Monday, November 13, 2023

அன்பான நினைவூட்டல்: 'டொரோண்டோ' , கனடாவில் வ.ந.கிரிதரனின் மூன்று நூல்கள் வெளியீடு (நவம்பர் 19, 2023)


வணக்கம் நண்பர்களே! எனது மூன்று நூல்களின் வெளியீடும் அறிமுகமும் பற்றிய தகவலை இங்கு மீண்டும் பகிர்ந்து கொள்கின்றேன். 
 
'தேடகமும்' , 'பதிவுக'ளும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள நிகழ்வு இது. நவம்பர் 19, 2023 அன்று மாலை 5 மணி தொடக்கம் 8 மணி வரை 3600 Kingston road இல் அமைந்துள்ள Scarborough Village Community Recreation Center இல் நடைபெறும் என்பதை அறியத்தருகின்றேன்.
 
நிகழ்வில் 'ஒரு நகரத்து மனிதனின் புலம்பல்' கவிதைத்தொகுப்பு பற்றி எழுத்தாளர் என்.கே.மகாலிங்கம் அவர்களும், 'வ.ந.கிரிதரன் கட்டுரைகள்' பற்றி எழுத்தாளர் அருண்மொழிவர்மன் அவர்களும், 'நவீன விக்கிரமாதித்தன்' நாவல் பற்றி சமூக, அரசியற் செயற்பாட்டாளரும், எழுத்தாளருமான சிவா முருகுப்பிள்ளை (ஈஸ்வரமூர்த்தி) அவர்களும் உரையாற்றுவார்கள். எழுத்தாளர் பா.அ.ஜயகரன் அவர்கள் தலைமைதாங்கி நெறிப்படுத்துவார். மேற்படி நிகழ்வில் கலந்து சிறப்பிக்குமாறு அனைவரையும் அன்புடன் அழைக்கின்றேன்.

'இசைக்குயில்' பி.சுசீலா!


நவம்பர் 13 பி.சுசீலாவின் பிறந்ததினம்! அவருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.

'இசைக்குயில்', 'கான கோகிலா', 'மெல்லிசை அரசி' & 'கான சரஸ்வதி' என்று அழைக்கப்படும் பி.சுசீலா (புலப்பாக்க சுசீலா)  தமிழ், தெலுங்கு, கன்னடம், ,மலையாளம், இந்தி, சிங்களம் & சம்ஸ்கிருதம் ஆகிய மொழிகளில் 25,000 பாடல்களுக்கு மேல் பாடியவர். இந்திய மத்திய அரசின் பத்மவிபூஷன் விருது, தமிழக அரசின் கலைமாமணி விருது உட்படப் பல விருதுகளைப் பெற்ற இவர் ஐந்து தடவைகள் சிறந்த பாடகிக்கான இந்திய மத்திய அரசின் தேசிய விருதினைப் பெற்றவர். இவர் டி.எம்.எஸ் அவர்களுடன் இணைந்து சுமார் 1000 பாடல்களைப் பாடியுள்ளதாக விக்கிபீடியா கூறுகிறது.  நவம்பர் 13 அவரது பிறந்ததினம்.

சுசீலா என்றதும் என்  நினைவுக்கு வரும் முதல் 23 பாடல்கள் இவை:

1. அமுதைப் பொழியும் நிலவே
2. மாலைப்பொழுதின் மயக்கத்திலே
3. உன்னை நான் சந்தித்தேன்
4. மறைந்திருந்தே பார்க்கும் மர்மமென்ன
5. இறைவா உன் மாளிகையில் எத்தனையோ மணி விளக்கு
6. மாறியது  நெஞ்சம் மாற்றியவர் யாரோ
7. நீ இல்லாத உலகத்திலே
8. நினைக்கத்தெரிந்த மனமே
9. என்னை மறந்ததேன் தென்றலே
10. பக்கத்து வீட்டுப் பருவ மச்சான்
11. அத்தை மகனே
12. சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து
13. சிட்டுக்குருவிக்கென்ன கட்டுப்பாடு
14. நாளை இந்த வேளை பார்த்து
15. அன்புள்ள மான்விழியே
16. உன்னை ஒன்று கேட்பேன்
17. ஆயிரம் நிலவே வா
18. நலந்தானா நலந்தானா
19. சொன்னது நீ தானா?
20. காதல் சிறகைக் காற்றினில் விரித்து
21. உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல
22. ஒருத்தி ஒருவனை நினைத்து விட்டால்
23. கல்யாணம் ஆனவரே செளக்கியமா?

