Sunday, March 18, 2018

விஷ்ணுபுரம் சில குறிப்புகள்! - வ.ந.கிரிதரன் -

ஜெயமோகனின் 'விஷ்ணுபுரம்' பற்றிப் பலர் பலவாறு கூறியுள்ளார்கள். இவர்களது குறிப்புகளெல்லாவற்றையும் பார்க்கும் போது ஒன்று மட்டும் புரிகிறது. இவர்களில் பலர் யானை பார்த்த குருடர்கள். நாவல் மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீபாதம், கௌஸ்துபம், மணிமுடி. ஹேமந்தன் என்னும் பாணன் விஷ்ணுபுரம் பற்றிய கதையினைக் கூறி முடித்ததும் வசந்தன் என்னும் பாணன் கூறத்தொடங்குவதுடன் ஆரம்பமாகும் நாவல் மூன்று பாகங்களாக விரிவடைந்து வசந்தன் கதையை முடித்ததும் இன்னுமொரு பாணனான கிரிஷ்மன் மீண்டுமொருமுறை விஷ்ணுபுரம் கதையினைக் கூறத்தொடங்குவதுடன் தொடர்கிறது. நாவலைப் பற்றிப் பின் அட்டையில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டிருக்கிறது: ' இந்நாவலில் விஷ்ணு ஒருமுறை புரண்டு படுக்கிறார். தருக்கம், தியானம்,கற்பனை என்ற மூன்று அடிப்படையான அறிதல் முறைகளில் கற்பனையின் துணை கொண்டு , பிற இரண்டின் சாத்தியங்களை பயன்படுத்தியபடி, மானுடனின் ஞானத்தேடலின் பயணத்தைச் சித்தரிக்கிறது (சித்திரிக்கிறது). கலையும், தருக்கமும், ஆன்மீகமும், மானுட உணர்வுகளுடன் கலந்து பௌராணிகமான மாய உலகமொன்றைப் படைக்கின்றன.'

