அ.ந.க.வின் இலங்கைத்தமிழ் இலக்கியத்தில் விமர்சனத்துக்கான (அல்லது திறனாய்வுக்கான) பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. அ.ந..க.வின் புலமை காரணமாகவே பேராசிரியர் க.கைலாசபதி அவர்கள் தனது 'ஒப்பியல் இலக்கியம்' நூலினை அ.ந.க.வுக்குச் சமர்ப்பணம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இலங்கைத்தமிழ் இலக்கியத்தில் திறனாய்வுத்துறைக்குப் பெரும்பங்களிப்பு செய்தவர் பேராசிரியர் கைலாசபதி. அவர் ஒருவருக்குத் தன் நூலினைச் சமர்ப்பணம் செய்திருக்கின்றார் என்றால் அதனைச் சாதாரணமாக எடுத்துவிட முடியாது. அச்சமர்ப்பணத்தில் அவர் இவ்விதம் கூறுவார்:
“ பல்லாண்டுகளாக எனது இலக்கிய முயற்சிகளை நேர்மையுடன் விமர்சித்து ஊக்கங்கொடுத்து வருபவரும், இன்றைய ஈழத்து எழுத்தாளர்களின் முன்னோடிகளில் ஒருவரும், பிறமொழி யிலக்கியங்களைக் கற்றுமகிழ்ந்து அவற்றைத் தழுவியும் மொழிபெயர்த்தும் தமிழுக்கு அணி செய்தவரும் ,பலதுறை வல்லுனருமான காலஞ்சென்ற அ.ந. கந்தசாமி அவர்களது நினைவுக்கு இந்நூலைச் சமர்ப்பிக்கிறேன்”