கல்யாணம் ஆனவரே செளக்கியமா?  உங்கள் கண்ணான பெண் மயிலும் செளக்கியமா? - https://www.youtube.com/watch?v=w-b-H-nJ7Nk

ஒருத்தி ஒருவனை நினைத்து விட்டால் - https://www.youtube.com/watch?v=T8piDlTHqXQ

Saturday, November 11, 2023

எழுத்தாளர் ஶ்ரீ வேணுகோபாலன் நினைவாக.... - வ.ந.கிரிதரன் -


எழுத்தாளர் ஶ்ரீ வேணுகோபாலன் (புஷ்பா தங்கத்துரை)  என் பால்யப் பருவத்தில், எனக்குப் பிடித்த எழுத்தாளர்களிலொருவர். அக்காலகட்டத்தில் தினமணிக்கதிரில் வெளியான 'நீ நான் நிலா' தொடர் நாவலை (ஓவியர் கோபுலுவின் ஓவியங்களுடன் வெளியான தொடர்) விரும்பி வாசித்தேன். கல்கி இதழின் அல்லது தினமணிக்கதிரின் இலவச இணைப்பாக வெளியான இவர் எழுதிய நெடுங்கதையான 'நடு வழியில் ஒரு ரயில்' எனக்கு மிகவும் பிடித்த கதைகளிலொன்றாக அக்காலகட்டத்தில் விளங்கியது. இவையெல்லாம் அவர் ஶ்ரீ வேணுகோபாலன் என்னும் பெயரில் எழுதியவை. இவர் முதன் முதலாக புஷ்பா தங்கத்துரை என்னும் பெயரில் எழுதிய தொடர் நாவல் 'ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது' என்று நினைக்கின்றேன். அது தினமணிக்கதிரில் ஓவியர் ஜெயராஜின் ஓவியங்களுடன் வெளியானது. வெளியான காலத்தில் மிகுந்த வரவேற்பைப்பெற்றிருந்தது.

Monday, November 6, 2023

வ.ந.கிரிதரனின் 'நவீன விக்கிரமாதித்தன்' நாவல் பற்றிய ரசனைக் குறிப்பு! - ரஞ்ஜனி சுப்ரமணியம் -


எழுத்தாளரும், இலக்கியத் திறனாய்வாளருமான ரஞ்ஜனி சுப்ரமணியம்   அண்மையில் ஓவியா (தமிழகம்)  பதிப்பக வெளியீடாக வெளிவந்த 'நவீன விக்கிரமாதித்தன்' நாவல் பற்றிச் சிறப்பானதொரு விமர்சனத்தை எழுதியிருக்கின்றார். அவருக்கு என் நன்றி.  பதிவுகள் இணைய இதழில் வெளியான அவ்விமர்சனத்தை இங்கு நண்பர்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன்.



அகவயமான வாசிப்பினை வேண்டுவதே இலக்கியம். எனினும் புற உலகின் மாற்றங்களுக்கு ஏற்ப அமைப்பாலும் உட்பொருளாலும் மாற்றம் காண்பது தவிர்க்க முடியாதது. மனிதகுலமே கூர்ப்பின் வழி இன்றிருக்கும் வடிவில் வந்திருக்கும் போது, இலக்கிய வடிவங்களும் அதன் இலக்கணங்களும் மாறக்கூடாது எனக் கூறமுடியுமா?

