Saturday, December 29, 2018

என்னைப் பாதித்த முதலிருபது நூற் பட்டியல்!


இதுவரை வாசித்த நூல்களில் என்னைப் பாதித்த முக்கியமான இருபது நூல்களை எண்ணிப்பார்த்தேன். அவற்றின் பட்டியல் இது. இன்னும் பல நூல்களுள்ளன. ஆனால் நினைத்தபொழுது முதலில் நினைவுக்கு வந்தவை இவை. என்னைக் கவர்ந்த வெகுசனப்படைப்புகள் பட்டியலும் விரைவில் வரும். அது போல் என்னைக் கவர்ந்த தமிழகப்படைப்புகள், ஈழத்துப் படைப்புகள், என்னைக் கவர்ந்த எழுத்தாளர்கள், வெகுசன எழுத்தாளர்கள் பட்டியல்களும் வெளியாகும்

1. புத்துயிர்ப்பு - டால்ஸ்டாய்
2. Crime and Punishment - Dostoyefsky
3. பாரதியார் கவிதைகள், கட்டுரைகள் அடங்கிய தொகுப்புகள்.
4. The Brothers Karamazov - Dostoyefsky
5. கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கை - மார்க்ஸ், எங்கெல்ஸ்
6. தாய் - மார்க்சிம் கோர்க்கி
7. The Metamorphosis - Franz Kafka
8. The old man and the Sea - Ernest Hemingway
9. வெற்றியின் இரகசியங்கள் - அ.ந.கந்தசாமி
10. Candide - Voltaire
11. காலம் - வாசுதேவன் நாயர்
12. ஒரு மனிதன்! ஒரு வீடு! ஒரு உலகம்! - ஜெயகாந்தன்
13. The Fabric of The Cosmos - Brian Greene
14. A brief History Of Time - Stephen Hawkings
15. Hyperspace -Michio Kaku
16. மோகமுள் - தி.ஜானகிராமன்
17. அன்னா கரீனினா - டால்ஸ்டாய்
18. ஏணிப்படிகள் - தகழி சிவசங்கரன்பிள்ளை
19. ஒரு கிராமத்தின் கதை - எஸ்.கே.பொற்றேகாட்
20. நீலகண்ட பறவையைத்தேடி.. - அதீன் பந்த்யோபாத்

நான் இரசித்த புனைவுக் காட்சியொன்று!


ஜெயகாந்தனின் 'ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்' தொடர்நாவலில் சம்பவங்களுக்கு உயிர்த்துடிப்புடன் ஓவியர் கோபுலு சித்திரங்கள் வரைந்திருப்பார்.  ஆனந்த விகடனில் நாவல் தொடராக வெளிவந்தபோதே நாவலில் வரும் ஒரு காட்சியும், அதற்கு கோபுலு வரைந்திருந்த ஓவியமும் பசுமரத்தாணி போல் ஆழ்மனத்தில் சென்று படிந்துவிட்டது. மானுட உளவியலைப் பிரதிபலிக்கும் ஜெயகாந்தனின் வசனங்களுக்கு உயிரூட்டியிருந்தார் கோபுலு. காலச்சுவடு பதிப்பகத்தினர் 'ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்' 'நாவலை வெளியிட்டபோது ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்த ஓவியங்களுடன் வெளியிட்டிருந்தார்கள். அந்நூல் என்னிடமுள்ளது. அவ்வப்போது அந்நாவலில் அப்பக்கத்தைப்புரட்டிப் பார்ப்பேன். மனத்தின் இறுக்கம் நெகிழ்ந்து இன்பத்திலாழ்ந்துவிடும். ஜெயகாந்தனின் வசனங்களையும், கோபுலுவின் அவ்வோவியத்தையும் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன்.

