Sunday, December 30, 2018

தொடர் நாவல்: குடிவரவாளன் (20 - 23) - வ.ந.கிரிதரன் --

அத்தியாயம் இருபது: இந்திராவின் சந்தேகம்!

அடுத்த மூன்று வாரங்களும் இளங்கோவுக்கும், அருள்ராசாவுக்கும் ஹரிபாபுவுடன் கழிந்தது. ஹரிபாபு கூறியபடியே அவர்களுக்குமொரு நடைபாதைக் கடையினை கிறிஸ்தோபர் வீதியும், நான்காம் வீதி மேற்கும் சந்திக்குமிடத்தில் போட்டுக் கொடுத்துவிட்டான். ஹரிபாபு, அவன் மனைவி மற்றும் ஹென்றி எல்லோரும் தமது பழைய இடங்களிலேயே தங்கள் வியாபாரத்தைக் கவனித்துக் கொண்டிருந்தார்கள். ஹரிபாபுவுக்கு நண்பர்களிருவரும் வேடிக்கையாக வைத்த பெயர் 'நடுத்தெரு நாராயணன்'. நடுத்தெரு நாராயணன் கடையிலிருந்து நடைபாதைக்கு வந்தவன். அவனது கடையிலேயே அவனது விற்பனைப் பொருட்கள் யாவுமிருந்தன. நடுத்தெரு நாராயணன் நடைபாதை வியாபாரத்தின் பல்வேறு விதமான நெளிவு சுளிவுகளையும் கற்றுத்தேர்ந்த கில்லாடி. இந்த விடயத்தில் சில சமயங்களில் நியூயார்க் காவற்துறைக்குக் கண்களில் விரல்களை விட்டு ஆட்டிடும் வல்லமை பெற்றிருந்த அவனிடமிருந்து படிக்க வேண்டிய பாடங்கள் பல இருந்தன. அவ்விதம்தான் இளங்கோ அவனைப்பற்றி எண்ணிக் கொண்டான்.

சில சமயங்களில் வார இறுதி நாட்களில் நியூயார்க் நகரின் சில வீதிகளை மூடி விட்டு அங்கு நடைபாதை வியாபாரிகளைப் பொருட்கள் விற்பதற்கு அனுமதி வழங்குவார்கள். அத்தகைய சமயங்களில் அவ்விதம் மூடப்பட்ட வீதிகளில் வைத்து விற்பதற்கு அதிக அளவில் கட்டணத்தைச் மாநகரசபைக்குச் செலுத்த வேண்டும். இத்தகைய சமயங்களில் நடுத்தெரு நாராயணனான ஹரிபாபு வின் செயற்திட்டம் பின்வருமாறிருக்கும்:

Saturday, December 29, 2018

மிலான் குந்தெராவின் 'நாவலின் கலை' என்னும் நூலிலிருந்து..

மிலான் குந்தெராவின் 'நாவலின் கலை' என்னும் நூலிலுள்ள கட்டுரைகளைப் புரட்டிக்கொண்டிருக்கின்றேன். நூலிலுள்ள முதலாவது கட்டுரை "The Depreciated Legacy of Cervantes".. அதில் நாவல் பற்றி, இருத்தல் பற்றி, மனிதர் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளவற்றில் என் கவனத்தை ஈர்த்த சில கருத்துகளை என் மொழியில் சுருக்கமாகத் தருகின்றேன்.

எட்மண்ட் ஹஸ்ஸேர்ல் வியன்னாவிலும், பிராக்கிலும் ஆற்றிய ஐரோப்பிய மனிதத்துவம் பற்றிய புகழ்பெற்ற உரையில் ஐரோப்பிய விஞ்ஞானம் பற்றிக் குறிப்பிடுகையில் ஒரு பக்கத் தன்மை மிக்கதான ஐரோப்பிய விஞ்ஞானமானது உலகை கணித மற்றும் தொழில்நுட்ப ஆய்வுக்குரியதொன்றாக மட்டுமே ஆக்கிவிட்டது. மானுட வாழ்க்கையை அதன் கவனத்துக்கப்பால், அதன் எல்லைக்கப்பால் வைத்துவிட்டது என்று கூறியுள்ளார்.