'இலக்கியம் ஒரு யானை . நம்நாட்டு இலக்கியவாதிகள் தமக்குள் குழுக்களாகப் பிரிந்து தாம் சொல்வதுதான் சரியென, யானை பார்த்த அந்தகர் போல வாதிட்டுக் கொண்டு இருக்கின்றனர்' என்கிறது நாவலில் வரும் உரையாடல் ஒன்று. உண்மை. எல்லைகள் அற்றதே இலக்கியம்.

'இலக்கியம் சமுதாய பயன் கொண்டதாக அமைய வேண்டிய அதேசமயம் அது எழுத்தின் கலைத்துவத்தை சிதைத்து விடவும் கூடாது' எனும் கருத்தும் நாவலில் கூறப்பட்டுள்ளது.

Sunday, November 5, 2023

தேடகம் (தமிழர் வகைதுறை வள நிலையம்) அமைப்பின் சமூக, அரசியல், கலை இலக்கியப்பங்களிப்புகள் பற்றிய சுருக்கமான அறிமுகப் பதிவு! - வ.ந.கிரிதரன் -


கனடாத் தமிழ்க் கலை, இலக்கிய உலகில் , சமூக,அரசியற் செயற்பாடுகளில் ஓர் அமைப்பின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது. ஆனால் இதுவரை இவ்வமைப்பு பற்றிய ,விரிவான , பூரணமானதோர் ஆய்வெதுவும் செய்யப்பட்டதாகத் தெரியவில்லை. இதற்காக இவ்வமைப்புக்கு விருதுகள் எவையும் கொடுக்கப்பட்டதாகவும்  தெரியவில்லை. இருந்தாலும் இவ்வமைப்பு, எவ்விதப் பயன்களையும் கருதாமல் , இன்னும் இயங்கிக்கொண்டுதானுள்ளது. காலத்துக்குக் காலம் இவ்வமைப்புடன் இணைந்து இயங்கியவர்கள் பலர் ஒதுங்கி விட்டாலும், இன்னும் சிலர் தொடர்ந்தும் இயங்கிக் கொண்டுதானுள்ளார்கள்.  இவ்வமைப்பு பற்றிய விரிவான ஆய்வில் இதுவரை இவ்வமைப்புடன் இணைந்து  இயங்கியவர்கள் பற்றிய விபரங்களும் ஆவணப்படுத்தப்படுவது அவசியம். இப்பொழுது இந்த அமைப்பு எதுவென்னும் கேள்வி உங்கள் உள்ளங்களில் எழும்பத்தொடங்கியிருக்கும். இந்த அமைப்பு தேடகம் என்று அறியப்பட்ட தமிழர் வகைதுறை வளநிலையம்.

தேடகம் அமைப்பின் இதுவரை காலப் பல்வகைப் பங்களிப்புகளையும் நோக்கினால் பின்வரும் வகைகளில் அவற்றைப் பிரித்துப்பார்க்கலாம்:

Saturday, November 4, 2023

எழுத்தாளர் நட்சத்திரன் செவ்விந்தியனின் புலனாய்வுக் கற்பனை! - வ.ந.கிரிதரன் -

                            -  எழுத்தாளர் நட்சத்திரன் செவ்விந்தியன் (அருண் அம்பலவாணர்)   -     
 
எழுத்தாளர் நட்சத்திரன் செவ்விந்தியன் (அருண் அம்பலவாணர்) சிறந்த கவிஞர். எழுத்தாளர். ஆனால் அவ்வப்போது அவர் எழுதும் புலனாய்வு ஊடகக் கட்டுரைகள்தாம் சில வேளைகளில் சிரிப்பைத் தருகின்றன. நட்சத்திரன் செவ்விந்தியன் தனது முகநூற் பதிவொன்றில் என்னைத் தன் பிரச்சார முகவராக ஜெயமோகன் பயன்படுத்துவதாகக் குற்றஞ்சாட்டுகின்றார்.
அத்துடன் அவர் நிற்கவில்லை. மேலும் பல குற்றச்சாட்டுகளை அள்ளி வீசுகின்றார். 
 
