Monday, November 24, 2025

புகழ்பெற்ற நர்த்தகி குமாரி கமலாவும் மறைந்தார். ஆழ்ந்த இரங்கல்.


பாவை விளக்'கில் குமாரி கமலா: 'நான் உன்னை நினைக்காத நேரமுண்டோ?':


நான் முதன் முதலாக குமாரி கமலாவை அறிந்துகொண்டது என் அப்பா, அம்மா மூலமே. இருவருக்கும் குமாரி கமலாவின் மீது மிகுந்த விருப்பமுண்டு. எப்பொழுதும் அவரின் நடனத்திறமையினைச் சிலாகித்து உரையாடுவார்கள். அவர் பிரபல கேலிச்சித்திரக்காரரான ஆர்.கே.லக்சுமணனை முதலில் திருமணம் செய்த விடயத்தையும், ஆர்.கே.எல் அவர்கள் அப்பாவுக்குப் பிடித்த பிரபல எழுத்தாளர்களில் ஒருவரான ஆர்.கே.நாராயணனின் சகோதரர் என்னும் விடயத்தையும் அப்பா மூலமே முதன் முதலில் அறிந்தேன். அப்பாவிடம் ஆர்.கே.என்னின் ஆங்கில நாவல்களின் சேகரிப்பிருந்தது. கூடவே ஆர்.கே.என்னை மேற்குலகுக்கு அறிமுகப்படுத்திய எழுத்தாளர் கிறகாம் கிறீனின் நாவற் சேகரிப்புமிருந்தது.

'நாம் இருவர்' திரைப்படத்தில் குமாரி கமலா பாரதியாரின் இந்திய சுதந்திர வேட்கைப்'பாடல்களுக்குச் சிறப்பாக ஆடியதையும் அவர்கள் நினைவு கூர்ந்திருக்கின்றார்கள். அவற்றிலொன்றான 'ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே' என்னும் பாடலையும் அம்மா பாடிக்காண்பித்திருக்கின்றார்.

நான் பார்த்த குமாரி கமலாவின் முதற் திரைப்படம் 'பாவை விளக்கு'. றீகலில் பழைய தமிழ்ப் படமாக எழுபதுகளில் வெளியானபோது , இரவு இரண்டாம் காட்சியாகப் பார்த்திருக்கின்றேன். பார்ப்பதற்கு முன்னரே அகிலனின் 'பாவை விளக்கு'நாவலை வாசித்திருந்ததால் நீண்ட நேரமாக ஓடிய அப்படத்தை விருப்புடன் பார்த்து இரசித்தேன். நாவலில் வரும் செங்கமலம் பாத்திரமாகத் திரையில் வருவார் குமாரி கமலா. அவருக்கு மிகவும் பொருத்தமான பாத்திரம்.

'பாவை விளக்கு' திரைப்படத்தில் வரும் 'நான் உன்னை நினைக்காத நேரமுண்டோ'என்னுமிப் பாடல் எனக்குப் பிடித்த பாடல்களிலொன்று. மிகவும் பிடித்த குமாரி கமலாவின் திரைப்பட ஆடற்காட்சியும் இதுதான். கவிஞர் அ.மருதகாசியின் வரிகளுக்கு இசையமைத்திருப்பவர் கே.வி.மகாதேவன்.

https://www.youtube.com/watch?v=gxTM8X0OprM


குமாரி கமலா பற்றிய சிறப்பான விவரணக் காணொளித்தொகுப்பு 'Fragrant Petals: Kamala's Natyam' (நறுமணப் பூவிதழ்கள்: கமலாவின் நாட்டியம்).

ஜேர்ஸி கொஸின்ஸ்கியின் 'நிறமூட்டப்பெற்ற பறவை' (The Painted Bird) அல்லது 'வண்ணம் பூசிய பறவை'.


ஜேர்ஸி கொஸின்ஸ்கியைத் தமிழ் இலக்கிய உலகுக்கு முதன் முதலில் அறிமுகப்படுத்திய எனது  கட்டுரை சுபமங்களா இதழில் வெளியான Being There கட்டுரை. அது அவரது புகழ்பெற்ற நாவல். அளவில் சிறியதானாலும் காரம் மிக்க நாவல். திரைப்படமாகவும் வெளியானது. விம்ப ஆராதனை மிக்க தற்காலச்சமுதாயத்தை விமர்சிக்கும் நாவல். 
 