விஞ்ஞான வளர்ச்சியானது மனிதரை விஞ்ஞானத்தின் சிறப்பு விதிகளுக்குள் உந்தித்தள்ளி விட்டது. எவ்வளவுக்கெவ்வளவு மனிதர் அறிவில் முன்னேறினார்களோ அவ்வளவுக்கவ்வளவு வாழ்வை முழுமையாகவோ அல்லது தம்மைப்பற்றி முழுமையாகவோ அறிந்துகொள்வதில் பின்னேறினார்கள். எட்மண்ட ஹஸ்ஸேட்லின் மாணவரான ஹைடெகரின் புகழ்பெற்ற சொற்றொடரான 'இருத்தலை மறத்தல்' (the forgetting of being) என்னும் சூழலுக்குள் மனிதர் தள்ளப்பட்டுவிட்டார். ரெனெ தெக்கார்தே (Rene Descartes) குறிப்பிட்டதுபோல் மனிதர் தொழில்நுட்பம், அரசியல் மற்றும் வரலாறு ஆகிய விசைகளால் புறக்கணிக்கப்பட்டுவிட்ட ஒரு பொருளாக ஆகி விட்டார். இவ்விசைகளுக்கு மனிதரோ அவர்தம் வாழ்வு பெறுமதியற்றதொன்று. முக்கியத்துவமற்றதொன்று. ஆரம்பத்திலிருந்தே மூடி மறைக்கப்பட்டதொன்று.

நகுலனின் சுசீலா! யார் அவள்?

எஸ்.ராமகிருஷ்ணனின் 'நாவலெனும் சிம்பொனி' நூலில் எழுத்தாளர் நகுலன் பற்றியதொரு கட்டுரையுள்ளது. சிறு கட்டுரை அது. அதில் நகுலனின் படைப்புகளில் அடிக்கடி காணப்படும் சுசீலா என்னும் பெண் பற்றிய எஸ்.ராமகிருஷ்ணனின் கருத்துகள் இடம் பெற்றுள்ளன. நகுலனின் சுசீலா பற்றி எஸ்.ரா பின்வருமாறு கூறுவார்:

"'சுசீலாவின் உயர் தன்மைகள் சுசீலாவிடம் இல்லை' எனப்பேசும் இவர், கவிதையெங்கும் காணப்படும் சுசீலா எனும்  பெண் பெயரைக்கொண்டு அதைப்பெண்ணாக எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை என்ப்படுகிறது.  இப்பெண்பெயர் உருவாக்கும்  வார்த்தைச் சித்திரம் ஏற்கனவே உருவாகும் மனநிலையின் தீவிரத்திற்கு எதிர்நிலையாகவோ , சமன் செய்யும் ஒன்றாகவோ, பரிகசிக்கும் நிலையாகவோ கொள்ளலாம். ஒருவகையில் மரபுக்கவிதையில் வரும் வெண்சங்கே, பாம்பே, கிளியே, குதம்பாய்போல் இதுவும் சுய எள்ளல் குறியீடாகக் கொள்ளலாம்.  சில இடங்களில் சுசிலா மூலம் ஏற்படுத்தும்  நெருக்கம் பாரதியின் கண்ணம்மா என்ற வார்த்தை உருவின் செயல்பாடு போலத் தெரிகிறது."

எழுத்தாளர்கள் பலர் அவ்வப்போது சுசீலா போன்ற விடயமொன்றினைப்பற்றிக் குறிப்பிடும்போது அவ்விடயம் பற்றிய போதிய ஆய்வெதுமின்றி முடிவொன்றுக்கு வந்து விடுகின்றார்கள். அதற்கு எஸ்.ராமகிருஷ்ணனும் விதிவிலக்கானவரல்லர் என்பதையே நகுலனின் சுசீலா பற்றிய அவரது கூற்றும், அது பற்றிய மேலதிக விளக்கங்களும் புலப்படுத்துகின்றன.