ஜெயமோகனின் ஞானத் தேடலே நாவலாக உருப்பெற்றிருக்கின்றது. இந்து, பௌத்த தத்துவங்களினூடு மனித வாழ்வு, பிரபஞ்சத்தின் தோற்றம், காலம் பற்றி தர்க்கரீதியாகக் கற்பனையைப் படரவிட்டு இந்நாவலைப் படைத்திருக்கின்றார் ஜெயமோகன். தான் அறிந்ததை, உணர்ந்ததை அவ்விதமே கூறவேண்டுமென்ற ஆவல் ஜெயமோகனுக்கு அதிகமாக இருப்பதை நாவல் முழுவதிலும் காண முடிகிறது. விஷ்ணுபுரம் பற்றிய வர்ணணைகளில் நாவலாசிரியர் மிக அதிகளவில் கவனமெடுத்திருக்கின்றாரென்பதை விஷ்ணுபுரம் பற்றிய வர்ணனைகள் வெளிக்காட்டுகின்றன.ஜெயமோகனின் ஞானத்தேடலே நாவல் முழுக்கப் பல்வேறு பாத்திரங்களாக, பிங்கலன், சங்கர்ஷணன்.. என உலாவருகின்றது. நாவல் முழுக்க எண்ணமுடியாத அளவிற்குப் பாத்திரங்கள். அத்தியாயத்திற்கு அத்தியாயம் புதிய புதிய பாத்திரங்களின் வருகையுடன் நாவல் நடை போடுகிறது. வழக்கமாக அத்தியாயங்களிற்கிடையில் ஒருவித தொடர்ச்சியினை ( Linearity) எதிர்பார்த்துப் பழக்கப் பட்டு விட்ட பெரும்பாலான தமிழ் வாசகர்களுக்கு இந்தத் தொடர்ச்சியற்ற தன்மை நாவலைப் புரிதலில் சிரமத்தினை ஏற்படுத்தி விடுகின்றது. இது இந்நாவலை வாசிக்க விளைபவர்களுக்கு இருக்க வேண்டிய பொறுமையினையும் , பாத்திரங்களைச் சம்பவங்களைக் கிரகிக்க வேண்டிய திறமையினையும் மிக அதிகமாகவே வேண்டி நிற்கிறது. ஆனால் இந்த நாவலின் அடிப்படையே ஒரு மனித உயிரின் ஞானத் தேடல் என்ற அளவில், நாவல் பாத்திரங்களினூடு, நகர அமைப்பினூடு, காட்சிகளினூடு, கூறி விவாதிக்கும் இருத்தல் பற்றிய விசாரத்தைத் தொடர்ந்து கொண்டு போவதன் மூலம் இந்நாவல் பிரதியின் வாசிப்பை இலகுவாக்கலாம். பலருக்கு இந்நாவல் புரிபடுவதிலுள்ள குழப்பம் காரணமாகத் தான் ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரி கருத்துகளை வைக்கின்றார்கள். (அண்மையில் ஜெயமோகனின் நூல் விழாவில் பேசிய ஜெயகாந்தன் தன்னாலேயே நாவலின் உள்ளே புக முடியவில்லை என்று குறிப்பிட்டதை இங்கு நினைவு கூர்வது பொருத்தமானது). நாவல் பற்றி ஈழத்தின் முற்போக்கு முகாமைச் சேர்ந்த அறிஞர் அ.ந.கந்தசாமி தனது 'மனக்கண்' என்ற நாவலின் முடிவுரையில் 'என்னைப் பொறுத்தவரையில் பாரகாவியமும் நாவலும் ஒன்றென்றே நான் கருதுகிறேன். ஒன்று வசனம், மற்றது கவிதை என்ற வித்தியாசத்தைத்தவிர பாரகாவியம் எப்பொழுதுமே அவசரமாகக் கதையைச் சொல்லத் தொடங்குவதில்லை. நாட்டு வர்ணனை, நகர வர்ணனை, பருவ வர்ணனை என்று மெதுவாகவே அது கிளம்பும். காரின் வேகம் அதற்கில்லை. தேரின் வேகமே அதற்குரியது. வழியிலே ஒரு யுத்தக் காட்சி வந்ததென்று வைப்போம். உதாரணத்துக்கு வியாச பாரதத்தை எடுத்தால் பதினேழு நாள் யுத்தம் நடந்தது. பாண்டவர் வென்றனர், கௌரவர் தோற்றனர் என்று மிகச்சுருக்கமாகவே அதனைக் கூறியிருக்கலாமல்லவா? ஆனால் அவ்வாறு எழுதினால் கதா நிகழ்ச்சியை நாம் புரிந்து கொண்டாலும் யுத்தத்தின் அவலத்தையும் வெற்றி தோல்வியையும் நேரில் பார்த்தது போன்ற உணைச்சி நமக்கு ஏற்படாது. அந்த உணர்ச்சி நமக்கு ஏற்படும்வரை பொறுமையாக விவரங்களை ஒன்றின் பின்னொன்றாகச் சலிப்பின்றி எடுத்துக் கூறி நிற்கும் ஆற்றல் பெற்றவனே பாரகாவியஞ் செய்யும் தகுதியுடையவன். நல்ல நாவலாசிரியனுக்கும் இப்பண்பு இருக்கவேண்டும்.' என்று கூறியுள்ளதுதான் நினைவுக்கு வருகின்றது.