ஜேர்ஸி கொஸின்ஸ்கி போலந்திலிருந்து அமெரிக்காவுக்குக் குடிபுகுந்து , ஆங்கிலத்தில் எழுதத்தொடங்கி , ஆங்கில இலக்கியத்தில் தடம் பதித்த எழுத்தாளர்.
இவரது 'நிறமூட்டப்பெற்ற பறவை' (The Painted Bird) நாவல் இருபதாம் நூற்றாண்டு அமெரிக்க இலக்கியத்தில்; முக்கிய படைப்பாகக் கருதப்படும் படைப்பு. 1965இல் வெளியான இந்நாவல் இதுவரை முப்பதுக்கும் அதிகமான உலக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இரண்டாம் உலகயுத்தக் காலத்து மானுட உரிமை மீறல்கள் வாசிப்பவர்தம் இதயங்கள் உறையும் வகையில் சில இடங்களில் மிகவும் குரூரமாக விபரிக்கப்பட்டுள்ளதால் வாசகர்களை அதிர்ச்சியடைய வைத்தது. 

'படுபட்சி' நாவல் பற்றிய எழுத்தாளர் இளங்கோவின் முக்கிய விமர்சனக் குறிப்புகளும், அவரது இறுதியான புரிதலும் பற்றி...


எழுத்தாளர் இளங்கோ (டிசெதமிழன்) படுபட்சி நாவல் பற்றி முன் வைக்கும் முக்கியமான விமர்சனக் குறிப்புகள் இவை,. இவை அவரது முகநூற் பக்கத்தில் வெளியான பதிவிலிருந்து பெறப்பட்டவை. 
 
இக்குறிப்புகள் அவரிடத்தில் ஒரு கேள்வியை எழுப்பியிருக்க வேண்டும். உண்மையில் டிலுக்ஸன் மோகனின் நூல் சுய அனுபவத்தின் அடிப்படையில் எழுதப்பட்ட புனைவா? அல்லது சுய அனுபவம் என்னும் பெயரில் உருவாக்கப்பட்ட புனைவா? ஏனென்றால் இளங்கோவின் இப்புரிதல்கள் நியாயமானவை. ஆனால் இவ்விதம் நூலைப் புரிந்து கொண்ட அவருக்கு நூலின் நம்பகத்தன்மை பற்றிக் கொஞசமும் சந்தேகம் ஏற்படவில்லை. அவர் இறுதியில் வந்தடைந்துள்ள முடிவுகள் வருமாறு:

Sunday, November 23, 2025

படுபட்சி, நட்சத்திரப் பட்சி, படுபட்சி நாட்கள்!


'பஞ்சபட்சி' சாத்திரத்தின் படி பட்சிகள் ஐந்து வகை. அவை: வல்லூறு, ஆந்தை, காகம், கோழி, மயில் மனிதர் ஒவ்வொருவரும் அவர் பிறந்த நட்சத்திரத்தின் அடிப்படையில் இப்பட்சிகளில் ஒன்றுடன் அடையாளப்படுத்தப்படுவார்கள். இதனை 'நட்சத்திரப் பட்சி' என்பார்கள். இப்பட்சிகள் ஒவ்வொன்றுக்கும் குறிப்பிட்ட நாட்கள் அல்லது பொழுதுகள் நல்லவை அல்ல. அத்தருணங்களில் அப்பட்சிக்குரிய மனிதர்கள் காரியங்கள் எவற்றையும் செய்வதைத்தவிர்க்க வேண்டும். செய்தால் வெற்றி கிடைக்காது என்கின்றது பஞ்சபட்சிச் சாத்திர அடிப்படையிலான சோதிடம். அவ்வகையான நாட்கள் 'படுபட்சி' நாட்கள் எனப்படும். ஒவ்வொரு பட்சிக்கும் இவ்வகையான நாட்கள் உள்ளன. அவை 'படுபட்சி' நாட்கள் என அழைக்கப்படுகின்றன.
 
இங்கு குறிப்பிடப்படும் 'படுபட்சி'க்கும் அண்மையில் வெளியான 'படுபட்சி' நாவலுக்கும் என்ன ஒற்றுமை? என்னைப்பொறுத்தவரை எவ்வித ஒற்றுமையுமில்லை. பின் ஏன் படுபட்சி என்று பெயர் வைத்தார்கள்?
 
