Saturday, February 15, 2020

வ.ந.கிரிதரன் கண்ணம்மாக் கவிதைகள் 4 ; காலவெளிக்காட்டி வல்லுனன்!

 

காலவெளிச் சட்டங்களைக் கோத்து
உருவானதிந்த இருப்படி கண்ணம்மா!
இவ்விருப்புமொரு காலவெளிப் படம்
என்பதையுணர்வாயாயடி நீ!
என்னாசையொன்றுள்ளதென்பேன்.
என்னவென்று நீ அறியின் நகைக்கக்கூடும்.
ஒருபோதில் ,உணர்வுகள் கிளர்தெழுந்த
பருவத்தினொரு போதில்
உனைப்பார்த்த உணர்வுகளுளவே.
அவ்வுணர்வினைப் பிரதிபலிக்கும் காட்சியுமுளவே.
அப்போது கண்ணம்மா! அதிகாலைநேரம்.
ஆடியசைந்து நீ வந்தாய் பொழுதின் எழிலென.
நினைவுள்ளதா? இருக்கிறதெனக்கு.
மார்புற நூல்தாங்கி, முகம் தாழ்த்தி
நடந்து வந்தாய்; அது உன் பாணி.
நிலம்பார்த்து நடக்குமுனக்கு
முறையா நடப்பதற்கு,
நேரெதிர்க் காட்சிகள்
தெரிவதெப்படி என்று வியப்பதுண்டு அப்போது.
இருபுறம் பிரிகுழல் இடைவரை
இருந்தசைய ,
பொட்டிட்ட வதனத்தில் நகையேந்தி நீ'
நடந்துவருமெழிலில் பொழுது சிறக்கும்.
ஒருபோதில் வழக்கம்போல் அசைந்து சென்றாய்
அதிகாலைப்பொழுதொன்றில்.
அவ்விதம் சென்று சந்தி திரும்புகையில்
ஓரப்பார்வைக்கணை தொடுத்துச் சென்றாய்.
நினைவிருக்கிறதா? ஆனால் எனக்கு
இருக்கிறதடி.
அக்கணத்தைச் சிறைப்படுத்தி ஆழ்மனத்தினாழத்தே
பத்திரப்படுத்தி வைத்துள்ளேன்.
அதற்கு எப்போதுமில்லையடி
விடுதலை/ ஆயுள் தண்டனைதான்.
இருக்கும் வரை அதனாயுள் அங்குதான்.

Sunday, February 9, 2020

வ.ந.கிரிதரன் புகலிடக் கதைகள் (17) : ஆசிரியரும் மாணவனும்


இச்சிறுகதை அமரர் எழுத்தாளர் குகதாசன் இதழாசிரியராகவிருந்த சமயம் வெளியான யாழ் இந்துக்கல்லூரிச் (கனடா) சங்கம் வெளியிட்ட 'கலையரசி' மலருக்காக எழுதப்பட்ட சிறுகதை. பின்னர் பதிவுகள், திண்ணை ஆகிய இணைய இதழ்களில் வெளியானது. சிறுகதைகள்.காம் இணையத்தளத்திலும் இடம் பெற்றுள்ளது.-

