Thursday, July 29, 2021

சிறு நாவல்: பால்ய காலத்துச் சிநேகிதி! - வ.ந.கிரிதரன் -

அத்தியாயம் ஒன்று: அதிகாலையில் பூத்த மலர்!

'டொராண்டோ' மாநகரத்து வானமிருண்டு கிடந்தது. தான் வசிக்கும் தொடர்மாடியின் பல்கணியிலிருந்து வழக்கம்போல் நகரத்து வானை சாய்வு நாற்காலியிலிருந்து நோக்கிக்கொண்டிருந்தான் மணிவண்ணன். அவனுக்கு மிகவும் பிடித்தமான விடயங்களில் இயற்கையை இரசித்தல், குறிப்பாக இரவு வானை இரசித்தல் அடங்கும். அது அவனது சிறுவயதிலிருந்து அவனுக்கு ஏற்பட்ட பழக்கங்களிலொன்று. என்று முதன் முதலாக 'கண் சிமிட்டும்! கண் சிமிட்டும்! சிறிய நட்சத்திரமே! ' ('டுவிங்கிள்! டுவிங்கிள்! லிட்டில் ஸ்டார்' ) குழந்தைப்பாடலைக் கேட்டானோ அன்றிலிருந்து அவனை ஆட்கொண்ட விருப்புகளிலொன்று இவ்விருப்பு.

"கண் சிமிட்டும்! கண் சிமிட்டும்! சிறிய நட்சத்திரமே!
நீ என்னவென்று நான் வியப்புறுகின்றேன்.
அங்கே மேலே உலகம் மிகவும் உயரமானது,
வானின் வைரம் போன்று விளங்குகின்றாய்."

அவனுக்கு 'அங்கே மேலே உலகம் மிகவும் உயரமானது' என்னும் வரி மிகவும் விருப்பமானது. அவ்வரி அவனது கற்பனையை எப்பொழுதும் சிறகடிக்க வைக்கும் வரிகளிலொன்று. அங்கே உயரத்தில் விரிந்து , உயர்ந்து , பரந்து கிடக்கும் ஆகாயத்தில்தான் எத்தனை சுடர்கள்! எத்தனை நட்சத்திரக் கூட்டங்கள்! எத்தனை எத்தனை கருந்துளைகள்! எத்தனை பிரபஞ்சங்கள்! நினைக்கவே முடியாத அளவுக்கு விரிந்த பிரபஞ்சம்! அவனுக்குப் பல்விதக் கற்பனைகளை, கேள்விகளை அள்ளித்தருவது வழக்கம். அக்கேள்விகள் அவனது சிந்தனைக் குதிரைகளைத் தட்டிப் பயணிக்க வைக்கும் ஆற்றல் மிக்கவை. அச்சிந்தனைக் குதிரைப்பயணங்களிலுள்ள இன்பம் அவனுக்கு வேறெந்தப் பயணத்திலும் இருப்பதில்லை. முடிவற்று விரியும் சிந்தனைக்குதிரைகளின் பயணங்களுக்குத் தாம் முடிவேது? முப்பரிமாணச்ச்சிறைக்குள் வளையவரும் மானுட உலகின் பரிமாணங்களை மீறிய பரிமாணங்களை உள்ளடக்கியதாகப் புதிருடன் அவனுக்கு விரிந்து கிடக்கும் இரவு வானும், பிரபஞ்சமும், கொட்டிக்கிடக்கும்  நட்சத்திரங்களும் தெரியும். 'டொரோண்டோ' நகரத்து வான் பூமத்திய ரேகைக்கு அருகிலிருக்கும் இரவு வானைப்போல் நட்சத்திரங்கள் கொட்டிக்கிடக்கும் இரவு வானல்ல. அதற்கு நகரிலிருந்து வெளியே செல்ல வேண்டும். நகரத்து ஒளிமாசிலிருந்து வெளியேற வேண்டும். இருந்தாலும் இருண்டு கிடக்கும் நகரத்து வானையும் கூர்ந்து நோக்கத்தொடங்கினால் ஒன்று, இரண்டு , மூன்று . .என்று இருட்டுக்குப் பழகிய கண்களுக்குத் தெரியத்தொடங்கிவிடும். அது போதும் அவனுக்கு.

மணிவண்ணன் இன்னும் திருமணம் செய்யவில்லை. தனித்து வாழ்கின்றான். நிறுவனங்களுக்குத் தேவையான மென்பொருள் எழுதிச் சுயதொழில் செய்பவன். அவனது திருமணச் சேவை  இணையத்தளம் மூலம் அவனுக்கு நியாயமான அளவுக்கு மாத வருமானம் மேலதிகமாக வருவதால் , அவனது வாழ்க்கை அவன் நினைத்தவாறு, அவனது விருப்புக்கேற்ப நகர்ந்து கொண்டிருக்கின்றது. அவ்வப்போது தனிப்பட்ட சிலர் அவனை நாடி வருகையில் நியாயமான கட்டணத்தில் அவர்களுக்கு இணையத்தளம் அமைத்துத் தருகின்றான்; இணையத்தொழில் நுட்பம் அறிய விரும்பும் எவருக்கும் ஏற்ற நேரத்தில் தன் இருப்பிடத்தில் தனிப்பட்ட வகுப்புகள் அல்லது குழு வகுப்புகள் வழங்கி வருகின்றான். அவன் சுயதொழில் செய்யத் தொடங்கியதற்கு முக்கிய காரணம்.. ஆரம்பத்தில் அவனும் பன்னாட்டு நிறுவனமொன்றில் வேலை பார்த்துக்கொண்டிருந்தவனே. ஆனால் அவனுக்குக் 'கார்ப்பரேட் கல்ட்சர்' பிடிக்கவேயில்லை. பரபரப்பும், உப்புச்சப்பற்ற ஒன்று கூடல்களும், நிறுவனக் கூட்டங்களும் அவனுக்கு வெறுப்பைத்தந்தன. அதிகாலை எழுந்தோடுவதும், மாலையில் வாகன நெரிச்சலில் அகப்பட்டு இருப்பிடம் வந்து சேர்வதிலுமே நாள் போய்விடும். அவனுக்குப் பிடித்த வேறெதனையும் செய்வதற்கே நேரம் கிடைப்பதில்லை. ஓரளவு பணம் வங்கியில் சேர்ந்ததும், அவன் சுயதொழிலில் கவனம் செலுத்தத் தொடங்கினான். இன்று அவனது சுயதொழில் அவனுக்குரிய ஓய்வினைத் தருகின்றது. அண்மைக்காலமாக அவனது இணையத்தளத்தின் வருமானம் அதிகரித்திருப்பதால், அதனை நிர்வகிக்க டோனி ஃஃபங் என்னும் இளம் தகவற் தொழில் நுட்பவியலாளனைப் பகுதி நேரமாக நியமித்திருந்தான்.மணிவண்ணனது சிந்தனை மீண்டும் இருண்டு , சுடர்விடும் நகரத்து வானில் நிலைத்தது; இலயித்தது. சிந்தனையும் பரந்து விரிந்தது.

'நான் இங்கு இங்கே தனிமையிலிருந்து நோக்கிக் சிந்தனையிலாழ்ந்துகொண்டிருப்பதைப்போல் அங்குமொன்றோ அல்லது பலவோ சிந்தனையிலாழ்ந்து கொண்டிருக்குமோ? அதுவும் என்னைப்போன்ற உடலமைப்பு கொண்டதாக, முப்பரிமாணச்சிறைக்குள் அடைக்கப்பட்டதொன்றாக இருக்குமோ? அல்லது பல்பாரிமாணங்கள் கொண்டவையாக அறிவில் சிறந்ததாக இருக்குமோ? அல்லது அறிவின் தொடக்கத்திலுள்ளவைதொன்றாக இருக்குமோ? எப்படியிருக்கும்? அலைவடிவமாக இருக்குமோ? கண்களுக்குத் தெரியாத சக்தி வடிவிலிருக்குமோ? எப்படியிருக்கும்? என்னை விட மேலான பல பரிமாணங்களில் இருப்பதால் என்னால் முடியாத பலவற்றை இலகுவாகச் செய்யுமாற்றல் மிக்கதாக இருக்குமோ? என்னைப்பொல் உணர்வுகள் கொண்டதாகவிருக்குமோ? உணவுண்பவையாக இருக்குமோ? அல்லது ஒளிச்சக்திபோல் , இயந்திர மனிதர்களைப்போல் ஏதேனுமொரு சக்திகொண்டு இயங்குமொன்றாகவிருக்குமோ?'

"இரவு வானில் நானிங்கிருந்து
இருப்பு பற்றிய சிந்தனையில் மூழ்கிக்கிடக்கின்றேன்.
அங்கு நீயும்
அவ்விதமே சிந்தனையிலாழ்ந்து கிடப்பாயோ?
நண்பனே!
நானிங்கு சிந்திப்பதைப்போல்
உனக்கும் சிந்தனையென்னும்
அமைப்புக்கொண்ட உடலமைப்பு
உண்டோ? அன்றி
வேறுவகையில் கணினியிலுள்ளதைப்போல்
சில்லுள்ள அமைப்புண்டோ?
அதுவுமற்று நாமறியா
அமைப்புண்டோ?
அறியத்தருவாயா நண்பனே!
எதற்கிந்த இருப்பு? எதற்கிந்த உலைச்சல்?
எதற்கிந்த அலைச்சல்?
எதற்கு? எதற்கு?
நிலையற்றதோரிருப்பு.
நிலையற்றதொன்றினிலேந்த
அலைச்சல்?
உலைச்சல்?
அர்த்தமற்ற இருப்பா? அல்லது
அர்த்தமென்றொன்றுண்டாவிந்த
இருப்புக்கு? இயம்பிடுவாய் நண்பனே!
இயம்பிடுவாய்!"

இவ்விதமே சிந்தனை விரிந்து கொண்டே சென்றது. நீண்டுகொண்டு சென்ற இவ்வகைச் சிந்தனைக்கு முடிவேதும் ஒருபோதுமிருக்கப்போவதில்லை. ஆனாலும் இவ்விதம் சிந்திப்பதிலோரின்பமிருக்கத்தான் செய்கிறது. இவ்விதம் இருந்தவரை சிந்தித்து மறைந்த மனிதர்களை , வாழும் மனிதர்களை அவனுக்கு மிகவும் பிடிக்கும். அவர்களது வாழ்க்கையை, எழுத்துகளை, சிந்தனைகளை அறிவதிலெப்போதும் அவனுக்கு அதிக ஆர்வமுண்டு. இவ்வகையில் அவனுக்கு மிகவும் பிடித்த மானுட  ஆளுமைகளில் முதலிடத்தில் இருப்பவர் மகாகவி பாரதியார். அவனிடம் எப்போதும் பாரதியாரின் முழுக்கவிதைகளும் அடங்கிய தொகுதியொன்றிருக்கும். அவ்வப்போது அவன் அத்தொகுதியையெடுத்துப் பக்கங்களைப் புரட்டுவான். அப்பக்கங்களில் கொட்டிக்கிடக்கும் சிந்தனைச் சுடர்களில் அவன் மெய்ம்மறந்து விடுவான். குறுகிய இருப்பில் பாரதியாரால் எவ்விதம் அவ்விதம் வாழமுடிந்தது! எழுத முடிந்தது! பாரதியாரின் சிந்தனைத் தெளிவும் ,ஆழமும் அவனை மிகவும் கவர்தவை. இருப்பின் சவால்களோ, துயரங்களோ அவரை ஒருபோதுமே பாதித்தது கிடையாதோ என்று தோன்றும் வரிகள் அவருடையவை. அவரும் சாதாரண மானுடர்களிலொருவராகப் பிறந்து, வாழ்ந்து மறைந்து போனவர்களிலொருவரே. ஆனால் அவற்றை விபரிக்கையில்தான் எத்தனை துடிப்பு! சிலிர்ப்பு! களிப்பு! இயற்கையைப்பற்றி, மானுட உணர்வுகளைப்பற்றி, மானுட அவலங்களைபற்றி எத்தனை கவிதைகள்! அவ்விதம் சொற்கள் அவரிடமிருந்து வந்து விழுந்திருக்கின்றன! மழையைப்பற்றி, காற்றைப்பற்றி, காலையைப்பற்றி, அந்தியைப்பற்றி , முதற்காதலைப்பற்றி, குயிலைப்பற்றி, விண்மீனைப்பற்றி, வால்வெள்ளியைப்பற்றி..  எத்தனை கவிதைகள்! 'சாதாரண வருஷத்துத் தூமகேது' அவனுக்கு ஒருபோதில் அதிகாலையில் அப்பாவுடன் பார்த்த வால்வெள்ளியைப்பற்றிய நினைவுகளையேற்படுத்தும்.

'தினையின் மீது பனை நின்றாங்கு
மணிச்சிறு மீன்மிசை வளர்வா லொளிதரக்
கீழ்த்திசை வெள்ளியைக் கேண்மை கொண்டிலகுந்
தூம கேதுச் சுடரே, வாராய்!'

இதுபோல் அவனுக்குப் பிடித்த இன்னுமொரு பாட்டு அவரது 'மழை'ப் பாட்டு.

" வெட்டி யடிக்குது மின்னல் - கடல்
வீரத்திரை கொண்டு விண்ணை யிடிக்குது.
கொட்டி யிடிக்குது மேகம் - கூ
கூவென்று விண்ணைக் குடையுது காற்று."

அவரது அக்கினிக்குஞ்சு அவனுக்குப் பிடித்த இன்னுமொரு கவிதை. அற்புதமான படிமம். அக்கினிக்குஞ்சு. அவனுக்கு மிகவும் படித்த படிமங்களிலொன்று.

"அக்கினிக் குஞ்சொன்று கண்டேன். - அதை
அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்.
வெந்து தணிந்தது காடு. - தழல்
வீரத்திற் குஞ்சென்று மூப்பென்று முண்டோ?
தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்'

மானுட குலத்தின் வளர்ச்சியிலொரு படிக்கட்டு முதற்காதல். அது அவரையும் விட்டு வைக்கவில்லை. அது பற்றியும் அவர் தன் கவிதைகளில் பதிவு செய்து வைத்திருக்கின்றார். அற்புதமான கவிதை வரிகள். அனுபவம் தோய்ந்த கவிதை வரிகள்.

"நீரெ டுத்து வருதற் கவள்மணி
நித்தி லப்புன் னகைச்சுடர் வீசிடப்
போரெ டுத்து வருமதன் முன்செலப்
போகும் வேளை யதற்குத் தினந்தொறும்
வேரெ டுத்துச் சுதந்திர நற்பயிர்
வீழ்ந்திடச் செய்தல் வேண்டிய மன்னர்தம்
சீரெ டுத்த புலையியற் சாரர்கள்
தேச பக்தர் வரவினைக் காத்தல்போல்
காத் திருந்தவள் போம்வழி முற்றிலும்
கண்கள் பின்னழ கார்ந்து களித்திட
யாத்த தேருரு ளைப்படு மேழைதான்
யாண்டு தேர்செலு மாங்கிழுப் புற்றெனக்
கோத்த சிந்தையோ டேகி யதில்மகிழ்
கொண்டு நாட்கள் பலகழித் திட்டனன்"

"ஆங்கோர் கன்னியைப் பத்துப் பிராயத்தில்
ஆழ நெஞ்சிடை யூன்றி வணங்கினன்."

பாரதியாரின் முதற்காதல் பற்றி எண்ணியதும் அவனது சிந்தனை அவனது பதின்ம வயதுக்காலகட்டத்தை நோக்கிச் சிறகடித்தது. முதற்காதல் அனுபவங்களை அனுபவிக்காத மானுடர் முழுமையான வாழ்க்கை அனுபவம் பெற்றவரல்லர் என்று அவன் கருதினான். முதன் முறையாகக் குடும்பத்துக்கு  அப்பால், எவ்விதம் பிரதியுபகாரத்தையும் வேண்டாது, அன்பையே மூலதனமாக்கி மானுடர் அடையும் உணர்வது. அதனை அடைவதும், கடப்பதும் முக்கியமானது. பெரும்பாலானவர்களுக்கு முதற்காதல் முழுமையடைவதில்லை, சிலருக்குத்தாம் முழுமையடைகின்றன. அவ்விதம் முழுமையடைந்து இன்று வரை அன்புகலந்து ஒருமித்து வாழும் அவனது நண்பர்களிலொருவனான சுந்தரத்தின் நினைவு தோன்றியது. போர்ச்சூழலிலும் நாட்டை விட்டு நீங்காது வாழ்ந்து வருபவன் அவன்.

