- இசை & குரல் - AI SUNO -
கவிதை; நவீன விக்கிரமாதித்தனின் 'காலம்'! வ.ந.கிரிதரன்
எழுத்தாளர் மாலன் சாகித்திய அகாதெமிக்காக 'அயலகத் தமிழ்க் கவிதைகளின் தொகுப்பு -'புவி எங்கும் தமிழ்க் கவிதை' என்னும் கவிதைத்தொகுப்பினைத் தொகுத்துள்ளார். 22 நாடுகளில் வசிக்கும் தமிழ்க் கவிஞர்களின் 70 கவிதைகள் கொண்ட தொகுப்பு இது. மேற்படி தொகுப்பில் எனது இககவிதையான . "நவீன விக்கிரமாதித்தனின் 'காலம்'" கவிதையும் இடம் பெற்றுள்ளது.
உள்ளிருந்து எள்ளி நகைத்தது யார்?
ஒவ்வொரு முறையும் இவ்விதம்
நகைப்பதே உன் தொழிலாயிற்று.
விரிவெளியில் படர்ந்து கிடக்கும்
உன் நகைப்போ ,
நீ விளைவிக்கும் கோலங்களோ,
அல்லது உன் தந்திரம் மிக்க
கதையளப்போ
எனக்கொன்றும் புதியது அல்லவே.
இரவுவானின் அடுக்குகளில்
உனது சாகசம் மிக்க
நகைப்பினை உற்றுப் பார்த்திடும்
ஒவ்வொரு இரவிலும்,
நட்சத்திரச் சுடர்களில்,
அவற்றின் வலிமையில்
உன்னை உணர்கின்றேன்.