
இலங்கையிலிருந்து வெளியாகும் லக்பிமா சிங்களத் தினசரிப்பத்திரிகையின்
18.03.2018 ஞாயிறு பதிப்பில் எனது சிறுகதையான 'நடுவழியில் ஒரு பயணம்'
சிறுகதையின் சிங்கள மொழிபெயர்ப்பு வெளியாகியுள்ளது. இச்சிறுகதை டிசம்பர்
2006இல் 'பதிவுகள்' மற்றும் 'திண்ணை' ஆகிய இணைய இதழ்களில் வெளியாகிய
சிறுகதை. இச்சிறுகதையினைத் தமிழிலிருந்து சிங்கள மொழிக்கு மொழிபெயர்ப்பு
செய்தவர் எனது முகநூல் நண்பரும், பல தமிழ்ப் படைப்புகளைச் சிங்கள மொழிக்கு
மொழிபெயர்ப்பு செய்தவருமான எழுத்தாளர் ஜி.ஜி.சரத் ஆனந்த. அவருக்கும்,
லக்பிமாவில் இலக்கியப்பகுதிக்குப் பொறுப்பானவருமான எழுத்தாளர் கத்யான
அமரசிங்க (Kathyana Amarasinghe) அவர்களுக்கும் நன்றி.
இச்சிறுகதை வெளியான 'லக்பிமா' :
http://epaper.lakbima.lk/last_18_03_18/manjusawa.pdf
ஏற்கனவே
எனது இன்னுமொரு சிறுகதையான 'உடைந்த காலும், உடைந்த மனிதனும்' சிறுகதையினை
ஜி.ஜி.சரத் ஆனந்த சிங்கள மொழிக்கு மொழிபெயர்த்து 'லங்கஇரிடா' (Lankairida))
பத்திரிகையில் வெளியிட்டுள்ளார். அச்சிறுகதை 'லங்கஇரிடா'வின் பெப்ருவரி
18, 2018 பதிப்பில் வெளியாகியுள்ளது.
'நடுவழியில் ஒரு பயணம்' சிறுகதையினை முழுமையாகக் கீழே வாசிக்கலாம்:
'நடுவழியில் ஒரு பயணம்' - வ.ந.கிரிதரன் -
பார்வைக்கு சோமாலியனைப் போலிருந்தான். 'டவரின்' வீதியும் 'புளோர்' வீதியும்
சந்திக்குமிடத்தில் , தென்மேற்குத் திசையில் (இங்கு 'தொராண்டோ' நகரில்
வீதிகளெல்லாமே கிழக்கு-மேற்கு, வடக்கு-தெற்காகத்தான்
அமைக்கப்பட்டிருக்கின்றன. இதனால் திசைகளை மையமாக வைத்து முகவரிகளைக்
கண்டுபிடிப்பதோ அல்லது இருப்பிடங்களை அறிந்து கொள்வதோ மிகவும்
இலகுவானது). 'பஸ்'சை எதிர்பார்த்து நின்றிருந்தான். காலம் நள்ளிரவை
நெருங்கிக் கொண்டிருந்தது. இரவு பாதுகாவற் பணியினை முடித்துக் கொண்டு
என்னிருப்பிடம் திரும்புவதற்காக 'பஸ்' தரிப்பிடம் நோக்கிச் சென்று
கொண்டிருந்த சமயத்தில்தான் அவனை நோக்கினேன். நள்ளிரவில் பணி முடிந்து
இருப்பிடம் திரும்பும் சமயங்களில் இவ்விதம் 'பஸ்'சினை எதிர்பார்த்துக்
காத்திருக்கும் சந்தர்பங்கள் எனக்கு மிகவும் பிடித்தமான பொழுதுகள்.
இவ்விதமான சமயங்களில் நகரை, நகர மாந்தரை, இரவை, இரவு வானை எல்லாமே
இரசித்துக் கோண்டிருப்பது என் ஆர்வங்களிலொன்று. இவ்விதமான இரசித்தல் மூலம்
நான் அறிந்து கொண்டவை ஏராளம். ஏராளம். நூல்கள், பத்திரிகைகள் போன்ற வெகுசன
ஊடகங்கள் மூலம் நான் அறிந்தவற்றை விட இவ்விதமான பொழுதுகளில் நான்
அறிந்து கொண்டவை, உணர்ந்து கொண்டவை மிக மிக அதிகம்.
'லாண்ட்ஸ்டவு'னுக்கருகிலிருந்த கேளிக்கை விடுதியான 'ஹவுஸ் ஆவ்
லங்காஸ்டர்'இலிருந்து நிர்வாண நடனமாதர் சிலர் வெளியில் வந்திருந்து புகை
பிடித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களைச் சுற்றி மல்லர்களைப் போன்ற
தோற்றமுடைய இரு வெள்ளையர்கள் , பார்வைக்கு இத்தாலியர்களைப்
போலிருந்தார்கள், அப்பெண்களுடன் அளவளாவியபடி கவசங்களாக நின்றார்கள்.
வீதியின் அடுத்த பக்கத்தில், வடபுறத்தில், சில கறுப்பின போதை மருந்து
விற்றுப் பிழைக்கும் சுய வியாபாரிகள் சிலர் வாடிக்கையாளர்களுக்காக
காத்திருந்தபடியிருந்தார்கள். மேலும் சிலர் பணி முடிந்து வீடு திரும்பிக்
கொண்டிருந்தார்கள் என்னைப் போல். இததகையதொரு சந்தர்ப்பத்தில்தான் நான் அவனை அந்த பஸ் தரிப்பிடத்தில் சந்தித்தேன்.