எஸ்.ரா. நகுலனின் சுசீலா பற்றி இவ்விதமான முடிவொன்றுக்கு வர முன்னர் நகுலனின் படைப்புகள் அனைத்திலும் நகுலன் எவ்விதம் சுசீலாவை விபரித்திருக்கின்றார் என்று பார்த்திருக்க வேண்டும். பார்த்தாரா என்பது தெரியவில்லை. அவ்விதம் அவர் செய்திருந்தால் நிச்சயமாக 'சுசீலாவும் ஒரு எள்ளல்' என்னும் முடிவுக்கு வந்திருக்க மாட்டார். எனக்கென்னவோ நகுலனின் வாழ்வில் எதிர்பட்ட , அவர் காதலித்த ஆனால் அவருக்குக் கிடைக்காமற் போன பெண்ணொருத்திதான் அவர் படைப்புகளில் வரும் சுசீலா என்னும் பாத்திரமாக இருக்க வேண்டுமென்று தோன்றுகின்றது. தனக்குக் கிடைக்காமற் போன பெண்ணைச் சுசீலா என்னும் பாத்திரமாக உருவகித்து அவளைத்தன் எழுத்துகளில் நடமாடவிட்டு , அவளுடன் எழுத்துலகில் வாழ்ந்து வந்திருக்கின்றார் நகுலன் என்றே தோன்றுகின்றது. இறுதிவரைத் தனிமையில் வாழ்ந்த நகுலன் நிஜ வாழ்க்கையில் தனக்குக்கிடைக்காமற் பெண்ணைச் சுசீலாவாக்கி மானசீகமாக வாழ்ந்த்திருக்கின்றார் என்றே தோன்றுகின்றது.

காலச்சுவடு வெளியீடாக வெளிவரவுள்ள எழுத்தாளர் தாஜ் (சீர்காழி) அவர்களின் 'தங்ஙள் அமீர்'!


நண்பர் எழுத்தாளர் சீர்காழி தாஜ் அவர்களின் குறுநாவல்கள் அடங்கிய தொகுதி காலச்சுவடு பதிப்பக வெளியீடாக 'தங்ஙள் அமீர்' என்னும் பெயரில் வெளிவரவுள்ளது. வாழ்த்துகள். 'தங்ஙள் அமீர்' குறுநாவல் 'பதிவுகள்' இணைய இதழில் (23.04.2014) வெளியான குறுநாவல் என்பதையும் இத்தருணத்தில் நினைவு கூர்கின்றேன். அக்குறுநாவல் பதிவுகள் இதழில் வெளியாகியபோது வெளியான எனது அறிமுகக் குறிப்பினையும் இங்கு பதிவு செய்கின்றேன்.

எழுத்தாளர் தாஜ் அவர்களை தொண்ணூறுகளிலிருந்து எனக்குத் தெரியும். ஸ்நேகா (தமிழகம்) வெளியிட்ட எனது நூல்களான அமெரிக்கா, நல்லூர் ராஜதானி நகர அமைப்பு ஆகிய நூல்களைத் தமிழக நூல் நிலையமொன்றில் கண்டு வாசித்து அவை பற்றி எனக்குக் கடிதங்கள் இரண்டு அனுப்பியிருந்தார். அதன் பின்னர் வைக்கம் முகம்மது பஷீரின் புகழ்பெற்ற நாவல்களிலொன்றான 'என் தாத்தாவுக்கு ஒரு யானை இருந்தது' நாவலையும் தனது நண்பர் ஒருவர் மூலம் எனக்குக் கிடைக்கச் செய்தார். மறக்க முடியாது.

தாஜ் அவர்களின் சிறுகதையான 'பால்ய விவாஹம்' பதிவுகள் இணைய இதழில் வெளியாகியுள்ளது. காலச்சுவடு, கணையாழி போன்ற சஞ்சிகைகளில் இவரது கவிதைகள் வெளியாகியுள்ளன. ஆனந்த விகடனின் பவள விழாபோட்டியிலும் இவரது கவிதை முத்திரைக்கவிதையாக விருது பெற்றுள்ளது. இவர் தமிழ்ப்பூக்கள் என்னும் வலைப்பதிவினையும் வைத்திருக்கின்றார்.

எழுத்தாளரின் தாஜ் எழுதிய தங்ஙள் அமீர் குறுநாவல் பற்றி 'பதிவுகள்' இணைய இதழில் நான் எழுதியிருந்த அறிமுகக் குறிப்பு:

