எனது இசைப்பாடல்களை 'வ.ந.கிரிதரன் பாடல்கள் (V.N.Giritharan Songs)வ் என்னும் யு டியூப் சானலில் நீங்கள் கேட்டு மகிழலாம். அதற்கான இணையத்தள முகவரி - https://www.youtube.com/@girinav1
வ.ந.கிரிதரனின் இசைப் பாடல்கள். எனது பாடல் வரிகளை பல்வகை வாத்தியக் கருவிகளுடன், பல்வகை இசை வடிவங்களைக் கலந்து பாடல்களாக்கி உள்ளேன். இதற்காகக் குரல் தந்ததுடன், இசையமைத்துத் தந்ததற்காகவும் செயற்கை நுண்ணறிவான 'சுனோ'வுக்கு ( AI SUNO) என் மனம் நிறைந்த நன்றி. என் பாடல்களை இன்னும் பல்வேறு நாடுகளின் இசை வடிவங்களில் எதிர்காலத்தில் செயற்கை நுண்ணறிவின் மூலம் உருவாக்க வேண்டுமென்பது என் அவா.
தனது பாடல்களை இவ்விதம் பாடல்களாக்குவதற்கு இசைக்கலைஞர்கள் , பாடகர்கள் பலரின் ஒத்துழைப்பு அவசியம். அதற்கான சாத்தியம் அற்ற என்னைப்போன்ற பாடலாசிரியர்கள் இவ்விதம் இசையமைத்து பாடல்களை உருவாக்கி, பரீட்சித்துப் பார்ப்பதற்கு செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பம் உதவுகின்றது. அவ்வகையில் இத்தொழில் நுட்பத்தை ஆரோக்கியமானதொரு தொழில் நுட்பமாகவே பார்க்கின்றேன்.
எதிர்காலத்தில் உயிருள்ள உண்மை இசைக்கலைஞர்கள், பாடகர்கள் என் பாடல்களைப் பாட இப்பாடல்கள் வழி சமைக்குமென்ற நம்பிக்கை எனக்கு நிறையவே உண்டு. அதற்கு முதற்படியாகவே செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பத்தைப் பார்க்கின்றேன். எவ்விதம் இணையம், சமூக ஊடகங்கள் நிலைத்து நின்று விட்டனவோ அவ்விதமே இச்செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பமும் எம் மத்தியில் இனி நிலைத்து நிற்கும். பல்வகைகளீல் ஆரோக்கியமான விளைவுகளைத் தரும்.
இதுவரை என் சானலில் பதிவு செய்யப்பட்ட எனது பாடல்களின் விபரங்களையும், பாடல் வரிகளையும் கீழே தந்துள்ளேன். எதிர்காலத்தில் மேலும் பல பாடல்கள் பதிவு செய்யப்படும். என் 'வ.ந.கிரிதரன் பாடல்கள்' சானலுக்குச் செல்லுங்கள். பாடல்களைக் கேட்டு மகிழுங்கள். உங்கள் ஆக்கபூர்வமான கருத்துகளைப் பகிர்ந்துகொள்ளுங்கள்.
1. என் குருமண் காடே! வ ந கிரிதரன் https://www.youtube.com/watch?v=Iuy2svIdTp8&t=68s
2. பாடல்: நட்சத்திரத் தோழியரே அவனை அழைத்து வாருங்கள் - வ.ந.கிரிதரன் - https://www.youtube.com/watch?v=ibgzWOjb2Qc
3. பாடல்; கறுப்பு ஜூலை - வ.ந.கிரிதரன் https://www.youtube.com/watch?v=-5DBeBQvhVo
4. பாடல்; காதலினால்.. -வ.ந.கிரிதரன் - https://www.youtube.com/watch?v=CtLhWKZhv08
5. பாடல்; தீக்கோழிகளே தலையை வெளியே எடுங்கள்.. - வ.ந.கிரிதரன் - https://www.youtube.com/watch?v=aUiJvRWqDmw
6. பாடல்: அதி மானுடரே! நீர் எங்கு போயொளிந்தீர்? வ.ந.கிரிதரன் - https://www.youtube.com/watch?v=_9Ilsgy2T7I
7. பாடல்: அது ஒ ரு கனாக் காலம்! - வ.ந.கிரிதரன் - https://www.youtube.com/watch?v=PrBXDVK66O4
8. பாடல்: இருப்பதிகாரம் - வ.ந.கிரிதரன் - https://www.youtube.com/watch?v=cYCHSzs3LdQ
9. பாடல்: ஆசை - வ.ந.கிரிதரன் - https://www.youtube.com/watch?v=2pSvasDsHcU
10. பாடல்: தனிமைச் சாம்ராஜ்யத்துச் சுதந்திரப் பறவை. - வ.ந.கிரிதரன் - https://www.youtube.com/watch?v=TBzGdyKGqVA
11. பாடல்; கண்ணா, காலவெளி நாம்! - வ.ந.கிரிதரன் - https://www.youtube.com/watch?v=rBNd1VtUhWQ
12. பாடல்; நான் பிரபஞ்சத்துக் குழந்தை - வ.ந.கிரிதரன் - https://www.youtube.com/watch?v=DAAEqYz4OD8
13. பாடல்; நெஞ்சில் நிறைந்தாய் கண்ணம்மா - வ.ந.கிரிதரன் - https://www.youtube.com/watch?v=nlUuFkbrGeA
14. யாழ் இந்து நினைவுகள் - https://www.youtube.com/watch?v=SfCXEWcG06s
1. பாடல்; குருமண் காடே. - வ.ந.கிரிதரன் -
[என் குருமண்காட்டு நினைவுகள் என்னும் நெடுங் கவிதை சிறு மாறுதல்களுடன் இப்பாடலாக உருவெடுத்துள்ளது. வவுனியா -மன்னார் பிரதான வீதியிலிருந்து (பட்டாணிச்சுப் புளியங்குளத்தினருகில்) வடக்காகச் செல்லும் வீதியிலுள்ள பிரதேசம் குருமண்காடு என்றழைக்கப்படுகின்றது. அதில்தான் என் பால்ய பருவம் கழிந்தது. அறுபதுகளில் அதுவோர் ஒற்றையடிப்பாதை. இன்றோ ஒரு நகரம். அந்த நாள் குருமண்காடு இன்று என் நினைவில் மட்டும். ரப், பொப், ரொக் என்று உருவான இசைக் கலவை இது. அதற்காக AI Suno வுக்கு நன்றி ]
பால்யப் பருவத்துக் குருமண் காடே!