போர்ச்சூழலின் கொடூரம் தாங்காமல் அவன் நாட்டை விட்டுப்புறப்பட்டு , பல்வேறு நாடுகளில் பல்வகை அனுபவங்களையடைந்து இறுதியில்  கனடாவை அடைந்து நிலைத்திருந்தான். ஆனால் அவ்வப்போது அவனை இழந்த மண்ணும், மனிதர்களும் , நினைவுகளும் வாட்டத்தான் செய்தன. காலப்போக்கில் அவற்றுடன் வாழப்பழகிக்கொண்டான்.

முதற்காதல் பற்றி எண்ணியதுமே அவனுக்கு அவனது முதற்காதல் பற்றிய சிந்தனைகளும் கூடவே தோன்றின. யாழ்நகரில் சேவற்கொடியோன் மாஸ்டரின் உயர்தரக் கணித 'டியூசன்' வகுப்புக்காக அதிகாலை ஐந்து மணிக்குப் பெருமாள் கோவிலுக்கண்மையிலிருந்த அவரது இல்லத்துக்குச் சென்ற நாட்களின் நினைவுகளெழுந்தன. அதிகாலைப் பெருமாள் கோவில் மணியோசையும், எம்.எஸ். சுப்புலட்சுமியின் சுப்ரபாரதமும் காற்றில் இழைய வந்துகொண்டிருக்க அவன் அவரிடம் கணிதம் படித்த நினைவுகள் மேலெழுந்தன. அங்குதான் அவளை முதன் முதலாக அவன் கண்டான். சந்திரமதி சாதாரண மாநிறத்தில் , இரட்டைப்பின்னல்களும், சாந்துப்பொட்டுமாக  புத்தகங்களை மார்புற அணைத்தபடி நடந்து வந்து அவன் இதயத்தினுள்ளும் புகுந்துகொண்டாள். எப்படி அவள் அவனது இதயத்துக்குள் நுழைந்து கொண்டாளென்று நினைத்துப்பார்ப்பதுண்டு. சில சமயங்களில்  அவள் வகுப்புக்கு முதலிலேயே வந்து விடுவாள். அவன் வருகையில் மாஸ்டர் வீட்டு வாசற் கதவு உள்பக்கம் பூட்டப்பட்டிருக்கும், அவள் வந்து திறந்து விடுவாள். அவ்விதம் திறந்து விடுகையில் சில கணங்கள் அவன் அவள் கண்களை நோக்குவான்.அவளும் நோக்கித் தலை குனிந்துத்  திரும்புவாள். அக்கணங்களில் அவன் சாதாரணமாக அவளை நோக்குகையில் அடைந்த உணர்வுகளைவிட அவளைப் பூரணமாக அறிந்து கொண்டவனைப் போலுணர்ந்தான். அதிகாலையில் பூத்த மலராக அவள் அவனுக்குத் தென்பட்டாள். அவளைக்காண்பதற்காகவே அவன் ஒரு நாள் கூட வகுப்புகளைத் தவறவிட்டதில்லை.

இந்நிலையில்தான் அவ்வகுப்பு முடிவடையும் காலம் அண்மித்துக்கொண்டிருந்தது. அச்சமயத்தில் அவனை அவளை விரைவில் பிரியப்போகின்றோமென்ற எண்ணம் ஆட்டிப்படைக்கத்தொடங்கியிருந்தது. வகுப்புகள் முடிவதற்குள் எப்படியாவது அவளுடன் கதைக்க வேண்டுமென்று எண்ணினான். ஆனால் அவனது சுபாவம் அதற்கு ஒத்துழைக்கவில்லை. என்ன செய்யலாமென்று தீவிரமாகச் சிந்தித்தான். இறுதியாக அவன் ஒரு முடிவுக்கு வந்தான். எப்படியாவது அவளுக்குத் தன் எண்ணத்தைத் தெரியப்படுத்திலானென்ன என்று தன்னையே கேட்டுக்கொண்டான். எப்படித்தெரியப்படுத்துவதென்று எண்ணமிட்டான். கடைசியில் அவளுக்குக் காதல் கடிதமொன்றை எழுதிக்கொடுப்பதுதான் சரியான வழியென்று முடிவு செய்தான். அவனால் ஒருபோதுமே நேரடியாக அவளைப்பார்த்து 'நான் உன்னைக் காதலிக்கின்றேன்' என்று கூறமுடியாதென்பது அவனுக்குத் தெரியும்.ஆனால் இவ்விதம் எழுதிக்கொடுப்பது அவனது சிக்கலைத் தீர்ப்பதாகவிருந்தது. ஏனென்றால் நேரில் கூறுகையில் ஏற்படப்போகும் படபடப்பை அவனால் இவ்வழியில் தவிர்த்துக்கொள்ள முடியும். அவளுக்குத் தன் எண்ணங்களைக் காதல் கடிதமாகத் தெரியப்படுத்துவதென்ற எண்ணம் தோன்றியதும் அவனுக்கு அடுத்து அதை எவ்விதம் செயற்படுத்துவது என்பதில் கவனம் சென்றது. எப்படிக் கடித்தத்தை அவளிடம் கொடுக்கலாம்? எப்பொழுது கொடுக்கலாம்? வகுப்பு தொடங்குவதற்கு முன் அவள் பொதுவாக வருவதால் , நேரத்துடன் வந்து கொடுக்கலாமா? அல்லது வகுப்பு முடிந்து செல்கையில் கொடுக்கலாமா? என்று எண்ணினான். வகுப்பின் ஆரம்பத்தில் கொடுத்தால், வகுப்பு முடியும் வரையில் அவள் என்ன செய்வாள்? ஆசிரியரிடம் கடித்தைக் கொடுத்து விடுவாளா? அப்படிக்கொடுத்து விட்டால் அனைவருக்கும் தெரிய வந்துவிடுமே என்று சிந்தனையோடியது. கடைசியில் வகுப்பு முடிந்து செல்கையில் கொடுப்பதாக முடிவு செய்தான். அப்படிக்கொடுத்தால் ஏனைய மாணவர்களும் கண்டு பிடித்து விடுவார்களே. என்ன செய்யலாமென்று சிந்தித்தான். இந்நிலையில் அதற்குமொரு வழியை அவன் கண்டு பிடித்தான். அவ்விதம் நண்பர்கள் கண்டாலும், அதற்குத் தகுந்த நல்லதொரு காரணத்தைக் கூறலாமென்று தோன்றியது. இறுதியில் டியூசன் வகுப்பு முடியும் காலமும் நெருங்கிக்க்கொண்டிருந்தது. அவனும் அவளுக்குக் காதல் கடிதமொன்றினை  எழுதுவதில் கவனத்தைச் செலுத்ததொடங்கினான்.

அவனது தங்கை முறையிலான உறவுக்காரி காந்திமதி சந்திரமதி படிக்கும் பெண்கள் கல்லூரியில்தான் படித்துக்கொண்டிருந்தாள். அவளுக்கும் , சந்திமதிக்குமிடையில் ஓரிரண்டு வயது வித்தியாசம்தான். இருவருமே சில சமயங்களில் ஒன்றாகப் பாடசாலையிலிருந்து வருவதை அவன் கண்டிருக்கின்றான். தன் உள்ளத்துணர்வுகளைக்கொட்டிக் கடிதமொன்றினையெழுதி  , 'கொப்பி'யொன்றுக்குள் வைத்து, காந்திமதி அவளிடம் கொடுக்கத்தந்ததாகக் கொடுத்து விடுவதாக முடிவு செய்தான். இவ்விதம் கொடுக்காவிட்டால் மாஸ்டரின் வகுப்பும் முடிந்து விடும். அதன் பிறகு சந்திரமதியை வாழ்க்கையில் சந்திக்கும் சந்தர்ப்பம் கூட ஏற்படாமல் போய் விடலாம். அவள் அவனுக்குக் கிடைக்காமல் போகலாம். ஆனால் அவளுக்கு அவன் அவளை விரும்பும் விடயத்தைக் கூற வேண்டுமென்று தோன்றியது. அவ்விதம் அவன் அவளை விரும்புவதை அறிந்திருக்க வேண்டுமென்று தோன்றியது.  இவ்விதமாக வழியினைக் கண்டு  பிடித்ததும் அடுத்து அவனது  கவனம் கடிதத்தை எழுதுவதில் சென்றது.

 

அத்தியாயம் இரண்டு: காதல் கடிதம்!

 

அன்று மாலை பாடசாலை விட்டு வீடுதிரும்பிக்கொண்டிருக்கையில் நண்பன் கேசவன் கேட்டான்

"என்ன மணி இன்று முழுக்க நானும் கவனித்துக்கொண்டுதானிருக்கின்றன் உன்ர  முகமே சரியாயில்லையே. ஏதாவது பிரச்சினையா? அப்படியென்னடா பிரச்சினை?"

கேசவன் மணிவண்ணனின் நெருங்கிய நண்பர்களிலொருவன். அவன் இன்னுமொரு விடயத்திலும் ஏனையவர்களிடமிருந்து  வேறுபட்டிருந்தான். அரசியலில் அதிக ஈடுபாடு மிக்கவனாகவிருந்த அதே சமயம் மார்க்சியத்திலும் அந்த வயதிலேயே அதிக நாட்டம் மிக்கவனாகவுமிருந்தான். மணிவண்ணனைப்பொறுத்தவரையில் தமிழரசுக் கட்சியினரின் உணர்ச்சி அரசியலில் அதிக ஈடுபாடு மிக்கவன். அவனுக்கு லெனின் , மார்க்ஸ் என்று எதுவுமே தெரியாது. ஆனால் அண்மைக்காலமாக கேசவன் அவனுக்கு இலகுவான மொழியில் மார்க்சியம் பற்றிப்போதித்துக்கொண்டு வந்தான். அதன் விளைவாக மணிவண்ணனுக்கும் மார்க்சிய நூல்களை அதிகம் வாசிக்க வேண்டுமென்ற ஆர்வம் ஏற்பட்டிருந்தது. அவனது ஆர்வத்தைப்புரிந்துகொண்டு கேசவனின் அவனுக்கு மார்க்சிக் கோர்க்கியின் 'தாய்' நாவலைக்கொண்டு வந்து கொடுத்திருந்தான். அதை மணிவண்ணனும் வாசிக்கத்தொடங்கியிருந்தான். அதே சமயம் அவனுடனான உரையாடல்களின்போது மார்க்சியம் பற்றிய தனது புரிதல்களைக் கேசவன் அவனுக்கு எளிய மொழியில் விளங்கப்படுத்தவும் தொடங்கியிருந்தான்.  இருவருக்குமிடையில் தமிழரசுக் கட்சியினரின், ஏனைய தமிழ், சிங்கள அரசியல்வாதிகளின் உணர்ச்சி அரசியல் பற்றி சில சமயங்களில் நட்புரீதியிலான மோதல்களும் ஏற்படாமலில்லை.

அவனிடம் மணிவண்ணன் பொதுவாக எதனையும் மறைப்பதில்லை. ஏதாவது பிரச்சினையா என்று கேசவன் கேட்கவுமே ஏன் அவனிடமே தன் நிலையினை எடுத்துக்கூறி ஆலோசனை கேட்கக்கூடாதென்று  தோன்றியது மணிவண்ணனுக்கு. கேசவனின் வீடு பிறவுண் வீதியிலிருந்தது. ,மணிவண்ணனின் வீடு கஸ்தூரியார் வீதியில் பாடசாலைகண்மையிலிருந்தது.

"டேய் கேசவா, வீட்டை போய் ஆறு மணிபோலை வா. லைப்ரரி பக்கம் போவம். அப்ப சொல்லுறன் எல்லாவற்றையும்"  இவ்விதம் மணிவண்ணன் கூறவும், கேசவன் " ஓமடா, எனக்கும் புத்தகம் டியூ டேட். குடுக்க வேண்டும். அறு மணிக்கு வீட்டிலை நிற்பன். ரெடியா வெளிக்கிட்டு நில்லுடா. என்ன " என்று கூறிவிட்டு விடை பெற்றுச் சென்றான்.

மணிவண்ணன் வீடு நோக்கிச் சென்றான். அப்பா வவுனியாக் கச்சேரியில் அரச அதிகாரியாகப் பணியாற்றிக்கொண்டிருந்தார். அரசு அளித்த விடுதியில் தங்கியிருந்தார். அம்மாவும், தங்கச்சி இந்திராவும்தான் இங்கு அவனுடனிருந்தார்கள். இந்திராவும் யாழ் இந்து மகளிர் கல்லூரியில் ஒன்பதாவது படித்துக்கொண்டிருந்தாள். அங்குதான் சந்திரமதியும் உயர்தர வகுப்பில் விஞ்ஞானம் படித்துக்கொண்டிருந்தாள்.

கேசவன் நேரம் விடயத்திலொரு வெள்ளைக்காரன். சரியான நேரத்துக்கு வந்துவிடுவான். அன்றும் சரியாக ஆறுமணிக்கு வீட்டு வாசிலில் மணியடித்தான். 'அம்மா லைபரிக்குப் போட்டு வாறன்' என்று குரல் கொடுத்துவிட்டுச் சைக்கிளை எடுத்துக்கொண்டு நண்பனுடன் யாழ்பொதுசன நூலகம் நோக்கிச் சென்றான்.

இலங்கைப்பாராளுமன்றத்தேர்தல் ஆகஸ்ட்டில் நடைபெறவிருந்தது. கூடவே தமிழகச் சட்டசபை,  இந்தியப் பாராளுமன்றத் தேர்தல்களும் நடக்கவிருந்தன. 74இல் வட்டுக்கோட்டையில் தமிழ் ஈழம்தான் தீர்வு என்று தீர்மானம் செய்தபின் தமிழர் விடுதலைக் கூட்டணி தமிமீழக் கோரிக்கையை முன்வைத்துத் தேர்தலில் குதித்திருந்தது. ஆங்காங்கே பரபரப்பாகத் தேர்தல் கூட்டங்கள் நடக்கத்தொடங்கியிருந்தன. இதுவே இறுதிப்பாராளுமன்றத்தேர்தல் . அடுத்த  தேர்தல் தமிழீழத்தில்தான் என்றும் பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டுக்கொண்டிருந்தன.

"டே கேசவா சந்திரனின் தேத்தண்ணிக்கடைக்குப் போய்விட்டு லைப்ரரி போவோம் .என்ன?"

"ஓமடா மணி. நல்ல யோசனை' "

சந்திரனின் தேநீர்க் கடை யாழ் பஸ் நிலையத்திலிருந்து றீகல் திரையரங்குக்குச் செல்லும் வீதியில் அமைந்திருந்தது. சந்திரன் என்பவர் நடத்தினார். அவரே முன்னின்று வியாபாரத்தைக் கவனித்துக்கொண்டிருந்தார். அவரது அன்பான , பண்பான நடத்தையாலும், சிரித்த  முகத்தாலும், சுவையான உணவு வகைகளுக்காகவும் அவருக்குப் பல வாடிக்கையாளர்களிருந்தனர்.  அவர்களில் இவர்களும் இருவர்கள்.

தேநீருக்கும் ,மசாலா வடைக்கும் ஓர்டர் கொடுத்து விட்டு நண்பர்கள் உரையாடலிலிறங்கினார்கள்.

"என்ன மச்சான், இந்த முறை கூட்டணி எல்லா சீட்டுகளையும் அள்ளிக்கொண்டு போகும்போலை." கேசவனே உரையாடலைத்தொடங்கினான்.

