்,
பங்கருக்குள் வெள்ளம்.
குளிர் உயிர் கொல்லும்,
உருண்டையான நீளமான
ஐந்து ஒன்று காலில் சுற்றி
மேலே நகரும்.

ஈழத்துத்தமிழர்களின் போர்க்கால மழை அனுபவம் கூடவே தோன்றி சாதாரணமாக அனுபவிக்க வேண்டிய இயற்கை நிகழ்வினையும் அனுபவிக்க முடியாமல் செய்து விடுகின்றது. கொட்டும் ஷெல் மழையும், வெள்ளத்தில் மூழ்கிக்கிடக்கும் பதுங்கு குழியும், அரவங்கள் போன்ற கொடிய விச ஐந்துகளின் பிரசன்னமும் கண் முன்னால் விரிகின்றன.

'உண்மையைச்சொல்லுதல் நீங்கள் நினைப்பதுபோல் அவ்வளவு இலகுவானதல்ல' என்று ஆரம்பிக்கும் 'உண்மையைச்சொல்லுதல்' தொகுப்பின் நல்ல கவிதைகளிலொன்று. 'தாய்க்கொரு தாலாட்டு' தொகுப்பின் இன்னுமொரு முக்கியமான கவிதை. பொதுவாகத்தாய்மார்தாம் குழந்தைகளுக்காகத்தாலாட்டு பாடுவார்கள். இங்கு நிலைமை மாறி விடுகின்றது. தாய்க்காகக் குழந்தையொன்றால் பாடப்படும் தாலாட்டிது. 'அன்னையர்தினக்கவிதை'யாக நிச்சயம் பாவிக்கக்கூடிய கவிதையிது. தாயின் பெருமையினைப் பாடும் கவிதை பின்வருமாறு முடிவுறும்:

'வான் அளவா பெரிதென்றார்.
வையகத்தில் நின் அன்பே பெரிதென்பேன்.
உறவு பல கண்டேன்.
உற்றார் சுகம் கண்டேன்.
பாசமென்று வாழ்க்கையினில்
பலபேரை நான் கண்டேன்.
ஆனாலும்
நேசமென்றால் நீயம்மா.
நெஞ்சமெல்லாம் தாயம்மா.

வானுறங்கும் மண்ணுறங்கும்
மரந்தன்னில் புள்ளுறங்கும்
இரவுப் பொழுதுகளில் எனக்காக விழித்தவளே
விழிமூடித் தூங்குகிறாய் என் பாடல் கேட்காதா
வானிநிறையும் அன்புடையாய்
என் தாலாட்டில் கண்ணயர்வாய்.'

அட்டைப்படக்கவிதையான 'மழைக்காலக்குறிப்புகள்' மிகவும் சாதாரணக்கவிதை; காதல் கவிதை. எதற்காக நூலின் அட்டைப்படக் கவிதையாக இதனை வைத்தாரோ?

தொகுப்பில் ஆங்காங்கே ஒரு சில இலக்கணப்பிழைகளுமுள்ளன. எழுத்துப்பிழைகளை மட்டும் திருத்துவதுதான் 'பிழை திருத்தம்' என்று பலர் நினைத்து

விடுகின்றார்கள். இவ்விதமான இலக்கணப்பிழைகள் பழக்கதோசத்தால் ஏற்படுபவை. தட்டச்சுப் பிழைகளால் ஏற்படுபவை. இலக்கணம் தெரியாமல் ஏற்படுபவையல்ல. இவை எதிர்காலப்பதிப்புகளில் திருத்தப்பட வேண்டும். இவ்விதமான பிழைகளில் முக்கியமானவையாக நான் கருதுவது பன்மை எழுவாய்க்கு, ஒருமையில் பயனிலையைப்பாவித்திருப்பதைத்தான். உதாரணத்துக்கு 'குரல் வழி வெடிக்கிறது ஸ்வரங்கள்', 'அதன் பின் கூடவே வருகிறது அந்த இரவும், இசையும்' , வண்ணத்துப்பூச்சிகளும், சூரியனும் அதை வாசித்துக்கொண்டிருந்தது.' போன்றவற்றைக்குறிப்பிடலாம்.

மேலும் கவிஞர் தமிழ் ஆசிரியரென்பதால் கவிதையினைப் படைக்கும்போது, மோனை ஒன்றி வரும் வகையில் வார்த்தைகளைத்திறமையாகப் பாவித்துக் கவிதைகள் பலவற்றைப்படைத்திருக்கின்றார். சொற்கள் அழகாக அவ்வப்போது வந்து விழுகின்றன.

இவ்விதமாகக் கவிஞரின் 59 கவிதைகளைத்தொகுத்தி அழகாக வெளியிட்டிருக்கின்றார்கள் 'யாழ் இலக்கியக் குவியம்' அமைப்பினர். பாராட்டுகள்.

நூலினைபெற விரும்புவோர் பின்வரும் முகவரிக்கு எழுதுங்கள்:

Yarl Ilakkiya Kuviyam'
No, 37, 2nd Cross Street, Colomuthurai, Jaffna.


ngiri2704@rogers.com

பதிவுகள்.காம்  20 May 2015

No comments:

வ.ந.கிரிதரன் - நவீன விக்கிரமாதித்தனின் 'காலம்'!

எழுத்தாளர் மாலன் , இந்திய சாகித்திய அமைப்புக்காகத் தொகுத்த  'புவி எங்கும் தமிழ்க் கவிதை'த் தொகுப்பில் இடம் பெற்றுள்ள  எனது கவிதையான ...

பிரபலமான பதிவுகள்