ஜெயமோகனுக்கு இப்பண்பு நிறையவேயுண்டு. விஷ்ணுபுரம் பற்றிய அவரது வர்ணனைகள் வாசிப்பவரிடத்தில் அதன் பிரமாண்டம் பற்றியதொரு பிரமிப்பினை ஏற்படுத்தி விடுகின்றது. இருத்தல் பற்றிய மானுடத்தின் ஞானத் தேடல் என்ற சிறியதொரு கருவுக்கு விஷ்ணுபுரம் என்றொரு பிரமாண்டமான நகரினைப் பல்வேறு பாத்திரங்களினூடு படைத்து, நமது காவியங்களில் கையாளப் பட்டதொரு உத்தியினைப் ( பாணன் கதை சொல்லல்) பாவித்துக் கதை சொல்லியிருக்கின்றார் ஜெயமோகன்.ஆனால் மெய்ஞானம் மட்டுமின்றி நவீன விஞ்ஞானத்தினூடும் இருப்பு பற்றிய தேடலில் மூழ்கிக் கிடப்பவர்களை இந்த நாவல் கவருமா என்பது சந்தேகத்திற்கிடமானதே.எல்லாக் கதாப் பாத்திரங்களும் கதைகளாக மாறிவிடுகின்றதொரு உண்மையில் முழு நாவலுமேயொரு கதைதான். புராணக் கதை.திரிசாகரம் திரிவிக்கிரமர் இயற்றிய மகாபத்மபுராணம். பாணர்கள் கதைசொல்வதிலுள்ள ஒழுங்கு மாறியிருப்பதாகவும் கருத இடமுண்டு. பொதுவாகக் கதைகூறும்பொழுது சில சமயங்களில் ஒழுங்குகள் மாறிக் கதை சொல்வதுமுண்டு. ஆனால் விஷ்ணுபுரத்தில் வரும் விளக்கங்களும் இந்நாவலினூடு விரவிக் கிடக்கும் இருப்பு பற்றிய தேடலும் விரைவாக இந்நாவல் கூறும் பொருள் பற்றி நம்மை வந்தடைவதைத் தடுத்து விடுகின்றன. வாசிப்பவர்களைச் சிந்திக்க, தர்க்க ரீதியாகச்சிந்திக்கப் பெரிதும் தூண்டும் படியாக நாவலின் சம்பவங்களை நடத்திச் செல்லும் தொடர்ச்சி (Plot) இருந்து விடுவது இதன் காரணம். அதே சமயம் எல்லோராலும் இந்நாவலைப் படிக்கவும் முடியாது. ஏற்கனவே ஓரளவு பிரபஞ்சத் தேடல் மிக்க அல்லது தீவிர வாசிப்பில் ஆர்வமுள்ளவர்கள் மட்டுமே இந்நாவலின் வாசகர்களாகவும் வரமுடியும்.
இன்னுமொன்றினையும் இந்நாவலின் அமைப்பில் காணமுடியும். பொதுவாக மூன்று பாகங்களாகப் பிரிக்கப் பட்டிருப்பதால் இந்நாவலின் மிகவும் முக்கியமான பகுதி மூன்றாவது பாகமான 'மணிமுடி'யென்றேபலர் எண்ணி விடக் கூடும். ஆனால் நாவலின் மிகவும் முக்கியமான, மையமான பகுதி இரண்டாவது பகுதியான 'கௌஸ்துபம்' என்றே எனக்குப் படுகிறது. இருப்பு பற்றிய, பிரபஞ்சத்தின் இருப்பு பற்றிய சாங்கியம், சைவம், சமணம், பௌத்தமெனப் பல்வேறு மதப் பிரிவுகளின் கோட்பாடுகளை மிகவும் தர்க்க ரீதியாக ஆராயும் பகுதியிது. சில சமயங்களில் தர்க்கம் சிரிப்பினூடு சிந்திக்கவும் வைத்து விடுவதாக அமைந்து விடுகின்றன. உதாரணமாகப் பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம்:

