Monday, March 19, 2018

எனது சிறுகதையான 'நடு வழியில் ஒரு பயணம்' சிங்கள மொழியில்.... வ.ந. கிரிதரன் -


இலங்கையிலிருந்து வெளியாகும் லக்பிமா சிங்களத் தினசரிப்பத்திரிகையின் 18.03.2018 ஞாயிறு பதிப்பில் எனது சிறுகதையான 'நடுவழியில் ஒரு பயணம்' சிறுகதையின் சிங்கள மொழிபெயர்ப்பு வெளியாகியுள்ளது. இச்சிறுகதை டிசம்பர் 2006இல் 'பதிவுகள்' மற்றும் 'திண்ணை' ஆகிய இணைய இதழ்களில் வெளியாகிய சிறுகதை. இச்சிறுகதையினைத் தமிழிலிருந்து சிங்கள  மொழிக்கு மொழிபெயர்ப்பு செய்தவர் எனது முகநூல் நண்பரும், பல தமிழ்ப் படைப்புகளைச் சிங்கள மொழிக்கு மொழிபெயர்ப்பு செய்தவருமான எழுத்தாளர் ஜி.ஜி.சரத் ஆனந்த. அவருக்கும், லக்பிமாவில் இலக்கியப்பகுதிக்குப் பொறுப்பானவருமான எழுத்தாளர் கத்யான அமரசிங்க (Kathyana Amarasinghe)  அவர்களுக்கும் நன்றி.

இச்சிறுகதை வெளியான 'லக்பிமா' :  http://epaper.lakbima.lk/last_18_03_18/manjusawa.pdf

ஏற்கனவே எனது இன்னுமொரு சிறுகதையான 'உடைந்த காலும், உடைந்த மனிதனும்' சிறுகதையினை ஜி.ஜி.சரத் ஆனந்த சிங்கள மொழிக்கு மொழிபெயர்த்து 'லங்கஇரிடா' (Lankairida)) பத்திரிகையில் வெளியிட்டுள்ளார். அச்சிறுகதை 'லங்கஇரிடா'வின் பெப்ருவரி 18, 2018 பதிப்பில் வெளியாகியுள்ளது.

'நடுவழியில் ஒரு பயணம்' சிறுகதையினை முழுமையாகக் கீழே வாசிக்கலாம்:

'நடுவழியில் ஒரு பயணம்' - வ.ந.கிரிதரன் -


பார்வைக்கு சோமாலியனைப் போலிருந்தான். 'டவரின்' வீதியும் 'புளோர்' வீதியும் சந்திக்குமிடத்தில் , தென்மேற்குத் திசையில் (இங்கு 'தொராண்டோ' நகரில் வீதிகளெல்லாமே கிழக்கு-மேற்கு, வடக்கு-தெற்காகத்தான் அமைக்கப்பட்டிருக்கின்றன. இதனால் திசைகளை மையமாக வைத்து முகவரிகளைக் கண்டுபிடிப்பதோ அல்லது இருப்பிடங்களை அறிந்து கொள்வதோ மிகவும் இலகுவானது). 'பஸ்'சை எதிர்பார்த்து நின்றிருந்தான். காலம் நள்ளிரவை நெருங்கிக் கொண்டிருந்தது. இரவு பாதுகாவற் பணியினை முடித்துக் கொண்டு என்னிருப்பிடம் திரும்புவதற்காக 'பஸ்' தரிப்பிடம் நோக்கிச் சென்று கொண்டிருந்த சமயத்தில்தான் அவனை நோக்கினேன். நள்ளிரவில் பணி முடிந்து இருப்பிடம் திரும்பும் சமயங்களில் இவ்விதம் 'பஸ்'சினை எதிர்பார்த்துக் காத்திருக்கும் சந்தர்பங்கள் எனக்கு மிகவும் பிடித்தமான பொழுதுகள். இவ்விதமான சமயங்களில் நகரை, நகர மாந்தரை, இரவை, இரவு வானை எல்லாமே இரசித்துக் கோண்டிருப்பது என் ஆர்வங்களிலொன்று. இவ்விதமான இரசித்தல் மூலம் நான் அறிந்து கொண்டவை ஏராளம். ஏராளம். நூல்கள், பத்திரிகைகள் போன்ற வெகுசன ஊடகங்கள் மூலம் நான் அறிந்தவற்றை விட இவ்விதமான பொழுதுகளில் நான் அறிந்து கொண்டவை, உணர்ந்து கொண்டவை மிக மிக அதிகம். 'லாண்ட்ஸ்டவு'னுக்கருகிலிருந்த கேளிக்கை விடுதியான 'ஹவுஸ் ஆவ் லங்காஸ்டர்'இலிருந்து  நிர்வாண நடனமாதர் சிலர் வெளியில் வந்திருந்து புகை பிடித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களைச் சுற்றி மல்லர்களைப் போன்ற தோற்றமுடைய இரு வெள்ளையர்கள் , பார்வைக்கு இத்தாலியர்களைப் போலிருந்தார்கள், அப்பெண்களுடன் அளவளாவியபடி கவசங்களாக நின்றார்கள். வீதியின் அடுத்த பக்கத்தில், வடபுறத்தில், சில கறுப்பின போதை மருந்து விற்றுப் பிழைக்கும் சுய வியாபாரிகள் சிலர் வாடிக்கையாளர்களுக்காக காத்திருந்தபடியிருந்தார்கள். மேலும் சிலர் பணி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தார்கள் என்னைப் போல். இததகையதொரு சந்தர்ப்பத்தில்தான் நான் அவனை அந்த பஸ் தரிப்பிடத்தில் சந்தித்தேன்.