"இதிலையென்னடா சந்தேகம். கட்டாயம் வெல்லுவாங்கள். கேக்கிற எல்லா இடங்களிலையும் வெல்லுவாங்கள்.."

"என்னைப்பொறுத்தவரையில் தனிநாட்டுக்குச் சாத்தியமேயில்லை. இந்தியாவின்ற உதவியில்லாமல் அது சாத்தியமேயில்லை. அவங்கள் ஒருக்காலும் இலங்கையிலை தமிழருக்குத் தனிநாடு கிடைப்பதற்கு உதவமாட்டாங்கள்.."

" நீ ஏன் அப்படிச் சொல்லுறாய்? பங்களாதேசை உருவாக்கவில்லையா?"

"அது வேற விசயம். இந்தியாவுக்கு , அதன் பாதுகாப்புக்குப் பாகிஸ்தானை உடைக்கவேண்டிய தேவையிருந்தது. உடைத்தார்கள். இங்கை என்ன தேவையிருக்கு? இலங்கையிலை தமிழருக்குத் தனிநாடு இருந்தால், தமிழகத்தமிழரை அது தூண்டிவிடும்.அது நாட்டுக்குக் கூடாதென்று ஒருக்காலும் தனிநாட்டுக்கு உதவவே மாட்டாங்கள்.."

அவனே தொடர்ந்தான்: " என்னைப்பொறுத்தவரையில் இலங்கையின் அனைத்து மக்களுக்கும் விடுதலை வேண்டும். இதிலை இனம், மதம், மொழி பார்க்கக்கூடாது. சிங்கள, தமிழ் மக்கள் இணைந்து ருஷியாவிலை நடந்ததுபோல் அமைப்பையே மாற்றுகிற புரட்சிதான் நடக்க வேண்டும்.அதுதான் அனைத்து மக்களுக்கும் தீர்வைத்தரும்.."

"அதுதான் சேகுவாக்காரன்கள் செய்து தோத்துப்போட்டாங்களே.."

"ஆனால் அவங்கள் மக்களுக்காகப் புரட்சி செய்தாலும், மக்களை அரசியல்மயப்படுத்தி, கட்சியை விரிவாக்கிச் செய்யவில்லை. கோட்பாட்டில் ஆர்வமிருக்கிற இளைஞர்களை மட்டும் வைத்துக்கொண்டு புரட்சி செய்தாங்கள். தோத்துப்போட்டாங்கள்... "

இவ்விதமாக உரையாடல் சமகால அரசியலைத்தொட்டுச் சென்றது.

"அதுசரி.. என்ன விசயம் இன்றைக்குக்கு முழுக்க ஒரு மாதிரியிருக்கிறாய் என்றதுக்குக் காரணம் சொல்லப்போறதாச் சொன்னாயே.."

மணிவண்ணன் சிறிது மெளனமாகவிருந்தான். பின் கூறினான்:

" உனக்குச் சொல்லாமல் வேறு யாருக்குச் சொல்லுவன். உனக்குத் தெரியும்தானே என்னுடன் டியூசன் கிளாசுக்கு வாற சந்திரமதி. ;;"

"தெரியும். அவளுக்கென்ன?.."

"அவளுக்கு ஒன்றுமில்லை. எனக்குத்தான்.."

"உனக்கு என்னடா? "

"இஞ்சை பார் கேசவன். நான் சுற்றிவளைக்கேலை. .நேரா விசயத்துக்கே வாறன். என்னவோ தெரியவில்லை, அவளை எனக்குப் பிடிச்சுப்போட்டு. இன்னும் கொஞ்சநாளிலை மாஸ்டரின் டியூசன் கிளாசும் முடிந்துபோயிடும், அதுக்குப்பிறகு அவளை அடிக்கடி பார்க்கமுடியாது. "

"அடிசக்கை. அண்ணைக்கு அவள்மேலை ஒரு கிக்கு. அப்படியா விசயம். அடக்கடவுளே. நானும் அவள் மேலை ஒருகண் வைச்சிருந்தனான். இனி அவளைப்பார்க்க முடியாதென்று சொல். அது சரி அதுக்கு நான் என்ன செய்யவேண்டுமென்று நினைக்கிறாய்.?"

"அதைத்தான் நானும் யோசிக்கிறன். என்ன செய்யலாமென்று நீ நினைக்கிறாய்?"

"இஞ்சை பார் மணி. இப்ப உனக்கு பதினெட்டு வயது.அவளுக்கும் அவ்வளவுதானிருக்கும். இந்த வயசிலை காதல் கீதலென்று உன் படிப்பைக் கெடுத்திடாதை. உனக்குத்தெரியும்தானே பிறேமன். அவன் கணித்தத்திலை புலி. அவன் யுனிவர்சிட்டுக்குப் போயிருக்கவேண்டியவன். இன்றைக்குக் காதல் தோல்வியாலை குடிச்சு, ரோட்டிலை விழுந்து புரண்டுகிடக்கின்றான். முந்தநாள் அவளின்ற வீட்டுக்கு முன்னாலை புரண்டு கிடந்தான். "

"இஞ்சைப்பார் கேசவன். நான் அவ்வளவுக்கு விசரனல்ல. எனக்கு அவளிலை விருப்பம். அவ்வளவுதான், அவளுக்கும் விருப்பமென்றால் படிச்சு நன்றாக வரும் வரைக்கும் என் படிப்பைக்கெடுக்க மாட்டன். என்ன அவள் எனக்காகக் காத்திருக்க வேண்டும்.அதிலேதாவது பிரச்சினை வந்தால் எ'ங்கிருந்தாலும் வாழ்க' என்று வாழ்த்திவிட்டுப்போய்க்கொண்டேயிருப்பன். "

"அட நீ இந்த விசயத்திலை தெளிவாய்த்தானிருக்கிறாய். அப்படியென்றால் அவளிடம் கூட வேண்டியதுதானே.?"

"அதைத்தான் நானும்  நினைத்துக்கொண்டிருந்தனான். அதுதான் நாள் முழுக்க யோசனையிலிருந்தன்."

"இதுக்கென்ன யோசனை. .பேசாம ஒரு லெட்டரை எழுதிக்குடுத்துப் பாரன்"

"நான் நினைச்சதையே நீயும் சொல்லுறாய்., இதுக்குத்தான் உன்ர உதவி  தேவை.   நான் ஒரு சாம்பிளுக்கு லெட்டரொன்று எழுதி வைச்சிருக்கிறன். பார்த்து எப்படி எழுதலாமென்று ஏதாவது ஐடியா சொல்லுடா?"

இவ்விதம் கூறிவிட்டு மணிவண்ணன் சேர்ட் பொக்கற்றிலிருந்து எழுதி வைத்திருந்த கடிதத்தை எடுத்துக் கேசவனிடம் கொடுத்தான், கேசவன் எடுத்து வாசித்துப்பார்த்தான். சுருக்கமான காதல் கடிதம். அதில் மணிவண்ணன் இவ்வாறெழுதியிருந்தான்:

"அன்புள்ள சந்திரமதிக்கு, இந்தக் கடிதத்தை நீங்கள் நிச்சயம் எதிர்பார்த்திருக்க மாட்டீர்கள். ஆனால் இதை எழுதாமல்போனால் என் நெஞ்சு வெடித்து விடும்.  அதனால் எழுதுகின்றேன். எனக்கு உங்களை நன்றாகப்பிடித்துப்போட்டுது. உங்களது தலை குனிந்து நடந்து வரும் நடையும், சிரிப்பும், கண்களும் எப்பொழுதும் என் நெஞ்சிலிருக்கு. நாளும், பொழுதும் உங்கள் நினைப்புத்தான். இன்னும் கொஞ்சநாளில் எங்கட டியூசன் கிளாஸ் முடிந்து விடும். அது முடிந்து விட்டால் உங்களை அடிக்கடி சந்திக்க முடியாது. அதை நினைச்சுப்பார்க்கவே கஷ்ட்டமாகவிருக்கு, அதனாலைதான் இந்தக் கடிதத்தை எழுதுறன். நான் உங்களைக் காதலிக்கிறன். நீங்களும் என்னைக் காதலித்தால்  நாளைக்கு வரும்பொழுது தலையிலை மல்லிகைப்பூ வைச்சுக்கொண்டு வாங்க. இல்லாவிட்டால் இதையொரு கெட்ட கனவாக நினைச்சு மறந்து விடுங்க. அன்புடன், உங்களை பதிலை ஆவலுடன் எதிர்பார்த்துக்காத்திருக்கும் -  மணி"

அதைப்படித்துவிட்டுக் கேசவன் கூறினான்: "சுருக்கமான காதல் கடிதம்.இடைக்கிடை பேச்சுத்தமிழும் பாவித்திருக்கிறாய். வழக்கமாகக் கதைகளில் வருகிற மாதிரி செந்தமிழை நீ பாவிக்கவில்லை. அது நல்ல விசயம். எனக்கு இக்கடிதம் பிடித்திருக்கு. சுருக்கமான கடிதம். உன் எண்ணத்தைத் தெளிவாகக் கூறுகிறது. இதுவே போதும், இதையே அவளிடம் குடுத்துப்பாரு. 'ஹம்மாக்கோ சிக்காக்கோ'! "

அவன் அவ்விதம் கூறவும் மணிவண்ணனுக்கு மகிழ்ச்சியாகவிருந்தது. அதுவரை சுமந்துகொண்டிருந்த மனப்பாரம் குறைந்ததுபோல் உணர்ந்தான். கேசவன் தொடர்ந்தும் கூறினான்:

"டேய் மணி. இதை இப்படியே நீட்டிக்கொண்டு போகவிடாதே. உடனேயே குடுத்துப்பாரு. முடிவு எதுவென்றாலும் ஏற்றுக்கொள்"

"ஓமடா  கேசவா! நாளைக்கே குடுக்கப்போறன். எனக்கும் இப்படியே இதை மனசுக்குள்ளை வைத்துக்கொண்டு உலைந்துகிடக்கேலாது. எந்த நேரமும் நெஞ்சை வாளால் வெட்டிறமாதிரி வெட்டிக்கொண்டேயிருக்கு.  அவளின்ற முகமும்,சிரிப்பும்,கண்ணும், நடையும் நெஞ்சிலை வந்து வந்து சித்திரவதை செய்துகொண்டேயிருக்கு..நல்ல யோசனை சொன்னியடா. நாளைக்கே குடுக்கிறன்"

அதன்பிறகு நண்பர்களின் பயணம் நூலகத்தை நோக்கித் தொடர்ந்தது. நூலகத்தில் கொடுக்க வேண்டிய நூல்களைக்கொடுத்து எடுக்க வேண்டியதை எடுத்து விட்டுத் திரும்பியபோது நன்கு இருண்டிருந்தது. கேசவன் கேட்டான் "மணி, வாவென் கொஞ்ச நேரம் பண்ணைப்பக்கம் போய்க் கதைத்துவிட்டுப் போகலாம். " அன்று பெளர்ணமிநாள். முழுமதி. முழுநிலவின் தண்ணொளியில் நகரம் குளித்துக்கொண்டிருந்தது. மெல்லிய குளிர் தென்றல் விசிக்கொண்டிருந்தது.

"டேய் மணி. இன்னும் ஒன்றிரண்டு மாதத்திலை இங்கை ஒரே எலெக்சன் கூட்டங்களாகவிருக்கும்,"

"ஓமடா. கேசவா! அடுத்த எலெக்ன் தமிழீழத்திலைதானே"

மணிவண்ணன் இவ்விதம் கூறவும் கேசவன் அவனை நோக்கிக் கேலியாகச் சிரித்தான்.

"இதை நீயும் நம்புறாய். உன்னுடைய நம்பிக்கையை நான் பாராட்டுறன். அப்படி நடந்தால் நல்லதென்று நினைக்கிறாயா? அதன்பிறகு இருநாடுகளுக்குமிடையிலான மோதலே வாழ்வாகப்போய்விடும்."

இவ்விதமாக அவர்கள் வழக்கமாக, நகரத்திலிருந்து சிறிது தள்ளிப் பண்ணை வீதியில் தங்கிக் கடலையும், ஆகாயத்தையும் இரசித்தபடி உரையாடுமிடத்துக்கு வந்தார்கள். தொலைவில் மீனவர்களின் படகுகள் சில மெல்லிருளில் தெரிந்தன. அலைகள் குறைந்த கடல் நீர் கரையினில் வந்து வந்து மோதுமோசை கேட்டுக்கொண்டிருந்தது.

மணிவண்ணன் கீழ்வானில் தண்ணொளியை வாரியிறைத்தபடியிருந்த முழுநிலவின் அழகில் தன்னை மறந்திருந்தான். கேசவனையும் அப்பிரதேசத்தின் இயற்கைச்சூழல் ஆட்கொண்டது. நண்பர்களிருவரும் இயற்கையின் பேரழகில் தம்மை மறந்தவர்களாக மெய்ம்மறந்திருந்தார்கள்.

முழுநிலவு மணிவண்ணனின் உள்ளத்தில் சந்திரமதியின் புன்னகை தவழும் முகத்தைக்கொண்டுவந்து நிறுத்தியது. நாளைக்கு அவளுக்குக் கடிதத்தைக் கொடுக்கும்போது எப்படியவள் எதிர்வினையாற்றப்போகின்றாறோ என எண்ணங்கள் பல தோன்றின. என்ன நடந்தாலும் சரி அவளுக்குக் கடிதத்தைக் கொடுக்கவேண்டியதுதான் என்று தீர்மானித்துக்கொண்டான். நிலவிய அமைதியைக் கிழித்துக்கொண்டு கேசவன்,

"மணி நாளைக்குச் சனிக்கிழமைதானே. இன்றைக்கு செக்கன்ஷோ பார்த்துவிட்டுப்போனாலென்ன?"

"டேய். நான் வீட்டிலை சொல்லவில்லை. இன்னொரு நாளைக்குப்பார்ப்பம். "

"மனோஹராவில்லை உன்ர வாத்தியாரின்ற இதயக்கனி ஓடுது. அதுதான் கேட்டன்."

"ஆனா இன்றைக்கு வேண்டாம். நாளைக்கு வேண்டுமானால் போகலாம்"

இவ்விதமாகப் பல்வேறு விடயங்களைப்பற்றி உரையாடிவிட்டு நண்பர்களிருவரும் வீடு நோக்கிக் கே.கே.எஸ். வீதிவழியாகத் திரும்பினார்கள்.  மணிவண்ணனின் நினைவெல்லாம் அடுத்த நாள் காலை டியூசன் வகுப்பில் சந்திரமதிக்கு அவன் கொடுக்கப்போகின்ற கடிதத்தின் மீதேயிருந்தது.

அத்தியாயம் மூன்று: நித்திராதேவியின் தழுவலில் தன்னை  மறந்த காளை!

மணிவண்ணன் வீட்டை நெருங்கியபோது இரவு மணி  ஒன்பதைத்தாண்டி விட்டிருந்தது. முழு நகரும் முழுநிலவின் தண்ணொளியில் குளித்துக்கொண்டிருந்தது.

"டேய் கேசவா, வீட்டை வந்து கொஞ்ச நேரம் கதைச்சுட்டுப் போயேன். அம்மா தோசை சுட்டி வைத்திருப்பா.அதையும் கொஞ்சம் சாப்பிட்டிடுப் போ"

மணிவண்ணன் இவ்விதம் கேட்கவும் கேசவனுக்கும் அது சரியென்று தோன்றியது. மணிவண்ணனின் புத்தக அலமாரியிலிருந்தும் மேலும் சில நூல்களை எடுக்கலாமென்றும் தனக்குள் எண்ணிக்கொண்டான். இதற்கிடையில் நண்பர்களிருவரும் வீட்டினுள் நுழைவதைக் கண்ட மணிவண்ணனின் அம்மா "தோசை சுட்டு சாப்பாட்டு மேசையிலை மூடி வைச்சிருக்கு. இரண்டு பேரும் எடுத்துச் சாப்பிடுங்கோ. இன்னும் தேவையென்றால் சொல்லுங்கோ. சுட்டுத்தாறன்" முன் கூடத்துக்குச் சென்று தனது சாய்வு நாற்காலியில் சாய்ந்தாள். அருகிலிருந்த மேசையில் ஏதோ படித்துக்கொண்டிருந்தாள் இந்திரா.