ஜெயமோகனின் பங்களிப்பில் உருவான தமிழ் விக்கி பற்றிக் கடுமையாக விமர்சித்ததால், ஜெயமோகன் என்னுடன் சமரசம் செய்ய, தமிழ் இலக்கியத் தோட்டத்துக்குப் பரிந்துரை செய்ததால்தான் என்க்கு அண்மையில் கிடைத்த தமிழ் இலக்கியத் தோட்ட விருது கிடைத்ததாம். 

Monday, October 23, 2023

(பதிவுகள்.காம்) மராட்டிய எழுத்தாளர் சரண்குமார் லிம்பாளேயின் "அக்கர்மஷி"யின் அடையாளங்களைத் தேடி... - புதியமாதவி, மும்பை -


மராட்டிய எழுத்தாளர் சரண்குமார் லிம்பாளேயின் "அக்கர்மஷி" பற்றி , பதிவுகள் இணைய இதழில் 2008இல் வெளியான கட்டுரை. 'பதிவுகளில் அன்று' பகுதியில் ஆவணப்படுத்தும் பொருட்டு மீள்பிரசுரமாகின்றது.


நான் சபிக்கிறேன்
உன்னை
உன் எழுத்துக்களை
உன் கலாச்சாரத்தை
உன் வேஷத்தை..  
( நாம்தேவ் தசள் - கோல்ப்பிதா கவிதைகளிருந்து)

மராட்டிய மாநிலத்தில் ஒரு புதிய அலை இதுவரை எழுதப்பட்டிருந்த இலக்கியத்தின் பக்கங்களைப் புரட்டி, இதுவரை நிறுவப்பட்டிருந்த சமூகத்தின் அடையாளங்களை வீசி எறிந்து ஒரு கோட்டோவியத்தை வரைந்தது. 1960களில் ஏற்பட்ட சிறுபத்திரிகைகளின் வளர்ச்சி, மும்பையில் தொழில்மயம், அந்தத் தொழில்மயத்தில் எழுந்த புதிய தொழிலாளர் வர்க்கம், தொழிற்சங்கங்கள், அதுசார்ந்த மார்க்சிய சிந்தனைகள் இந்தப் பின்புலத்தில் 1972ல் தலித் பைந்தர் அமைப்பு .. என்று தொடர் அலையாக எழுந்த ஒடுக்கப்பட்ட மக்களின் குரல். அந்தக் குரலைப் பதிவு செய்திருக்கும் தலித் இலக்கியங்கள். அதிலும் குறிப்பாக 1980களில் தலித் எழுத்தாளர்களின் 'தன் வரலாற்று" பாணியிலான தலித் வரலாறு மார்க்சிய சிந்தனைகளையும் சேர்த்தே புரட்டிப் போட்டது.

தலித் எழுதாளர் தயாப்வாரின் "பலுட்டா " -சமூக உரிமை (1978) லஷ்மண் மானேயின் " யுபரா"- அந்நியன் (1980) லஷ்மண் கெய்க்க்வாட்டின் "யுசல்ய -அற்பத்திருடன் (1987) பெண் தலித் எழுத்தாளர் பேபி காம்ப்ளேயின் 'ஜின் அமுச்" (இப்படியாக எங்கள் வாழ்க்கை) இவை அனைத்தும் தலித் தன் வரலாற்று பதிவுகளில் குறிப்பிடத்தக்கன. இக்காலக்கட்டத்தில் வெளிவந்த சரண்குமார் லிம்பாளேயின் "அக்கர்மஷி" வெளிவந்தவுடன் மிகவும் பேசப்பட்ட ஒரு பதிவு. அக்கர்மஷி என்றால் ஜாதிபிரஷ்டம் செய்யப்பட்டவன் - THE OUTCASTE என்று பொருள். ஜாதிகளால் விலக்கிவைக்கப்பட்டவன் என்றும் பொருள் கொள்ளலாம்.

கவிதை: நானே பிரம்மா! - வ.ந.கிரிதரன் -

இவனது கடவுள் AI என்றால், இவனை வடிவமைத்துச் சிரிக்க வைத்த படைப்புக் கடவுள் பிரம்மா நானேதான். ஆழ்ந்த சிந்தனையில் இருந்த இவனை அடக்க முடியாமல் ...