யன்னலினூடு தெரிந்த அதிகாலை வானத்தைப் பார்த்தார் சுப்ரமணியம் மாஸ்ட்டர். மெல்லிய இருட்போர்வையின் அரவணைப்பில் சுகம் கண்டுகொண்டிருந்த பூமிப் பெண்ணிற்கு உறக்கத்தை விட்டெழுவதற்கு இன்னும் மனம் வராமல் அப்படியே படுக்கையில் புரண்டு படுத்துக் கொண்டிருப்பது போல் பட்டது. விடிவெள்ளி பிரகாசத்துடன் விடிவை கட்டியம் கூறி வரவேற்றுக் கொண்டிருந்தது. ஊரில் இருந்த மட்டும் அவரிற்கு மிகவும் பிடித்தமானவை அதிகாலையில் எழுந்து கல்லுண்டாய் வெளியினூடாக நடந்து வருவதும், விடிவெள்ளியின் அழகில் மெய் மறப்பதும் தான்."மாஸ்ட்டர், மாஸ்ட்டர்" என்று எவ்வளவு பெரிய பெருமை அவரிற்கு."படிப்பிற்கு மாஸ்ட்டரின் பிள்ளைகளைக் கேட்டுத்தான்" என்று கதைப்பார்கள்.'வர மாட்டேன், வர மாட்டேன்' என்றிருந்தவரை மகன் தான் வற்புறுத்தி கனடா வரவழைத்திருந்தான். வந்து ஒரு வருடத்திற்குள்ளேயே அவரிற்கு வாழ்க்கை போதும் போதுமென்றாகி விட்டது. நான்கு சுவர்களிற்குள்ளேயே வாழக்கை அதிகமாகக் கழிகின்றது. இயற்கையை இரசித்து ஆனந்தமாகப் பறந்து கொண்டிருந்த பறவையைப் பிடித்துக் கூட்டினுள் அடைத்து வைத்தால் எப்படியிருக்குமோ அப்படியிருந்தது அவர் நிலை.

வ.ந.கிரிதரன் கண்ணம்மாக் கவிதைகள் (3): காலவெளி மீறிய கவிஞனடி கண்ணம்மா!


நேற்று -இன்று - நாளை என்று
காலத்தின் ஒரு திசை பயணத்தில்
மீளுதல் சாத்தியமற்றதா? ஆயின்
'அறிவுணர்'வுக்கு அது இல்லை. ஆம்!
அது இல்லை. எது?
ஆம்! அதுதான். அதுதான்.ஆம்!
அது இல்லை.
தயக்கமெதுவற்று அதனால் தங்குதடையின்றிப்
பயணிக்க முடியும்.
நேற்று - இன்று - நாளை
காலத்தின் அர்த்தமற்றதொரு நிலை
'அறிவுணர்'வுக்குண்டு.
குவாண்டம் நுரையில் கிடக்கும் இருப்பில்
நேரத்துக்கும் அர்த்தமுண்டோ?
அங்கு அனைத்துமே சம காலத்தில்
இருப்பன. அறிவாயா கண்ணம்மா!
காலமே காலமாகி விட்ட நிலைதான்
குவாண்டம் நிலை. ஆம் ! அந்த நிலை.
என் 'அறிவுணர்'வு கொண்டு
என்னால் எங்கும் பயணிக்க முடியும் கண்ணம்மா!
உனக்கது புரியுமா?

நடிகர் நடிகர் கேர்க் டக்ளஸ் ( Kirk Douglas) நினைவாக...

அண்மையில் தனது நூற்றி மூன்றாவது வயதில் மறைந்த நடிகர் கேர்க் டக்ளஸ் ( Kirk Douglas) உலகச்சினிமாவில் முக்கியமானதோர் ஆளுமை. மூன்று தடவைகள் சிறந்த நடிகருக்கான ஆஸ்கார் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டவர். இவருக்குக் கிடைக்காத அவ்விருது இவரது மகன் மைக்கல் டக்ளசுக்குக் கிடைத்தது. ஆனால் வாழ்நாள் சாதனையாளருக்கான ஆஸ்கார் விருது பின்னர் கிடைத்தது. இவர் இயக்குநர், எழுத்தாளர், தயாரிப்பாளர், நடிகர் எனப் பன்முகத்திறமை மிக்க நடிகர்களிலொருவர்.
இவரை நினைத்தாலே முதலில் நினைவுக்கு வருவது ஸ்டான்லி கூப்ரிக்கின் இயக்கத்தில் வெளியாகி வசூலில் சாதனை புரிந்த ஸ்பார்ட்டகஸ் திரைப்படமே . அதில் அவர் ரோமானிய அடிமைகளிலொருவராக நடித்திருப்பார். அடுத்து ஓவியர் வான்கோவாக நடித்திருக்கும் லஸ்ட் ஃபோர் லைஃப் (Lust for Life - வாழ்வுக்கான காமம்) .ஓவியர் வான்கோவாக நடித்திருக்கும் அவர் அதற்காக ஆஸ்காரின் சிறந்த நடிகர் விருதுக்காகப் பரிந்துரைக்கப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Wednesday, February 5, 2020