"ஓமம்மா.தேவையென்றால் சொல்லுறன். இல்லையென்றால் நானே சுட்டுச் சாப்பிடுறன்" என்று பதிலுக்குக் கூறியபடியே மணிவண்ணன் கேசவனை அழைத்துக்கொண்டு முன் விறாந்தையின் இடது பக்கத்திலிருந்த தனது அறைக்குள் சென்றான். அங்கு அவனுக்கென்றொரு புத்தக அலமாரியிருந்தது. நூல்கள், சஞ்சிகைகளில் வெளியாகிப் 'பைண்டு; செய்யப்பட்ட நாவல்கள் அதில் இடம் பிடித்திருந்தன.

"கேசவா, ஏதாவது குடிக்கக் கொண்டு வரட்டா?"

"எனக்குமொரு கோப்பி போட்டுக்கொண்டு வாடா மணி'

மணிவண்ணன் கோப்பிக்கு அடிமையாகிவிட்டிருந்தான். கேசவனும் அவனைப்போல் ஒரு கோப்பி பைத்தியம்தான். மணிவண்ணன் கோப்பி போட்டுக்கொண்டு வரச் சென்ற இடைவெளியைப்பாவித்து கேசவன் மணிவண்ணனின் புத்தக அலமாரியைத் துலாவத்தொடங்கினான். கல்கியில் வெளியான நாவல்கள் பல அந்த அலமாரியில்  இடம் பிடித்திருந்தன. அவனுக்குப் பிடித்த ஜெகசிற்பியனின் 'ஜீவகீதம்' , கல்கியின் 'பொன்னியின் செல்வன்' , காண்டேகரின் நாவல்கள் எனப் பல நாவல்களிருந்தன. அவற்றில் பெரும்பாலானவற்றைக் கேசவன் ஏற்கனவே வாசித்திருந்தான்.

இதற்கிடையில் மணிவண்ணன் பாற்கோப்பியுடன் வந்தான்.

மணிவண்ணனின் அந்த அறை கட்டில், அலமாரி, படிக்கும் மேசை , கதிரையுடன் விளங்கிய அவனது தேவைகளுக்குப் போதுமானதொரு சிற்றறை. ஜன்னலைத் திறந்து விட்டான். ஜன்னைலினூடு விரிந்திருந்த இரவு வானும், முழுநிலவும் அருகில் சுடர்களும் தெரிந்தன. வவ்வால்கள் அடிக்கடி பறந்துகொண்டிருந்தன. சுவரில் இரண்டு பல்லிகள் விளக்கொளியில் அடிக்கடி வந்து நிற்கும் பூச்சிகளை எதிர்பார்த்துக்காத்திருந்தன.

மணிவண்ணன் உரையாடலை ஆரம்பித்தான்.

"கேசவா, நீ அன்றைக்குச் சொன்னாயே வரலாற்றுப் பொருள்முதல்வாதமென்று. .எனக்குச் சரியாக இன்னும் பிடிபடேலை. சுருக்கமா இன்னுமொருக்கா சொல்லுறாயா?"

கேசவன் ஓரளவுக்கு மார்க்சியக் கோட்பாடுகளை அறிந்து வைத்திருந்தான். அறிந்து வைத்திருந்த அளவில் தர்க்கரீதியாக அவனால் அக்கோட்பாட்டை ஏற்றுக்கொள்ள முடிந்தது. இன்னும் அவன் அறிய வேண்டியவை நிறைய இருந்தன. ஆனால் அறிந்திருந்த அடிப்படைக்கருதுகோள்கள் அவனுக்கு அக்கோட்பாட்டை ஏற்றுக்கொள்ளப்போதுமானவையாகவிருந்தன. தனக்குத் தெரிந்ததைப் பிறருக்குச் சொல்லிக்கொடுப்பதில் அவன் எப்பொழுதும் மகிழ்ச்சியேயடைந்தான். அவ்விதம் சொல்லிக்கொடுக்க அவன் தயங்கியதேயில்லை.

"வரலாற்றுப்பொருள்முதல்வாதம் என்ன கூறுகிறதென்றால்.. மானுட சமுதாய அமைப்புகளை வரலாற்றினூடு ஆராய்கிறது. எப்பொழுதுமே உற்பத்தியுடனுள்ள மானுட உறவுகள்தாம் ஒவ்வொரு காலகட்டச் சமுதாய அமைப்புகளையும் தீர்மானிக்கின்றன. ஆதியில் மானுடர் குழுக்களாக வாழ்ந்தார்கள். ஒவ்வொரு குழுவுக்கும் தாயொருத்தியே தலைவியாகவிருந்தாள். காடுகளில் குகைகளில் வாழ்ந்து வந்த சமுதாயம் ஆற்றங்கரைகளில் குடியேறத்தொடங்கியது. பயிரிட்டு வாழப்பழகிக்கொண்டது. குழு வாழ்க்கை நீங்கிக் குடும்பம் என்னும் அமைப்பு உருவாகியது. அதுவரை தாய் வழிச் சமுதாய அமைப்பு முறை நிலவிய மானுட சமுதாயத்தில் ஒருவன், ஒருத்தி என்னும் குடும்ப முறை ஏற்பட்டதும் பெண் தன் உரிமைகளைப் படிப்படியாக இழக்கத்தொடங்கினாள். குடும்பத்தலைவனான ஆணே அக்குடும்பத்தைக்  காப்பவனானான். குடும்பத்தலைவியான பெண்ணோ வீட்டிற்குள் முடங்கத்தொடங்கினாள். இது பற்றி எங்கெல்ஸ் சிறப்பானதொரு நூல் எழுதியுள்ளார். கொண்டு வந்து தாறன்,  வாசித்துப்பார். பின்னர் அடிமை உடமைச் சமுதாய அமைப்பு முறை நிலவியது. அதன் பின்னர் நிலப்பிரபுத்துவ சமுதாய அமைப்பு  முறை நிலவியது. அதன்  பின்னர் முதலாளித்துவ சமுதாய அமைப்பு முறை நிலவியது. "

இவ்விதமாகத் தானறிந்தவற்றைக் கேசவன் மணிவண்ணனுக்கு விபரித்தான். அவன் தொடர்ந்தும் கூறினான்:

"ஆதிக்குழுக்களில் அறியாமை நிலவியது. ஆனால் அங்கு பொதுவுடமை நிலவியது. பின்னர் ஏற்பட்ட சமுதாயத்தில் குறிப்பாக மனித சமுதாயம் மதம், சாதி, மொழி, இனம் , வர்க்கம் என்று பல்வேறு பிரிவுகளாகப் பிளவுண்டு போனது. இவ்விதம் பல்வேறு பிரிவுகளாகப் பிளவுண்டு மானுட சமுதாயம் முதலாளித்துவ சமுதாய அமைப்பில் முதலாளி , தொழிலாளி என்னும் இரு வர்க்கங்களாகப் பிளவுண்டது. இவ்விரு வர்க்கங்களில் பெரும்பான்மை வர்க்கம் தொழிலாள வர்க்கமே. ஆனால் அப்பெருமை வர்க்கத்தை ஆட்சி செய்வது சிறுபான்மை வர்க்கமான முதலாளித்துவ வர்க்கம். ஆனால் பெரும்பான்மை வர்க்கமான தொழிலாள வர்க்கத்தினை ஆட்சி செய்யும் சிறுபானமை வர்க்கமான முதலாளித்துவ வர்க்கம் கூறுகின்றது அதுவே உண்மயான ஜனநாயகமென்று. அதெப்படி முறையான , நீதியான ஜனநாயகமாகவிருக்க முடியும்?"

மணிவண்ணனுக்கும் கேசவனின் கேள்வி நியாயமாகவே தோன்றியது.

"கேசவன், நீ கூறுவதே சரி. அது உண்மையான ஜனநாயகமாகவிருக்க முடியாது. வர்க்கரீதியாகப் பார்த்தால் பெரும்பான்மை வர்க்கமான தொழிலாளர் வர்க்கத்திடமே ஆட்சி இருக்க வேண்டும். அதுதான் சரியாக எனக்கும் தோன்றுகின்றது."

கேசவனுக்கு மணிவண்ணன் விரைவாகத் தான் கூறியவற்றைப் புரிந்துகொண்டதில் மகிழ்ச்சி. அவன் மேலும் தொடர்ந்தான்:

"இதனைத்தான் மார்க்சியம் கூறுகின்றது. முதலில் சிறுபான்மை வர்க்கத்திடமிருந்து ஆட்சியைப் பறித்தெடுத்துப் பெரும்பான்மை வர்க்கமான தொழிலாள வர்க்கத்திடம் கொடுக்க வேண்டும். அவ்விதம் ஆட்சியைத் தொழிலாள வர்க்கம் கைப்பற்றினாலும் அதனைத் தட்டிப்பறிக்க ஆட்சியை இழந்த முதலாளித்துவ அமைப்பு கடுமையாக முயற்சி செய்யும். மீண்டும் தனியுடமைச் சமுதாய அமைப்பைக்கொண்டு வர முயற்சி செய்யும் . அதைத்தடுப்பதற்காகத்தான் புரட்சி மூலம் ஆட்சியைக் கைப்பற்றிய தொழிலாள வர்க்கம் அதைத்தக்க வைப்பதற்காக இடைக்காலச் சர்வாதிகாரத்தைக் கடுமையாக அமுல் படுத்த வேண்டும். பொதுவுடமைச் சமுதாயத்தை நிலைநிறுத்துவதற்காக அச்சர்வாதிகாரம் மிகவும் அவசியம். அவ்விதம் செய்தால் இறுதியில் மானுட சமுதாயம் கம்யூனிச சமுதாய அமைப்பை அடையும். அங்கு அரசு என்பதே இருக்காது. மானுடர் யாவரும் தமது மானுடப்பணிகளைச் செய்வார்கள் எவ்விதம் அரசுகளுமில்லாமல்."

கேசவன் சென்று நீண்ட நேரமாகியும் மணிவண்ணனின் காதுகளில் கேசவனின் சொற்களே ஒலித்துக்கொண்டிருந்தன. அச்சமயம் அவனுக்கு ஓரெண்ணமெழுந்தது. எதற்காக இலங்கையில் வர்க்கப்புரட்சியை ஆதரிக்கும் தென்னிலங்கை இடதுசாரிகள் இனவாத அரசான ஶ்ரீமா அம்மையாரின் அரசுடன் ஒட்டியிருக்கின்றார்கள். எதற்காகத் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை ஆதரிக்க முடியவில்லை? அடுத்தமுறை கேசவனைச் சந்திக்கும்போது இக்கேள்விகளையெல்லாம் மறக்காமல் கேட்டுவிடமேன்று எண்ணியவாறு படுக்கையில் புரண்டபோதும் நித்திராதேவி அவனை அணைக்க மாட்டாளென்று நீண்ட நேரம் அடம் பிடித்தாள். அடுத்த நாள் அதிகாலை டியூசனுக்குச் செல்ல வேண்டும். அவனது உள்ளங் கவர்ந்த காதலியான சந்திரமதிக்குக் கடிதம் கொடுக்க வேண்டும். இவ்விதம் பல முக்கிய விடயங்களிருக்கையில் அவனைத்தழுவ நித்திராதேவி முரண்டுபிடித்துக்கொண்டிருந்தாள்.

இதற்கிடையில் அவனது சிந்தையில் கார்க்கியின் தாய் நாவலின் நாயகன் பாவெலின் நினவு தோன்றியது. பாவெலின்  துரதிருஷ்ட்டம் பிடித்த நாவலின் ஆரம்பத்திலேயே மரணித்த அவனது தந்தையின்  நினைவு தோன்றியது. அடக்கு ஒடுக்குமுறைகள் நிலவிய அவன் வாழ்ந்த சமுதாய  அமைப்பு நினைவுக்கு வந்தது.

இறுதியாக அவன் மேல் இரக்கப்பட்டு நித்திராதேவி அவனை அணைத்துத் தழுவ முடிவு செய்தாள். கண்கள் சொருக ஆரம்பிக்கையில் அவன் சந்திரமதியை நினைக்க விரும்பினான். அவளது கரிய விழிகளை, பொட்டு முகத்தை, சுருள் முடியை, மயக்கும் முறுவலை, ஆடி அசைந்து நடைபயிலும் இடுப்பை நினைத்தான். அவன் அவளிடம் கடிதத்தைக் கொடுத்தபோது அவள் வெட்கத்துடன் அவனை நோக்கிச் சிரித்ததாக உணர்ந்தான். இவ்விதமாக நித்திராதேவியின் இறுக்கம் மிகுந்த அணைப்பில் தன்னை மறந்து விழித்தபோது காலை மணி பத்தைத்தாண்டி விட்டிருந்தது.

அத்தியாயம் நான்கு:  காளையின்  காதல் உணர்வுகள்!

“யாயும் ஞாயும் யார் ஆகியரோ?
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்?
யானும் நீயும் எவ்வழி அறிதும்?
செம்புலப் பெயல் நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே.“- செம்புலப்பெயனீரார் ( குறுந்தொகை -40) -
மணிவண்ணனுக்கு ஒரு கணம் தன்மேலேயே வெறுப்புத் தோன்றியது. எவ்வளவு தூரம் அவன் திட்டமிட்டிருந்தான் தன் கடிதத்தைச் சந்திரமதியிடம் கொடுப்பதற்காக. அவனது திட்டம் அவனது ஆழ்ந்த தூக்கத்தினால் பிழைத்துப்போய்விட்டதே. அடுத்தநாள் ஞாயிறு டியூசன் வகுப்பில்லை. இனி அடுத்த வகுப்பு திங்கள் காலையில்தான். அதுவரை காத்திருக்க வேண்டும். இம்மாதத்துடன் டியூசன் வகுப்பும் முடிந்து விடும்.அதன் பிறகு அவளைக் காண்பதற்குக் கூடச் சந்தர்ப்பங்கள் வாய்க்குமோ இல்லையோ தெரியாது. இந்நிலையில் எப்படியாவது அவளது பதிலை அறிந்து விடவேண்டுமென்று முடிவு செய்துக் கவனமாகப்போட்ட திட்டம் இப்படிப்பிழைத்துப்போய்  விட்டதேயென்று மனம் எண்ணியது. மறுகணம் எல்லாமே நல்லதுக்காகத்தானிருக்கும் என்று எப்பொழுதும் இருப்பினை ஆரோக்கியமாக எதிர்கொள்ளும் அவனது மனது எண்ணி அவனை ஆறுதல்படுத்தியது.

அன்று முழுவதும் அவனால் வேறெதிலும் கவனத்தைச் செலுத்த முடியாமலிருந்தது. மனம் நிறைய அவளே நிறைந்திருந்தாள். அவனுக்கு அவனையெண்ண எண்ணச் சிறிது வெறுப்பாகக்கூடவிருந்தது. எதற்காக இக்காதல் உணர்வுகள் மனிதரைப் பிடித்து ஆட்டி வைக்கின்றன என்றொரு எண்ணமும் தோன்றியது. மானுட வாழ்க்கை பல்வகை உணர்வுகளாலும் பின்னப்பட்டதொன்று. வர்க்க வித்தியாசங்களற்று, வர்ண வித்தியாசங்களற்று, வயது வித்தியாசங்களற்று மனிதரை ஆட்டிப்படைக்கும் முக்கியமான மானுட உணர்வாகக் காதலைக்  கூறலாம். குறிப்பாகத் தமிழரைப்பொறுத்து காதலும், வீரமும்தாமே அவர்தம் உணர்வுகளில் முக்கிய இடங்களைப் பிடித்திருக்கின்றன. சங்க இலக்கியங்களில் அகமும் (காதலும்) புறமும் (வீரமும்) தாமே நிறைந்து கிடக்கின்றன. இயற்கையில் உயிரினங்களின் இருப்புக்கு இனப்பெருக்கம் முக்கியமாகவிருக்கின்றது, அதற்காக இயற்கை உருவாக்கிவைத்த உணர்வுதானே இக்காதல். காமத்தின்மூலம் உயிர்கள் இனப்பெருக்கம் செய்து தம்மை நிலைநிறுத்துவதற்கு ஒரு சாதனமாக விளங்கும்  உணர்வுதானே இந்தக் காதல். ஆனால் அப்படியும் கூறுவதற்கில்லை. காதலைக் காமத்துடன் ஒன்றாக வைத்து எண்ணமுடியாது. காதலில் காமம் கலந்திருந்தாலும் , அவற்றில் முன்னிலை வகிப்பது காதலே. காதலற்ற காமம் உடற்பசிக்கான உணவு மட்டுமே.