"புலம் பெயர்ந்த தமிழர்கள் படைக்கும் இலக்கியம் என்றதும் உடனடியாக ஈழத்தமிழர்கள்தாம் நினைவுக்கு வருகின்றார்கள். உண்மையில் தமிழர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்களென்றாலும் அவர்கள் புலம் பெயர்ந்த தம் அனுபவங்களை மையமாகக்கொண்டு படைக்கும் இலக்கியம் புலம் பெயர்ந்த தமிழர்களின் இலக்கியம்தான். இவ்விதம் புலம் பெயர்தல் சொந்த நாட்டினுள்ளாகவுமிருக்கலாம். அந்நிய மண் நாடியதாகவுமிருக்கலாம். எழுத்தாளர் தாஜின் 'தங்ஙள் அமீர்' இரண்டாவது வகையினைச் சேர்ந்தது. இந்தக் குறுநாவல் இரண்டு விடயங்களை மையமாகக் கொண்டது. மத்திய கிழக்கு நாடொன்றில் உணவுபொருட்களை இறக்குமதி செய்து மொத்த வியாபாரம் செய்யும் இந்திய இஸ்லாமிய சமூக வர்த்தகர்களின் செயற்பாடுகளை அதன் நெளிவு சுழிவுகளை மற்றும் மந்திர தந்திரங்கள் போன்ற மூட நம்பிக்கைகளின் தொடரும் ஆதிக்கத்தினை விபரிப்பது ஆகியவையே அவை. 'தங்ஙள் அமீர்' என்று குறு நாவலுக்குத் தலைப்பு வைத்திருந்தாலும், வாசித்து முடித்ததும் மனதில் நிற்பவை ரியாத்தில் நடைபெறும் வர்த்தகச் செயற்பாடுகளும், அங்குள்ள வர்த்தகர் இன்னொருவரைத் திருமணம் செய்து வாழ்ந்து வரும் தன் முதற் காதலியை மீண்டும் மணக்கத் துடிப்பதும், அதற்காக 'தங்ஙள் அமீரை'ப் பாவிப்பதும்தாம்.

எழுத்தாளர் பிரபஞ்சனின் மரணமும், அவரது ஆசையொன்றும்!

பிரபஞ்சன் அவர்கள் 'ஜெயித்த கதை' கட்டுரையின் இறுதியில் 'என் விருப்பமெல்லாம் , எழுத்தைப் போலவே , என் மரணமும் கெளரவமாக இருக்க வேண்டும் என்பதுதான்' என்று குறிப்பிட்டிருந்தார்.  அவரது  ஆசை அவரது மரணத்தில் நிறைவேறியுள்ளது. நீண்ட காலத்துக்குப் பிறகு எழுத்தாளர் ஒருவருக்கு உரிய  மரியாதைகொடுத்து அவரது இறுதி அஞ்சலியை நடாத்தியதற்காகப் புதுவை மாநில அரசையும், அதன் முதல்வரையும் பாராட்டுகின்றேன்.

தம்  வாழ்நாளெல்லாம் தம் எழுத்தால் இலக்கியத்துக்கு வளம் சேர்க்கும்  எழுத்தாளர்களைப் பொதுவாக மாநில அரசுகள் கவனிப்பதில்லை. இந்நிலையில் அரச மரியாதையுடன் எழுத்தாளர் பிரபஞ்சனுக்கு இறுதி அஞ்சலியினைச் செய்ததன் மூலம் புதுவை மாநில அரசு உயர்ந்து நிற்கிறது. தமிழக அரசும், ஏனைய மாநில அரசுகளும் இம் முன்மாதிரியைப் பின்பற்றட்டும். எழுத்தாளர்கள் வாழும் காலத்திலேயே அவர்களது படைப்புகளை இலகுவாக வெளியிடும் வகையிலான திட்டங்கள் பலவற்றை உருவாக்கட்டும். நூலகங்கள் இலகுவாக அவர்கள்தம் நூல்களை வாங்கும் திட்டங்களை உருவாக்கட்டும். எழுத்தாளர்களின் நூல்களுக்குக் கொடுக்க வேண்டிய நூலுரிமைப்பணத்தை உரிய முறையில் கொடுப்பதை உறுதி செய்யும் திட்டங்களை உருவாக்கட்டும்.

நியுயோர்க் நடைபாதை ஓவியரின் கைவண்ணம்!


இங்குள்ள ஓவியத்துக்கு ஒரு வரலாறுண்டு. 1984இல் வரையப்பட்ட ஓவியம் இது. இன்றும் என்னிடம் மாற்றமின்றி அவ்விதமேயுள்ளது. இதனை வரைந்தவர் வீதி ஓவியர்களிலொருவர். பென்சிலால் வரையப்பட்ட ஓவியம்.