வாசற்காவலன் தடுத்தான்.
சித்தன் "ஞானசபைக்கு " என்றான்.
"யார் நீங்கள், சார்வாகனர்களா?"
"இல்லை"
"காளாமுகர் போலிருக்கிறது"
"அதுவுமில்லை"
"காபாலிக மதமா?"
"அதுவும் இல்லை"
"சாக்தேயரோ, தாந்திரிகரோ ஆக இருக்கக் கூடும்"
"எதுவுமே இல்லை"
"அப்படியானால்?"
"எதுவும் இல்லை. அதுதான் எங்கள் மார்க்கம்"
"புரியவில்லை"
"சூனியம். ஒரு சூனியம் வந்துள்ளது என்று உன் பண்டிதர்களிடம்
போய்க் கூறு"
"அதுயார் குட்டிச் சூனியமா" என்றான் காவலன்.
" யாரடா நீ பயலே? பார்த்தால் பிராமணக் களை தெரிகிறதே"
"சூனியத்திலிருந்து பிறந்த சூனியம்" என்றான் காசியப்பன். "அதன் பிறகும்
சூனியமே எஞ்சுகிறது" [ பக்கம் 445, பகுதி இரண்டு]

"சுடாத தீ உண்டா?"
"உண்டு. நீரின் ஆத்மாவிற்கு" [ பக்கம் 479 ]

ஸ்யாத்வாதம் பிரபஞ்சத்தின் எவராலும் உற்பத்தி செய்யப் பட்டதல்ல என்று கூறும். இவ்விதமே இருந்து வந்தது எனக் கூறும். நவீன வானியற்பௌதிகத்தின் ( Astro Physics) பிரபஞ்சம் பற்றிய கோட்பாடுகளிலொன்றான 'உறுதி நிலைக் கோட்பாடு' (Steady State Theory)தனை இது நினைவு படுத்தும். காலம், சார்புநிலை பற்றியெல்லாம் தர்க்கரீதியான உரையாடல்களில் மிகவும் விரிவாகவே குறிப்பிடப் பட்டிருக்கின்றன. பல்வேறு பட்ட சமயப் பிரிவுகள் கூறும் பிரபஞ்சம், காலம், இருப்பு பற்றிக் கூறும் கோட்பாடுகளெல்லாம் நவீன வானியற் பௌதிகம், சக்திச் சொட்டுப் பௌதிகம் (Quantam Physics) போன்றவையும் விஞ்ஞானபூர்வமாகக் கூற ஆரம்பித்திருக்கின்றன. ஐன்ஸ்டைனின் வெளி, காலம் பற்றிய சார்பியற் கோட்பாடுகள், பொருள், சக்தி, விசை பற்றிய கோட்பாடுகள், அடிப்படைத் துணிக்கைகள் பற்றிய பௌதிகம் (Particle Physics) கூறும்அடிப்படைத்துணிக்கைகளின் உருவற்ற/உருவமான நிலை, அதன் நிச்சயமற்ற நிலை பற்றிய விதிகள் ( Principle of uncertainity), வெற்றிடம், வெற்றிடத்திலிருந்து பொருள் உருவாவது பற்றிய கோட்பாடுகள், பொருள், எதிர்ப் பொருள் (Anti matter), பிரபஞ்சம்/எதிர்ப் பிரபஞ்சம்..போன்றவற்றைக் குறிப்பிடலாம். இவ்வகையில் விஷ்ணுபுரம் நாவலின் பிரபஞ்சம் பற்றிய ஞானத் தேடலில், நவீன பௌதிகத்தையும் எதிர்காலத்தில் ஜெயமோகன் சேர்த்துக் கொள்வாரென்றால் இந்நாவல் மிகுந்த தாக்கத்தினை ஏற்படுத்துவதற்குச் சாத்தியமுண்டு. இல்லாவிட்டாலும் கூட இந்நாவலில் கூறப்பட்டுள்ள கீழைத்தேயத் தத்துவங்களினூடான தேடல் அறியும் ஆர்வமுள்ள நெஞ்சினருக்குப் பெரு விருந்தாக அமையும் சாத்தியமுண்டு. ஆனால் இந்நாவலப் படித்து முடிப்பவருக்கு வரும் முக்கியமான உணர்வு அல்லது அதனால் அவர் அடையும் இன்பம் முக்கியமாக ஆத்மீகத் தேடலாகவே இருக்கும்.