இதழ்களில் தொடர்களாக வெளிவந்த நாவல்களை வெளியிடும் பதிப்பகங்கள் அத்தொடர்களில் வெளிவந்த ஓவியங்களையும் உள்ளடக்கி வெளியிடுவது சிறப்பு  மிக்கதென்பதென் எண்ணம். இதுபோல் முல்லை பதிப்பகத்தினர் வெளியிட்ட விந்தனின் பாலும் பாவையும் நாவலிலும் அந்நாவல் தொடராக வெளிவந்த ஓவியங்களுடன் வெளியிட்டிருக்கின்றார்கள். அந்நூலும் என்னிடமுள்ளது. ஆனந்தவிகட வெளியிட்ட பொன்னியின் செல்வன் நாவலிலும் ஓவியர் மணியத்தின் ஓவியங்களையும் உள்ளடக்கியிருந்தார்கள் என்பதும் இத்தருணத்தில் நினைவு கூரத்தக்கது.

நாம் இரசித்த காதல் கடிதமொன்று!

புனைகதைகளில் எத்தனையோ காதல் கடிதங்களை வாசித்திருக்கின்றேன். அவையெல்லாம் காலப்போக்கில் நினைவிலிருந்தும் மறைந்து போய்விட்டன, ஒன்றைத்தவிர. அந்த ஒன்று கு.அழகிரிசாமியின் 'தீராத விளையாட்டு' நாவலில் வரும் கடிதம். கல்கி சஞ்சிகையில் தொடராக வெளியான நாவல்களிலொன்று.

இக்கதையின் நாயகன் ரங்கராஜன் தன் தாய் ஜானகியைப்போல் மிகவும் அழகு வாய்ந்தவன். அவனும் அவனது அயல் வீட்டுக்குக் குடிவந்த குடும்பத்தைச் சேர்ந்த பெண் விஜயாவுக்குமிடையில் காதல் முகிழ்க்கிறது. சந்தர்ப்ப சூழ்நிலைகள் காரணமாக அவள் வேறொருவரைத்திருமணம் செய்கின்றாள். பின்னர் அவனுக்கும் வேறொரு திருமணம் நடந்து பல துயர நிகழ்வுகளுக்குள்ளாகிய அவனது வாழ்க்கையில் அவனது முன்னாள் காதலியின் தங்கை எதிர்ப்படுகின்றாள். அவளிடம் அவன் அவளது அக்கா பற்றி விசாரிக்கையில் அவள் இன்னும் தன்னுடன் எடுத்த புகைப்படங்களெல்லாவற்றையும் வைத்திருப்பதாகக் கூறுகின்றாள். அதற்கு அவன் இன்னுமொருவர் மனைவியான அவளது அக்கா தன்னிடம் வைத்திருக்கும் தன் ஞாபகத்தை உணர்த்தும் அனைத்தையும் அழித்துவிட வேண்டுமென்று கூறுகின்றான்.. பதிலாக அவள் தனக்கு எழுதிய கடிதத்தைக்கொடுத்து அதை அவளது அக்காவிடம் கொடுத்து அழித்து விடும்படியும், அவளிடமுள்ள தன்னை நினைவுபடுத்தும் புகைப்படங்கள் அனைத்தையும் வாங்கிவரும்படியும் கூறுகின்றான்.

Saturday, October 6, 2018

கவிதைத்தொகுப்பு: எதிர்காலச்சித்தன் பாடல்! - அறிஞர் அ.ந.கந்தசாமி (கவீந்திரன்) கவிதைகள். -

அறிமுகம்: கவீந்திரன் கண்ட கனவு! ஈழத்துத் தமிழ்க் கவிதையுலகில் அறிஞர் அ.ந.கந்தசாமியின் பங்களிப்பு!   - வ.ந.கிரிதரன் -

