Tuesday, July 20, 2021

காலத்தால் அழியாத கானம்: "மயக்கும் மாலைப்பொழுதே நீ போ"



குலேபகாவலி (1955) திரைப்படத்தில் இடம் பெற்றிருக்கும் இப்பாடலைப் பாடியுள்ளவர்கள் ஜிக்கி & ஏ.எம்.ராஜா. இப்பாடலை எழுதியவர் எழுத்தாளர் விந்தன். கூண்டுக்கிளிக்காக எழுதிய பாடலிது. இப்பாடலுக்கு இசையமைத்தவர் கே.வி.மகாதேவன். ஆனால் இப்பாடல் இடம் பெற்றதோ குலேபகாவலி திரைப்படத்தில். அதன் இசையமைப்பாளர் விஸ்வநாதன் & ராமமூர்த்தி இரட்டையர்கள். அதனால் இப்பாடலின் இசையையும் அவர்கள் பெயரில் போட்டுவிட்டார் தயாரிப்பாளரான ஆர்.ஆர்.பிக்ஸ்சர்ஸின் உரிமையாளரான டி.ஆர்.ராமண்ணா. 
 
அதுபோல் இப்பாடலை எழுதிய விந்தனின் பெயரும் மறைக்கப்பட்டு குலேபகாவலி பாடலுக்குப் பாடல்களை எழுதிய தஞ்சை ராமையாதாஸின் பெயரிலேயே இப்பாடலும் வெளியானது. 
 

இத்திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள இப்பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல்களிலொன்று. உச்சநட்சத்திரமாக எம்ஜிஆர் உருவாகக் காரணமாகவிருந்த திரைப்படங்களிலொன்று இத்திரைப்படம். அக்காலகட்டத்தில் இடம் பெற்றுள்ள இத்திரைப்படத்தில் இப்பாடற் காட்சியின்போது நடிகை ஜி.வரலட்சுமியும், எம்ஜிஆரும் ஒருவரையொருவர் தொடாமல் நடித்திருப்பார்கள். கம்பீரமும் வனப்பும் மிக்க ஜி.வரலட்சுமியும் . வசீகரம் மிக்க எம்ஜிஆரும் பாடலின் இசைக்கேற்ப நிதானமாகச் சிறப்பாக நடித்திருப்பார்கள்.
 
இலங்கையில் எம்ஜிஆரின் பல பழைய திரைப்படங்கள் 100 நாட்களைக் கடந்து ஓடியுள்ளன. பாக்தாத்திருடன், ஒளிவிளக்கு அத்தகைய திரைப்படங்கள். இத்திரைப்படம் கொழும்பில் பதின்மூன்றாவது தடவையாகத் திரையிடப்பட்டபோது 60 நாட்களைக் கடந்து ஓடியது நினைவிலுள்ளது. அவ்விதமே பத்திரிகை விளம்பரத்தில் போட்டிருந்தார்கள். கொழும்பில் ஜெஸீமா திரையரங்கில் என்று நினைவு. 
 
இப்பாடலில் நடித்திருக்கும் ஜி.வரலட்சுமியின் மருமகள் பின்னர் எம்ஜிஆருடன் இத்திரைப்படம் வெளியாகிப் பத்து வருடங்களின் பின் வெளியான 'எங்க வீட்டுப்பிள்ளை'யில் நடித்திருக்கின்றார். அப்படத்தில் இடம் பெற்றுள்ள 'நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன்' பாடலில் நடித்திருக்கும் நடிகை ரத்னாதான் அவர். மாமியின் கம்பீரம் மிக்க அழகு வாய்த்தவராக அவரைக்கருத முடியாவிட்டாலும், நடனத்திறமை மிக்க துடிதுடிப்பு மிக்க நடிகை.
 
இத்திரைப்படத்தின் மூலக்கதை 'ஆயிரத்தொரு அராபியக் கதைக'ளிலொரு கதையின் தழுவல் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவ்விதமானதோர் இன்னுமொரு தழுவல்தான் எம்ஜிஆர் & பானுமதி நடிப்பில் வெளியானா 'அலிபாபாவும் நாற்பது திருடர்களும்'.
 
பாடலைக்கேட்டு மகிழ: https://www.youtube.com/watch?v=jdvA9VsqQMs
 
பாடலின் முழு வரிகளும் கீழே:
 
பாடல்: குலேபாகாவலி
இசை: கே.வி.மகாதேவன்
வரிகள்: கவிஞர் விந்தன்
குரல்: ஏ.எம்.ராஜா, ஜிக்கி
 
மயக்கும் மாலை பொழுதே நீ போ போ!
இனிக்கும் இன்ப இரவே நீ வா வா!
இன்னலை தீர்க்க வா
மயக்கும் மாலை பொழுதே நீ போ போ!
இனிக்கும் இன்ப இரவே நீ வா வா!
இன்னலை தீர்க்க வா
 
பன்னீர் தெளிக்க பனி பெய்யுமே
பசும் புல் படுக்க பாய் போடுமே (மயக்கும்)
பாலூட்டும் நிலவு தேனூட்டுமே
பாடும் தென்றல் தாலாட்டுமே
புன்னை மலர்கள் அன்பினாலே
போடும் போர்வை தன்னாலெ
மயக்கும் மாலை பொழுதே நீ போ போ!
இனிக்கும் இன்ப இரவே நீ வா வா!
இன்னலை தீர்க்க வா
 
கனியிதழ் காதல் பசி தீர்க்குமே
காண்போம் பேரின்பமே
வானிலும் ஏது வாழ்விது போலே
வசந்தமே இனி என்னாளும்
மயக்கும் மாலை பொழுதே நீ போ போ!
இனிக்கும் இன்ப இரவே நீ வா வா!
இன்னலை தீர்க்க வா

No comments:

கவிதை: நடிப்புச் சுதேசிகளும், ஆனை பார்த்த அந்தகர்களும்! - வ.ந.கிரிதரன் -

* ஓவியம் - AI இலக்கியம், அரசியல், விமர்சனம்.. ஆட்டம் சகிக்க முடியவில்லை. விளக்கமற்ற விமர்சனம் இவர்களுக்குத் 'தண்ணீர் பட்ட பாடு'. விள...

பிரபலமான பதிவுகள்