Saturday, December 23, 2023

ஒரு சந்திப்பு: எழுத்தாளர் மு.மேத்தாவுடன் , 'ஓவியா பதிப்பக' உரிமையாளர் வதிலைப்பிரபா!


ஓவியா பதிப்பக உரிமையாளரும், 'மகாகவி' சஞ்சிகையின் ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளருமான திரு.வதிலைப்பிரபா அவர்கள் கவிஞர் மு.மேத்தா அவர்களைச் சந்தித்து 'மகாகவி' சஞ்சிகை, ம. சேரனின்  "மூனு கோடு நோட்டு" (சென்ரியு கவிதைகள்) மற்றும் ஓவியா பதிப்பக வெளியீடாக வெளிவந்த எனது நாவலான 'நவீன விக்கிரமாதித்தன்' ஆகியவற்றைக் கொடுத்தது பற்றிய தகவலினை அனுப்பியிருந்தார். அவருக்கு என் நன்றி.  அக்காட்சிக்கான புகைப்படத்தினையும் அனுப்பியிருந்தார். அதனையே இங்கு காண்கின்றீர்கள்.

'நான் மலரோடு தனியாக ஏனிங்கு வந்தேன்' வண்ணத்தில்..


அண்மையில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த முதியவர் ஒருவர் இப்பாடலின் வரிகளைச் சிறப்பாகப் பாடி சமூக ஊடகங்களில் அனைவரையும் மகிழ்ச்சியிலாழ்த்தினார். அவருக்காக அவர் இரசித்து, மகிழ்ந்து பாடிய இப்பாடலின் முழு வடிவத்தையும் வண்ணத்தில் இங்கு பகிர்ந்துகொள்கின்றேன்.

அமரர் ஜெயன் தேவா (மகாதேவா ஜெயக்குமரன்) நினைவாக..


நண்பர் ஜெயன் தேவா (மகாதேவா ஜெயக்குமரன்) மறைந்து ஆண்டு ஒன்று கடந்து விட்டது. ஜெயனை எனக்குப் பதிவுகள் இணைய இதழே அறிமுகம் செய்து வைத்தது. பின்னர் முகநூலில் நண்பராக அறிமுகமானார்.

அடிக்கடி அலைபேசியில் உரையாடா விட்டாலும் அவ்வப்போது உரையாடுவதுண்டு. நோயின் தாக்கத்தால் உடல் நிலை பாதிக்கப்பட்டிருந்த நிலையிலும் கூட உரையாடுகையில் அது பற்றிக் குறைபட்டுக் கதைக்க மாட்டார். சமூக, அரசியல் விடயங்கள் பற்றியே உரையாடுவார்.  

அவரது தனிப்பட்ட வாழ்க்கை, கடந்த காலம் பற்றியெல்லாம் என்னுடன் அவர் உரையாடியதில்லை. ஆனால் அவர் விடுதலைப்புலிகளின்  மகளிர் அணியின் அரசியற் பிரிவின் தலைவியாகச் செயற்பட்ட தமிழினியின் இறுதிக்காலத்தில் அவரைத் திருமணம் செய்ததுடன் அவரது இலக்கிய முயற்சிகளுக்கு மிகுந்த ஆதரவாகச் செயற்பட்டார்.  அதனை அவரது வாழ்க்கையின் முக்கியமான , ஆரோக்கியமான விடயமாக நான் உணர்கின்றேன்.

Tuesday, December 19, 2023

முனைவர் செ.இராஜேஸ்வரியின் எம்ஜிஆர் பற்றிய நூல்கள்!


இவர் ஒரு மொழிபெயர்ப்பியலில் முனைவர் பட்டம் பெற்ற பேராசிரியை. இவர் முனைவர் செ.இராஜேஸ்வரி. மொழிபெயர்ப்பு, இதழியல், ஆய்வு, கற்பித்தல் எனப் பன்முக ஆளுமை மிக்க இவர் எம்ஜிஆரின் சினிமா, அரசியல் பற்றிய் ஆய்வுகளில் நாட்டம் மிக்கவர்.

எம்ஜிஆர் பற்றி விகடனில் தொடர் எழுதியவர். கனடாவிலிருந்து வெளிவரும் எழுத்தாளர் அகிலின் 'தமிழ் ஆதர்ஸ்.காம்' இணையத்தளத்தில் எழுதி வருபவர்.