ஈழத்துத் தமிழ்க் கவிதை வரலாற்றில் அறிஞர் அ.ந.கந்தசாமியின் கவிதைகளுக்குத் தனியிடமுண்டு. சிறுகதை, கவிதை, நாடகம், மொழிபெயர்ப்பு, சிறுவர் இலக்கியம் , உளவியல், விமர்சனமென இலக்கியத்தின் சகல பிரிவுகளிலும் வெற்றிகரமாகக் கால் பதித்த பெருமையும் இவருக்குண்டு. 'ஈழத்துத் தமிழ் இலக்கிய வரலாற்றிலே கவிதை மரபில் குறிப்பிடத்தக்க மாற்றம் நிகழ்ந்த காலப்பகுதி 1940ம் ஆண்டுக் காலப்பகுதியாகும். 1940ம் ஆண்டிலிருந்து ஈழத்தில் முற்றிலும் நவீனத்துவமுடைய கவிதை மரபொன்று தோன்றி வளரத் தொடங்கியது. இக்கவிதை மரபைத் தொடங்கியவர்கள் ஈழத்தின் மணிக்கொடியெனப் பிரகாசித்த மறுமலர்ச்சிக் குழுவினர்களாவர். இந்த மறுமலர்ச்சிக் குழுவிலும் அ.ந.கந்தசாமியவர்கள் , மஹாகவியெனப் புனைபெயர் கொண்ட உருத்திரமூர்த்தி, இ.சரவணமுத்து என்பவர்களே கவிதைத் துறையில் குறிப்பிடத்தக்கவர்களாக இருந்துள்ளனர். இவர்களே ஈழத்தில் நவீனத்துவமுடைய கவிதை மரபையும் தொடக்கி வைத்தவர்கள். இவர்களால் தொடக்கி வைக்கப்பட்ட நல்ல கவிதை என்பதும் பண்டித மரபு வழிபட்ட உருவ அம்சங்களையும் , நிலபிரபுத்துவ சமூகக் கருப்பொருட்களையும் உள்ளடக்கமாகக் கொண்ட செய்யுளிலிருந்து வேறுபட்டு நவீன வாழ்க்கைப் போக்குகளைப் பொருளடக்கமாகக் கொண்டமைவது என்ற வரைவிலக்கணம் உடையதாகவுள்ளது' என்று செல்வி ஜுவானா என்னும் யாழ் பல்கலைக்கழக மாணவியொருத்தியின் ஆய்வுக் கட்டுரையில் கூறப்பட்டிருப்பது அ.ந.க.வை இன்றைய தலைமுறை மறந்துவிடவில்லை என்பதையே காட்டுகிறது