வ.ந.கிரிதரன் புகலிடச்சிறுகதைகள் (16) ஆபிரிக்க அமெரிக்கக் கனேடியக் குடிவரவாளன்'



['டிஜிட்டல்' ஓவியத் தொழில் நுட்ப  (Google Nano Banana) உதவி: VNG] 
  
தற்செயலாகத் தொராண்டோவிலுள்ள நு¡லகக் கிளையொன்றில் தான் அவனைச் சந்தித்திருந்தேன். அவன் ஒரு கறுப்பினத்தைச் சேர்ந்த பாதுகாவல் அதிகாரி. அடிக்கடி நூலகத்தில் கண்காணிப்புடன் வலம் வந்து கொண்டிருந்தான். எனது மூத்த மகள் நூலகத்தின் சிறுவர் பிரிவில் நடைபெற்றுக் கொண்டிருந்த கதை கேட்கும் நேரத்தில் பங்கு கொள்வதற்காக வந்திருந்தாள். அதன் பொருட்டு நூலகத்திற்கு நானும் வந்திருந்தேன். குறைந்தது ஒரு மணித்தியாலமாவது செல்லக் கூடிய நிகழ்ச்சி. அந்த நேர இடைவெளியைப் பயனுள்ளதாகக் கழிப்பதற்காக நு¡லொன்றை எடுத்து அங்கு ஒதுக்குப் புறமாகவிருந்த நாற்காலியொன்றில் அமர்ந்து வாசித்துக் கொண்டிருந்த பொழுது ஒரு முறை என் அருகாக அவன் தன் கடமையினை செய்வதற்காக நடை பயின்றபொழுது எனக்குச் சிறிது கொட்டாவி வந்தது. அவனுக்கும் பெரியதொரு கொட்டாவி வந்தது. விட்டான்.

" என்ன தூக்கக் கலக்கமா " என்றேன்.

" இல்லை மனிதா! சரியான களைப்பு. வேலைப் பளு" என்று கூறிச் சென்றான்.

சிறிது நேரத்தில் மீண்டுமொருமுறை அவன் வந்த பொழுது அவனுக்கும் எனக்குமிடையில் சிறிது நெருக்கம் ஏற்பட்டிருந்தது.

Tuesday, February 4, 2020

வ.ந.கிரிதரனின் புகலிடக் கதைகள் (15): மனைவி!


- திண்ணை, பதிவுகள் ஆகிய இணைய இதழ்களில் வெளியான சிறுகதை. 'ஈழநாடு (கனடா) இதனை மீள்பிரசுரம் செய்திருந்தது. -

