Thursday, July 18, 2024

கவிதை; இருப்பதிகாரம் - வ.ந.கிரிதரன் -



[ இசை & குரல் - AI Suno |  யு டியூப்பில் கேட்க - https://www.youtube.com/watch?v=cYCHSzs3LdQ ]
 
கவிதை; இருப்பதிகாரம் - வ.ந.கிரிதரன் -
 
வானினை நிலவினை வரையினை மடுவினை
தேனினை யொத்த சொல்லினை உதிர்க்கும்
அணங்கினை அகன்ற இடையினைத் தனத்தினை
மீறிட முடியா சிந்தையை மேலும்
தேனிசை சிற்பம் சித்திரம் கலைகள்
மொழியும் இனமும் மண்ணும் பொன்னும்
குதலைக் குறும்பும் அன்பும் சிரிப்பும்
ஆட்டியே வைக்கும் மீட்சி யுண்டா?
என்றென் துயரும் பிடிப்பும் சாகும்?

விரியும் அண்டம் அடக்கும் அண்டம்
அதனை அடக்க மற்றோர் அண்டம்.
வெறுமை வெளியில் பொருளின் நடனம்.
இதற்குள் துளியெனக் கரையும் இருப்பு.
இதுவும் நிசமா? நிழலா? கனவா?
நனவும் கனவா? கனவும் நனவா?விடைகள் நாடித் தொடரும் வினாக்கள்.
விடைகள் அற்ற வினாக்கள்! வினாக்கள்!

இருப்பு அறிந்திட தேடித் தொடரும்
இருப்பே எந்தன் வாழ்வே வாழ்வே!
இதனை அறிதல் புரிதல் எவ்விதம்?

நூலினைக் குருவினை அறிவினை உணர்வினைக்
கோளினைச் சுடரினை வெளியினை விரிவினை
வாழ்வினைத் தாழ்வினைத் துயரினை மகிழ்வினை
அறிதல் எவ்விதம்? புரிதல் எவ்விதம்?

கலவிக் குலாவி இருந்திடும் அவைகளாய்
இருந்தே இருப்பின் இவ்வித இடரெலாம்
இல்லாது ஒழிந்து இருந்தன்றோ இருக்கும்?

செயற்கை சமைத்திட சிந்தை தந்த
செயலினால் தானோ செகத்தினில் துயரோ?

அன்பினை ஆக்கிட அறிவினைப் பாவிக்க
என்னவர் உன்னவர் நம்மவர் மறந்திட்ட
பண்பினால் தானோ பாரினில் பகைமை?

தாமரை இலைமேல் தண்ணீர் போன்று
தரணியில் வாழ்ந்திடும் பக்குவம் கொண்டு
நானினைச் சித்தினை அசித்தினை அறிந்து
விருப்பு விட்டு வாழ்ந்திடும் தன்மை
வந்திடு மென்றால் அதுவே போதும்.

அந்திக் கதிரின் சிவப்பில் நாளும்
சிந்தை இழந்து இருத்தல் இன்பம்!

இரவில் வானில் நீந்தும் மீன்கள்
வரவில் இதயம் மூழ்கிக் களிக்கும்.
விசும்பும் மதியும் கதிரும் காற்றும்
புள்ளும் மற்றும் இருக்கும் அனைத்தும்
படைப்பின் திறனை பறையே சாற்றும்.

இன்ப வெள்ளம் மடையை உடைக்கும்.
கூகைகள் உலாவிடும் நள்யாமப் பொழுதும்
அகத்தினில் உவப்பினை ஏற்றி வைத்திடும்.

உறவினை உதறி உண்மை அறிதல்
துறவென ஆயிடும் அதனால் அதனை
ஏற்றிடேன் ஆனால் உள் இருந்தே
உண்மை காணலே சிறந்ததோ அறியேன்.
எவ்விதம் இருப்பின் உண்மை அறிவேன்.
உளையும்  உளத்தின் உளைவை எவ்விதம்
தணிப்பேன் தணித்துப் பதிலை அறிவேன்?

No comments:

தொடர் நாவல்: மனக்கண் (6) - டாக்டர் சுரேஷ்! - அ.ந.கந்தசாமி -

6-ம் அத்தியாயம்: டாக்டர் சுரேஷ்  ஸ்ரீதர் “எஸ்கிமோ”வுக்கு முன்னால் பத்மாவைப் பிரிந்து டாக்ஸி மூலம் ஹோர்ட்டன் பிளேசுக்குப் புறப்பட்டவன், திடீர...

பிரபலமான பதிவுகள்