[மறுமலர்ச்சிக் குழுவினரால் வெளியிடப்பட்ட சஞ்சிகையே 'மறுமலர்ச்சி' சஞ்சிகை. இச்சஞ்சிகையில் எழுதிய படைப்பாளிகளையே மறுமலர்ச்சி எழுத்தாளர்களாகக் காணும் போக்கொன்று செங்கை ஆழியானுட்பட இன்று இலக்கிய விமர்சனங்கள், ஆய்வுகள் செய்ய விரும்பும் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறையினைச் சார்ந்த செல்லத்துரை சுதர்ஸன் போன்றவர்கள் மத்தியில் நிலவுவதாகத் தெரிகிறது. இது ஒரு பிழையான அணுகுமுறை. மறுமலர்ச்சிச் சங்கத்தை உருவாக்கி, அதில் பாடுபட்டவர்களின் படைப்புகள் யாவும் மறுமலர்ச்சிப் படைப்புகளாகத்தான் கருதப்பட வேண்டும். உண்மையில் மறுமலர்ச்சிச் சிறுகதைகள், அல்லது மறுமலர்ச்சிக் கவிதைகள், அல்லது மறுமலர்ச்சிப் படைப்புகள் , மறுமலர்ச்சி எழுத்தாளர்கள் என்று குறிப்பிடும்போது அது மறுமலர்ச்சி சஞ்சிகையில் எழுதிய எழுத்தாளர்களை மட்டும் குறிக்கவில்லை.  அது மறுமலர்ச்சி காலகட்டப் படைப்பாளிகளையும் குறிப்பிடுகிறது. அந்த 'மறுமலர்ச்சி' இதழினை வெளியிட்ட மறுமலர்ச்சிச் சங்கத்தினை உருவாக்கியவர்களின் படைப்புகளையும் குறிக்கிறது. இதுவே சரியான நிலைப்பாடாகவிருக்க முடியும் என்பதென் கருத்து. செங்கை ஆழியான, செல்லத்துரை சுதர்ஸன் போன்றோர் இந்த விடயத்தில் கருத்துச் செலுத்த வேண்டுமென்பதென் அவா. சி. மௌனகுரு, மௌ. சித்திரலேகா, எம். ஏ. நுஃமான் ஆகியோரால் இணைந்து எழுதப்பட்ட 'இருபதாம் நூற்றாண்டு ஈழத்துத்தமிழ் இலக்கியம்' என்னும் நூலில் ஈழத்துக் கவிதையுலகின் மறுமலர்ச்சிக் கட்ட காலம் பற்றிக் குறிப்பிடும்போது அ.ந.கந்தசாமி, மகாகவி, நாவற்குழியூர் நடராசன் ஆகியோரை மறுமலர்ச்சிக் காலகட்டத்தின் முக்கியமான கவிஞர்களாகக் குறிப்பிடுகின்றார். அத்துடன் கவீந்த்திரன் என்னும் புனைபெயரிலும் எழுதிய அறிஞர் அ.ந.கநதசாமியை ஈழத்தின் தமிழ்க் கவிதையில் முதலாவதாக இடதுசாரிச் சிந்தனையினை அறிமுகப்படுத்திய படைப்பாளியாகவும் குறிப்பிடுவர்.இவ்விதம் மறுமலர்ச்சிக் காலகட்டம் பற்றியே குறிப்பிடப்படவேண்டுமே தவிர 'மறுமலர்ச்சி' சஞ்சிகையின் படைப்புகளை மட்டும் மையமாக வைத்து மறுமலர்ச்சிக் காலகட்டத்தை எடை போடக்கூடாது. அவ்விதமான போக்கு ஏற்கனவே குறிப்பிட்டதுபோன்று மறுமலர்ச்சிக் காலகட்டம் பற்றிய பிழையான பிம்பத்தினைத் தந்துவிடும் அபாயமுண்டு. ]

அ.ந.க. ஒரு செயல் வீரர். ஏனையவர்களைப் போல் வாயளவில் நின்று விட்டவரல்லர். தான் நம்பிய கொள்கைகளுக்காக இறுதிவரை பாடுபட்டவர். இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் ஆரம்பகர்த்தாக்களிலொருவர். மேற்படி சங்கத்தின் கீதமாகவும் இவரது கவிதையே விளங்குகின்றது. அவரது கவிதைகளின் கருப்பொருட்களாகத் தீண்டாமை, தோட்டத்தொழிலாளர் இழிநிலை, சமூக ஏற்றத்தாழ்வுகள், சமுதாயச் சீரமைப்பு, இயற்கை, காதல், தத்துவம், வர்க்க விடுதலை, பிடித்த ஆளுமைகள் போன்றவை விளங்குகின்றன. இவரது கவிதைகள் தமிழமுது, தேன்மொழி, ஈழகேசரி, வசந்தம், வீரகேசரி, பாரதி, தினகரன், ம்ல்லிகை, நோக்கு, இளவேனில், சுதந்திரன், ஸ்ரீலங்கா போன்ற பத்திரிகை, சஞ்சிகைகளில் வெளிவந்திருக்கின்றன [அ.ந.க.வின் கவிதைகள் வெளிவந்த பத்திரிகைகள், சஞ்சிகைகள் மற்றும் அவர் பங்கு பற்றிய கவியரங்குகள் பற்றிய விரிவான ஆய்வொன்று மேற்கொள்ளப்படவேண்டியதவசியம்.].