நனவிடை தோய்கின்றேன். . நான்
நனவிடை தோய்கின்றேன்.
நனவிடை தோயவே முடியும்.
நனவிடை தோயவே முடியும்.
என் குருமண்காடு இன்றில்லை. அங்கு
என் குருமண்காடு இன்றில்லை
இயற்கையின் வனப்பில்
இலங்கிய குருமண்காடு.
நடை பயின்றேன்.
வனம், வாவி நிறைந்த குருமண்காடு.
வளமான பூமி என் குருமண்காடு.
காடு இன்று அங்கில்லை.
அந்த வனப்பு அங்கில்லை.
அந்த வளம் அங்கில்லை.
என்று நான் காண்பேன்?
எங்கு நான் காண்பேன்?
என் நினைவுகளில் நிற்கும்
இன்னுலகம் என் குருமண்காடு.
நள்ளிரவுகளில் நரிகள் ஊளையிடும்.
படுக்கையில் முடங்கிக் கிடப்போம்
நிலாக் காலம் என்றால்
நரிகளுக்குக் கொண்டாட்டம் தானே.
இரா அமைதி ஊடறுக்கும்
ஊளையில் ஒடுங்கிக் கிடப்போம்!
நோக்கிய திசையெங்கும் விருட்சங்கள்!
முதிரை! பாலை! வீரை! கருங்காலி!
மேலும் மேலும் விருட்சங்கள்!
விருட்சங்களில் தாவித் திரியும்
வானரங்கள் எப்போதும் எங்கும்.
வனப்பு மிகு செங்குரங்கு!
வலிமை மிகு தாட்டான்
தாட்டான்கள் எமைத் துரத்தும்.
தப்ப ஓடிச் செல்வோம்.
எத்தனை வகைப் புட்கள்.
எத்தனை வகைப் புட்கள்.
எங்கு நோக்கினும் புட்கள்.
காடை, கெளதாரி , காட்டுக்கோழி
ஊருலாத்தி, பருந்து, ஆட்காட்டி,
இரட்டை வாற் குருவி,
மைனா, மாம்பழத்தி, குக்குறுபான்,
தேன் சிட்டு, சிட்டுக்குருவி.. ஆகா!
எத்தனை வகைப் புட்கள்.
எத்தனை வகைப் புட்கள்.
வான் பாயும் பட்டாணிச்சுப் புளியங்குளம்.
விடிகாலையே எழுவோம். செல்வோம்.
விரால் பிடிக்கும் வெங்கணாந்திகள்.
நனவிடை தோய்கின்றேன்.
நனவிடை தோய்கின்றேன்.
நீந்தப் பழகினேன் அங்குதான்.
நீரரவங்களும் போட்டி போடும்.
தாமரைக்கொடி நீக்கி,
தளராமல் நீந்தினோம்.
பல்லின மனிதர் வாழ்ந்த மண்
அமைதியில் ஆழ்ந்த மண்.
அக்காலம்
அக்காடு! குருமண்காடு!
அழகான காடு.
அற்புதமான காடு!
ஆ! அந்தக் காடு இன்றில்லை!
ஆ! அந்தக் காடு இன்றில்லை!
ஆ! அந்த வனப்பு இன்றில்லை!
ஆ! அந்த வளமும் இன்றில்லை!
இல்லாத காட்டை எண்ணி
இன்று நனவிடை தோய்கின்றேன்!
என் நினைவில் இருக்கும்
இல்லாத காட்டைப் பற்றி
இன்று நனவிடை தோய்கின்றேன்!
எத்தனை வகைப் புட்கள்.
எத்தனை வகைப் புட்கள்.
