Thursday, July 29, 2021

சிறு நாவல்: பால்ய காலத்துச் சிநேகிதி! - வ.ந.கிரிதரன் -

அத்தியாயம் ஒன்று: அதிகாலையில் பூத்த மலர்!

'டொராண்டோ' மாநகரத்து வானமிருண்டு கிடந்தது. தான் வசிக்கும் தொடர்மாடியின் பல்கணியிலிருந்து வழக்கம்போல் நகரத்து வானை சாய்வு நாற்காலியிலிருந்து நோக்கிக்கொண்டிருந்தான் மணிவண்ணன். அவனுக்கு மிகவும் பிடித்தமான விடயங்களில் இயற்கையை இரசித்தல், குறிப்பாக இரவு வானை இரசித்தல் அடங்கும். அது அவனது சிறுவயதிலிருந்து அவனுக்கு ஏற்பட்ட பழக்கங்களிலொன்று. என்று முதன் முதலாக 'கண் சிமிட்டும்! கண் சிமிட்டும்! சிறிய நட்சத்திரமே! ' ('டுவிங்கிள்! டுவிங்கிள்! லிட்டில் ஸ்டார்' ) குழந்தைப்பாடலைக் கேட்டானோ அன்றிலிருந்து அவனை ஆட்கொண்ட விருப்புகளிலொன்று இவ்விருப்பு.

"கண் சிமிட்டும்! கண் சிமிட்டும்! சிறிய நட்சத்திரமே!
நீ என்னவென்று நான் வியப்புறுகின்றேன்.
அங்கே மேலே உலகம் மிகவும் உயரமானது,
வானின் வைரம் போன்று விளங்குகின்றாய்."

அவனுக்கு 'அங்கே மேலே உலகம் மிகவும் உயரமானது' என்னும் வரி மிகவும் விருப்பமானது. அவ்வரி அவனது கற்பனையை எப்பொழுதும் சிறகடிக்க வைக்கும் வரிகளிலொன்று. அங்கே உயரத்தில் விரிந்து , உயர்ந்து , பரந்து கிடக்கும் ஆகாயத்தில்தான் எத்தனை சுடர்கள்! எத்தனை நட்சத்திரக் கூட்டங்கள்! எத்தனை எத்தனை கருந்துளைகள்! எத்தனை பிரபஞ்சங்கள்! நினைக்கவே முடியாத அளவுக்கு விரிந்த பிரபஞ்சம்! அவனுக்குப் பல்விதக் கற்பனைகளை, கேள்விகளை அள்ளித்தருவது வழக்கம். அக்கேள்விகள் அவனது சிந்தனைக் குதிரைகளைத் தட்டிப் பயணிக்க வைக்கும் ஆற்றல் மிக்கவை. அச்சிந்தனைக் குதிரைப்பயணங்களிலுள்ள இன்பம் அவனுக்கு வேறெந்தப் பயணத்திலும் இருப்பதில்லை. முடிவற்று விரியும் சிந்தனைக்குதிரைகளின் பயணங்களுக்குத் தாம் முடிவேது? முப்பரிமாணச்ச்சிறைக்குள் வளையவரும் மானுட உலகின் பரிமாணங்களை மீறிய பரிமாணங்களை உள்ளடக்கியதாகப் புதிருடன் அவனுக்கு விரிந்து கிடக்கும் இரவு வானும், பிரபஞ்சமும், கொட்டிக்கிடக்கும்  நட்சத்திரங்களும் தெரியும். 'டொரோண்டோ' நகரத்து வான் பூமத்திய ரேகைக்கு அருகிலிருக்கும் இரவு வானைப்போல் நட்சத்திரங்கள் கொட்டிக்கிடக்கும் இரவு வானல்ல. அதற்கு நகரிலிருந்து வெளியே செல்ல வேண்டும். நகரத்து ஒளிமாசிலிருந்து வெளியேற வேண்டும். இருந்தாலும் இருண்டு கிடக்கும் நகரத்து வானையும் கூர்ந்து நோக்கத்தொடங்கினால் ஒன்று, இரண்டு , மூன்று . .என்று இருட்டுக்குப் பழகிய கண்களுக்குத் தெரியத்தொடங்கிவிடும். அது போதும் அவனுக்கு.