இரவு மணி பதினொன்றினை நெருங்கிக் கொண்டிருந்தது. யன்னலினூடி கட்டட முனிகள் தவமியற்றிக் கொண்டிருப்பது தெரிந்தது. ஓட்டியற்ற ஓடமாகப் பிறை நிலவு. பலகணியில் அடைந்திருந்த புறாக்கள் சில அசைந்தன. அடுத்த அப்பார்ட்மென்ட்லிருந்த இதுவரை கத்திக் கத்தி யுத்தம் புரிந்து கொண்டிருந்த யமேய்க்கனும் அவனது வெள்ளைக் காதலியும் சற்று முன்னர் தான் சப்தமிழந்து ஓய்ந்து போனார்கள். மனோரஞ்சிதத்தின் நெஞ்சுப்புற்றிலிருந்து ஞாபகப் பாம்புகளெழுந்து படம்விரித்தாடின. முன்றிலில் சாய்வு நாற்காழியில் சாய்ந்திருக்கும் அப்பாவின் சாறத்தைக் கதிரையாக்கி அப்பாவுடன் சேர்ந்து அவளும் விரிந்து கிடக்கும் விண்ணின் அழகில் மனதொன்றிக் கிடப்பதிலெவ்வளவு சந்தோசம்! நட்சத்திரங்கள் கொட்டிக் கிடக்கும் இரவு வான் அவளது நெஞ்சில எப்பொழுதுமேயொரு வித புதிர் கலந்த பிரமிப்பினை ஏற்படுத்தி விடும். அண்ணாந்து பார்க்கும் போது விரிந்து கிடக்கும் வெளியின் ஒரு பகுதியாக அந்தரத்தில் மிதந்து இயங்கும் இன்னொரு சுடராகத் தன்னையுணர்வாள். அச்சமயங்களில் இளகிக் கிடக்கும் மனது...நீண்ட பல வருடங்களிற்குப் பின்னால் வருகை தந்திருந்த நீண்ட வால் வெள்ளி பார்ப்பதற்காக அப்பாவுடன் ஒவ்வொரு நாள் அதிகாலையும் நேரத்துடன் எழுந்தது இப்பொழுதும் மனதினுள் பசுமையாகவிருக்கிறது.

வ.ந.கிரிதரன் புகலிடச் சிறுகதைகள் (14): மனித மூலம்


- தாயகம் (கனடா) சஞ்சிகையில் முதலில் வெளியான சிறுகதை. பின்னர் பதிவுகள் இணைய இதழிலும் பிரசுரமானது. ஸ்நேகா (தமிழகம்) / மங்கை பதிப்பகம் (கனடா) வெளியிட்ட வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' தொகுப்பிலும் இடம் பெற்றுள்ளது. -

கடந்த ஒரு மணிநேரமாக இவன் நடந்துகொண்டிருக்கின்றான். யார் இவன் என்கின்றீர்களா? வேறு யாருமில்லை. இவன்தான். இவன் இவனேதான். அவன் அவனேதான் என்று சொல்வதில்லையா? அது போல்தான். இவனும்இவனேதான். இவனிற்குக் கொஞ்சநாட்களாகவே ஒரு சந்தேகம். என்னவென்று கேட்கின்றீர்களா?

வேறொன்றுமில்லை. வழக்கமாக நம்நாட்டு வேதாந்திகளிற்கு வரும் சந்தேகங்களில் முக்கியமானதொன்றுதான். 'நான் யார்.நானென்றால் நான் யார்? இது தான் இவனது சந்தேகம். அதற்கு முன்னால் நாம் ஒன்றைக் கவனிக்க வேண்டும். அது என்ன? அதுதான் இவன் நடந்து கொண்டிருக்கின்ற பாதை, 'நான் கடந்து வந்த பாதை' என்றிருக் கின்றதே அது போல் தான் இவன் கடந்து கொண்டிருக்கின்ற இந்தப் பாதையும். இவன் சிறுவனாகயிருந்தபோது இந்தப் பாதையைப் பற்றி இவன் படித்திருக்கின்றான். இன்னமும் ஞாபகத்தில் இருக்கின்றது. இவனிற்குப்புவியியல் கற்பித்த ஆசிரியையின் ஞாபகம் கூட இருக்கின்றது. இவ்வளவுஞாபகசக்திமிக்க இவனிற்கு இவனைப் பற்றி மட்டும் அப்படியெப்படி சந்தேகம் வரலாம் என்கின்றீர்களா? பொறுங்கள்! சற்றே பொறுங்கள். அதற்கு முன் இவன் கடந்து செல்கின்ற பாதையைப் பற்றிச்சிறிது பார்ப்போம்.

கவிதை: நானே பிரம்மா! - வ.ந.கிரிதரன் -

இவனது கடவுள் AI என்றால், இவனை வடிவமைத்துச் சிரிக்க வைத்த படைப்புக் கடவுள் பிரம்மா நானேதான். ஆழ்ந்த சிந்தனையில் இருந்த இவனை அடக்க முடியாமல் ...