பாடல் 2: நட்சத்திரத் தோழியரே அவனை அழைத்து வாருங்கள்! - வ.ந.கிரிதரன் -
படுக்கையில் புரண்டு கிடக்கின்றேன்.
விரிவானத்து நட்சத்திரத் தோழியரே.
தூக்கமின்றித் தவிக்கின்றேன்.
என்னவன் நினைவாலே.
என்னவன் நினைவாலே.
நீள்விழியாள் என்றெனை அழைத்தான்.
நிம்மதியாய் இரு என்றான்.
நீயின்றி நானில்லை என்றான்.
சொன்னவன் இன்று இங்கில்லை.
நெடுந் தொலைவு சென்று விட்டான்.
எங்கு சென்றான் நானறியேன்.
எந்த நாட்டில்,
எந்தக் காட்டில்
எந்த ஊரில்
தவிக்கின்றானோ நானறியேன்.
நட்சத்திரத் தோழியரே.
நட்சத்திரத் தோழியரே.
உலகு முழுவதும்
உங்களால் பார்க்க முடியும்.
முடிந்தால் தேடிப் பாருங்கள்.
மேற்கு நோக்கிச் சென்றவனை
முடிந்தால் தேடிப் பாருங்கள்.
இருப்பதே போதுமென்றேன்.
இங்கிருந்தே வாழ்வோமென்றேன்.
அங்கிருந்து உழைப்பது மேலென்றே
அவன் எனைப் பிரிந்தான்.
பிரிந்தவன் பிரிந்தவனே தோழியரே,
பிரிந்தவனிடமிருந்து இன்றுவரை
பதில் ஏதுமில்லை.
பதைபதைத்துக் கிடக்கின்றேன்.
தோழியரே,
பதைபதைத்துக் கிடக்கின்றேன்.
எங்கு சென்றான் அவன்.
என்ன ஆனான் அவன்.
நட்சத்திரத் தோழியரே.
நான் தவிப்பதை
நவிலுங்கள் அவனிடம்.
அவனில்லாத வாழ்வில்
இவளுக்கு இனிமையில்லை என்று
அவனுக்குச் சொல்லுங்கள்.
பொருள் தேடிப் போனவனைப்
பார்த்தால் பகருங்கள்.
பெண்ணிவளின் நிலையைப்
பகருங்கள்.
அவனருகில் நானிருந்தால்
அது போதும் என்று
அவனிடம் கூறுங்கள்.
அவசரமாக வரும்படி கூறுங்கள்.
நட்சத்திரத் தோழியரே.
நட்சத்திரத் தோழியரே.
நங்கை இவள் நிலையினை
எடுத்துக் கூறுங்கள்.
என்னிடம் இரக்கம் காட்ட
எடுத்துக் கூறுங்கள்.
அவனற்ற இருப்பில்
அழகில்லை. அமைதியில்லை.
இனிமையில்லை.
எதுவுமில்லை.
வெறுமை சூழ் வாழ்வென்று
வழியில் கண்டால் கூறுங்கள்.
நட்சத்திரத் தோழியரே. கூறுங்கள்.
நட்சத்திரத் தோழியரே.
இங்கு வயலுண்டு,.
இங்கு குளமுண்டு.
இங்கு வளம் உண்டு.,
இங்கு வனம் உண்டு.
இருப்புக்குப் பொருள் பெருக்க
இங்கு எல்லாம் உண்டு.
அவனிடம் கூறுங்கள். கூறி
அவனை அழைத்து வாருங்கள்.
அவன் அருகில் இருந்தால்
அது போதும்.
அது போதும்.
அது போதும்.
3. கவிதை; கறுப்பு ஜூலை - வ.ந.கிரிதரன்
கறுப்பு ஜூலையில் நான்
என் மண்ணை விட்டெ நீங்கினேன்.
என் மண்ணை விட்டு நீங்கினேன்.
கறுப்பு ஜூலை
நாகரிகத்தின் அவமானம்.
கறுப்பு ஜூலை
பேரழிவின் சின்னம்.
கறுப்பு ஜூலை
வரலாற்றின் களங்கம்.
அன்று
மனிதர் மிருகம் ஆகினர்.
மனிதர் மிருகம் ஆகினர்.
மனிதர் மிருகம் ஆகினர்.
சொந்தமண்ணில் அகதியானேன்.
சொந்த மண்ணில் அகதியானேன்.
பிறந்த மண்ணில் அகதியானேன்.
பிறந்த மண்ணில் அகதியானேன்.
புகலிடம் நாடிப் புறப்பட்டேன்.
புகுந்த மண்ணில் அகதியாக.
சிறைகளில் செந்நீர் வடிந்தது.
சிறைகளும் கசாப்புக் கடைகள் ஆகின.
போரொன்று வெடித்தது.
பெரு நாசம் விளைந்தது.
கறுப்பு ஜூலை பேரழிவின் சின்னம்.
கறுப்பு ஜூலை வரலாற்றின் களங்கம்.
கறுப்பு ஜுலைகள் இனியும் வேண்டாம்.
கறுப்பு ஜூலைகள் இனியும் வேண்டாம்.
கறுப்பு ஜூலையே போ.
கறுப்பு ஜூலையே போ.