இவரது நோக்கம் குறைந்தது 100 நூல்களையாவது எம்ஜிஆர் பற்றி எழுத வேண்டுமென்பது. இதுவரை பதினைந்துக்கும் அதிகமான நூல்களை எழுதியுள்ளார். மதுரையிலிருந்து சந்திரோதயம் என்னும் பதிப்பகம் வெளியிட்டு வருகின்றது.

இவரது எம்ஜிஆர் பற்றிய நூல்கள் இணையக் காப்பகத்தில் (Archive.org) ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.

உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட முனைவர் வே.சீதாலட்சுமியின் 'தமிழ் நாவல்கள்' (அகர வரிசை)


உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட முனைவர் வே.சீதாலட்சுமியின் 'தமிழ் நாவல்கள்' (அகர வரிசை) முக்கியமானதோர் ஆவணம். இந்நூலில் 6298 நூலாக வெளிவந்த நாவல்களின் பெயர்ப்பட்டியலைத் தொகுத்திருக்கின்றார் முனைவர் வே.சீதாலட்சுமி.
 
இந்நூலில் எனக்குத்தெரிந்த ஒரு சில நாவல்களின் பெயர்களைத் தவிர நான் தேடிக்கொண்டிருக்கும் நாவல்கள் பலவற்றின் பெயர்களைக் காண முடிந்தது மகிழ்ச்சையைத் தந்தது.
 
உமாசந்திரனின் 'முழுநிலா', மாயாவியின் (எஸ். கே. இராமன்) மொழிபெயர்ப்பில்  வெளியான 'இளமைக்கனவு' (புகழ்பெற்ற அமெரிக்க நாவலான The Yearling' நாவலின் தமிழ் மொழிபெயர்ப்பு. நாவலாசிரியர் Marjorie Kinnan Rawlings), கல்பனாவின் 'யுகசந்தி', மாயாவின் 'மூடுபனி' , ஜெகசிற்பியனின் 'மண்ணின் குரல்' போன்றவகை நான் தேடிக்கொண்டிருக்கும் நாவல்களில் அடங்குவன.
அக்காலகட்டத்தில் பல நாவல்களை எழுதியவர் எழுத்தாளர் பி.எம்.கண்ணன். இவரை இன்று தமிழ் இலக்கிய உலகு மறந்தேவிட்டதெனலாம். இவரது வெளியான நூல்களையெல்லாம் இத்தொகுப்பின் பட்டியலில் காணமுடிகின்றது.
 
மாயாவியின் மொழிபெயர்ப்பில் உருவான இளமைக்கனவு' நாவலை நாங்கள் அனைவருமே விரும்பி வாசித்தோம். கானகச்சூழலை மையமாகக்கொண்டு எழுதப்பட்ட சிறந்த நாவல். அப்பொழுது இயற்கை வளம் மலிந்த , கானகச்சூழலில் உறங்கிக்கிடக்கும் வவுனியாவில் வாழ்ந்து வந்ததால் இந்நாவலுடன் எங்களால் மிகவும் இலகுவாக மனதொன்றிட முடிந்திருக்கக் கூடும்.)
 
இவ்விதமான ஆவணங்கள் தமிழ் நாவல்கள் பற்றிய ஆய்வுகளுக்கு வழித்துணையாக இருப்பவை. அதனால் ஆரோக்கியமானவை..

Sunday, December 17, 2023

(பதிவுகள்.காம்) ஐம்பதுகளில் வெளியான வீரகேசரி பிரசுர நாவல் 'கே.வி.எஸ்.வாஸின் (ரஜனி) 'குந்தளப்பிரேமா' - வ.ந.கிரிதரன் -


'வீரகேசரி பிரசுர நாவல்கள் ஒரு பொது மதிப்பீடு' என்னும் அநுபந்தம் பேராசிரியர் நா.சுப்பிரமணியன் அவர்களால்  நா.சுப்பிரமணியம் என்னும் பெயரில் எழுதப்பட்டது. அப்பொழுது அவர் எம்.ஏ பட்டதாரி. யாழ்  பல்கலைக்கழகத்தில் உதவி நூலகராகப் பணியாற்றிக்கொண்டிருந்த காலகட்டம். வீரகேசரி ஐம்பதாவது நூற்பிரசுர விழாவில் அநுபந்தமாக வெளியிடப்பட்ட பிரசுரமிது. இப்பிரசுரத்தில் வீரகேசரி பிரசுரங்கள்  பற்றிப் பின்வருமாறு  குறிப்பிடப்பட்டிருந்தது:

"1972ஆம் ஆண்டில் தொடங்கிய வீரகேசரி பிரசுர முயற்சி ஆரம்பத்தில் ஆண்டொன்றுக்குச் சுமார் ஆறு பிரசுரங்களாகத் தொடங்கி, அதிகரித்து வந்து இப்பொழுது மூன்றாண்டுகளாக ஆண்டு ஒன்றுக்குப் பத்து நாவல்கள் என்ற அளவில் விரிவடைந்துள்ளது."