அமரர் செங்கை ஆழியான் நினைவாக.... வ.ந.கிரிதரன் -


எழுத்தாளர் செங்கை ஆழியான் இன்று மறைந்ததாக முகநூல் பதிவுகள் மூலம் அறிந்துகொண்டேன். அண்மையில் எழுத்தாளர் முருகபூபதியின் பதிவொன்றில் செங்கை ஆழியான் உடல்நலமிழந்து இருந்த விபரத்தை அறிந்தபோது அவர் விரைவில் பூரண குணமடைய வேண்டுமென வேண்டி முகநூலில் பதிவொன்றினையிட்டிருந்தேன். அது தவிர அவர் பற்றி அவ்வப்போது வேறு சில பதிவுகளையும் முகநூலில் இட்டிருக்கின்றேன். அப்பதிவுகள் செங்கை ஆழியான் எவ்விதம் என் இளம் பருவத்தில் என்னைப்பாதித்தார் என்பதை வெளிப்படுத்தும் பதிவுகள் என்பதாலும், அவை அவரது பன்முக இலக்கியப்பங்களிப்பினைப் புலப்படுத்துவதாலும், அவற்றைத்தொகுத்து என் அஞ்சலியாக இங்கு பதிவிடுகின்றேன்.

ஈழத்துத்தமிழ் இலக்கிய உலகில் செங்கை ஆழியானுக்கும் முக்கியமானதோரிடமுண்டு. ஈழநாடு சிறுகதைகள், மறுமலர்ச்சி சிறுகதைகள், சுதந்திரன் சிறுகதைகள் போன்ற தொகுப்புகளை வெளியிட்டதன் மூலம், ஈழத்துத்தமிழ் இலக்கிய உலகினை ஆவணப்படுத்தி மிகுந்த பயனுள்ள பங்களிப்பினை வழங்கியுள்ளார்.

புனைவு, அபுனைவு என இவரது பங்களிப்பு பரந்தது. ஈழத்தமிழர்தம் வரலாறு பற்றி இவர் எழுதிய கட்டுரைகளும், நூல்களும் முக்கியமானவை. புனைவுகளிலும் சமுகக்கதைகளுடன், வரலாற்றுக்கதைகளையும் எழுதியுள்ளார். அத்துடன் 'ஆச்சி பயணம் போகின்றாள்', 'நடந்தாய் ஆறு வழுக்கியாறு!' மற்றும் 'கொத்தியின் காதல்' ஆகிய நகைச்சுவைப்புனைவுகளையும் எழுதியிருக்கின்றார்.