கறுப்பு ஜூலையே போ.
பாடல் 4; காதலினால்.. -வ.ந.கிரிதரன் -
அன்பே!
ஒரு நாள் உன்
முகம் காணாவிடில்
மனம் ஒடிந்து
மூலையில் கிடந்திருப்பேன்.
உன் முக தரிசனம் நாடி
உன் வீட்டைச் சுற்றி
எத்தனை தடவைகள்
சைக்கிளில் சுற்றியிருப்பேன்.
உன் கூர் விழிகள் முன்னால்
மன்னவர் கூர் வேல் என்ன வேலென்று
கவிதை புனைந்திருப்பேன்.
அன்பே! நாளும் பொழுதும்
உன் நினைவால் வாடி இருந்திருப்பேன்.
அன்பே., உன் மேல் கொண்ட காதலினால்
அன்றி வேறெதனால்?
இன்றும் நினைத்துப் பார்க்கின்றேன்.
இதயத்தில் நீ கோலோச்சிய
அந்த நாட்களை.
தெருவோரம் ஆடி வருவாய்.
திரும்புகையில் முகம் திருப்பி
ஓரப் பார்வை பார்ப்பாய். பின்
ஒன்றும் தெரியாதது போல் செல்வாய்.
அன்பே.
உதயத்து நிலவாக இருந்தாய்.
தண்ணொளி தந்தாய்.
அன்பே.
தண்ணொளி தந்தாய்.
பொழுதுகள் உன் வரவால் களிப்புற்றன.
அன்பே, களிப்புற்றன.
பருவ வளர்ச்சியில் காதலுக்கும் பங்குண்டு.
உருவ வளர்ச்சிக்கு உரம் சேர்க்கும்
உள்ள வளர்ச்சி அது.
அது தந்தாய் அன்பே.
அது போதும், அதற்காக நன்றி
என்றுமிருக்கும் என் இதயத்தில்.
5. தீக்கோழிகளே தலையை வெளியே எடுங்கள்.. - வ.ந.கிரிதரன் -
தீண்டாமை இல்லையாம்.
நம் மண்ணில்
தீண்டாமை இல்லையாம்.
தரை மணலில் முகம் புதைக்கும்
தீக்கோழிகளே ,தீக்கோழிகளே
தலையை வெளியே எடுங்கள்.
தலையை வெளியே எடுங்கள்.
தீக்கோழிகளே
தலையை வெளியே எடுங்கள்..
இளையவரே.
இனியும் வேண்டாம் இந்நிலை
இம்மண்ணில்
என்று எடுத்துரையுங்கள்.
எடுத்துக் காட்டுங்கள்.
வர்ணமற்ற மண்ணே என்று
வாழ்ந்து காட்டுங்கள்.
தீண்டாமைப் பேய்க்குச்
சாவுமணி அடியுங்கள்.
சாவுமணி அடியுங்கள்.
சாவுமணி அடியுங்கள்.
தீக்கோழிகளாய் இருக்காதீர்.
தலையை மணலில் புதைக்காதீர்.
தீக்கோழிகளாய் இருக்காதீர்.
தலையை மணலில் புதைக்காதீர்.
தலை புதைத்தால்
தெரியாது. புற உண்மை
புரியாது. புற உலகம்
தலையை வெளியே எடுங்கள்
தலையை வெளியே எடுங்கள்
புற உலகம் பாருங்கள்.
புற உலகம் காணுங்கள்.
தீண்டாமைப் பேய்க்குச்
சாவுமணி அடியுங்கள்.
சாவுமணி அடியுங்கள்.
சாவுமணி அடியுங்கள்.
தீக்கோழிகளாய் இருக்காதீர்.
தலையை மணலில் புதைக்காதீர்.
தலை புதைத்தால்
தெரியாது. புற உண்மை
புரியாது. புற உலகம்
தீக்கோழிகளாய் இருக்காதீர்.
தலையை மணலில் புதைக்காதீர்.
தலை புதைத்தால்
தெரியாது. புற உண்மை
புரியாது. புற உலகம்
6. கவிதை: அதி மானுடரே! நீர் எங்கு போயொளிந்தீர்? வ.ந.கிரிதரன் -
Concrete! Concrete! Concrete!
சுவர்கள்! கதிருறிஞ்சிக் கனலுதிர்த்திடுங்
கள்ளங்கரவற்ற வெண்பரப்புகள்.
'சீமெந்து' சிரிக்கும் நடைபாதைகள்.
அஞ்சா நெஞ்சத் தூண்களின்
அரவணைப்பில் மயங்கிக்
கிடக்கும் இட வெளிகள்.
வாயுப் படைகளின் வடிகட்டலில்
வடியுமுஷ்ணக் கதிர்கள்.
பனித் துளிகளின் குமிண் சிரிப்பினில்
சிலிர்த்திடும்
புல்வெளிகள் பற்றிய கற்பனைகளின்
இனிமையில், நீலப்படுதாவின் கீழ்
குளிர்ந்து கிடக்கும் நிலமடந்தை
பற்றிய சோக நினைவுகள்.
