Friday, July 23, 2021

மணிமேகலையின் காதல்!


பொன்னியின் செல்வன் நாவலை ஐந்து பாகங்கள் நீட்டிய கல்கி நாவலை எவ்விதம் அனைவரையும் கவரும் வகையில் படைத்தாரோ அவ்விதமே இறுதி அத்தியாயத்தையும் மறக்க முடியாதவகையில் படைத்திருப்பார்.
அதுவரை நாவலில் வரும் முக்கிய பாத்திரங்கள் வந்தியத்தேவன், குந்தவை, வானதி, பெரிய/சின்ன பழுவேட்டைரையர்கள், பூங்குழலி, சேந்தன் அமுதன்., ஆழ்வார்க்கடியான், அருண்மொழிவர்மன், நந்தினி. மந்தாகினி. ஆனால் நாவலின் முடிவு முக்கியப்படுத்துவது வந்தியத்தேவனையும் , அதுவரை அதிகம் முக்கியப்படுத்தப்படாமலிருந்த கடம்பூர் சம்புவரையரின் புத்திரியான மணிமேகலையையும்தாம். 
வந்தியத்தேவன் மேல் தீராக் காதல்கொண்டிருக்கும் மணிமேகலை இறுதியில் அவன் மடியில் படுத்தவாறே உயிர்விடுவாள். அந்தக்காட்சியைத்தான் நாவலின் இறுதி அத்தியாயம் தொண்ணூற்றொன்றில் இடம் பெறும் இக்காட்சி சித்திரிக்கின்றது. 
 
நாவலில் பட இடங்களில் கல்கியின் கவிதைகள் இடம் பெற்றிருக்கின்றன. குறிப்பாக ஓடக்காரப்பெண் பூங்குழலி பாடுவதாக வரும் 'அலைகடலும் ஓய்ந்திருக்க அகக்கடல்தான் பொங்குவதேன்' என்னும் பாடலைக் குறிப்பிடலாம். எனக்கு மிகவும் பிடித்த கல்கியின் கவிதைகளிலொன்று அக்கவிதை. நாவலின் இறுதியிலும் மணிமேகலை மரணவாசலில் நிற்கையில் பாடும் கவிதை வரிகள் இடம் பெற்றிருக்கின்றன. அவை வருமாறு:
 
"இனியபுனல் அருவிதவழ்
இன்பமலைச் சாரலிலே
கனிவுகுலவும் மரநிழலில்
கரம்பிடித்து உகந்ததெல்லாம்
கனவுதானோடி - சகியே
நினைவுதானோடி!
 
புன்னைமரச் சோலையிலே
பொன்னொளிரும் மாலையிலே
என்னைவரச் சொல்லிஅவர்
கன்னல்மொழி பகர்ந்ததெல்லாம்
சொப்பனந்தானோடி - அந்த
அற்புதம் பொய்யோடி!
 
கட்டுக்காவல் தான்கடந்து
கள்ளரைப்போல் மெள்ளவந்து
மட்டில்லாத காதலுடன்
கட்டிமுத்தம் ஈந்ததெல்லாம்
நிகழ்ந்ததுண்டோடி - நாங்கள்
மகிழ்ந்ததுண்டோடி!"
 
 *********************************
 
ஓடக்காரப்பெண் பூங்குழலி பாடும் பாடலின் வரிகள் கீழே:
 
"அலைகடலும் ஓய்ந்திருக்க
அகக் கடல்தான் பொங்குவதேன்?
நிலமகளும் துயிலுகையில்
நெஞ்சகந்தான் பதைப்பதுமேன்?
 
காட்டினில் வாழ் பறவைகளும்
கூடுகளைத் தேடினவே.
வேட்டுவரும் வில்லியரும்
வீடு நோக்கி ஏகுவரே.
 
வானகமும் நானிலமும்
மோனமதில் ஆழ்ந்திருக்க
மான்விழியாள் பெண்ணொருத்தி
மனத்தில் புயல் அடிப்பதுமேன்?
 
வாரிதியும் அடங்கி நிற்கும்
மாருதமும் தவழ்ந்து வரும்
காரிகையாள் உளந்தனிலே
காற்றுச் சுழன் றடிப்பதுமேன்?
 
அலை கடல் கொந்தளிக்கையிலே
அகக் கடல்தான் களிப்பது மேன்?
நிலமகளும் துடிக்கையிலே
நெஞ்சக்ந் தான் துள்ளுவதேன்.
 
இடிஇடித்து எண் திசையும்
வெடி படும் இவ் வேளையிலே
நடனக் கலை வல்லவர்போல்
நாட்டியந்தான் ஆடுவதேன்."

No comments:

யார் இவர்? இவர்தான் டில்வின் சில்வா (Tilvin Silva)!

யார் இவர்? இவர்தான்  டில்வின் சில்வா (Tilvin Silva).   ஜனதா விமுக்தி பெரமுனவின் (ஜேவிபி JVP) பொதுச்செயலாளர். ஜேவிபியின் முதலாவது புரட்சி தோல...

பிரபலமான பதிவுகள்