Sunday, May 27, 2018

லக்பிமா.காம்: கால யந்திரத்தினூடாக நல்லூர் ராஜதானிக்கு ! 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' ஆய்வு நூல் பற்றிய ஒரு குறிப்பு! - - கத்யானா அமரசிங்ஹ | தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப்

பருத்தித்துறையிலிருந்து யாழ்ப்பாண நகரத்துக்குச் சென்ற பயணத்தின் போது நாங்கள் கண்ட அந்தப் பழைய அரண்மையானது, 'மந்திரி மனை' என அழைக்கப்படுகிறது. தென்னிந்திய வீடுகளின் கட்டடக்கலையும், ஐரோப்பிய வீடுகளின் கட்டடக்கலையும் ஒருங்கே அமைந்திருந்த அந்த அரண்மனையை முதன்முதலாகக் கண்டபோது, இலங்கையின் தென்பகுதியில் காணக்கூடிய மழையும், வெயிலும், காலமும் பொலிவிழக்கச் செய்திருக்கும் பழங்கால, பாழடைந்த ‘வளவ்வ’ எனப்படும் பாரம்பரிய வீடுகளை அது நினைவுபடுத்திற்று. யாழ்ப்பாணத்தில் நல்லூர் பிரதேசத்தில் அமைந்திருக்கும் அந்த அரண்மனையானது, போர்த்துக்கேயர்களின் வருகையோடு ஆரம்பித்த காலனித்துவ யுகத்தில் யாழ்ப்பாணத்தில் வசித்த மந்திரியொருவரின் இல்லமாக இருந்திருக்கக் கூடும் எனக் கருதப்படுகிறது. அவ்வாறே யாழ்ப்பாணத்தை போர்த்துக்கேயர்கள் கைப்பற்ற முன்பு இம் மந்திரி மனை அமைந்திருக்கும் இடத்துக்கு அண்மையில் யாழ்ப்பாண மன்னரொருவரின் அரண்மனையும் இருந்திருக்கக் கூடும் என்றும் கருதப்படுகிறது.

முதன்முறையாக 'மந்திரி மனை'யைக் கண்ட எனது உள்ளத்தில் யாழ்ப்பாண வரலாறு குறித்த பல தரப்பட்ட எண்ணங்கள் கேள்வியெழுப்பின. எனினும், பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் அங்கே இருந்திருக்கக் கூடிய தமிழ் மன்னரொருவரின் ராஜதானியைக் குறித்து கற்பனை செய்து பார்ப்பதைத் தவிர, அதைக் குறித்து மேலதிக விபரங்களைத் தேடிப் பெற்றுக் கொள்ள எனக்கு வாய்ப்பில்லை என்பதனால் அந்தக் கற்பனைகளும் கூட தோன்றிய இடத்திலேயே மரித்து விடவும் வாய்ப்பிருந்தது. அனுராதபுரம், பொலன்னறுவை மற்றும் கண்டி ராஜதானிகள் குறித்து நாங்கள் பலதரப்பட்ட வரலாறுகளைப் படித்திருந்த போதிலும், ஆயிரக்கணக்கான வருடங்கள் யாழ்ப்பாணத்தில் நிலவியிருந்த ராஜதானிகளின் அமைவிடங்கள் மற்றும் வரலாறு குறித்த விரிவான குறிப்பொன்றை எங்கிருந்து தேடிப் படிப்பேன் என்பதை அப்போது நான் அறிந்திருக்கவில்லை.