இந்நாவலில் இன்னுமொரு விடயத்தையும் அவதானிக்க முடிந்தது. முதலாம் பகுதி விஷ்ணுபுரத்தின் சிறப்பைக் கூறும். இரண்டாம் பகுதியோ அங்கு நிகழ்ந்த தர்க்க சிறப்பினைக் கூறும். ஆனால் மூன்றாவதான இறுதிப் பகுதியோ கனவாகிப் போன விஷ்ணுபுரச் சிறப்பினை எண்ணி ஏங்கிப் பிரளயத்தில் அழிந்து போவதைக் குறிப்பிடும். அதே சமயம் இரண்டாவது பகுதியின் தோற்றுவாயிலேயே விஷ மேகங்கள் பொழிந்த நீல மழையில் அழிந்து போய் விடும் விஷ்ணுபுரத்தைப் பற்றிக் குறிப்பிடப் பட்டிருக்கின்றது இது ஏற்கனவே நிகழ்ந்ததொரு கதையைக் கூருவதை நினைவு படுத்துவதற்காகவா? விஷ மேகம், நீல மழை, நெருப்பு ஆறான சோனா, அதன் செம்மைக்குக் காரணமான, சிலப்பதிகாரத்தை நினைவு படுத்தும் இன்னொரு உபகதை இவ்விதமாக ஒரு விதக் காவியச் சுவையுடன் விரியும் விஷ்ணுபுரத்தைப் பற்றிப் பல்வேறு கோணங்களிலும் விவாதிப்பதே அதனை முழுமையாக இனங்காண வைக்குமென்பதால், புரிய வைக்குமென்பதால் தொடர்ந்து விவாதிப்போம். கடுமையாக விவாதிப்பதில், தர்க்கிப்பதில் வறில்லை. நாவல் கூறுவதைப் போல் தர்க்கம் 'எதையும் சாராத தர்க்கமாகவோ, வெறும் தர்க்கமாகவோ, தருக்கம் மட்டுமேயான தர்க்கமாகவோ, தன்னையே உடைத்து விடும் தர்க்கமாகவோ' [பக்கம் 436] இருந்து விடுவதிலும் தவறில்லையென்பது என கருத்து. -

இந்நாவலில் வரும் பிங்கலன், மாகவி சங்கர்ஷணன் ...இவர்களைப் போன்றவார்கள் எவ்விதம் படைக்கப் பட்டிருக்கின்றார்கள் என்பதை ஒரு கணம் பார்ப்போம்.. பிங்கலனை சித்தார்த்தரின் பாதிப்பில் படைக்கப் பட்டதொரு பாத்திரமாகவும், சங்கர்ஷணனை சிலப்பதிகாரம், கௌதமர் சரித்திரம் ஆகியவற்றின் பாதிப்புகளாகப் படைக்கப் பட்டிருக்கலாமென்பதற்கு நாவல் முழுக்க பல சான்றுகள் உள்ளன.

இந் நாவலில் வரும் கணிகையர்களெல்லாம் சாருகேசி, பத்மாட்சி போன்றவர்கள் ஆழ்ந்த அறிவுத் தேடலுள்ளவர்கள். ஞானத்தின் பாரத்தால் அழுந்தி உதிரப் போகுமொரு பதர் தான் இந்தப் பிங்கலன் என்பதை இவர்களிலொருத்தியான சாருகேசி இலகுவாகவே உணர்ந்து கொள்ளும் பக்குவம் வாய்ந்தவள். இந்த விஷ்ணுபுர நாவலைப் படைத்த சங்கர்ஷ்ணனே ( நாவலிற்குள் நாவல்) பத்மாட்சியிடம் உரையாடுவதாக உள்ள உரையாடலே விஷ்ணுபுரத்தின் உண்மையான விளக்கத்தை அளிப்பதற்குப் போதுமானது.[பக்கங்கள் 359,360]

"பத்மா உண்மையச் சொல். என் காவியம் எப்படி இருக்கிறது?" என்றான்.

"மண்ணில் கால் பாவாத வெற்றுக் கற்பன இது. இதோ சற்றுமுன் மனிதர்கள் மத்தியிலிருந்து வருகிறேன். அழுக்கு, பசி, இச்சை, போதை, வெறி, உழைப்பு, இதெல்லாம் தான் மனிதர்கள். உழைப்பும், அடிமைத் தனமும், அதிகாரமும் மட்டும்தான் நிதரிசனம். லட்சியக் கனவுகளை உண்டு பண்ணி மனிதன் தன் வாழ்வின் அவலங்களுக்குத் திரை போடுகின்றான். நான் கனவில் நடந்து ஏதோ தெரியாத இடத்தில் கண்விழித்துப் பதைக்கும் மூடன்."

