Sunday, March 18, 2018

கே.எஸ்.சுதாகரின் 'சேர்ப்பிறைஸ் விசிட்' - வ.ந.கிரிதரன் -



புகலிட எழுத்தாளர்களில் நகைச்சுவை உணர்வு ததும்ப முக்கியமான பிரச்சினைகளைப்பற்றி எழுதுவதில் வல்லவர் எழுத்தாளர் கே.எஸ்.சுதாகர். வாசிக்கும்போது அவ்வப்போது இதழ்க்கோடியில் புன்னகையை வரவழைக்கும் எழுத்து அவருடையது. நான் வாசிக்கும்போது அனுபவித்து வாசிப்பது வழக்கம். அவருடைய சிறுகதைகளிலொன்று புகலிடத்தமிழ்க் குடும்பமொன்றின் உளவியலை நகைச்சுவை உணர்வு ததும்பச் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கின்றது. வாசிக்கும்போதும், வாசித்து முடித்த பின்பும் சிறிது நேரம் என்னால் எழுந்த சிரிப்பை அடக்க முடியவில்லை.

கதை இதுதான். 'சேர்ப்பிறைஸ் விசிட்' என்பதுதான் கதையின் தலைப்பு. நீண்ட நாட்களாக வருகை தராமலிருந்த இராசலிங்கம்/சுலோசனா தம்பதியினர் திடீரென் சிறீதரன்/பவானி தம்பதியினர் இல்லத்துக்குச் 'சேர்ப்பிறைஸ் விசிட்' அடிக்கின்றனர் :-)

"கனகாலமா வரேல்லைத்தானே! அதுதான் சும்மா ஒருக்கா வந்திட்டுப் போவம் எண்டு" என்று 'சும்மா'வைச் சற்றே அழுத்திச்சொன்னான் இராசலிங்கம். தொடர்ந்து , "அப்பிடியெண்டில்லை. இனி ஈஸ்வரன் சபேப்பிலையிருந்து வெஸ்டேர்ண் சபேப்பிற்கு வாறதுக்கு பத்துப்பதினைந்து டொலர் பெற்றோலுமில்லே செல்வாகுது" காசைக் காரணம் காட்டினாள் சுலோசனா.

"நாங்கள் நினைச்சோம்.. உங்களிலை ஆரோ ஒருத்தருக்கு வேலை பறிபோட்டுதோ எண்டு" உதட்டுக்குள் சிரித்தாள் பவானி."

இவ்விதம் கதை செல்கின்றது. 'உதட்டுக்குள்' சிரித்தாள் என்னும் சொற்பதம் அழகாக பவானியின் உளவியற் போக்கினை வெளிப்படுத்துகின்றது.
அதன்பிறகு கதை இவ்வாறு தொடர்கின்றது.

"அதன்பிறகு கோபம் நீக்கி சம்பிரதாயமான உரையாடல் சுகம் விசாரிப்பு, தேநீர் விருந்துபசாரம் மேற்கொண்டு நேரம் நகராத வேளையில் சுலோசனா இராசலிங்கத்தைப் பார்த்து கண்ணை வெட்டினாள். இராசலிங்கம் உதட்டுக்குள் சிரிப்பொன்றைத் தவழ விட்டார். ஏதோவொன்றை முடிச்சவிழ்க்கும் முஸ்தீபில் செருமினார்.

'உங்களுக்கொடு சேர்ப்பிறைஸ் விஷயமொண்டு சொல்ல வேணும். மவுன்ற் டண்டினோங்கிலை நாங்கள் ஒரு புது வீடொன்று கட்டி இருக்கிறம். ' சுப்பர் மார்க்கெட்டில் அரிசி, சீனி வாங்கியது போலச் சொன்னார் இராசலிங்கம்.'

சிறீதரனின் மனைவி பவானியும் சும்ம இலேசுப்பட்டவளல்லள். இராசலிங்கத்தாரின் சேர்ப்ப்பிறைஸ் நியூசைச் சிறிது அழுத்திக்காட்டுவதற்காக " எங்களுக்கும் காத்து வாக்கில் உந்த விசயம் கசிந்தது" என்று கூறுகின்றாள். இது சுலோசனாவுக்கு ஆச்சரியத்தையும் சிறிது ஏமாற்றத்தையும் தந்திருக்க வேண்டும். "இஞ்சாருங்கோ! நாங்கள் காதும் காதும் வச்ச மாதிரித்தானே கட்டினனாங்கள். என்ன மாதிரி இவைக்கு ' என்று கூறுகின்றாள். அதற்குள் இடைமறித்து பவானி "தண்ணிக்கு அடியிலை காஸ் விட்டாலும் மேலுக்கு வரத்தானே செய்யும்" என்கின்றாள்.