எனினும் அதற்கு சில வாரங்களின் பின்னர், ‘நல்லூர் ராஜதானி நகர அமைப்பு’' எனும் ஆய்வு நூலொன்று எனக்குக் கிட்டியதானது, கோடையில் துவண்டிருக்கும் ஒருவர் மீது அகாலத்தில் பெய்த மழை போன்றிருந்தது. மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் கட்டடவியல் பட்டதாரியும், தமிழ் எழுத்தாளருமான நவரத்தினம் கிரிதரன் (வ.ந.கிரிதரன்) எழுதிய இந்த ஆய்வு நூலானது பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த  யாழ்ப்பாண ராஜதானி நகர அமைப்பு  குறித்து எழுதப்பட்ட முதல் அறிவியல் ரீதியான ஆய்வு நூலாகக் கருதப்படுகிறது. தமிழ் மொழியில் எழுதப்பட்ட அந் நூலானது, இந்திய எழுத்தாளர்களில் ஒருவரான லதா ராமகிருஷ்ணனால்  ஆங்கில மொழியில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. நான் வாசித்தது ஆங்கில மொழிபெயர்ப்புப் பிரதியாகும்.
எனக்கு முதன்முதலாக கிரிதரன் அறிமுகமாவது ஒரு கவிஞராகவும், சிறுகதை மற்றும் நாவல் எழுத்தாளராகவும்தான். அதற்கும் மேலதிகமாக உலகம் முழுவதும் தமிழ் வாசகர்களிடையே பிரபலமான வலைத்தளமாகவுள்ள ‘பதிவுகள்’ இணைய இதழாசிரியர் அவர். ஆயிரக்கணக்கான வருடங்களாக யாழ்ப்பாணத்தில் திகழ்ந்த ராஜதானிகளின் வரலாறுகள் குறித்தும், அதன் இறுதி ராஜதானியாகக் கருதப்படும் நல்லூர் ராஜதானியின் நகர அமைப்பு  குறித்தும் மிக முக்கியமான தகவல்கள் பலவற்றை, பல வருடங்கள் பாடுபட்டு ஆய்வுகள் செய்து அவர் எழுதியிருக்கும் இச் சிறந்த ஆய்வு நூலிலிருந்து அறிந்து கொண்டேன்.

Saturday, April 21, 2018

கவிதை: வானத்து நாடோடிகளும், அவர்கள்தம் துயர்மிகு அழுகையும்! - வ.ந.கிரிதரன் -

"The Wanderers Of The Sky And Their Cry Of Melancholy " என்னும் தலைப்பில் நான் எழுதிய ஆங்கிலக் கவிதையின் சிங்கள மொழிபெயர்ப்பு லக்பிம சிங்களத் தினசரியின் ஞாயிற்றுப் பதிப்பில்
http://e-paper.lakbima.lk/…/Apr…/last_22_04_18/manjusawa.pdf  (22.04.2018) வெளியாகியுள்ளது. அக்கவிதை தமிழில் கீழே:

கவிதை: வானத்து நாடோடிகளும், அவர்கள்தம் துயர்மிகு அழுகையும்! - வ.ந.கிரிதரன் -
"படுத்திருக்கையில்
இரவுமழைச் சப்தங்கள்
இருண்டவான் காட்சி
இவை எப்பொழுதுமே
என்னிதயத்தை ஆழமாகத் தொடுவன.

காலையிலிருந்து
மழை பலமாகப்
பெய்து கொண்டிருக்கிறது.

மழை.
அகதிகளின் கண்ணீர்.
நாடற்ற வான் நாடோடிகள்,
மேகங்களின்
கண்ணீர்,

வழக்கம்போல்
படுத்திருக்கையில்
இரவுமழைச் சப்தங்கள்
இருண்டவான் காட்சி
இவை என்னிதயத்தை
ஆழமாகத் தொடுகின்றன.

(பதிவுகள்.காம்) வாசிப்பும், யோசிப்பும் 281: சங்கக்கவிதைகளும், ஓசையும்.. - வ.ந.கிரிதரன் -