அந்நாவல் பறப்பதற்காகச் செய்த விமானமொன்றுக்குப் பறக்க முடியாத சந்தர்ப்பம் ஏற்பட்டு விடுவதை விபரிக்கின்றது என்பதை வெளியான விமர்சனங்கள் மூலம் அறிய முடிகின்றது. பறப்பதற்காக உருவாக்கப்பட்ட உலோகப்பட்சியான அந்த விமானத்துக்குப் பறக்க முடியாமல் தரையில் படுத்திருக்கும் நிலை. இதனால் பறக்காமல் படுத்திருக்கும் பட்சி என்பதைக்குறிக்க படுபட்சி அதாவது படுத்திருக்கும் பட்சி என்று நாவலைத் திருத்திச் செம்மைப்படுத்தியவர் வைத்திருக்கக்கூடும்.
 
[டிஜிட்டல் ஓவியத் தொழில் நுட்ப , Google Nano Banana , உதவி: VNG]

Thursday, November 20, 2025

எழுத்தாளர்களே! உங்களுக்காகச் சில வார்த்தைகள்!


எழுத்துலக ஆளுமைகள் தம் பக்தகோடிகளை உருவாக்க, வளர்க்கப் பாவிக்கும் முக்கியமான ஐந்து வழிகள்:
 
1. கோஸ்ட் ரைட்டிங் (Ghost Writing)
2. பிரபலமான பதிப்பங்கள் மூலம் எழுத்தாளர்களின் நூல்களைப் பதிப்பிக்க உதவி செய்தல்.
3. விருதுகள் வழங்கல்.
4. முதுகு சொறியும் விமர்சனங்கள் எழுதுதல்.
5. பக்தகோடிகள் பதிலுக்கு ஏற்பாடு செய்யும் கூட்டங்களில் முதன்மையானவராகத் தம்மை அடையாளப்படுத்தல்.
 
நான் இதுவரை மனித உரிமைக்காக உளச்சுத்தியுடன் செயற்படுபவர்களாகக் கருதிய சில ஆளுமைகளும் இவ்விதமான பதிலுக்குப் பதில் முதுகு சொறியும் பக்தகோடிகளே என்பதை கண்டு பிரமித்திருக்கின்றேன்.
 
வளர்ந்து வரும் எழுத்தாளர்களுக்கு நான் கூறுவது:
 
எதற்காகவும் ,யாருக்காகவும் உங்கள் சுயத்தை இழந்து விடாதீர்கள், எவரையும், எதையும் திருப்திப்படுத்துவதற்காக எழுதாதீர்கள்( உழைப்புக்காக எழுதும் வர்த்தக எழுத்தாளர்களை இங்கு நான் குறிப்பிடவில்லை) . 
 
உங்கள் உணர்வுகளைக் குறை, நிறைகளுடன் வெளிப்படுத்துங்கள். 
 
முதலில் ஒரு வாசகராக , உங்கள் எழுத்துகள் உங்களுக்குத் திருப்தியைத் தருபவையாக இருக்க வேண்டும். இன்னொருவருக்குத் திருப்திப்படுத்தும் எழுத்துகளாக மட்டும் அவை இருக்கக் கூடாது.
 
[டிஜிட்டல் ஓவியத் தொழில் நுட்ப , Google Nano Banana , உதவி: VNG. என் புகைப்படத்தைக் கொடுத்தேன். நிபந்தனைகளை எடுத்துரைத்தேன். கூகுள் நனோ பனானா இவ்விதம் வரைந்து தந்தது. நன்றி நனோ பனானா!]

Tuesday, November 18, 2025

புகலிடக்கதை : சொந்தக்காரன்! - வ.ந..கிரிதரன் -


[டிஜிட்டல் ஓவியத் தொழில் நுட்ப , Google Nano Banana , உதவி: VNG] 