"உண்மையச் சொல்.இந்தக் காவியத்தில் மனித வாழ்வா இருக்கிறது. ஒவ்வொரு சர்க்கமும் உச்சக் கட்ட உத்வேகம் நோக்கி எடுத்துச் செல்லப் பட்டுள்ளது. அழகும் நளினமும் இதில் இல்லை. கட்டற்ற மொழி. உடைபெடுக்கும் ஆவேசம். இந்நூலை ஞான தரிசனம் வழி நடத்தவில்லை. எழுதும் கணங்களில் நானே என்னைத் தூண்டி விட்டு அடைந்து கொண்ட போலியான மனஎழுச்சிகள் தான் தீர்மானித்துள்ளன. அவை ஒவ்வொன்றும் நிதர்சனத்திலிருந்து விலகி ஓடியவை. ஒரு மூடனின் கற்பனை உலகமன்றி வேறல்ல இது."

"பொய்யையா? பொய்யை சொல்லால் சாஸ்வதப்படுத்தவா இத்தனை தவம்.?"

"...இதில் ஞானத் தேடலுடையவனுக்கு என்ன உள்ளது? ஒன்றுமில்லை. ஞானத்திற்கான தத்தளிப்புகள், தருக்கங்கள், பிறகு ஒரு கனவு அவ்வளவுதான்"

"..எது மெய்மையோ அதுவல்ல இது. இது சொற்களின் ஆரவாரத்திற்குள் ஓர்
ஆத்மா பதுங்கியிருக்கும் விளையாட்டுத் தான்."

இவ்விதமாக சங்கர்ஷணனிற்கும் பத்மாட்சிக்குமிடையிலுள்ள உரையாடல் செல்கிறது. சங்கர்ஷனின் மேற்படி அவனது காவியத்¨ப் பற்றிய விளக்கத்தின் அடிப்படையில் விஷ்ணுபுரம் நாவலினைப் புரிந்து கொள்வதிலொரு சுவையுண்டு. நாவலை முழுவதும் படிக்காமல் அதில் தொக்கி நிற்கும் பல காரணங்களைக் கண்டு கொள்ள முனைவோர் சங்கர்ஷணனின் மேற்படி கூற்றினூடு புரிந்து கொள்ள முனைவதும் ஓரளவுக்குப் பொருத்தமானதே. இவ்வளவு தூரம் சிந்திக்கின்ற ஜெயமோகன் 'தொக்கி நிற்கும் காரணங்கள் நிறைய இருந்தால் அவற்றைச் சிறிய அளவிலாவது பத்மாட்சியின் வாயிலாக எடுத்துக் கூறி சங்கர்ஷணனின் துயரைச் சிறிதளவாவது குறைத்திருக்க மாட்டாரா? ஜெயமோகனின் விஷ்ணுபுரம் இருப்பு பற்றிய ஞானத்தேடல் தானென்று அவரே பல இடங்களி குறிப்பிட்டுள்ள போது அந்த ஞானத் தேடலுடன் ஒப்பிடும் பொழுது வெகு சாதாரணமான விடயங்களைப் பெரிது படுத்தி 'இல்லை இந்த அற்ப விசயங்களைத் தான் இந்நாவல் கூறுகிறது' எனச் சிலர் வலிந்து பொருள் கூற முனைவதை என்னவென்பது. அது மூன்றாண்டுகளாக அலைந்து திரிந்த ஜெயமோகனின் தேடலினைக்கொச்சைப் படுத்துவதாகும். மேலும் இந்நாவலின் 357 ஆவது பக்கத்தில் சங்கர்ஷ்ணன் வாயிலாக இக்காவியத்தின் அமைப்பு பற்றி விரிவாகவே விளக்கம் தரப் பட்டிருக்கிறது.

"...யுகங்கள் திவலைகளாகச் சென்று ஒடுங்கும் அவன் மேனியென்னும் கடலன்றி வேறு எதுவுமில்லை. அந்த உடலையே என் காவியமாக எடுத்துக் கொண்டேன். ஸ்ரீபாதம், மணீமுடி, கௌஸ்துபம் என்று என் காவியத்தை மூன்றாகப் பிரித்தேன்... பாதமே சரணாகதி. ஞானமே கௌஸ்துபம். மணிமுடியே விஷ்வரூபம்..."