இவ்விதமாக உரையாடல் சுவையாகச் செல்கின்றது. இதுவரை வராமலிருந்த இராசலிங்கம்/ சுலோசனா தம்பதியினரின் சேர்ப்பிறைஸ் விசிட்டுக்குக் காரணம் தாங்கள் வாங்கிய வீடுபற்றிய பெருமையினை நண்பர் குடும்பத்துக்கு வெளிப்படுத்த வேண்டுமென்ற அவாதான்.

சிறீதரனின் மனைவி பவானியோ மானுட உளவியலில் கலாநிதிப்பட்டம் பெற்றிருப்பாள் போலும். இராசலிங்கம்/சுலோசனா தம்பதியினரின் உளவியலை நன்றாகவே புரிந்திருக்கின்றாள். அவள் கணவன் சிறீதரனும் இந்த விடயத்தில் டபிள் பி.எச்.டி வாங்கியிருப்பான் போலும். இராசலிங்கம் / சுலோசனா தம்பதியினரின் தம்பட்டத்தைச் சிறிது மட்டம் தட்டுவதற்காகச் சிறியதொரு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கின்றான். பதிலுக்குத் தானுமொரு பெரிய வீடொன்று வாங்கி , வாடகைக்குக்கொடுத்து, வரும் வாடகையில் மோட்கேஜ் கட்டுவதாத இராசலிங்கம் தம்பதியினருக்கு அவன் கொடுத்த அதிர்ச்சி வைத்தியத்தில் பேச்சிழந்து திகைத்துப்போய் நிற்கின்ற இராசலிங்கத்தைப் பார்த்துச் சீறிதரன் கேட்கின்றான் " என்ன் ஒரு சத்தத்தையும் காணேல்லை"

உண்மையில் சீறிதரன் கூறியது பொய். அது பொய் என்று உணராத இராசலிங்கம்/ சுலோசனா தம்பதியினர் விடைபெற்றுச் செல்லும் வழியில், சிறீதரன் கூறிய முகவரியிலுள்ள வீட்டுக்குச் சென்று போட்டோ எடுக்கின்றார்கள். வீட்டுச் சொந்தக்காரரிடம் பேச்சும் வாங்குகின்றார்கள். வீட்டுக்காரர் காவற் துறைக்கு அறிவித்து விடவே காவற் துறையினர் வந்து இராசலிங்கம்/ சுலோசனா தம்பதியினரைப்பிடித்து விடுகின்றார்கள். அவர்களை வீடோன்றுக்குள் அத்து மீறி நுழைந்ததற்காகக் குற்றஞ்சாட்டும் காவற்துறையினர் அவர்களைக் களவெடுக்கும் கும்பலைச்சேர்ந்தவர்கள் என்று ஐயுறுவதாகவும் கூறுகின்றார்கள்.

இராசலிங்கமோ அது தனது நண்பனின் வீடென்று கூறுவதுடன் நண்பனுடன் கதைக்கும்படியும் காவற் துறையினரை வேண்டுகின்றான். சீறிதரன் தான் வேடிக்கைக்காகக் கூறியதாகக் கூறுகின்றான். அந்த நிலையிலும் இராசலிங்கத்தின் மனைவி சுலோசனாவுக்குத் தாங்கள் காவற்துறையினரிடம் அகப்பட்ட அதிர்ச்சியைவிட எது முக்கியமாக இருக்கின்றதென்று தெரியுமா?

அவள் கூறுகின்றாள் " அதுதானே பார்த்தன். உவங்களாவது வீடு வாங்கிறதாவது. முதலிலை இருக்கிற வீட்டின்ரை ஜன்னல் கதவுகளை திறந்து மூடப் பழக வேணும். வீடு கிடகிற கிடை"

'தென்றல்' சஞ்சிகையின் சிறுகதைப்போட்டியில் (2011) பரிசு பெற்ற இச்சிறுகதை புகலிடத்தமிழ்க் குடும்பமொன்றின் உளவியலைச் சிறப்பாக, வேடிக்கையாக வெளிப்படுத்துகின்றது. இந்த நகைச்சுவை உணர்வு கே.எஸ்.சுதாகரினெ எழுத்துகளில் நான் காணும் முக்கிய பண்புகளிலொன்று.

இச்சிறுகதை கே.எஸ்.சுதாகரின் 'சென்றிடுவீர் எட்டுத்திக்கும்' தொகுப்பிலுள்ள கதைகளிலொன்று. இச்சிறுகதையினை முழுமையாகக்கீழுள்ள இணைய இணைப்பில் வாசிக்கலாம்: http://shuruthy.blogspot.ca/2014/12/blog-post_29.html#more

ngiri2704@rogers.com

பதிவுகள்.காம்  , 03 September 2017

No comments:

வ.ந.கிரிதரன் - நவீன விக்கிரமாதித்தனின் 'காலம்'!

எழுத்தாளர் மாலன் , இந்திய சாகித்திய அமைப்புக்காகத் தொகுத்த  'புவி எங்கும் தமிழ்க் கவிதை'த் தொகுப்பில் இடம் பெற்றுள்ள  எனது கவிதையான ...

பிரபலமான பதிவுகள்