 
* கணையாழி டிசம்பர் 2000 'கனடா சிறப்பிதழில் வெளியான சிறுகதை. - 

கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலங்களாக விடாமல் உறை பனி மழை பொழிந்து கொண்டிருந்தது. வீதிகளெல்லாம் உறை பனி படிந்து, படர்ந்து ..போதாதற்குக் குளிர் வேறு. சோமசுந்தரம் மணியைப் பார்த்தார். இரவு மணி பத்தை நெருங்கிக் கொண்டிருந்தது. அவரிற்கு இந்தக் குளிரிலை, கொட்டுகின்ற உறை பனி மழையில் நனைந்தபடி வேலைக்குச் செல்லவே விருப்பமில்லாமலிருந்தது. ஊரங்கிக் கிடக்கும் இந்தச் சமயத்தில் சாமத்துக் கோழியாக அலைய வேண்டியிருக்கிறதே என்று நொந்து கொள்ளத்தான் முடிந்தது. ஊரிலை அவர் ஒரு பௌதிக ஆசிரியர். அவரிடம் பயின்ற எத்தனை மாணவர்கள் 'டாக்டர்கள்', 'எஞ்சினியர்கள்' என்று வந்திருக்கின்றார்கள். ஆனால் ..இங்கோ அவரோ ஏழு நாட்களும் வேலை செய்து கனடாவின் பொருளாதாரத்தினைக் கட்டியெழுப்பும் நல்லதொரு 'இமிகிரண்ட்'. வார நாட்களில் தொழிலாளி; வார இறுதி நாட்களில் தொழிலாளியைக் கண்காணிக்கும், முதலாளிக்கு ஏவல் புரியும் ஒரு கடமை தவறாத பாதுகாவலன். சற்று முன்னர் அவரது மேலதிகாரி ஜோ குறோபட் தொலைபேசியில் கூறியது நினைவிற்கு வந்தது.

"சாம். இன்று உனக்கு நகர மண்டபப் பாதாள வாகன தரிப்பிடத்தில் தான் வேலை. .கடந்த ஒரு வாரமாக நிறைய முறைப்பாடுகள் ...பல வாகனங்களிலிருந்து பொருட்கள் பல களவாடப் பட்டிருக்கின்றன... பல 'வீதி மக்கள்' இரவு நேரங்களில் அங்கு படுத்துறங்குவதாகப் பலர் முறைப்பாடுகள் செய்திருக்கின்றார்கள்... எனக்கு உன்னில் நிறைய நம்பிக்கையுண்டு. கடமை தவறாத கண்டிப்பான பாதுகாவலன் நீ...யாரும் அங்கு அத்துமீறிப் பிரவேசிக்காதபடி பார்த்துக் கொள்ள வேண்டியது உனது பொறுப்பு.."

புகலிடச் சிறுகதை : கணவன் - வ.ந.கிரிதரன் -


பல்கணியிலிருந்து எதிரே விரிந்திருந்த காட்சிகளில் மனம் ஒன்றாதவனாகப் பார்த்தபடிநின்றிருந்தான் சபாபதி. கண்ணிற்கெட்டியவரை கட்டங்கள். உயர்ந்த, தாழ்ந்த, அகன்ற, ஒடுங்கிய கட்டடங்கள். டெஸ்மண்ட் மொறிஸ் கூறியது போல் மனிதமிருகங்கள் வாழ்கின்ற கூடுகள். நகரங்கள் மனித மிருகங்கள் வாழுகின்ற மிருககாட்சிச்சாலை என்று அவர் குறிப்பிட்டதில் தவறேதுமிருப்பதாகத் தெரியவில்லை. பார்க்கப் போனால் இன்றைய மனிதனின் அடிப்படைப் பிரச்சினை களிற்கு ஒரு வகையில்நகரங்களும் காரணமாயிருக்கலாம். மிருகங்களை கூண்டுகளில் அடைத்து வாழ நிர்ப்பந்திக்கும் போது அவற்றின் இயல்புகளில் ஏற்படும் மாற்றங்கள் பல, நகரத்தில் செறிந்திருக்கும் கட்ட டக் கூண்டுகளிற்குள் அடைப்பட்டுக் கிடக்கும் மனித மிருகங்களிலும் காணப்படுகின்றனவாம், நகரத்தில் இருந்து கொண்டுதானே இன்றைய மனிதன் சக மனிதன் மேல் அதிகாரத்தைப் பிரயோகிக்கின்றான். X=Y Y=Z, ஆகவே X-Z என்ற வகையான கணித சாத்திரத்திற்குரிய தர்க்க நியாயத்தின்படி பார்க்கப்போனால் இன்றைய மனிதனின் பிரச்சினைகளிற்கு முக்கிய காரணம் நகரத்து மனிதன் என்றல்லவா ஆகிவிடுகின்றது. இது பற்றியெல்லாம் சிந்திக்கும் மனநிலையில் சபாபதி இருக்கவில்லை.

வ.ந.கிரிதரன் பாடல் - உழைப்பவர் உருவாக்குவதே வரலாறு.

வ.ந.கிரிதரன் பாடல் - உழைப்பவர் உருவாக்குவதே வரலாறு. இசை & குரல்: AI SUNO  | ஓவியம்: AI வரலாறு என்பது தனிமனிதர் வரலாறு அல்ல. வரலாறு  உற்ப...