அதன் பிறகு சங்கர்ஷணன் பௌத்த தத்துவ நூல்களையெல்லாம் கரைத்துக் குடிக்கின்றார்.

"...பெருமாளின் உடலை ஞானத்தால் அள்ள முயல்வது என்று முடிவு செய்தேன். ஷட்தர்சங்களையும், தர்ம சாத்திரங்களையும், கற்ற கர்வம் தூண்டியது. மகா அஜிதரின் விஜயம் சம்பந்தமாக அமைந்தது கௌஸ்துப காண்டம். பின்பு காதலை அறிந்து மனம் நெகிழ்ந்து, குழந்தைகளை வளர்த்து மனம் விரிந்து, நான் வேறு ஒரு மனிதனாக ஆன பிறகு அந்தக் கௌஸ்துப காண்டம் வரண்ட தத்துவ விசாரங்களினாலானதாகப் பட்டது. என் சொந்த ஊர் திரும்பி, என் மண்ணில் அமர்ந்து ஸ்ரீபாத காண்டத்தை எழுதினேன்..."

"மணிமுடி காண்டம் எழுதியது வெகு காலம் கழித்து என்கிறீர்களா?"

"ஆம் வெகு காலம் கழித்துக் காவியம் முழுமை பெறமுடியவில்லை என்ற உணர்வு என்னை அலைக்கழித்தபடியே இருந்தது. முடிவுறாத காவியத்துடன் குடும்பத்தை அழைத்துக் கொண்டு வடதிசைப் பயணம் மேற்கொண்டேன்.... பெருமாளின் விஸ்வரூபம் பற்றிய காட்சியினை அப்போது எழுதினேன்..... உண்மையச் சொல். காவியம் எப்படி இருக்கிறது"...

இனியாவது விஷ்ணுபுரத்தை ஆராய விளைபவர்கள், அதில் 'தொக்கி நிற்கும் பொருள்' பற்றியெல்லாம் அறிவதில் காலத்தைத் தள்ளாமல் நேரத்தைப் பொன்னாகச் செல்வழிப்பார்களாக. நாவலை நாவலினூடு, அதில் வரும் பாத்திரங்களினூடு, அது கூறும் பொருளினூடு ஆராயும் ஆற்றலினை இனியாவது வளர்த்துக் கொள்ளுங்கள். இத்தகைய யானை பார்த்த குருடர் வாதங்கள் ஜெயமோகனிற்கு மட்டுமல்ல பத்மபுராணம் படைத்த மாகவி சங்கர்ஷணரிற்கும் இழுக்கினைத் தேடித் தந்து விடுமென்பது அடியேனின் தாழ்மையான அபிப்பிராயமாகும். மேலும் எனது இந்தக் கருத்துகளை விமர்சனமாகக் கொள்வீரோ அல்லது கருத்துகளாகக் கொள்வீரோ? அது உங்களதுபார்வையைப் பொறுத்தது. இங்கு இந்த விஷ்ணுபுரத்தில் எல்லாமே சார்பானவைதான். எனவே தவறில்லை. மொத்தத்தில் ஜெயமோகனின் விஷ்ணுபுரம் நாவலை சங்கர்ஷணன் வார்த்தைகளில் 'சொற்களின் ஆரவாரத்திற்குள் ஓர் ஆத்மா பதுங்கியிருக்கும் விளையாட்டுத் தான்' என்று நிச்சயமாகக் கூறலாம்.

நன்றி: பதிவுகள்.காம், திண்ணை.காம்

மீள்பிரசுரம்: பதிவுகள் - ஆகஸ்ட் 2007; இதழ் 92.

No comments:

வ.ந.கிரிதரனின் 'அழியாத கோலங்கள்' ( பால்ய, பதின்மப் பருவத்து நனவிடை தோய்தல்)

அண்மையில் நண்பரும் எழுத்தாளருமான டானியல் ஜீவா அவர்கள் 'ஏன் நீங்கள் உங்கள் பால்ய பருவத்து அனுபவங்களை நூலாக்கக் கூடாது? நீங்கள் எழுதும் வவ...

பிரபலமான பதிவுகள்