தலைகவிழ்ந்து அரவணைக்கும்
விருட்ஷக் கன்னியர்தம் மென்தழுவல்
ஸ்பரிசக் கனவுகள்.
செயற்கையின தாக்கங்கள்
படர்ந்திட்ட
இயற்கையின் தேக்கங்கள்.
மரங்களில் புல்வெளிகளில் மந்தைகளாகக்
குழுக்களாகக் குகைகளில்
நடுங்கடிக்குமிருண்ட இராவினில்
நடுங்கி மின்னிடுமொளியினில்
மருண்டு கொட்டிடும் மழையினுள்
சுருண்டு
புரியாத பொழுதுகளில்
பதுங்கிக் குடங்கித் தொடர்ந்திட்ட
ஆதிப்பயணங்கள்.
இயற்கையின் தாக்கத்தினுள்
சுழன்றிட்ட வட்டங்களில்
மயங்கிக் கிடந்திட்ட வாழ்வு
வட்டங்கள்.
ஆ....அந்த அமைதி! அந்த இனிமை!
எங்கே ? எங்கே ? அவையெல்லாம்
எங்கே ? ஐயோ..அவையெல்லாம்
எங்கே போய் அடியோடு தொலைந்தனவோ ?
பொறி கக்கும் புகையினில் சுவாசம் முட்டி
புகைந்திட்ட வர்க்கப் போர்களால்
நிலைகுலையும் ககனத்தில்
குண்டுகளின் தாண்டவம்.
அச்சமின்றிப் பறந்த ஆருயிர் நண்பர்களே!
நகை தவள நீந்திச் சுகித்த என்னருமைத் தோழர்களே!
தென்றலணைப்பில் தூங்கிக் கிடந்திட்ட
விருட்சத்துக் குழந்தைகளே!
ஆறறிவால் நிலைகுலைந்து
நிற்கும் பிரிய சிநேகிதர்களே!
வளர்ச்சி தந்த வளர்ச்சியிலோ... ?
விரக்தி! அமைதியின்மை! ஆங்காரம்!
போர்! போர்!போர்!
போரென்றால்..போர்!போர்!போர்!
ஆ....
வளர்ச்சியில் விட்ட வழுதானென்ன ?
வளர்ச்சியில் விட்ட வழுதானென்ன ?
வளர்ச்சியில் விட்ட வழுதானென்ன ?
வழுதானென்ன ? வழுதானென்ன ?
வழுதானென்ன ?
ஆ..அந்த
அமைதி!அமைதி!அமைதி!
அன்பு!அன்பு!அன்பு!
இனிமை!இனிமை!இனிமை!
அதி மானுடரே!
எங்கு போயொளிந்தீர்?
நீர்! எங்கு போயொளிந்தீர்?
நீர்! எங்கு போயொளிந்தீர்?
7. பாடல்: அது ஒ ரு கனாக் காலம்! - வ.ந.கிரிதரன்
எம் பதின்ம வயதுகளில் யாழ்ப்பாண நகரத்துத் திரையரங்குகள் பிரதான பங்கு வகித்தன. எங்கள் சுப்பர் ஸ்டார்கள் எம்ஜிஆர், சிவாஜி படங்கள் தொடக்கம், ஆங்கில் படங்கள் வரை பல பார்த்தோம். மகிழ்ந்தோம். எம் சுப்பர் ஸ்டார்களுக்கு ஓவியர் மணியம் வரைந்த பிரமாண்டமான கட் அவுட்டுகளையும் மறக்க முடியாது. அவற்றைப் பற்றியதொரு நனவிடை தோய்தலே இப்பாடல்.
பாடல்: அது ஒ ரு கனாக் காலம்! - வ.ந.கிரிதரன்
அது ஒரு கனாக் காலம்.
அது ஒரு கனாக் காலம்.
யாழ் நகரத்துத் தெருக்களில்
வாழ்வு கழிந்த டீன் ஏஜ் நாட்கள்.
களிப்பில் மூழ்கிக்
கிடந்த நாட்கள்.
களிப்பில் மூழ்கிக்
கிடந்த நாட்கள்.
அழியாத கோலங்கள் அவை.
அழியாத கோலங்கள் அவை.
நகரத்துத் தியேட்டர்களில்
நாம் கழித்த பொழுதுகள்
அழியாத் கோலங்கள்.
அழியாத கோலங்கள்.
ராஜா, ராணி, ரியோ
வெலிங்டன், றீகல்
Manohara ,
லிடோ
Windsor, சாந்தி
ஹரன்
அழியாத கோலங்கள் அவை.
அழியாத கோலங்கள் அவை.
மணியத்தின் cut அவுட்டுகள் பார்ப்பதென்றால்
மகிழ்ச்சி எங்களுக்கு எப்போதும்தான்.
எம் சுப்பர் ஸ்டார்கள்
எம்ஜிஆர், சிவாஜியின் கட் அவுட்டுகள்
எத்தனை. எத்தனை.
அத்தனையும் இன்னும் நெஞ்ச்சில்]
அழியாத கோலங்கள்.