இலங்கை அரச படைகளினால் யாழ்ப்பாணம் எரியுண்டபோது நீலவண்ணன் என்னும் பெயரில் அவற்றை ஆவணப்படுத்தும் அபுனைவுகளை எழுத்தாளர் அமரர் வரதர் அவர்களின் வேண்டுகோளின்பேரில் எழுதியிருக்கின்றார்.

செங்கை ஆழியானின் 'நந்திக்கடல்' - வ.ந.கிரிதரன் -

'செங்கை ஆழியானின் 'நந்திக்கடல்' நாவல் அவரது முதலாவது நாவல். 'கலைச்செல்வி' நாவல் போட்டியில் பாராட்டுப்பெற்ற நாவல். பின்னர் யாழ் இலக்கிய வட்ட வெளியீடாக நூலாக வெளிவந்த நூல். என் மாணவப்பருவத்தில் நான் வாங்கி வைத்திருந்த இலங்கையைச்சேர்ந்த வரலாற்று நாவல்களிலொன்று 'நந்திக்கடல்' . அதனை செங்கை ஆழியானின் தமையனாரான புதுமைலோலனின் 'அன்பு புத்தகசாலை'யில் வாங்கியிருந்தேன். அடுத்த வரலாற்று நாவல் வ.அ.இராசரத்தினத்தின் 'கிரெளஞ்சப்பறவைகள்'. ஒரு ஞாபகத்துக்காக இந்த நந்திக்கடல் நாவலைத் தேடிக்கொண்டிருந்தேன். இந்த நாவல் யாழ்ப்பாண இராச்சியத்தைப் பின்னணியாகக் கொண்டு , சங்கிலிகுமாரனை நாயகனாகக் கொண்டு எழுதப்பட்ட நாவல்.

ஒருமுறை நூலகம் கோபி நூலகம் பற்றிய பதிவினையிட்டிருந்தபோது அந்நூலைப்பற்றியும் தெரிவித்திருந்தேன். உடனேயே 'நந்திக்கடல்' யாரிடமாவது இருந்தால் நூலகத்துக்குத் தந்து உதவவும் என்று அவர் முகநூலில் அறிவித்திருந்தார். அண்மையில் அவரிடமிருந்து வந்த தகவலில் மகிழ்ச்சிக்குரிய விடமொன்றிருந்தது. அது: 'தற்போது நூலகத்தில் 'நந்திக்கடல்' நூல் வாசிக்கக் கிடைக்கிறது என்பதுதான்.

ஈழத்து எழுத்தாளர்கள் பலரின் படைப்புகள் இன்னும் நூலுருப்பெறாமல் பல்வேறு சஞ்சிகைகள், பத்திரிகைகளில் முடங்கிக் கிடக்கின்றன. அவையெல்லாம் படிப்படியாக 'நூலகம்' தளத்தில் பதிவேற்றப்பட்டு வருகின்றன ( 'மறுமலர்ச்சி', 'கலைச்செல்வி' இதழ்கள் உட்பட).

ழகரம் 5 இலக்கிய இதழ் (மலர்) பற்றி... வ.நகிரிதரன் -

ழகரம் 5 இலக்கிய மலரின் வடிவமைப்பைப் பொறுத்த அளவில் ஓரிரு புறக்கணிக்கத்தக்க குறைபாடுகள் இருந்தாலும், மொத்தத்தில் நிறைவான வடிவமைப்பு. இதுவரை கனடாவில் வெளியான இலக்கிய இதழ்களில் தரத்தில் இதனை முதல் நிலையில் வைப்பதில் எனக்கு எந்தவிதத்தயக்கமுமில்லை. சிறிய குறைபாடுகள் என்றால்.. அதற்கு உதாரணமாக இதழில் வெளியான எனது கட்டுரையான அ.ந.க.வின் 'மனக்கண்' கட்டுரையைக் குறிப்பிடலாம். இந்தக் கட்டுரைக்கு ஒரு முக்கியத்துவமுண்டு. அது: இதுவரையில் அ.ந.க.வின் ஒரே நாவலான 'மனக்கண்' நாவலுக்கு யாருமே விமர்சனம் எழுதவில்லை என்னைத்தவிர. அதற்கு நாவல் தொடராக வெளிவந்தபோதும் இதுவரையில் நூலாக வெளிவராததும் காரணங்களிலொன்றாக இருக்கலாம்.