இவ்விதமாகப் பல்வகை எண்ணங்களில் மனம் மூழ்கிக்கிடந்தது. காதல் உணர்வுகளால் பீடிக்கப்பட்டுள்ள பெண்களை வர்ணிக்கும் அளவுக்குச் சங்கப்பாடல்கள் ஆண்களின் உணர்வுகளை விபரிப்பதில்லை. அவ்விதம் விபரிப்பது ஆண்மையின் வீர உணர்வுக்கு உரியதல்ல என்று அக்காலத்துப் புலவர்கள் எண்ணியிருந்திருக்கலாமென்று தோன்றியது. ஆணாதிக்க உலகு ஆண்களை வீரத்தின் அடையாளமாக, எதற்குக் கலங்காத இரும்பு  மனம் கொண்ட ஆளுமைகளாக உருவகித்திருந்ததன் விளைவு. ஆனால் காதல் உணர்வுகள் ஆண் பெண் வேறுபாடற்று இருவருக்கும் பொதுவாகத்தானிருக்கின்றது என்று அன்று அவனுக்குத் தோன்றியது. இன்னுமிரண்டு நாட்கள் அவளைக் காணக் காத்திருக்க வேண்டுமென்று நினைப்பதே அவனுக்கு அவள் மீதான விரகத்தை அதிகரிக்கப்போதுமாகவிருந்தது.

நினைவில் தொடர்ந்தும் அவளது வட்டக்கருவிழிகளும், புன்னகையும் , சுருண்ட இரட்டைப்பின்னல்களும், ஆடி அசைந்து செல்லும் அவளது நடையழகுமே தோன்றிக்கொண்டிருந்தன. அவற்றிலிருந்து தன்னை மறப்பதற்காக 'ரேடியோ'வைப் போட்டான். அங்கும் நினைவில் நின்றவை நிகழ்ச்சியில் பி.பி,ஶ்ரீனிவாஸ் பாடிக்கொண்டிருந்தார். அன்றைய அவனது  மனநிலையை வெளிப்படுத்தும் வகையில் அமைந்திருந்த பாடல் வரிகளைக் கவிஞர் கண்ணதாசன் எழுதியிருந்தார்.

" நேற்று வரை நீ யாரோ? நான் யாரோ?
இன்று முதல் நீ வேறோ? நான் வேறோ?
காணும் வரை நீ அங்கே . நான் இங்கே.
கண்டபின்பு நீ இங்கே.நான் அங்கே"

எவ்வளவு அற்புதமான மானுட வாழ்க்கை என்று அவனது  மனம் எண்ணியது. நேற்றுவரை அறியாத ஒருவர்மேல் எவ்விதம் இவ்வளவு அன்பை வைக்க முடிகின்றது!  ஒரு பார்வையில் எவ்விதம் இவ்விதமான உறவு இதயத்தை ஆட்டிவைத்து விடுகின்றது. ஒரு பார்வையில் எப்படி அவள் தன் நெஞ்சின் ஆழத்தில் சென்று குடிகொண்டாள் என்று எண்ணினான். ஆச்சரியமாகத்தானிருந்தது. பாடல் வானொலியில் தொடர்ந்தது.

"உன்னை நான் பார்க்கும் போது
மண்ணை நீ பார்கின்றாயே
விண்ணை நான் பார்க்கும் போது
என்னை நீ பார்கின்றாயே"

கவிஞரின் அனுபவம் தோயந்த வரிகளின் சிறப்பினை அவன் தன் சொந்த அனுபவ உணர்வுகள் மூலம் அறிந்துகொண்டான்; புரிந்து கொண்டான். அவனது நினைவில் சந்திரமதி அதிகாலைப்பொழுதுகளில் வீதியில் நடந்து வரும் தோற்றம் படம் விரித்தது. ஒரு தடவை டியூசனுக்கு வரும் வழியில் அவனும் அவளும் நேரடியாகச் சந்தித்துக்கொண்டனர். அவளை அவன் நோக்கியபோது அவளது தலை நிலத்தை நோக்கிக் குனிந்திருந்தது. அவளது நாணிச்சிவந்து தாழ்ந்த அத்தோற்றம் இன்றும் அழியாமல் பதிந்திருந்தது. இருப்புள்ளவரை அக்கணங்கள் பதிந்திருக்குமென்று அவன் நினைத்தான். அக்கணங்களை அழியாமல் இதயத்தில் பொத்தி வைத்திருப்பதாக அவனது மனது உறுதியெடுத்துக்கொண்டது.

அவனது நினைவு முழுவதும் அன்று அவளே நிறைந்திருந்தாள். அவனால் தாள  முடியாத அளவுக்கு நிறைந்திருந்தாள். அவள் வீடு பக்கம் சென்று ஒருமுறை பார்த்தாலென்ன என்று தோன்றியது. சைக்கிளையெடுத்துக்கொண்டு சென்று இரண்டு தடவைகள் அவளது வீட்டைச்சுற்றி வளையமிட்டான். அவளின் நடமாட்டமேயற்று அமைதியில் ஆழ்ந்து கிடந்தது அவளது வீடு. அந்நேரம் அவள் உள்ளே என்ன செய்து கொண்டிருப்பாளென்று ஒரு கணம் எண்ணிப்பார்த்தான். ஒருமுறையாவது அவளது முகத்தைப்பார்த்தால் போதுமென்று தோன்றியது. மீண்டுமொருமுறை அவள் வீட்டைச்சுற்றி வட்டமிட்டான். வெற்றி  கிடைக்கவில்லை. சிறிது நேரம் தன்னை அவள் நினைவிலிருந்து விடுவிக்க நினைத்தான். அதற்கு ஒரே வழி பொதுசன நூலகம் செல்வதுதான் என்று தோன்றியது. நூலகங்கள் எப்பொழுதும் அவனுக்கு இன்பத்தைத்தந்தன. அங்கிருக்கும் நூல்களின் மணம் அவனை மெய்ம்மறக்க வைக்கும் தன்மை கொண்டது. நூலகச்சூழல் அவனை நிச்சயம் சந்திரமதியின் மீதான கவனத்திலிருந்து மீட்டு வைக்குமென்று தோன்றியது.

நூலகம் செல்வதாக முடிவு செய்ததும் மறக்காமல் அவன் சந்திரமதிக்கு எழுதி வைத்திருந்த கடிதத்தை எடுத்து சேர்ட் பொக்கற்றுள் வைத்துக்கொண்டான். தப்பித்தவறிக்கூட வீட்டில் வேறு யாரிடமாவது அக்கடிதம் அகப்பட்டுவிடக்கூடாது என்பதற்கான் முன்னெச்சரிக்கை நடவடிக்கை. டியூசனுக்குக்கொண்டு செல்லும் புத்தகப் பையையும் எடுத்துக்கொண்டு நூலகத்துக்குச் சென்றான். சனிக்கிழமையாதலால் வழக்கத்தை விட நேரத்துடன் நூலகத்தைப் பூட்டி விடுவார்களென்பதும் நினைவுக்கு வந்தது. வழக்கம்போல் ரீகல் தியேட்டர் அருகாகச் செல்லும் வீதி  வழியாக நூலகம் நோக்கிச் சென்றான். செல்கையில் வழக்கம்போல் சந்திரனின் தேநீர்க் கடையில் தேநீர் குடித்துவிட்டுச் சென்றான். சந்திரன் மணிவண்ணன் தனியாக வந்ததைக்கண்டு "எங்கே உங்கள் சிநேகிதர்" என்று கேட்டார். அதற்கு மணிவண்ணன் ஏதோ சாக்குப்போக்குக்கூறிவிட்டு நூலகம் நோக்கிய பயணத்தைத் தொடர்ந்தான்.

யாழ்பொதுசன நூலகத்தில் நுழைகையிலேயே மனத்திலொருவித அமைதி கலந்த உணர்வு படர்ந்தது. நேராகவே நூல்களை இரவலெடுக்கும் பகுதிக்குள் நுழைந்தான். அறிவியல் நூல்களேதாவது எடுக்கலாமென்று முடிவு செய்தவனாக அத்துறையில் ஏதாவது நல்ல நூல்கள் அகப்படுமா என்று தேடிக்கொண்டிருக்கையில் அவனிருந்த நூல்களை இரவல் வாங்கும் பகுதிக்குள் நுழைந்து கொண்டிருந்த சந்திரமதியைக் கண்டு திடுக்கிட்டான். கூடவே எல்லையற்ற களிப்புமடைந்தான். கொடுக்கும் தெய்வம் கூரையைப் பிய்த்துக்கொண்டு கொடுக்குமென்று கூறும் பழமொழியின் ஞாபகமெழுந்தது. கூடவே கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வந்ததென்ற சொலவடையும் நினைவிலெழுந்தது. அன்று முழுவதும் அவனது உள்ளத்தைப் படாதபாடு படுத்திக்கொண்டிருந்த சந்திரமதி அவனது நிலையை அறியாதவளாக  நூலகத்தின் இரவல் பகுதிக்குள் நுழைந்து கொண்டிருந்தாள். அதுவரை அவனைப் பீடித்திருந்த விரக உணர்வுகளெல்லாம் எங்கோ ஓடி ஒளிந்தனவா?

அவனது உள்ளத்திலோர் எண்ணமெழுந்தது. ஏன் இப்படிச் செய்தாலென்ன? காலையில் கொடுப்பதாகவிருந்த கடிதத்தை  இப்போதே கொடுத்தாளென்ன? இந்தச் சந்தர்ப்பத்தை  ஒருபோதும் தவற விட்டுவிடக்கூடாதென்று முடிவு செய்தவனாக பொக்கற்றிலிருந்த கடிதத்தை விரைவாக எடுத்து புத்தகைப்பையிலிருந்த கணிதக் கொப்பியில் வைத்தான். இதற்கிடையில் நூலிரவல் பகுதிக்குள் நுழைந்துகொண்டிருந்த சந்திரமதியும் அவன் அங்கிருப்பதைக் கவனித்து விட்டாள். அவனைக்கண்டதும் தெரிந்த ஒருவரைக்கண்டதுமேற்படும் புன்னகை அவள் இதழ்களில் படர்ந்தது.  பதிலுக்கு இவனும் அவளை நோக்கியொரு புன்னகையை வீசியவாறு தன்னை ஒருநிலைக்குக் கொண்டுவர முயற்சி செய்தான். இதுவரையில் ஒருநாள் கூட அவன் அவளை இவ்விதம் தனியாகச் சந்தித்துப்பேசியது கிடையாது. அவளை மனத்தில் வைத்து ஆராதித்துக்கொண்டிருந்தானேயொழிய தனிமையில் சந்தித்து மனம் விட்டு உரையாடியதில்லை. அதனால் அச்சூழலை எவ்விதம் எதிர்கொள்வதென்று சிறிது நேரம் திண்டாட்டம் நிலவியது. விரைவாக அதனைச் சமாளித்துக்கொண்டான். மனத்திலுறுதியை ஏற்படுத்தியவானாக அவளை நோக்கி,

"சந்திரமதி, நல்ல சமயம் உங்களை நான் இங்கு கண்டது" என்றான். அவனுக்கே அவனைப்பற்றியெண்ணுகையில் ஆச்சரியமாகவிருந்தது. தானா இப்படி இயல்பாக அவளுடன் பேசுவதென்று தோன்றியது. அவள் வியப்புடன் அவனை நோக்கினாள். ஒருநாள் கூட அவன் அவளுடனிவ்விதம் உரையாடியதேயில்லை.

என்ன விடயம் என்பதுபோல் அவனை அவள் ஏறிட்டு நோக்கினாள். இதற்குள் மணிவண்ணன் ஏதோ அவளுடன் பல நாட்கள் உரையாடிப்பழகியவனைப்போலொரு உணர்வினையடைந்திருந்தான்.

"காந்திமதி  உங்களிடம் நோட்ஸ் குடுத்துவிடச் சொன்னவள். இன்றைக்குக் காலையிலை தந்திருக்க வேண்டும். ஆனால் நான் டியூசனுக்கு வரேல்லை. அதாலைத் தர முடியேலை. நல்ல காலம் உங்களை இங்கு கண்டது" என்று கூறியபடியே கணிதக் கொப்பியையெடுத்து உள்ளே வைத்த கடிதத்துடன் கொடுத்தான்.கொடுத்த மறுகணவே அவளுக்கு நன்றி கூறிவிட்டு விரைந்து வெளியே வந்தான்.  ஏதோ பெரிய இக்கட்டிலிருந்து வெளியேறிய திருப்தி கலந்த உணர்வு படர்ந்தது. உள்ளத்தை அழுத்திகொண்டிருந்த பாரமொன்றினை இறக்கி வைத்ததால் மனது இலேசாகியது. தன் உள்ளத்தை வெளிப்படுத்தும் எண்ணங்களை வெளிப்படுத்தும் கடிதத்தை அவளிடம் கொடுத்தது அவனை வாட்டிக்கொண்டிருந்த விரக உணர்வுகளுக்கு ஒருவகையில் விடை தந்தது. அவள் என்ன  பதிலைத் தந்தாலும் அவன் மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்வான். ஆனால் தன் எண்ணங்களை ,உணர்வுகளை அவளுக்கு உணர்த்தாமல் ஒருதலையாக மாய்வதை விடவும் ,அவளுக்குத்  தெரியப்படுத்தி அதற்கான பதிலைப்பெறுவது ஆரோக்கியமானதொரு செயலாகவே அவனுக்குப்பட்டது.

நூலகத்தை விட்டு விரைவாக வெளியேறிக்கொண்டிருக்கையில் அவன் எண்ணினான் 'இப்பொழுது அவள் என்ன செய்து கொண்டிருப்பாள்? கொடுத்த கணிதக் கொப்பியிலுள்ள கடிதத்தைப் படித்துக்கொண்டிருப்பாளோ?"

அப்பொழுது அவன் வெளியேறிக்கொண்டிருக்கையில் நூலகத்தை நோக்கி வந்துகொண்டிருந்தாள் காந்திமதி. அவனுக்கு 'அஞ்சும் கெட்டு அறிவும் கெட்டு' என்று கூறுவார்களே? அந்நிலையேற்பட்டதெனலாம். 'இவள் எங்கே இந்த நேரத்திலை  இங்கை? இவள் கொடுத்ததாகத்தானே கொப்பியைச் சந்திரமதியிடம் குடுத்திருக்கிறன். இப்ப போய் இவள் அவளைச் சந்திச்சால் அவள் எல்லாவற்றையும் இவளிடம் போட்டுடைப்பாளே? ' என்று எண்ணுகையிலேயே அவனது நெஞ்சிலொருவிதப் படபடப்பு தோன்றியது. இதற்கிடையில் காந்திமதியும் அவனைக் கண்டு விட்டாள்.

"என்ன இந்த நேரத்திலை தனியாக இந்தப் பக்கம்? கேசவன் அண்ணா  வரேல்லையா?"