ராஜாவில் காவல்காரன்,
ராணியில் அடிமைப்பெண்,
மாட்டுக்கார வேலன்
பட்டிக்காடா பட்டணமா,
பாபு, நீதி, ராஜா
ஆர்ட்டிஸ்ட் மணியத்தின் கைவண்ணம்
பார்த்துப் புல்லரித்து நிற்போம்.
அழியாத கோலங்கள் அவை.
அழியாத கோலங்கள் அவை.
அது ஒரு கனாக் காலம்.
அது ஒரு கனாக் காலம்.
அழியாத கோலங்கள் அவை.
அழியாத கோலங்கள் அவை.
ஆங்கிலப் படங்கள் பார்ப்பதில்தான்
எங்களுக்கு எத்தனை மகிழ்ச்சி.
james Bond Sean connery,
John Wayne , Clint Eastwood
Charles Bronson
Christopher Lee
lee Van Cleef
Anthony Quinn
Kirk Douglas,
கேர்க் டக்ளஸ்
Sophia Loren
Gina Lollobrigida
Ursula andres
படங்கள் பார்ப்பது என்றால்
பள்ளிக்குக் கட் அடிப்பு.
கட் அடித்துப் பார்ப்பதில்தான்
களிப்பு. ஒரே களிப்பு.
அது ஒரு கனாக் காலம்.
அது ஒரு கனாக் காலம்.
அழியாத கோலங்கள் அவை.
அழியாத கோலங்கள் அவை.
புது வின்சர் இரவுக் காட்சியில்
பல்கணி ஜன்னல் திறந்திருக்கும்.
புகுந்து தழுவும் காற்றில்
படம் பார்ப்போம், இரசிப்போம்.
பாலும், பழமும்,
பாகப் பிரிவினை
பாச மலர் பார்த்துக்
கண் கலங்கியதும் உண்டு.
எம்ஜிஆரின் படமென்றால்
எங்களுக்குக் கொண்டாட்டமே.
முதல் நாள் நள்ளிரவே
முதற் காட்சி தொடங்கி விடும்.
மனோஹராவில் உலகம் சுற்றும் வாலிபன்
இதயக்கனி,
ராஜாவில் ஒளி விளக்கு
ரிக்சாக்காரன் வெலிங்டனில்
அது ஒரு கனாக் காலம்
அது ஒரு கனாக் காலம்.
அழியாத கோலங்கள் அவை.
அழியாத் கோலங்கள் அவை.
8. பாடல்: இருப்பதிகாரம் - வ.ந.கிரிதரன் -
வானினை நிலவினை வரையினை மடுவினை
தேனினை யொத்த சொல்லினை உதிர்க்கும்
அணங்கினை அகன்ற இடையினைத் தனத்தினை
மீறிட முடியா சிந்தையை மேலும்
தேனிசை சிற்பம் சித்திரம் கலைகள்
மொழியும் இனமும் மண்ணும் பொன்னும்
குதலைக் குறும்பும் அன்பும் சிரிப்பும்
ஆட்டியே வைக்கும் மீட்சி யுண்டா?
என்றென் துயரும் பிடிப்பும் சாகும்?
விரியும் அண்டம் அடக்கும் அண்டம்
அதனை அடக்க மற்றோர் அண்டம்.
வெறுமை வெளியில் பொருளின் நடனம்.
இதற்குள் துளியெனக் கரையும் இருப்பு.
இதுவும் நிசமா? நிழலா? கனவா?
நனவும் கனவா? கனவும் நனவா?
விடைகள் நாடித் தொடரும் வினாக்கள்.
விடைகள் அற்ற வினாக்கள்! வினாக்கள்!
இருப்பு அறிந்திட தேடித் தொடரும்
இருப்பே எந்தன் வாழ்வே வாழ்வே!
இதனை அறிதல் புரிதல் எவ்விதம்?
நூலினைக் குருவினை அறிவினை உணர்வினைக்
கோளினைச் சுடரினை வெளியினை விரிவினை
வாழ்வினைத் தாழ்வினைத் துயரினை மகிழ்வினை
அறிதல் எவ்விதம்? புரிதல் எவ்விதம்?
கலவிக் குலாவி இருந்திடும் அவைகளாய்
இருந்தே இருப்பின் இவ்வித இடரெலாம்
இல்லாது ஒழிந்து இருந்தன்றோ இருக்கும்?
செயற்கை சமைத்திட சிந்தை தந்த
செயலினால் தானோ செகத்தினில் துயரோ?
அன்பினை ஆக்கிட அறிவினைப் பாவிக்க
என்னவர் உன்னவர் நம்மவர் மறந்திட்ட
பண்பினால் தானோ பாரினில் பகைமை?
தாமரை இலைமேல் தண்ணீர் போன்று
தரணியில் வாழ்ந்திடும் பக்குவம் கொண்டு
நானினைச் சித்தினை அசித்தினை அறிந்து
விருப்பு விட்டு வாழ்ந்திடும் தன்மை
வந்திடு மென்றால் அதுவே போதும்.
அந்திக் கதிரின் சிவப்பில் நாளும்
சிந்தை இழந்து இருத்தல் இன்பம்!
இரவில் வானில் நீந்தும் மீன்கள்
வரவில் இதயம் மூழ்கிக் களிக்கும்.