இதழில் கட்டுரையில் எனக்கு நாவல் பிடித்திருப்பதற்கு நான்கு காரணங்களைக் குறிப்பிட்டிருப்பேன். அதில் முதல் மூன்று காரணங்களையும் உரிய சிறிது பெரிய , தடித்த எழுத்துருக்களைப்பாவித்து வடிவமைத்திருக்கின்றார்கள். நான்காவது காரணமான 'நாவல் கூறும் பொருள்' என்பதற்கும் அவ்விதம் பாவிக்க மறந்து விட்டார்கள். மேலும் கட்டுரையில் 'மனக்கண்' நாவலிலிருந்து சில பகுதிகளை உதாரணத்துக்காகப் பாவித்திருக்கிறேன். அப்பகுதிகளை ஏனைய பகுதிகளிலிருந்து சிறிது வேறுபடுத்திக்காட்டியிருக்க வேண்டும். அதனைச்செய்யத்தவறி விட்டார்கள். ஆனால் இந்தக் குறைகள் முன்பே கூறியுள்ளதுபோல் புறக்கணிக்கத்தக்கவை.

மலரின் முதலாவது கட்டுரையான 'தமிழ்நதி'யின் 'எழுத்தின் பாலினம்' இதழின் முக்கியமான கட்டுரைகளிலொன்று. மேனாட்டு இலக்கியத்தில் அன்றிலிருந்து இன்றுவரை, எவ்விதம் பெண் எழுத்தாளர்கள் அவர்கள் பெண்களாக இருக்கின்ற காரணத்தினால் ஆண் பெயர்களில் மறைந்திருந்து எழுதினார்கள், எழுதி வருகின்றார்கள் என்பதை வெளிப்படுத்தும் நல்லதொரு கட்டுரை. கட்டுரை புகழ் பெற்ற ஆண் எழுத்தாளர்கள் பலரால் காலத்துக்குக் காலம் பெண் எழுத்தாளர்கள் எவ்வளவுதூரம் அவர்களது பால் (Gender)  காரணமாகக் கீழத்தரமாக எள்ளி நகையாடப்பட்டிருக்கின்றார்கள் என்பதைக் கட்டுரை உதாரணங்களுடன் வெளிப்படுத்துகிறது.

'தோழர் பால'னின் 'இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பு' பற்றி.... வ.ந.கிரிதரன் -

தோழர் பாலனின் 'இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பு' என்னும் சிறிய நூல் தோழர் பதிப்பக வெளியீடாக வெளிவந்துள்ளது. 'கடுகு சிறுத்தாலும் காரம் பெரிது ' என்பார்கள். அதற்கொப்ப அளவில் சிறியதானாலும், கூறும் பொருளில் காத்திரமானதாக, புரட்சிகரமானதாக அமைந்துள்ள நூலிது. இலங்கை மீதான இந்தியாவின் பொருளாதார, அரசியல் மற்றும் இராணுவரீதியிலான தலையீடுகளை விபரிப்பதும், இவற்றால் ஏற்படும் சாதக, பாதக அம்சங்களை வெளிப்படுத்துவதும், எவ்விதம் இந்தியத்தலையீட்டிலிருந்து இலங்கையை விடுவிப்பதற்கு இலங்கையின் மக்கள் அனைவரும் இன, மத , மொழி ரீதியிலான பிரிவுகள் ஏதுமற்று , ஒன்றிணைந்து போராட வேண்டுமென்பதையும் தர்க்கரீதியாக விபரிப்பதே இந்நூலின் முக்கிய நோக்கமாகும். இது தன் நோக்கத்தில் வெற்றியே அடைந்திருக்கின்றது என்பதை இதனை வாசிக்கும்போது உணர முடிகின்றது.