Sunday, July 25, 2021

கேட்டு மகிழ்வோம்: வ.ந.கிரிதரனின் ' ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை'


எனது சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை'  என்னும் கதையினை 'Witty Garden' என்னும் 'யு டியூப் சன'லில் கேட்டு மகிழுங்கள். இச்சிறுகதை முதலில் தாயகம் (கனடா) பத்திரிகையில் பிரசுரமானது. பின்னர் பதிவுகள், திண்ணை ஆகிய இணைய இதழ்களில் வெளியானது. இதன் ஆங்கில மொழிபெயர்ப்பு லதா ராமகிருஷ்ணனால் செய்யப்பட்டது. அதனை இலண்டலிருந்து வெளியான 'தமிழ் டைம்ஸ்' ஆங்கிலச் சஞ்சிகை மீள் பிரசுரம் செய்தது.

Friday, July 23, 2021

கவிதை: மகா புலவரும் மகா கவிஞரும்! - வ.ந.கிரிதரன்


மகாகவிஞர் அவர் என்று கூறுவர்.
சொற்களைத் தேர்ந்துடுத்து
சோகங்களை வடித்தெடுப்பதில்
அவர் வல்லவர்.
அவரது கவிதை வரிகளில்
அவர் வெளிப்படுத்தும் உணர்வுகள்
அவரது ஆழ்மனத்து உணர்வுகள்
அல்ல.
அவரது ஆழ்மனத்தை மூடிநிற்கும்
அவரது வெளிமனத்தின் செருக்குகள் அவை. 

அபுனைவிலொரு புனைவோவியம் : 'கமலாம்பாள் சரித்திரம்' நாவற் காட்சி!

அபுனைவொன்றில் குறிப்பிடப்படும் புனைவொன்றில் இடம் பெறும் காட்சிக்கான அட்டை ஓவியம்!
 

 
இங்குள்ள கல்கி சஞ்சிகையின் ஓவியர் விஜயா வரைந்த அட்டை ஓவியத்துக்குச் சிறப்பொன்றுண்டு. பொதுவாக பத்திரிகைகள், சஞ்சிகைகளில் வெளியாகும் புனைகதைகளுக்குத்தான் ஓவியங்கள், அட்டை ஓவியங்கள் வரைவார்கள். ஆனால் இங்குள்ள அட்டை ஓவியமோ அபுனைவில் குறிப்பிடப்படும் புனைகதையொன்றில் இடம் பெறும் காட்சிக்காக வரையப்பட்ட ஓவியம்.

மணிமேகலையின் காதல்!


பொன்னியின் செல்வன் நாவலை ஐந்து பாகங்கள் நீட்டிய கல்கி நாவலை எவ்விதம் அனைவரையும் கவரும் வகையில் படைத்தாரோ அவ்விதமே இறுதி அத்தியாயத்தையும் மறக்க முடியாதவகையில் படைத்திருப்பார்.
அதுவரை நாவலில் வரும் முக்கிய பாத்திரங்கள் வந்தியத்தேவன், குந்தவை, வானதி, பெரிய/சின்ன பழுவேட்டைரையர்கள், பூங்குழலி, சேந்தன் அமுதன்., ஆழ்வார்க்கடியான், அருண்மொழிவர்மன், நந்தினி. மந்தாகினி. ஆனால் நாவலின் முடிவு முக்கியப்படுத்துவது வந்தியத்தேவனையும் , அதுவரை அதிகம் முக்கியப்படுத்தப்படாமலிருந்த கடம்பூர் சம்புவரையரின் புத்திரியான மணிமேகலையையும்தாம். 

Tuesday, July 20, 2021

வ.ந.கிரிதரனின் 'கண்ணம்மா'க் கவிதைகள் (1): காலவெளிக் கைதிகள்!


காலவெளியிடையே கண்ணம்மா உன்
கனிமனம் எண்ணி வியக்கின்றேன்.
காலவெளியிடையே கண்ணம்மா
கணமும் பறந்திட விளைகின்றேன்.
காலவெளிச் சிந்திப்பிலே கண்ணம்மா
களித்திட கணமும் எண்ணுகின்றேன்.
சூழலை மீறியே கண்ணம்மா
சிந்திக்க விரும்புகின்றேனடி.
காலமென்றொன்றில்லை கண்ணம்மா.
வெளியும் அவ்வாறே கண்ணம்மா.
காலவெளி மட்டுமே கண்ணம்மா இங்கு
உண்மையடி கண்ணம்மா.