விசும்பும் மதியும் கதிரும் காற்றும்
புள்ளும் மற்றும் இருக்கும் அனைத்தும்
படைப்பின் திறனை பறையே சாற்றும்.
இன்ப வெள்ளம் மடையை உடைக்கும்.
கூகைகள் உலாவிடும் நள்யாமப் பொழுதும்
அகத்தினில் உவப்பினை ஏற்றி வைத்திடும்.
உறவினை உதறி உண்மை அறிதல்
துறவென ஆயிடும் அதனால் அதனை
ஏற்றிடேன் ஆனால் உள் இருந்தே
உண்மை காணலே சிறந்ததோ அறியேன்.
எவ்விதம் இருப்பின் உண்மை அறிவேன்.
உளையும் உளத்தின் உளைவை எவ்விதம்
தணிப்பேன் தணித்துப் பதிலை அறிவேன்?
9. பாடல்: ஆசை - வ.ந.கிரிதரன்
அர்த்த ராத்திரியில்
அண்ணாந்து ஆகாயம்
பார்ப்பேன். அகமிழப்பேன்.
அடியேனின் வழக்கமாகும்.
கருமைகளில் வெளிகளில்
கண் சிமிட்டும் சுடர்ப் பெண்கள்
பேரழகில் மனதொன்றிப்
பித்தனாகிக் கிடந்திடுவேன்.
நத்துக்கள் கத்திவிடும்
நள்ளிரவில் எனை மறந்தே
சித்தம் மறப்பேன்.
சொக்கி இருப்பேன்.
பரந்துவரும் அமைதியிலே
பரவி வரும் பல்லிகளின்
மெல்லொலிகள் கேட்பேன்.
பைத்தியமாய்ப் படுத்திருப்பேன்.
இயற்கையின் பேரழகில்
இதயம் பறிகொடுப்பேன்.
இவ்விதம் இருப்பதென்றால்
அடியேனின் இஷ்ட்டமாகும்.
10. பாடல்: தனிமைச் சாம்ராஜ்யத்துச் சுதந்திரப் பறவை. - வ.ந.கிரிதரன் -
தனிமைகளின் சாம்ராஜ்யங்களில்
கட்டுண்டு கிடந்திடுவேன்.
அடிமையாகவா?
ஆண்டானாகவா?
பூரணம் நிறைந்ததொரு சுதந்திரப்
பறவையாகவா?
இசை பாடிடுமெழிற் புள்ளாகவா?
கட்டுக்களற்ற உலகம்.
கவலைகள் இல்லை.
சட்டங்களற்ற உலகம்.
சோகங்கள் இல்லை.
ஒளித்தோழர்கள் வெட்கி
ஒளிப்பர் என் பின்னே.
பால் வீதிகளில்
பறந்து மீள்வேன்.
பெருமிதம் பொங்கும்.
நோக்கங்கள் விளங்கும் வாழ்வு.
தாக்கங்கள் இல்லை தானே.
ஏக்கங்கள் இல்லை தா\னே.
தனிமைகளின் சாம்ராஜ்யங்களில்
கட்டுண்டு கிடந்திடுவேன்.
அடிமையாகவா?
ஆண்டானாகவா?
பூரணம் நிறைந்ததொரு சுதந்திரப்
பறவையாகவா?
இசை பாடிடுமெழிற் புள்ளாகவா?
11. கண்ணா, காலவெளி நாம்! - வ.ந.கிரிதரன் -
கண்ணா,
சொல்லவிந்து ஊர் துஞ்சும்
நள்யாமப் பொழுதுகளில்
உன் நினைவால் வாடுகின்றேன்.
எனையே நான் சாடுகின்றேன்.
கண்ணா
முதற் பார்வையில் மயங்கினேன்.
அதற்காகவே இன்று வாழ்கின்றேன்.
எதற்காக இந்தச் சந்திப்பு?
எதற்காக இந்தச் சிந்திப்பு?
கண்ணா,
பொழுதெல்லாம் உன் நினைப்பு.
எழுமே நெஞ்சினில் உன் வனப்பு.
வாழ்வதெல்லாம் உனக்காகத் தானே.
வீழ்வதும் உன்னுடன் தான்.
கண்ணா,
விரிவானில் தொலைதூரம் நீந்திடுவோம்.
எரிசுடர் வெளியெல்லாம் பூந்திடுவோம்.
நட்சத்திரத் தோழருடன் ஆடிடுவோம்.
நிலவுப் பெண்ணுடன் பாடிடுவோம்.
கண்ணா,
காலம் நீயென்றால் , வெளி நானன்றோ.
வெளி நீயென்றால், காலம் நானன்றோ.
காலவெளி நாமன்றோ கண்ணா.
காலவெளி நாமன்றொ கண்ணா.
12. நான் பிரபஞ்சத்துக் குழந்தை - வ.ந.கிரிதரன்
நான் பிரபஞ்சத்துக் குழந்தை
நான் பிரபஞ்சமெங்கும் அலைவேன்.
நான் பிரபஞ்சமெங்கும் திரிவேன்.
நான் பிரபஞ்சத்துக் குழந்தை.