பொதுவாக இந்தியாவின் தலையீடு இலங்கையிலுள்ளது என்பது யாவரும் அறிந்ததே. இந்தியாவை மீறி இலங்கையால் எதுவுமே செய்ய முடியாது என்பதும் யாவரும் அறிந்ததே. இந்தியாவைப்பொறுத்தவரையில் அதன் அயல் நாடுகளுடனான வெளிநாட்டுக்கொள்கை அதன் தேசிய நலன்களுக்கு அமையவே அமைந்துள்ளது. அயல் நாடுகள் அதன் தேசிய நலன்களுக்கு முரணாகச் செயற்படும்போது அது அந்நாடுகளை ஆக்கிரமிக்கவும் தயங்காது என்பதை வரலாறு காட்டி நிற்கிறது. அயல் நாடுகளில் நிலவும் உள்நாட்டுப் பிரச்சினைகளைத் தனது நலன்களுக்குச் சார்பாகப் பயன்படுத்துவதில் இந்தியா ஒருபோதுமே தயங்கியதில்லை. இதனை இந்நூல் மிகவும் சிறப்பாக வெளிப்படுத்துகிறது. இதுவரை காலம் இலங்கையின் மீதான இந்தியத்தலையீட்டினை வரலாற்றுக்கண் கொண்டு , சுருக்கமாக ஆராயும் இந்நூல், , இந்தியா எவ்விதம் தன் அயல்நாடுகளில் தன் நலன்களுக்காகத்தலையிடுகின்றது என்பதையும் புள்ளி விபரங்களுடன் வெளிப்படுத்துகிறது.

ராஜாஜி ராஜகோபாலனின் 'குதிரையில்லாத ராஜகுமாரன்' பற்றிச்சில குறிப்புகள்... வ.ந.கிரிதரன் -

ராஜாஜி ராஜகோபாலனின் சிறுகதைத்தொகுப்பான 'குதிரையில்லாத ராஜகுமாரன்'  படித்தேன்.  தொகுப்பில் நான் வாசித்த கதைகளின் அடிப்படையில் என் கருத்துகளை இங்கு பதிவு செய்கின்றேன்.

நான் வாசித்த கதைகளில்  மிகச்சிறந்த சிறுகதைகளாக நான் கருதுவது 'பத்தியம்' மற்றும் 'கடவுளும் கோபாலபிள்ளையும்' ஆகிய கதைகளைத்தாம். 'பத்தியம்'  ஆயுர்வேத வைத்தியர் மயில்வாகனம் அவர்களைப்பற்றியது. கதையில் ஒன்றிற்கும் அதிகமான இடங்களில் ஆயுள்வேத வைத்தியம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பரியாரியார் அல்லது வைத்தியர் மயில்வாகனம் என்றழைக்கப்படும் ஆயுர்வேத வைத்தியரின் இன்றைய நிலை 'மேனாட்டு' வைத்திய முறையின் காரணமாகப்பாதிக்கப்பட்ட நிலையில் , வறுமையில் அவர் வாடுகின்றார். அவ்விதம் வாடும் நிலையில், அவரிடம் அவரது ஊரைச்சேர்ந்த இரு இளைஞர்கள் வருகின்றார்கள். எதற்கு? கொழும்பில் வேலை பார்க்கும் அவர்கள் , விடுமுறைக்காக ஊருக்கு வருகின்றார்கள். வந்தவர்கள் விடுமுறைக்காலத்தைச்சிறிதி நீட்டி விட்டார்கள். அதற்குக்காரணத்தைக்கூற வேண்டுமே? அதற்காக ஆயுர்வேத வைத்தியரிடம் ஒரு 'மெடிக்கல் ரிபோர்ட்' காசு கொடுத்து வாங்க வருகின்றார்கள். ஆனால் அவர்களோ தமது நோய்களுக்காக ஆங்கில வைத்தியத்தை நாடுபவர்கள் என்பதை அறிந்ததும் மயில்வாகனத்தார் ' சேர்ட்டிபிக்கட்டை நம்பி வந்தால் போதுமோ? வைத்தியத்தை நம்பியல்லோ வரவேணும்" என்கின்றார். அதற்கு அவர்கள் காசு எவ்வளவென்றாலும் தரத்தயார் என்கின்றார்கள். அதற்கு அவரோ "அது எனக்குத்தேவையில்லை. நான் வைத்தியத்துக்கு மாத்திரம் காசு வாங்குவன். போட்டு வாருங்கோ" என்று கூறி அனுப்பி விடுகின்றார். ஒரு சிறுகதைக்குரிய அம்சங்களுடன் , நவீனத்தொழில் நுட்பம் எவ்விதம் பாரம்பரியத்தொழில் நுட்பத்தினைப் பாதிக்கின்றது என்பதை எடுத்தியம்பும் 'பத்தியம்' அதே சமயம் வைத்தியர் மயில்வாகனத்தாரின் தன் தொழில் மீதான பக்தியினையும், கொள்கைப்பிடிப்பினையும் எடுத்துக்காட்டுகிறது. வறுமைப்பிடியில் வாடும் சமயத்தில் கூட அவர் பணத்துக்காகத் தன் னை விற்றுவிடவில்லை. கதை 'டாக்டர் மயில்வாகனம் புரண்டு படுத்தார்' என்று ஆரம்பமாகின்றது. ஆயுர்வேத வைத்தியரான, பரியாரியான மயில்வாகனத்தாரை வைத்தியர் மயில்வாகனத்தார் புரண்டு படுத்தார் என்று ஆரம்பித்திருக்கலாமென்று தோன்றியது. ஆங்கில வைத்திய முறையினை எதிர்ப்பவர் அவர். அவரை அறிமுகப்படுத்தும்போது ஆங்கிலத்தைத்தவிர்த்திருக்கலாமே.