அண்மையில் கவிஞர் விக்ரமாதித்யனின் 'எனக்கும் என் தெய்வத்துக்குமிடையேயான வழக்கு' என்னும் நூலை வாசித்தேன். கவிஞர் தன் பால்ய காலம் பற்றி, தனது பிறந்த மண்ணான திருநெல்வேலி பற்றி, தன் கவிதைகள் பற்றி, கவிதைகள் பற்றி, தானறிந்த சக இலக்கிய ஆளுமைகள் பற்றி, திரைப்படப்பாடல்களை எழுதிய கவிஞர்களைப்பற்றி, அவர்களின் பாடல் வரிகள் தன்னிடம் ஏற்படுத்திய தாக்கங்கள் பற்றி, திமுக அரசியல்வாதிகள் பற்றி, அவர்கள் ஏற்படுத்திய தாக்கங்கள் பற்றி, சக கவிஞர்களின் கவிதைகளைப்பற்றி, .. இவ்விதம் பல்வேறு விடயங்களைச் சுவையான, நெஞ்சையள்ளும் நடையில் கூறியிருக்கின்றார். பொதுவாகவே எனக்கு கலை, இலக்கிய ஆளுமைகளின் நனவிடை தோய்தல்களை வாசிப்பதில் மிகுந்த ஆர்வமுண்டு. கவிஞர் விக்ரமாதித்யனின் இந்நூலையும் அவ்விதமே வாசித்தேன்.

அவர் நேர்காணலொன்றில் சங்கக்கவிதைகள் பற்றிக் கூறியிருந்த பின்வரும் கூற்று என் கவனத்தைக் கவர்ந்தது: "சங்கக் கவிதைகள் இசை கருதிச் செய்யப்பட்டவையல்ல". இன்னுமோரிடத்தில் " தமிழில் திருத்தக்கதேவர், கம்பனிலிருந்துதான் ஓசை, சந்தம் கூடி வருகிறது" என்கின்றார்.

கவிஞரின் இக்கூற்றுகளை வாசித்துக்கொண்டிருந்த போது எனக்கு தற்போது வாசித்துக்கொண்டிருக்கும் முனைவர் கெளசல்யா சுப்பிரமணியனின் "இசைத்தமிழ்ச் சிந்தனைகள்" நூலின் ஞாபகம் வந்தது. அதிலவர் சங்க காலத்திலிருந்து தமிழ் இசைப் பாடல்களின் வரலாறு தொடங்குவதாகக் கூறுவதுடன் அதற்கான ஆதாரங்களையும் ஆய்வுரீதியாக முன் வைத்திருப்பது நினைவுக்கு வந்தது. நூலிலுள்ள 'கலிப்பாவும் தமிழரின் இசை மரபும்' என்னும் கட்டுரையில் சங்கத் தமிழ்ப்பாவினங்களில் ஒன்றான கலிப்பா எவ்விதம் பிற்காலத்தில் உருவான கீர்த்தனைகளின் உருவாக்கத்துக்கு முன்னொடியாக விளங்கியது என்றெல்லாம் கூறியிருப்பது நினைவுக்கு வந்தது. அதில் அவர் கீர்த்தனைகளில் வரும் பல்லவி , அநுபல்லவி மற்றும் சரணம் என்பன 'கலிப்பாவின் தரவு, தாழிசை. சுரிதகம் என்ற கட்டமைப்புடன் ஓரளவு ஒத்த காட்சியைத் தருவதை உணர முடியும்" என்று கூறுவார் (பக்கம் 61). மேலும் அவர் "கீர்த்தனையிலே சரணங்களே அவற்றின் உயிர்ப்பான உள்ளடக்கப் பகுதியாகத் திகழ்வன. கலிப்பாவில் தாழிசைகளும் அப்படியே. எனவே கீர்த்தனை என்னும் இசைப்பா வடிவத்துக்கு கலிப்பாவின் அமைப்பு - குறிப்பாக ஒத்தாழிசைக் கலிப்பாவின் தரவு, தாழிசை அமைப்பு - ஒரு முன்னோடி நிலை என்பதை நாம் உய்த்துணர முடியும்." (பக்கம் 61) என்றும் கூறுவார்

கவிதை: நானே பிரம்மா! - வ.ந.கிரிதரன் -

இவனது கடவுள் AI என்றால், இவனை வடிவமைத்துச் சிரிக்க வைத்த படைப்புக் கடவுள் பிரம்மா நானேதான். ஆழ்ந்த சிந்தனையில் இருந்த இவனை அடக்க முடியாமல் ...