காலத்தால் அழியாத கானம்: "மயக்கும் மாலைப்பொழுதே நீ போ"



குலேபகாவலி (1955) திரைப்படத்தில் இடம் பெற்றிருக்கும் இப்பாடலைப் பாடியுள்ளவர்கள் ஜிக்கி & ஏ.எம்.ராஜா. இப்பாடலை எழுதியவர் எழுத்தாளர் விந்தன். கூண்டுக்கிளிக்காக எழுதிய பாடலிது. இப்பாடலுக்கு இசையமைத்தவர் கே.வி.மகாதேவன். ஆனால் இப்பாடல் இடம் பெற்றதோ குலேபகாவலி திரைப்படத்தில். அதன் இசையமைப்பாளர் விஸ்வநாதன் & ராமமூர்த்தி இரட்டையர்கள். அதனால் இப்பாடலின் இசையையும் அவர்கள் பெயரில் போட்டுவிட்டார் தயாரிப்பாளரான ஆர்.ஆர்.பிக்ஸ்சர்ஸின் உரிமையாளரான டி.ஆர்.ராமண்ணா. 

காலத்தால் அழியாத கானம்: "வித்தாரக் கள்ளியெல்லாம் விறகு வெட்டப் போகையிலே"


"கையைத் தொட்டதும் மெய்யைச் சிலிர்க்குதே.
காதலின் வேகம் தானா?
அந்திக் காலத்தின் யோகம்தானா?
அனுராகத்தின் யோகம்தானா?" - கவிஞர் தஞ்சை ராமையாதாஸ் -
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
எம்ஜிஆருக்கு மாறு வேசங்கள் பொருந்துவதைப்போல் வேறெந்த நடிகருக்கும் பொருந்துவதில்லை. பல படங்களில் மாறு வேடங்களில் வந்து அவர் பாடும் பாடல்கள் பல கருத்தாழம் மிக்கவை. ஆனால் 'குலேபகாவலி' திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள இந்தப் பாடல் ஒரு காதற் பாடல். இதில் எம்ஜிஆருடன் நடித்திருப்பவர் நாற்பதுகளில், ஐம்பதுகளில் தமிழ்த்திரையுலகின் கனவுக்கன்னியாக விளங்கிய டி.ஆர்.ராஜகுமாரி. (இயக்குநர் டி.ஆர்.ராமண்ணாவின் சகோதரி. சென்னையில் நீண்ட காலம் இயங்கிய ராஜகுமாரி திரையரங்கின் உரிமையாளர்.)

'பதிவுகள்' இணைய இதழின் ஊடகத்தகவற் தொகுப்பு (Media Kit)

எழுத்தாளர் வ.ந.கிரிதரனை ஆசிரியராகக் கொண்டு , "அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்" என்பதைத்தாரக மந்திரமாகக்கொண்டு 2000ஆம் ஆண்டிலிருந்து வெளியாகும் இணையத்தமிழ் இதழ் 'பதிவுகள்'. 'பதிவுகள்' இணைய இதழை https://www.geotamil.com , https://www.pathivukal.com ஆகிய இணையத்தள முகவரிகளில் வாசிக்கலாம். உங்கள் படைப்புகளையும், கருத்துகளையும் ngiri2704@rogers.com அல்லது editor@pathivukal.com என்னும் மின்னஞ்சல் முகவரிகளிலொன்றுக்கு அனுப்பி வையுங்கள்.
 
'பதிவுகள்' இணைய இதழின் ஊடகத்தகவற் தொகுப்பினை (Media Kit) இங்கு பகிர்ந்துகொள்கின்றேன்.
 

 

இயல்பான நடிப்பை வெளிப்படுத்தும் மலையாளத் திரைப்படப்பாடலொன்று - 'ஒரு நாலு நாளாய் என்னிலுள்ளே தீயாக' !

மலையாளத்திரைப்படங்களில் எனக்குப் பிடித்த ஒரு விடயம் - அது கலைப்படைப்பாக இருக்கட்டும் அல்லது வெகுசனப் படைப்பாக இருக்கட்டும், இயக்குநர்கள் இயல...

பிரபலமான பதிவுகள்