பொன் குலேந்திரனின் 'முகங்கள்' - வ.ந.கிரிதரன் -

கனடாவில் வசிக்கும் எழுத்தாளர் பொன்.குலேந்திரனின் 'முகங்கள்' சிறுகதைத்தொகுதியினை வாசிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. 'ஓவியா பதிப்பகம்' (தமிழகம்) வெளியீடாக , அழகான அட்டையுடன் வெளிவந்திருக்கின்றது. தான் வாழ்வில் சந்தித்த பல்வேறு மனிதர்களை மையமாக வைத்து அவரால் எழுதப்பட்ட 21 சிறுகதைகளின் தொகுப்பிது.

இத்தொகுப்பிலுள்ள சிறுகதைகளை பின்வருமாறு வகைப்படுத்த முடிகிறது: குறிப்பிட்ட ஆளுமை மிக்க ஒருவர் பற்றிய விவரணச்சித்திரங்களாச் சில கதைகள் அமைந்துள்ளன. சந்திக்கடை சங்கரப்பிள்ளை, வைத்தியர் வைத்திலிங்கம், சண்டியன் சங்கிலி இஸ்மாயில், நாட்டாண்மை நாச்சிமுத்து, நாவிதர் நாகலிங்கம், பியூன் பிரேமதாசா, அரசாங்க அதிபர அபயசேகரா, சின்னமேளக்காரி சிந்தாமணி போன்ற சிறுகதைகளை இவ்வகையில் அடக்கலாம். இவ்விதமான சிறுகதைகள் பொதுவாக ஒருவரைப்பற்றி அல்லது ஒரு பிரதேசமொன்றினைப்பற்றிய விவரணைகளாக, ஆரம்பம் , முடிவு போன்ற அம்சங்களற்று அமைந்திருக்கும். இதற்கு நல்லதோர் உதாரணமாகப் 'புதுமைப்பித்தனின்' புகழ் பெற்ற சிறுகதைகளிலொன்றான 'பொன்னகரம்' சிறுகதையினைக் குறிப்பிடலாம்.

இன்னும் சில சிறுகதைகள் குறிப்பிட்ட ஆளுமை மிக்க ஒருவரைபற்றிய விவரணையாக இருக்கும் அதே சமயம், எதிர்பாராத திருப்பமொன்றுடன், அல்லது முக்கியமானதொரு நீதியினைப் புகட்டும் கருவினைக்கொண்டதாக அமைந்திருப்பதை அவதானிக்க முடிகின்றது.

[எனது 'குடிவரவாளன்' நாவல் பற்றிக் கூகுள் ஜெமினி செயற்கை நுண்ணறிவின் கருத்துகளைக் கூறும்படி கேட்டேன். அதன் கருத்துகளைக் கீழே தந்திர...