"இல்லை. ஒரு புத்தகத்தின் டியூ டேட் இன்றைக்குத்தான். அதுதான் வந்தனான். அதுசரி. நீ என்ன இந்த நேரத்திலை. உனக்குத்தான் லைப்ரரியென்றால் பிடிக்காதே.."

அவனது பகடியை இரசிக்கும் நிலையில் அவளில்லை.

"யார் சொன்னது லைப்ரரி பிடிக்காதென்று. இன்றைக்கு சந்திரமதியக்காவை லைப்ரரியிலை சந்திக்கிறன் என்று சொல்லியிருந்தன். அவ எனக்கு அப்பிளைட் மாத்ஸ் சொல்லித் தாரதென்று சொல்லியிருந்தவ. அதுதான் வந்தனான். நீ சந்திரமதியக்காவைக் கண்டனியா அண்ணா?" என்று பதிலுக்கு அவள் கேட்டாள்.

என்ன? மணிவண்ணன் ஒருகணம் அதிர்ந்தே போனான். இவளுக்கு மட்டும் அவன் காதல் கடிதம் கொடுத்த கதை தெரிந்ததோ 'கதை கந்தல்தான்' என்றும் எண்ணினான். இனி பயப்பட முடியாது. வெள்ளம் தலைக்கு மேல் போய்விட்டது. நடப்பதை ஏற்றுக்கொள்ள வேண்டியதுதான் என்று மனத்தைத் திடமாக்கிக்கொண்டான். அத்திடத்துடன் "உன்ர சிநேகிதியக்கா உள்ள தானிருக்கிறா" என்று கூறியவாறே விரைவாகவே நூலகத்தை விட்டு வெளியேறினான் மணிவண்ணன். 'பாவி போன இடமெல்லாம் பள்ளமும் திட்டியும்தாம்' என்னுமோர் எண்ணமும் கூட எழுந்தது.

அத்தியாயம் ஐந்து:  நினைவில் நிறைந்தவள்!

வீ்டு நோக்கித் திரும்பிக்கொண்டிருந்த மணிவண்ணனின் நினைவெல்லாம் அடுத்து என்ன நடக்கும் என்பதிலேயே இருந்தது. சந்திரமதி அக்கடிதத்தைப் படித்திருப்பாளோ? ஒருவேளை காந்திமதியிடம் அவன் அவளுக்குக் கடிதம் எழுதிய விடயத்தைக் கூறியிருப்பாளோ? இவ்விதமான சிந்தனைகளில் மூழ்கிக்கிடந்த அவன் தான் அவசரப்பட்டு விட்டானோ என்றும் எண்ணினான். ஒருவன் ஒருத்தியை விரும்புவது மனித வாழ்க்கையில் மிகவும் சாதாரணமான ஒரு விடயம். அதனை வெளிப்படுத்துவதுக்குக் கூட எவ்வளவு தடைகள். அதனையொரு பாவ விடயமாக, ஒழுங்கற்ற நடத்தையாக உருவகித்து வைத்துள்ளதே இச்சமுதாயமென்று   எண்ணமொன்று எழுந்தோடியது. அதே சமயம் இன்னுமொரு எண்ணமும் எழுந்தது. பதின்ம வயதுப்பருவம் இவ்விதமான உணர்ச்சிக்கொந்தளிப்பு நிறைந்த பருவம். இப்பருவம் தாய், தந்தையரின் அரவணைப்பில், ஆதரவில் கழியும் பருவம். வாழ்க்கையில் தனித்து நிற்கும் நிலையை அடைந்த பருவமல்ல. இப்பருவத்தில் இக்காதல் உணர்வுகள் அவசியம்தானா என்றும் எண்ணினான். உணர்வுகள் அவசியமென்றும் எண்ணிய அவன் அவை அவசியமானவைதாம். பருவத்தின் தேவைகளிலொன்றுதான். ஆனால் அதே சமயத்தில் இக்காதல் உணர்வுகள் கல்வியைத் தடுக்கும் வகையில் அமையக் கூடாது. தனித்து நின்று வாழ்வை எதிர்நோக்கும் நிலை வரும் வரையில் காதலிப்பவர்கள் காத்து நிற்க வேண்டும். உணர்வுகளைக் கட்டுப்படுத்தி வைத்திருக்க வேண்டும். உண்மையான காதலென்றால் காத்து நிற்கும் தன்மை மிக்கதாக அமையும். அவ்விதம் காத்து நிற்க முடியாத காதல் உண்மையானதாக இருக்க முடியாது. அவ்விதம் காத்து நிற்க முடியாதென்றால் , அவ்விதம் காத்து நிற்கையில் எதிர்ப்படும் தடைகளை உறுதியுடன் எதிர்கொண்டு வெற்றியடையும் காதலே உண்மையானது என்றும் எண்ணினான். ஆனால் உண்மையான  காதல் கூட சில சந்தர்ப்பங்களில் கடமைகளின் காரணமாக, உறவுகளின் மீதான பாசத்தின் காரணமாக நிறைவேறாமல் போய்விடும் சாத்தியங்களுள்ளன என்பதையும் அவன் நினைத்துப்பார்த்தான்.

இவ்விதமான எண்ணங்களின் மத்தியில் அவன் சந்திரமதி மீதான தன் காதல் உணர்வுகளை எண்ணிப்பார்த்தான். அவள் அவனது காதற் கோரிக்கைக்கு அனுமதியளிக்கும்  பட்சத்தில் அடுத்துச் செய்ய வேண்டியது என்ன? அவன் அவளிடம் தான் படித்து முடிக்கும் வரையில் , அவள் படித்து முடிக்கும் வரையில், இருவரும் தனித்து வாழ்க்கையை எதிர்நோக்கும் நிலை வரும் வரையில் காத்து நிற்க வேண்டும். இதற்கு இருவருமே சம்மதிக்க வேண்டும். இவ்விதமான முடிவினை இருவருமே எடுக்க வேண்டும். இவ்விடயத்தில் இருவருக்கும் தெளிவான நிலைப்பாடு இருக்க வேண்டும்.

ஒருவேளை அவள் அவனது கோரிக்கையை ஏற்றுக்கொள்ளாவிட்டால்.. அது அவனைப்பொறுத்தவரையில் ஏற்றுக்கொள்வதற்கு மிகவும் சிரமமானது. ஆனால் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். அவளது நிலையை ஏற்றுக்கொண்டு அவன் தன் வாழ்க்கைப்பாதையில் உறுதியாக நடைபோட வேண்டும். .அவனுக்கு வாழ்க்கையில் செய்வதற்குப் பல திட்டங்கள் , எண்ணங்கள் உள்ளன. அவனது வாழ்க்கை அவனுக்காக, குடும்பத்துக்காக மட்டுமே அமைந்துவிடுவதாக இருந்து விடக்கூடாது. அவன் வாழும் சமுதாயத்துக்காக, மானுட சமுதாயத்துக்காகவும் அமைந்திருக்க வேண்டும். இவ்விடயத்திலும் அவன் மிகவும் தெளிவாக இருந்தான். இவ்விடயத்தில் அவனுக்கு வழிகாட்டி அவனது நண்பன் கேசவன் தான். அவன் சமுதாயப் பிரக்ஞை மிக்க ஒருவன். அவனது சிந்தனையெல்லாம் எப்போதும் வர்க்கமற்ற சமுதாய அமைப்பை எவ்விதம் அடைவது என்பதிலேயே இருந்தது. அவன் வாசிக்காத நூல்களேயில்லை. அவன் சிந்திக்காத விடயங்களேயில்லை. இதனால் அவனால் எவ்விடயத்திலும் தெளிவான முடிவுகளை மிகவும் இலகுவாக எடுக்க முடிகின்றது. அவனைப்போலவே தன் வாழ்வும் எப்பொழுதுமிருக்க வேண்டுமென்பதில் மணிவண்ணன் மிகவும் உறுதியாகவிருந்தான். அவனைப்போன்ற ஒருவனை நண்பனாகப்பெற்ற தான் ஒரு பாக்கியசாலியென்று எண்ணினான்.

இவ்விதமாகப் பலவகை எண்ணங்களில் மூழ்கியவனாக மணிவண்ணன் வீடு நோக்கிச் சைக்கிளில் விரைந்து கொண்டிருந்தான். மீண்டும் அவனது சிந்தனை அவன் கொடுத்த கடிதத்தின் மீது திரும்பியது. ஒருவேளை அவள் அவனை விரும்பாமலிருந்தால் , அவனை ஏற்றுக்கொள்ளாமலிருந்தால் அக்கடிதத்தைக் கிழித்து எறியுமாறு கூறியிருந்தான். அவள் அதனைச் செய்வாளா அல்லது யாரிடமாவது காட்டி விடுவாளா? அவ்விதம் காட்டி விடுவாளென்றால் அதனால் ஏற்படும் விளைவுகளை அவன் அனுபவிக்கச் சித்தமாகவிருக்க வேண்டும். இருப்பான். இவ்விதம் முடிவு செய்தான். அதன் பின் மனத்தில் சிறிது ஆறுதலுடன் கூடிய தெளிவும் அமைதியும் படர்ந்தன.

மாலை ஐந்து மணியளவில் கேசவன் வந்தான். இருவரும் வீட்டின் வளவில் வேலியோரமிருந்த மாமரத்தின் கீழ் பிரம்புக் கதிரைகளிரண்டைக்கொண்டு சென்று அவற்றில் அமர்ந்தவாறு உரையாடலைத்தொடர்ந்தனர். மணிவண்ணின் வீட்டு வளவு பலவகை மரங்கள் நிறைந்ததொரு சோலையென்று கூறலாம். மூன்று தென்னைகள், இரண்டு பனைகள், முருங்கை மரமொன்று, ஒரு வேம்பு, மூன்று மாமரங்கள், ஜாம் மரமொன்று, கொய்யா மரமிரண்டு என்று எந்நேரமும் குளிர்ச்சியாகவுள்ள வளவு. வடக்கு வேலியின் அருகில் அவனது தங்கை இந்திராவின் வீட்டுப்பூந்தோட்டமிருந்தது. மல்லிகை, ரோஜா, செவ்வந்தியென்று பல்வகைப் பூ மரங்களை அவள் அதிலவள் வளர்த்து வந்தாள். எப்பொழுதும் பூத்துக்குலுங்கிக்கொண்டிருக்கும் பூந்தோட்டமது.  தெற்கு வேலியின் அருகில் அவனது தாயாரின் வீட்டுத்தோட்டமிருந்தது. பல்வகைக் காய்கறிவகைகள் விளையும் வீட்டுத்தோட்டமது. இவ்விதம் பச்சைப்பசேலென்று கிடந்த வளவில் பல்வகைப் பட்சிகளின் நடமாட்டத்துக்கும் அளவில்லை. எத்தனை வகை புள்ளினங்கள்: சிட்டுக்குருவி, கொக்குறுபான், குயில், பச்சைக்கிளி, மரங்கொத்தி, செம்போத்து, தேன் சிட்டு, மைனா, மணிப்புறா.... இவ்விதம் கூறிக்கொண்டே செல்லலாம். அணில்களுக்குக் குறைவில்லை. மேற்கு வேலியை அண்டிய மாமரத்தின் கீழ் அமர்ந்து உரையாடுவது மணிவண்ணனுக்கு மிகவும் பிடித்த விடயங்களிலொன்று. கேசவனுக்கும் மிகவும் பிடித்திருந்தது. அணில்கள் ஓடித்திரியும் மாமரத்தின் கீழ் பல்வகைப்புள்ளினங்களையும் இரசித்தப்படி, அந்திச்சூரியனின் அழகில் மெய்ம்மறந்தபடி உரையாடுவதிலுள்ள இன்பம் தனித்துவமானது. இயற்கையின் தாலாட்டில் தம்மை மறந்து உரையாடுவதிலிருவருக்குமே மிகுந்த விருப்புண்டு.

மணிவண்ணனே பேச்சைத் தொடங்கினான்: "கேசவா, ஒரு விசயத்தை நானுனக்குக் கூற வேண்டும்"

'என்ன?' என்பதுபோல் அவனை நோக்கினான் கேசவன்.

மணிவண்ணன் தொடர்ந்தான்: "இன்றைக்குக் காலையிலை டியூசன் வகுப்பை மிஸ் பண்ணிட்டேன். அதாலை சந்திரமதிக்குக் குடுப்பதாகவிருந்த கடிதத்தைக் குடுக்க முடியேலை. நான் காலையிலை நித்திரையாலை எழும்ப நேரமாயிட்டுத்து. அதாலை ஒரே தலையிடியிலை இருந்தனான். லைப்ரரிக்குப்போனால் மைண்ட்டுக்கு நல்லாயிருக்குமென்று போனனான். அங்கை தற்செயலாகச் சந்திரமதியைக் கண்டனான். குடுத்திட்டேன்."

இதற்குக் கேசவன் கூறினான்: "குட். நல்லதுதானே. அதுக்கேன் முகத்தை இப்பிடிச் சோகத்திலை வைத்திருக்கிறாய்?"

"குடுத்திட்டு வெளியிலை வரேக்கைதான் பார்த்தன் காந்திமதியை. அவளுக்கு அங்கை சந்திரமதி பாடம் சொல்லிக்குடுக்கப்போறாளாமென்று காந்திமதி சொன்னாள்" மணிவண்ணன் கூறிவிட்டு மேலும் தொடர்ந்தான்:

"அதுதான் கொஞ்சம் பயமாயிருக்கு. சந்திரமதி எல்லாத்தையும் காந்திமதியிடம் போட்டுடைக்கிறாளோவென்று. நீயென்னடா நினைக்கிறாய்?"

"இஞ்சைப்பார் மணி, இதுக்கேன் இப்படிப்பயப்படுறாய்? அவள் இவளிடம் சொன்னால் சொல்லிட்டுப் போகட்டும். காந்திமதிக்குத் தெரிந்தாலென்ன.. தெரிஞ்சிட்டுப் போகட்டுமே. எப்பவோ தெரியிறது இப்போ தெரியட்டுமே.."

"அப்படிச் சொல்லாதை  கேசவா, அப்படி மட்டும் நடந்தால் தேவையில்லாத பிரச்சினைகள்தான் வரும். அப்படி நடப்பாமலிருப்பதுதான் நல்லது."

"தேவையில்லாமல் யோசிக்காதை. எது நடந்தாலும் நல்லதுக்கு என்று நினையடா. சும்மா மனத்துக்குள்ளை வைத்துக் கவலைப்படுகிறதுக்குப் பதிலாக இதிலை ஒரு முடிவைக் காணுறது நல்லதுதானே. அப்படிச் சந்தோசப்படு"

இவ்விதம் கேசவன் கூறி மணிவண்ணனைச் சமாதானப்படுத்தினான். இதற்குப்பின்னர் நண்பர்களின் உரையாடல் நாட்டு நிலைமை பற்றியதாகத் தொடர்ந்தது.

கேசவன்  கூறினான்: "மணி, இந்த உலகத்தின் அனைத்துப் பிரச்சினைக்கும் சரியான தீர்வு வர்க்கமற்ற சமத்துவச் சமுதாய அமைப்பொன்றை உருவாக்கிறதுதான். ஆனால் அப்படியொரு பொதுவுடமைச் சமுதாய அமைப்பு உருவாவதை இலாபத்தை மையமாகக்கொண்ட முதலாளித்துச சமுதாய அமைப்பு விரும்பாது. அது போடுற தடைகளாலைதான் இதுவரை உலகமே முழுவதுமாகப் பொதுவுடமைக் கூடாரத்துக்குள் போகமுடியாமல் இருக்கிறது."

தொடர்ந்தும் அவனே தொடர்ந்தான்: "இப்பிடி மக்கள் அனைவரும் வர்க்கரீதியில் ஒன்றாவதை, ஒன்றிணைவதைத் தடுப்பதற்காகக்த்தான் முதலாளித்துவ ஆதிக்க சக்திகள் மக்களை மொழி, இன, மதரீதியாக, சாதிரீதியாகப் பிரித்து வைத்திருக்கிறது. "

இவ்விதமாக நண்பர்களின் உரையாடல்கள் பல விடயங்களைத் தொட்டுச் சென்றன.