இவ்விதமே நானும் வீரகேசரி பிரசுரங்களும்  ஶ்ரீமாவோ பண்டாரநாயக்காவின் ஆட்சிக்காலத்தில் கடைப்பிடிக்கப்பட்ட பொருளாதாரக் கொள்கைகளின் விளைவாக, உள்ளூர் உற்பத்திக்கு முதன்மை கொடுக்கப்பட்டிருந்த சூழ்நிலை காரணமாக உருவாகின என்றே எண்ணியிருந்தேன். ஆனால் உண்மையில் அச்சூழலைப் பயன்படுத்தி வீரகேசரி பிரசுரங்கள்  அதிக அளவில் வெளிவந்திருந்தாலும் வீரகேசரி பிரசுரமாக 1951இலேயே நாவலொன்று வெளியாகியிருந்ததை அறிய முடிகின்றது.  அதனை எழுதியவர் எழுத்தாளர் கே.வி.எஸ்.வாஸ் (கும்பகோணம் வேதாந்தம் சீனிவாச ஐயங்கார்). நாவலின் பெயர் - குந்தளப்பிரேமா

Thursday, December 14, 2023

எனது படைப்புகளும் அவை பற்றிய ஆய்வுகளும்! - வ.ந.கிரிதரன் -

 


எனது படைப்புகள் பற்றி வெளியான ஆய்வுகள் பற்றி நானறிந்த தகவல்கள்  இவை. தமிழகம் , இலங்கையில பட்டப்படிப்பு மாணவர்களால், பேராசிரியர்களால் ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. அவை பற்றிய விபரங்கள் கீழேயுள்ளன. இவர்கள் அனைவருமே என் படைப்புகளூடு என்னைக் கண்டடைந்தவர்கள். நான் நேரில் அறிந்தவர்கள் அல்லர். படைப்புகள் தம் வாசகர்களைக் கண்டடையும் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை மிக்கவன் நான். அவ்விதமான படைப்புகளே நின்று பிடிக்கும் என்பதிலும் நம்பிக்கை மிக்கவன் நான். 
 
நம்மவர்களில் ஒரு குறைபாடு. நாடறிந்தவர்களாகத் தாம் கருதும் எழுத்தாளர்கள், பேராசிரியர்கள் தம் படைப்புகளைப் பற்றி அல்லது ஏனையவரின் படைப்புகளைப் பற்றிக் கூறவேண்டும். அவ்விதம் கூறினாலே அவை தரமானவை என்றொரு கருத்தோட்டமும் கொண்டவர்களாக அவர்கள் இருப்பதையே இவ்விதமான உளவியற் போக்கு எடுத்துக்காட்டுகின்றது. இது தவறான நிலைப்பாடு. அண்மையில் நடந்த எனது நூல்கள் பற்றிய நிகழ்வில் கூட தலைமை வகித்த எழுத்தாளர் பா.அ.ஜயகரன் தனது உரையில் 'எனது புகலிட அனுபவக் கதைகள் முக்கியமானவை. அவை பற்றிப் பலரும் எழுதுவதில்லை. அவர்களுக்குத் தான் கூறுவது என் கதைகளைப்பற்றி எழுதுங்கள்' என்று குறிப்பிட்டிருந்தார். அவரது இக்கூற்றுக்கான காரணமும் மேற்படி உளவியற் போக்கே. உண்மையில் எனது படைப்புகள் பற்றி , குறிப்பாகப் புகலிடப் படைப்புகள் பற்றி நிறையவே ஆய்வுக் கட்டுரைகள் வெளிவந்துள்ளன. ஆனால் அவர் கருதும் 'இலக்கிய மேதை'களின் எழுத்துகளில் அவை பற்றிக் காணவில்லையென்பதால் ஏற்பட்ட ஜயகரனது ஆதங்கமே அது. 

புத்தாக்கம் செய்வோம்! பாதிப்புகளைக் குறைப்போம்! இணைந்து வாழ்வோம்!

  காலத்துக்குக் காலம் புதுப் புதுத்  தொழில் நுட்பங்கள் அறிமுகமாகும் தருணங்களில் சமூக, ஊடகங்களில் புதிய சூழலியற் போராளிகள் உருவாகிவிடுகின்றனர...