நட்சத்திரங்கள் கண்டு மகிழ்வேன்.
நர்த்தனமிடுவேன். நகைப்பேன்.
நிலாக் கண்டு மகிழ்வேன்.
நிலவொளியில் குளிப்பேன்.
கும்மாளம்
அடிப்பேன்.
காலவெளிக் குழந்தை நான்.
காலவெளியின் பகுதி நான்.
காலவெளியாய்க்
களிப்பேன். மிகவும்
களிப்பேன்.
13. நெஞ்சில் நிறைந்தாய் கண்ணம்மா - வ.ந.கிரிதரன் -
அதிகாலை நேரம் கண்ணம்மா
ஆடி , அசைந்து வருவாய் கண்ணம்மா.
மெல்லிருளில் தண் நிலவாக
மெதுவாக நடந்து வருவாய் கண்ணம்மா.
மார்புற புத்தகம் தாங்கி
மண் நோக்கி நடந்து வருவாய் கண்ணம்மா.
மண்பார்த்த போதுமுன் முகத்தில்
முறுவல் ஓடிமறையும் கண்ணம்மா.
காதலுக்கு அர்த்தம் தந்தாய் கண்ணம்மா.
களிப்பால் உள்ளம் துள்ள வைத்தாய் கண்ணம்மா.
நினைவில் நிலைத்து நிற்பாய் கண்ணம்மா.
நெஞ்சில் நிறைந்து நிற்பாய் கண்ணம்மா.
14. பாடல்; யாழ் இந்து நினைவுகள் - வ.ந.கிரிதரன் -
வானம் தெரியும் ஜன்னல்.பார்த்தபடி
மோனத்தில் ஆழ்ந்திருக்கின்றேன்.
ஆழ்ந்தபடி அசை போடுகின்றேன்.
அன்று நான் படித்த யாழ் இந்துவை.
யாழ் இந்துவென்றால் பல நினைவு.
யாழ் இந்துவென்றால் பல நினைவு.
விளையாட்டு மைதானத்தில் நடந்த போட்டிகள்
வலம் வரும் நினைவுச் சுழலில்.
துடுப்பெடுத்தாட்டம் , உதைபந்தாட்டம்
இரண்டுமே இன்பம் தந்த
இனிய நாட்கள்.
குகன், சூரியின் ஹிட்ஸ்
வேகப்பந்து வீச்சாளன் நிருத்தானந்தன்
வசந்தன் டட்டடாங்
கீப்பர் புவிராஜசிங்கம், பாபு,
கோல் கீப்பர் தில்லை,
நீளம் பாய்தலில்,
நீண்ட தூரம் shot put
ஈட்டி எறிதலில்
இன்றும்
நினைவில் நிற்கும்
நரேனின் சாதனைகள்.
விமலதாசனின் டொச்சிங்
வியக்க வைக்கும் கண்ணாடி ராஜேந்திரன்
வேகத்துடன் அடிக்கும் கோல்கள்
மறக்க முடியுமா?
மறக்க முடியுமா?
சிறகடிக்கும் நினைவில்
கிறங்க வைக்கும் ஆளுமைகள்.
சந்தியாப்பிள்ளை
சிவஞான சுந்தரம்
சுந்தரதாஸ் , மரியதாஸ்
சபாலிங்கம்,
சமயச் சோமர்,
சோமசேகர சுந்தரம்,
கனகரத்தினம்,
கெமிஸ்றி முத்தர்
ஆறுமுகசாமி,
அமைதிமிகு துரைராஜா,
குமாரசாமி
புண்ணியமூர்த்தி
படிப்பிக்கும் பாங்கு.
மகேஸ்வரன், மகேந்திரன்
மகேசன்
சிவராசா, சிவராமலிங்கம்
கந்தப்பிள்ளை,
கணபதிப்பிள்ளை
மறக்க முடியாத மாஸ்டர்கள்.
மறக்க முடியாத மாஸ்டர்கள்.
சொக்கன் , தேவன்
செங்கை ஆழியான்
செம்பியன் செல்வன்
சுதாராஜ்
என்று எழுத்தாளர் படித்த பள்ளி.
எம் நினைவில் நிற்கும் பள்ளி.
குமாராசாமி ஹோல், அருகில்
கிறங்க வைக்கும் ரட்னவாசா
விளையாட்டு மைதானத்து வைரவர்
பழைய மாணவன் சீனியின்
பாத யாத்திரை, கதிர்காமத்துப்
பாத யாத்திரையும் தீக்குளிப்பும்
நினைவில் சிறகடிக்கும் யாழ் இந்து
நினைவில் கிறங்க வைக்கும் யாழ் இந்து
எங்கள் காலத்து யாழ் இந்து நினைவுகளில்
இன்று மூழ்கையில்
விளைவது இன்பமே.
விளைவது இன்பமே.
வானம் தெரியும் ஜன்னல்.பார்த்தபடி
மோனத்தில் ஆழ்ந்திருக்கின்றேன்.
ஆழ்ந்தபடி அசை போடுகின்றேன்.
அன்று நான் படித்த யாழ் இந்துவை.
No comments:
Post a Comment