இவ்விதமாக நண்பர்களிருவரும் உரையாடிக்கொண்டிருக்கையில் வளவினுள் நுழைந்தாள் காந்திமதி. அவளைக் கண்டதும் ஒரு கணம் திடுக்கிட்டான் மணிவண்ணன். அவனது மனத்தில் பல்வகை எண்ணங்களும் படர்ந்தன. இவள் எதற்கு இங்கு வருகின்றாள்? ஒருவேளை சந்திரமதி எல்லாவற்றையும் இவளிடம் கூறிவிட்டாளோ? அப்பொழுதுதான் காந்திமதி கைகளில் கொப்பியொன்றைக் கொண்டு வருவதைக் கண்டான். தனது கையிலிருந்த கொப்பியை ஆட்டிக்கொண்டு வந்த காந்திமதி அருகில் வந்ததும் " என்னதான் நடக்குது . எனக்கென்றால் ஒன்றுமே விளங்கேலை" என்றபடியே கொப்பியை மணிவண்ணனிடம் கொடுத்தாள். அது மணிவண்ணன் சந்திரமதிக்குக் கொடுத்த கணிதக்கொப்பி. இதையேன் சந்திரமதி இவளிடம் கொடுத்தாள் என்றெண்ணியவனாக மணிவண்ணன் கொப்பியை வாங்கித் திறந்து பார்த்தான். அங்கே அவனது கடிதமில்லை. இப்பொழுது அவனது வேறொரு எண்ணமெழுந்தது. சந்திரமதி கடிதத்தை எடுத்தாளோ அல்லது காந்திமதி எடுத்து ஒளித்து வைத்திருக்கிறாளோ?

"ஏய் காந்தி, ஏன் அவள் உன்னற்றை இந்தக் கொப்பியைத் தந்தாள்?  என்னிடம் கிளாசிலை சந்திக்கேக்கை தந்திருக்கலாமே"

"மணி அண்ணா, சந்திரமதி அக்கா மாஸ்டரிடம் ஓல்ரெடி மாட்த்ஸ் நோட்ஸ் வாங்கிட்டாவாம். அதுதான் இதை உன்னற்றைக்  குடுத்து விடத் தந்தா. தாங்க்ஸ் என்றும் சொல்லச் சொன்னா"

"வேறெதாவது இந்தக்கொப்பியுடன் தந்தவவா? " என்று இன்னுமொரு கேள்வியை அவளிடம் கேட்டான் மணிவண்ணன்.

"இல்லையண்ணா, இந்தக் கொப்பியை மட்டும்தான் தந்தவா" இவ்விதம் கூறிய காந்திமதி கண்களைச் சிமிட்டியவாறு "என்னதான் உங்களுக்கிடையிலை நடக்குது. நோட்ஸ் குடுக்கிறியள். வாங்கிறியள். எனக்கென்றால் ஒன்றுமே விளங்கேலை. "

மணிவண்ணனுக்கு ஒரு விதத்தில் திருப்திகரமான உணர்வு ஏற்பட்டது. சந்திரமதி கடிதத்தை எடுத்து விட்டு இவளிடம் கொப்பியைக் கொடுத்திருக்கின்றாளென்று தோன்றியது. காந்திமதியிடம் கடிதத்தைக் கொடுத்திருந்தால் நடப்பதே வேறாகவிருந்திருக்கும்.

காந்திமதி சென்றதும், மீண்டும் நண்பர்களின் உரையாடல் தொடர்ந்தது. நாட்டு நிலைமை பற்றியே அதிகமாக உரையாடல் அமைந்திருந்தது. ஆகஸ்டில் பாராளுமன்றத்தேர்தல் நடைபெறவிருப்பதால் கட்சிகளின் பிரச்சாரங்கள் ஏற்கனவே தொடங்கி விட்டிருந்தன. இம்முறை முதன்  முறையாகத் தமிழர் விடுதலைக் கூட்டணி 'தனிநாட்டு'க் கோரிக்கையை முன்வைத்துத் தேர்தலில் குதிக்கின்றது. இதே சமயம் நாட்டில் நிலவிய படையினரின் மனித உரிமை மீறல்கள், அவ்வப்போது நடைபெற்ற இனக்கலவரங்கள், தமிழ்ப்பகுதிகளில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றத்திட்டங்கள், அபிவிருத்தி , வேலை வாய்ப்பு போன்ற விடயங்களிலான அரசின் மாற்றாந்தாய் மனப்போக்கு, உயர் கல்வியில் அமுல்படுத்தப்பட்டுக்கொண்டிருக்கும் தரப்படுத்தல் கொள்கை. .இவ்விதம் பல் காரணங்களால் தமிழ் மக்கள் திருப்தியற்றிருந்தார்கள். அதன் விளைவுதான் தமிழ்க்கட்சிகளின் ஒன்றிணைந்த தனிநாட்டுக் கோரிக்கை.  இது இவ்விதமிருக்க இன்னொரு புறத்தில் ஆயுதப்போராட்டமே பிரச்சினக்குத் தீர்வு என்னும் நோக்கில் தமிழ் இளைஞர் குழுக்களின் மறைமுக ஆயுதப்போராட்ட நடவடிக்கைகளும் தொடங்கி விட்டிருந்தன. கேசவனைப்பொறுத்தவரையில் மார்க்சியக் கருத்துகளை நம்புபவன். மிகவும் தெளிவாகப் பிரச்சினைகளை ஆராய்ந்து சிந்திப்பவன். உணர்ச்சியின் அடிப்படையில் சிந்திப்பவன் அல்லன். வர்க்க விடுதலையே அனைத்துப்பிரச்சினைகளுக்கும் தீர்வு என்பதை நம்புபவன். ஆனால் இலங்கையில் பெரும்பான்மையின மார்க்சியவாதிகள் தமிழர் பிரச்சினை விடயத்தில் உரிய கவனத்தைச் செலுத்தவில்லையென்று  அவன் கருதினான். தமிழ் மக்களின் பிரச்சினையை அனைத்து  மக்களுக்குமான வர்க்கப்போராட்டத்துடன் சிந்திக்கும் அவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும்  சிங்கள இடதுசாரிகள் ஆட்சியிலிருக்கும் ஶ்ரீமாவோ பண்டாரநாயக்கவின் அரசுடன் இணைந்திருந்ததும் அவனது இவ்விடயத்திலான அதிருப்திக்கான முக்கிய காரணங்களிலொன்று. முதலில் தமிழ் மக்களின் விடுதலை இலங்கையின் அனைத்து மக்களின் வர்க்க விடுதலைக்குமான முதற்படி என்னும் முடிவுக்கு அவனை நாட்டு நிலைமைகள் கொண்டுவந்து விட்டிருந்தன. இந்த அடிப்படையிலேயே அவனது அரசியற் சிந்தனைகளிருந்தன.

அவனது பாதிப்பு மணிவண்ணனின் சமூக, அரசியற் சிந்தனைகளிலும் ஆதிக்கம் செலுத்தின. கேசவனைப்போல் மார்க்சியக் கருத்துகளை முற்றாக அறிந்த நிலையில் மணிவண்ணன் இருக்கவில்லை. அண்மைக்காலமாகத்தான் கேசவன் மூலம் அக்கருத்துகளை அறியத்தொடங்கியிருந்தான். அதுவரை இனரீதியாக மட்டுமே சிந்தித்துக்கொண்டிருந்த அவனது சிந்தனைப்போக்கை, கிணற்றுத்தவளைப்போக்கிலிருந்து வெளியே கொண்டுவரக் கேசவனின் நட்பு பெரிதும் உதவியதென்று கூறலாம். இதனால் இவ்விடயத்தில் கேசவனுடான உரையாடல்களை அவன் விரும்பினான். மணிவண்ணனின் சிந்தனை உலகம், நாடு , நகரமென்று மனிதரின் பிரச்சினைகளை வைத்து நோக்கப் பெரிதும் உதவியது கேசவனின் அவன் மீதான ஆதிக்கமென்று கூறலாம். மொழி, மதம் , இனம், நாடு, வர்ணமென்று பல்வகைப்பிரச்சினைகளுமற்ற உலகை அவனது மனம் கனவு காணத் தொடங்கியது. 'யாதும் ஊரே! யாவரும் கேளிர்' என்று வாழுமொரு நிலையிருந்தால் எவ்விதம் நன்றாகவிருக்குமென்று அடிக்கடி அவன் எண்ணுவதுண்டு. மனிதரின் இருப்பு பற்றிய அறியாமையின் விளைவுதான் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் முக்கிய காரணமென்றும் அவன் பூரணமாக நம்பினான்.

அன்றிரவு படுக்கையில் புரண்டுகொண்டிருக்கையில் மணிவண்ணனின் நினைவுகளில் பல்வகை எண்ணங்களும் எழுந்து தலைவிரித்தாடின. இறுதியில் அடுத்த நாள் காலையில் நடைபெறவுள்ள டியூசன் வகுப்பு பற்றியும், சந்திக்கப்போகும் சந்திரமதி பற்றியும், கடிதத்துக்கான அவளது பதில் எதுவாகவிருக்குமென்பது பற்றியும் எண்ணியவாறே தூக்கத்திலாழ்ந்தான். அவ்விதம் ஆழ்கையில் அவனது மனத்தில் சந்திரமதியின் வட்டக்கருவிழிகள் படம் விரித்தன; அவளது புன்னகை படம் விரித்தது; இரட்டைப்பின்னல்கள் சதிராட்டமாடின. நினைவுகளில் நிறைந்திருந்த அவளைப்பற்றிய கனவுகளில் ஆழ்ந்தவனாக அவன் தூக்கத்தில் மூழ்கிப்போனான்.

அத்தியாயம் ஆறு: கடிதம் காட்டிய வழி

மறுநாள் அதிகாலையில் நேரத்துடனேயே விழித்து விட்டான் மணிவண்ணன். சந்திரமதி என்ன பதிலைத்தரப்போகின்றாளோ என்ற எண்ணமே மேலோங்கியிருந்தது. அவள் மட்டும் எதிர்மறையானப் பதிலைத்தந்தால் என்ன செய்வது என்றும் சிந்தித்துப்பார்த்தான். பதில் எதுவாக இருந்தாலும் ஏற்றுக்கொள்வதே சரியானது என்றும் முடிவு செய்தான். அவள் மட்டும் சம்மதிக்காவிட்டால் நிச்சயம் ஏற்றுக்கொள்வதற்குச் சிரமமாகத்தானிருக்கும். ஆனால் அதை ஏற்றுக்கொள்வதைத்தவிர வேறு வழியில்லை. 'எங்கிருந்தாலும் வாழ்க' என்று வாழ்த்திக்கொண்டே செல்ல வேண்டியதுதான். இவ்விதமாகத் தன் மனத்தைத் திடமாக்கிகொண்டான் மணிவண்ணன். மகாகவி பாரதியாருக்கே காதல் கை கூடவில்லை. அதற்காக அவர் துவண்டா போய்விட்டார் என்று எண்ணினான். இவ்விதமாக மனோதிடத்தை வளர்த்துக்கொண்டு டியூசன் வகுப்புக்குச் சென்றான். அவன் சென்றபோது யாருமே வந்திருக்கவில்லை. வாசலில் காத்திருந்தான். வழக்கமாகச் சந்திரமதி முதலாவதாக வருவாள். வந்ததும் வீட்டின் பிரதான வாசலினூடு உள்ளே சென்று டியூசன் வகுப்பு மாணவர்கள் செல்வதற்கான வாசற் கதவைத் திறந்துவிடுவாள். இன்று இன்னும் அவளையும் காணவில்லை. இவ்விதமாகக் காத்துநிற்கையில் தூரத்தில் சந்திரமதி ஆடி, அசைந்து வருவது தெரிந்தது. மணிவண்ணனுக்கு நெஞ்சு படக்படக்கென்று அடிப்பதும் தெளிவாகக் கேட்டது. அதுவரையிருந்த மனோதிடம் அவனை விட்டுப் பறக்கச் சிறகடிக்கத்தொடங்கியது. இதற்கிடையில் சந்திரமதி அருகில் வந்துவிட்டாள். அவனை  ஓரக்கண்களால் நோக்கியபடியே மெலிதாகப்புன்னகையினைத் தவளவிட்டாள். எதுவுமே நடக்காததுமாதிரி உள்ளே சென்றாள். அவள் அவனுக்கு முதுகைக்காட்டியபடி உள்ளே சென்றபோது அவன் அவளது கூந்தலை ஆவலுடன் நோக்கினான். அது மல்லிகையற்று வெறுமையாகக்கிடந்தது. அவனது மனத்தில் ஒருவித ஏமாற்ற உணர்வு மேலெழுந்தது. இதற்கென்ன அர்த்தமென்று ஒருவித நப்பாசையுடன் மனம் கேட்டது. இன்னுமா உனக்கு நப்பாசை. அவள்தான் தெளிவாக உனக்குப் பதிலைக் கூறிவிட்டாளேயென்றும் கூடவே அதே மனம் கேட்டது.

மணிவண்ணனுக்கு இனியும் டியூசன் வகுப்புக்குச் செல்வதா என்றோர் உணர்வு எழுந்தது. அவளே மிகவும் இயல்பாக அவனது செயலை உள்வாங்கி, புன்னகைத்தபடி செல்கையில் தான் ஏன் எதற்குக் கலங்க வேண்டுமென்று எண்ணினான். நடந்ததைக் கனவாக எண்ணி மறந்துவிட வேண்டியதுதான் என்று திடமாக முடிவு செய்தா. இச்சமயத்தில் உள்ளிருந்து சந்திரமதி வந்து கதவைத்திறந்து விட்டாள். அவளுக்கு நன்றி கூறியவாறே அவளைத்தொடர்ந்தான். வகுப்பில் அவனும் , அவளும் மட்டுமே இருந்தார்கள். வகுப்பு ஆரம்பமாவதற்கு இன்னும் இருபது நிமிடங்கள் இருந்தன. கடைசி நேரத்தில்தான் மற்றவர்கள் அரக்கப் பரக்க வருவார்கள். சேவற்கொடியோன் மாஸ்ட்டரும் சரியான நேரத்துக்குத்தான் வருவார்.

மணிவண்ணனின் மனத்தில் பல்வகை எண்ணங்களும் தலைவிரித்தாடின. அவள் தனியாகவிருக்கின்றாள். வேறு மாணவர்களும் இன்னும் வந்திருக்கவில்லை. அவளிடமே கேட்டுப்பார்க்கலாமா என்று எண்ணினான். மனத்தில் திடத்தை வரவழைத்துக்கொண்டு மெல்லிய குரலில் அவளை நோக்கிக் கூறினான்:

"சந்திரமதி, என்னை மன்னிச்சுக்கொள்ளுங்கள்"

அவள் சடாரென்று திரும்பினாள்.

"மணிவண்ணன், இந்த வயசிலை மனத்தைப்போட்டிக் குழப்பிக்கொள்ளாதீங்க. எங்களுக்குச் செய்ய வேண்டியவை நிறைய இருக்கு. படிப்பிலை கவனத்தைச் செலுத்துங்கோ. கெட்ட கனவாக நினைச்சு மறந்திடுங்கோ. நான் அதைத் தவறாக நினைக்கேலை."

இவ்விதம் அவள் கூறி முடித்தாள். மணிவண்ணன் ஒருகணம் திகைத்தே போனான். அவன் நிச்சயமாக இவ்விதமாகச் சந்திரமதி கூறுவாளென்று நினைத்தே பார்த்திருக்கவில்லை. எப்பொழுதும் அமைதியாக வந்து போகும் சந்திரமதியா இவ்விதம் தெளிவாக, நிதானமாகக் கதைக்கின்றாள் என்று வியந்து போனான். வேறொரு பெண்ணென்றால் இவ்விடயத்தைப் பெரிதாக்கி அவனைத்  தலைகுனியச் செய்திருக்கக் கூடும். ஆனால் சந்திரமதி அவ்விதம் செயற்படவில்லை. அதுவே ஒருவித நிம்மதியைத்தந்தது.