1983 கலவரத்தைத்தொடர்ந்து நாட்டை விட்டு நீங்கிக் கனடா வரும் வழியில், பாஸ்டன் நகரில் தடுக்கப்பட்டு, நியூயார்க் மாநகரத்தின் புரூக்லீன் நகரிலுள்ள தடுப்பு முகாமில் சிறிது காலம் தடுத்து வைக்கப்பட்டு வெளியே விடப்பட்டபோது, அடுத்த ஒன்பது மாதங்கள் வரையில் நியூயோர்க் மாநகரத்தில் மான்ஹட்டன் நகரில் பெரும்பாலும் எனது வாழ்க்கை கழிந்தது. 'West 4th Street / Avenue of the Americas வீதிகளிரண்டும் சந்திக்கும் சந்தியில் Avenue of the Americas' வீதியின் கிழக்குப் பக்கமாகவிருந்த நடைபாதையில் மனிதரின் உருவப்படங்கள் வரையும் வீதி ஓவியர்கள் சிலர் அவ்வழியால் செல்லும் மனிதர்களில் விரும்பும் சிலரின் உருவப்படங்களை வரைவது வழக்கம். ஒரு மாலை நேரம் அவ்வழியால் சென்று கொண்டிருந்தபொழுது நான்கு ஓவியர்கள் அந்நடைபாதையில் காணப்பட்டனர். அவர்களில் மூவருக்கு வாடிக்கையாளர்கள் கிடைத்து விட்டனர். ஒருவருக்கு ஒருவருக்குக் கிடைக்காததால் , தனிமையில் வாடிக்கையாளரை எதிர்நோக்கி வாடி நிற்கும் கொக்காகக் காத்திருந்தார். மற்ற ஓவியர்கள் தம் தொழிலில் மும்முரமாக ஈடிபட்டிருந்தனர். நான் தனித்திருந்த ஓவியரிடம் ஒருவரின் உருவப் படத்தை வரைவதற்கு எவ்வளவு செல்வாகும் என்றேன்.

என்னைப் பாதித்த முதலிருபது நூற் பட்டியல்!


இதுவரை வாசித்த நூல்களில் என்னைப் பாதித்த முக்கியமான இருபது நூல்களை எண்ணிப்பார்த்தேன். அவற்றின் பட்டியல் இது. இன்னும் பல நூல்களுள்ளன. ஆனால் நினைத்தபொழுது முதலில் நினைவுக்கு வந்தவை இவை. என்னைக் கவர்ந்த வெகுசனப்படைப்புகள் பட்டியலும் விரைவில் வரும். அது போல் என்னைக் கவர்ந்த தமிழகப்படைப்புகள், ஈழத்துப் படைப்புகள், என்னைக் கவர்ந்த எழுத்தாளர்கள், வெகுசன எழுத்தாளர்கள் பட்டியல்களும் வெளியாகும்

1. புத்துயிர்ப்பு - டால்ஸ்டாய்
2. Crime and Punishment - Dostoyefsky
3. பாரதியார் கவிதைகள், கட்டுரைகள் அடங்கிய தொகுப்புகள்.
4. The Brothers Karamazov - Dostoyefsky
5. கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கை - மார்க்ஸ், எங்கெல்ஸ்
6. தாய் - மார்க்சிம் கோர்க்கி
7. The Metamorphosis - Franz Kafka
8. The old man and the Sea - Ernest Hemingway
9. வெற்றியின் இரகசியங்கள் - அ.ந.கந்தசாமி
10. Candide - Voltaire
11. காலம் - வாசுதேவன் நாயர்
12. ஒரு மனிதன்! ஒரு வீடு! ஒரு உலகம்! - ஜெயகாந்தன்
13. The Fabric of The Cosmos - Brian Greene
14. A brief History Of Time - Stephen Hawkings
15. Hyperspace -Michio Kaku
16. மோகமுள் - தி.ஜானகிராமன்
17. அன்னா கரீனினா - டால்ஸ்டாய்
18. ஏணிப்படிகள் - தகழி சிவசங்கரன்பிள்ளை
19. ஒரு கிராமத்தின் கதை - எஸ்.கே.பொற்றேகாட்
20. நீலகண்ட பறவையைத்தேடி.. - அதீன் பந்த்யோபாத்

கவிதை: நானே பிரம்மா! - வ.ந.கிரிதரன் -

இவனது கடவுள் AI என்றால், இவனை வடிவமைத்துச் சிரிக்க வைத்த படைப்புக் கடவுள் பிரம்மா நானேதான். ஆழ்ந்த சிந்தனையில் இருந்த இவனை அடக்க முடியாமல் ...