"சந்திரமதி, உங்களுக்கு நல்ல மனசு. தாங்ஸ்" என்றான். இச்சமயம் அவள் அவனிடம் அவன் எழுதிக்கொடுத்திருந்த கடிதத்தைக் கொடுத்தாள்.  கூடவே கூறினாள்: "உங்களுக்கு நன்றாக எழுத வருகுது. நிறைய எழுதலாமே"

அவன் அக்கடிதத்தை வாங்கி வைத்துக்கொண்டான். இச்சமயத்தில் ஏனைய மாணவர்களும் வந்து சேர்ந்தார்கள்.

அன்று முழுவதும் அவனது சிந்தனையில் சந்திரமதியே வலம் வந்துகொண்டிருந்தாள். அவள் இறுதியாக கூறிய வார்த்தைகள் மீண்டும் மீண்டும் எதிரொலித்துக்கொண்டிருந்தன. "உங்களுக்கு நன்றாக எழுத வருகுது, நிறைய எழுதலாமே". அதுவரையில் அவன் கதைகள் என்று ஒன்றும் எழுதியதில்லை. ஆனால் அவன் தீவிர வாசிப்பாளன். அவனுக்குள் ஒரு சிந்தனை எழுந்தது. ஏன் அவள் கூறுவதுபோல் எழுதக்கூடாது? என்று எண்ணமொன்றும் எழுந்தது. அன்றிரவே அச்சம்பவத்தை மையமாக வைத்துச் சிறுகதையொன்றினை எழுதினான். 'முதற்காதல்'என்றும் தலைப்பும் வைத்தான். அதனை  யாழ்ப்பாணத்தில் அப்போது வெளியாகிகொண்டிருந்த 'வாரச்சுடர்' என்னும் வாரப்பத்திரிகைக்கு அனுப்பி வைத்தான். அக்கதையில் அவன் தன் உணர்வுகளையெல்லாம் கொட்டி வைத்தான். அக்கதையின் நாயகனான பதின்ம வயதுச் சிறுவனின்  காதல் கடிதத்தைப் பதின்ம வயதுப்பெண்ணொருத்தி எவ்விதம் கையாளுகின்றாள் என்பதையொட்டியே அச்சிறுகதை அமைந்திருந்தது. அச்சிறுகதையை எழுதி முடித்தபோது அவனது நெஞ்சிலோர் இன்பகரமான உணர்வு மேலெழுந்தது. அவனுக்கு நிஜத்திலேற்பட்ட ஏமாற்ற உணர்வுகள் ஒரு பொருட்டாகவே தெரியவில்லை. சந்திரமதி அவனுள்ளத்தை வியாபித்திருந்தாள். ஆனால் அவள் மீதான அவனது காதல் அழிந்துவிடுமென்று அவன் நினைக்கவில்லை. அது தன்பாட்டில் ஒரு மூலையில் இருந்துவிட்டுப் போகட்டுமென்று எண்ணினான். ஆனால் அந்தக் காதல் அனுபவம் அவனுக்குத்தந்த உணர்வுகள் முக்கியமாக அவனுக்குப் பட்டது.  மனித வாழ்க்கையில் இது போன்ற அனுபவங்களும், உணர்வுகளும் தேவை என்றெண்ணினான். இவையுமில்லையென்றால் வாழ்க்கை வெறுமையாகவிருந்து விடுமென்றும் எண்ணினான். மீண்டுமொருமுறை தன்னை எண்ணிப்பார்த்தான். இந்த அனுபவத்தால் உண்மையில் நன்மையே விளைந்திருந்தது என்றே அவனுக்குத் தோன்றியது. அவனிடமிருந்த எழுத்துத்திறமையினை அவன் அதுவரையில் உணர்ந்திருக்கவில்லை. எழுதுகையில் ஏற்படும் இன்பத்தை அவன் அதுவரையில் உணர்ந்திருக்கவில்லை. அவற்றை உணர்த்தி வைத்தது அந்தக் கடிதமும், அவள் அதை எதிர்கொண்டு செயற்பட்ட விதமும்தான். அந்தச்சிறிய பெண் எவ்வளவு பெருந்தன்மையுடன் அச்சந்தர்ப்பத்தை எதிர்கொண்டு , மிகவும் இயல்பாக அதனைக் கையாண்டிருக்கின்றாள்! கூடவே அவனுக்குமொரு வழியினைக் காட்டியிருக்கின்றாள். ஆக்கபூர்வமான வழியது. அவனிடமிருந்த திறமையினை அறிந்து அவனுக்குச் சுட்டிக்காட்டியிருக்கின்றாள். அவனுக்கு உண்மையில் மகிழ்ச்சியாகவிருந்தது.

மறுநாள் இதுபற்றிக் கேசவனிடமும் கூறினான். அதற்கு அவனும் அவளது ஆரோக்கியமான எதிர்வினையை எண்ணி வியந்தான்.

"மணி, உண்மையில் நான் பயந்துகொண்டிருந்தன் ஒருவேளை அவள் உனது கடித்தத்தை ஏற்காவிட்டால்  நீ என்ன செய்யப்போகின்றாயோ என்று. ஆனால் அவளும் தெளிவாக இதைக் கையாண்டிருக்கிறாள். நீயும் அதை இயல்பாக ஏற்றிருக்கின்றாய். உனது எழுத்துத்திறமையையும் அவள் உனக்குச் சுட்டிக்காட்டியிருக்கின்றாள். மொத்தத்திலை இதாலை நல்லதுதான் கிடைச்சிருக்கு"

"உண்மைதான் கேசவன். இந்தக்கடிதத்தை நான் எழுதியிருக்காவிட்டால் எனக்கே என் எழுத்துத்திறமையிலை நம்பிக்கை வந்திருக்குமோ தெரியாது. நேற்று ராத்திரியே இச்சந்தர்ப்பத்தை வைத்துச் சிறுகதையொன்றும் எழுதி வாரச்சுடருக்கு அனுப்பியிருக்கிறன். அது மட்டும்  பிரசுரமானால் தொடர்ந்தும் எழுதுவதாகப் பிளான் இருக்கு."

"மணி இந்த விடயத்தை நீ ஏற்றுக்கொண்ட விதம் எனக்குப் பிடிச்சிருக்கு. பொசிட்டிவாக நடந்துகொண்டிருக்கிறாய். இன்னுமொன்று உனக்குச் சொல்ல வேண்டுமென்று இருந்தனான். இப்பத்தான் நினைவுக்கு வந்தது."

"என்ன? என்ன விசயம்?  சொல்லுடா?"

"வன்னியிலை , நெடுங்கேணிப்பக்கம் , எல்லையிலை எங்களுக்கு காணியொன்று இருக்கு. நாங்களும் இதுவரையில் அதை முறையாகப் பாவித்ததில்லை. ஏ.லெவல் டெஸ்ட் எடுத்தபிறகு , ரிசல்ட் வந்து ஒரு வேளை யுனிவெர்சிட்டி கிடைச்சாலும் அதற்கு ஒன்றரை வருசம் இருக்கு, அதுவரையில் என்ன செய்யுறது. சும்மாத்தானே இருக்கப்போறம். அப்பா சொன்னவர் ஏன் அந்தக்காணியைத் துப்புரவு செய்து வயலுக்கு அல்லது ஏதாவது விசயத்துக்குப் பாவிக்கக் கூடாது என்று. மற்றது அப்பா சொன்னவர் எல்லையிலை இருக்கிற எங்கட மண்ணைப்பாவிக்காமல் விட்டால் , அதையெல்லாம் காலப்போக்கில் இழந்துவிடலாம். சும்மா இருக்கிற உங்கட பொழுதையும் பிரயோசனமாக்கலாம்தானே என்று. எனக்கும் அது சரியென்றுதான் பட்டது. நீ என்ன சொல்லுறாய் மணி"

இயற்கை வளம் கொழிக்கும் சூழல் எப்போதுமே மணிவண்ணனுக்குப் பிடித்தமானது. அவனுக்கும் கேசவன் கூறியது சரியாகவே பட்டது.

"எனக்கும் நீ சொல்லுவது சரியாகவே படுகிறதடாம் கேசவா. உங்கள் அப்பா சொல்லுறதுதான் சரி"

இவ்விதம் மணிவண்ணன் கூறவும் கேசவனுக்கும் அது மகிழ்ச்சியைத்தந்தது.

"நீயும் சும்மாத்தான் இருக்கப்போகிறாய். விருப்பமென்றால் நீயும் என்னோடை அங்கு வரலாமே. இரண்டும் பெருமாகச் சேர்ந்து காணியைப்பாவித்து ஏதாவது உழைக்கப்பார்க்கலாமே."

மணிவண்ணன் கேசவன் இவ்விதம்  கூறவும் அதுபற்றிச் சிறிது நேரம் சிந்தித்துப்பார்த்தான். அவன் கூறுவதுபோல் ஏன் அவனும் கேசவனுடன் அவனது வன்னிக் காணிக்குச் செல்லக்கூடாது என்றும் எண்ணினான்.

"கேசவா, எனக்கும் உன்னுடன் வர விருப்பம்தான். எதுக்கும் அம்மாவிடம் கேட்டுப்பார்க்கிறன். இங்கை அம்மாவும் தங்கச்சியும் தனிய இருக்கினம். அப்பாவும் வவுனியாவிலை வேலை. நானும் அங்கு வந்தாலும், அவ்வப்போது இங்கை வந்து வந்து  போகலாம்தானே.. "

"நீ விரும்பின நேரத்திலை வந்து வந்து போகலாம். பெரிய தூரமில்லைதானே. எதுக்கும் அம்மாவிட்ட கேட்டுச் சொல்லு"

மேலும் சில நாட்கள் ஓடி மறைந்தன. அடுத்த வார வாரச்சுடரில் அவனது சிறுகதை 'முதற் காதல்' வெளியாகியிருந்தது. அவனுக்கு மகிழ்ச்சியைத் தாள முடியவில்லை. துள்ளிக்குதிக்கவேண்டும் என்பது போலோர் உணர்வு. முதன் முதலாக அவனது உணர்வுகளை வடித்தெழுதிய சிறுகதையை ஓவியத்துடன் அச்சில் காண்கையிலுள்ள இன்பமே தனி என்று தோன்றியது.  'காதற்கடிதம் இப்படியுமொரு வழியைக் காட்டுமா?' என்று திகைப்பும் ,களிப்புமடைந்தான். அக்கதையில் காதற்கடிதம் எழுதித்தோல்வியுற்ற ஒருவன் எழுத்தாளனாக உருவாகின்றான் என்பது விபரிக்கப்பட்டிருந்தது. காதல் கடிதத்தை நிராகரித்த அப்பெண்,  அக்கடிதத்தின் எழுத்து வளமையைச் சுட்டிக்காட்டி, எழுதுபவனை எழுத்தாளனாக்கியதாகக் கதை பின்னப்பட்டிருந்தது. அவனது கதையில் மட்டுமல்ல , நிஜ வாழ்க்கையிலும் அவனது காதற்கடிதம் அவனை எழுத்தாளனாகவும் உருவாக்கியுள்ளது. அந்தக் கதையே அந்த நிஜ வாழ்க்கையின் பிரதிபலிப்புத்தானே. எழுத்தாளர்கள் பலரின் நாவல்களில் அவர்களின் சொந்தக் வாழ்க்கைக்கூறுகளிருப்பதை அவன் அவை பற்றிய திறனாய்வுகள் மூலம் அறிந்திருக்கின்றான். சொந்த வாழ்க்கை அனுபவங்களையொட்டிப் புனைகதையைப் பின்னுகையில் எழுதுபவனால் நிஜ வாழ்வின் ஏமாற்றங்களையெல்லாம் எழுத்தின்பமாக மாற்றிவிட முடிகின்றது என்றோர் எண்ணமும் கூடவே எழுந்தது.

இதற்கிடையில் அவன் கேசவனுடன் சிறிது காலம் வன்னிக்குச் சென்று வாழ்ந்திட முடிவு செய்தான். உயர்தர வகுப்புப் பரீட்சைக்கான பெறுபேறுகள் வர இன்னும் காலமிருந்தது. அதற்குள் கேசவனுடன் செல்வது பயனுள்ளதாக அமையுமென்ற எண்ணமும் அவனது முடிவுக்கு வலுச்சேர்த்தது. அவனது காதல் உணர்வுகள் அவனை எழுத்தாளனாக்கின. அது போல் கேசவனுடனான் வன்னி வாழ் அனுபவங்களும் அவனுக்கு மிகுந்த பயனைத் தருமென்ற எண்ணத்தில் அவனுக்கு நம்பிக்கை மிகுந்திருந்தது. அந்த நம்பிக்கையுடன் அவன் தன் வாழ்வின் அடுத்த கட்டத்தை எதிர்நோக்கத்தயாரானான்.

மணிவண்ணன் நனவிடை தோய்தலிலிருந்து மீண்டபோது மணி நள்ளிரவைத் தாண்டி விட்டிருந்தது. அவனது சிந்தை முழுவதும் சந்திரமதியே நிறைந்திருந்தாள். அவள் எங்கு எப்படி வாழ்கின்றாளோ என்றெண்ணினான். அவளைப்பற்றி அறிந்தால் அது போதுமென்று அவனுக்குத் தோன்றியது. எங்காவது அவள் நன்றாக வாழ்ந்து கொண்டிருந்தால் அதுவே போதுமானது என்று பட்டது. ஆனால் அதே சமயம் அவனது உள்ளம் சந்திரமதிக்கு நன்றியும் கூறியது. மனிதரின் வாழ்வில் முதற் காதல் அனுபவம் என்பது முக்கியமானது. மனிதரின் வளர்ச்சியின் ஓர் இனிய அனுபவம் அது. பால்ய பருவத்திலிருந்து பதின்மப்  பருவத்தில் அடியெடுத்து வைக்கையில் ஏற்படும் அனுபவமது. முதன்  முறையாக  தாய், தந்தையர், கூடப்பிறந்தவர், உறவினர் தவிர்ந்த ஏனைய ஒருவர்  ,மீது முற்று முழுதாக , எவ்விதப் பிரதியுபகாரத்தையும் எதிர்பார்க்காத அன்பினைப் பொழிய வைக்கும் அனுபவத்தைத் தருவது முதற்காதல்தான். அவனது முதற்காதலும் இத்தகையதுதான். அவ்வகையில் அக்காதல் அனுபவத்தைத் தந்த சந்திரமதியின் மேல் அவனுக்குள்ள அன்பும், மதிப்பும் ஒருபோதும் குறையப்போவதில்லை.

விண்ணை நோக்கினான். சுடர்க்கன்னிகள் அவனை நோக்கிக் கண் சிமிட்டிக்கொண்டிருந்தார்கள்.

"கண் சிமிட்டும்! கண் சிமிட்டும்! சிறிய நட்சத்திரமே!
நீ என்னவென்று நான் வியப்புறுகின்றேன்.
அங்கே மேலே உலகம் மிகவும் உயரமானது,
வானின் வைரம் போன்று விளங்குகின்றாய்."

குழந்தையாக அவன் மனம் குதூகலித்தது. கூடவே அவனது மனவானில் சந்திரமதி கண் சிமிட்டிக்கொண்டிருந்தாள்.

முற்றும்!

1 comment:

Anonymous said...

Online Casinos With Cash Prizes - ChoicesCasino.com
ChoicesCasino.com provides the most comprehensive worrione online casino list of real money and cryptocurrencies. They cover 샌즈카지노 all the major games 카지노 like roulette, blackjack and more!

வ.ந.கிரிதரன் பாடல் - காலவெளிக் குழந்தைகள் நாம்

இசை & குரல்: AI SUNO | ஓவியம் : AI காலவெளிக் குழந்தைகள் நாம் விரிந்து கிடக்கிறது பேர் அண்டம். புரிந்து கொள்ளவே முயற்சி செய்கின்றேன். இரு...

பிரபலமான பதிவுகள்