Wednesday, July 24, 2024

கவிதை: காலவெளிப்பயணியின் நெடும் பயணம் - வ.ந.கிரிதரன் -



- இசை & குரல் : AI SUNO -

'ஓவியா பதிப்பக' உரிமையாளரும், எழுத்தாளருமான வதிலைப்பிரபா அவர்கள் வெளியிட்டு வரும் 'மகாகவி' சஞ்சிகையின் 'திசம்பர்' 2017 பன்னாட்டிதற் சிறப்பிதழில் வெளியான எனது கவிதை. எனது 'ஒரு நகரத்து மனிதனின் புலம்பல்' கவிதைத்தொகுப்பிலும் உள்ளது. YouTube இல் கேட்டு மகிழ - https://www.youtube.com/watch?v=eb5DagT_0lA

காலவெளிப்பயணியின் நெடும் பயணம் - வ.ந.கிரிதரன் -

என் வெப்ப மண்ணை,
மேல் விரியும்
இரவுவானை,
சுடரை, நிலவை
நான் நீங்கியது
நேற்றுத்தான் போல்
நினைவில் நிற்கிறது.

இன்று நிழலமர்ந்து
நினைவு அசை போடுமொரு
மாடுமாகினேன்.

ஒட்டகமாய், மாடாய்,
நள்யாமத்து நத்தாய்,
சுமைமிகு அத்திரியாய்,
உறுமீன் தேடி
வாடி நிற்குமொரு கொக்காய்,
இரைக்காய்ப் பொறுமைமிகு
முதலையாய்,
துருவத்துக் கட்டடக்காட்டுக்
கான் உயிருமாகினேன்.முடிவற்ற நெடும் பயணம்!

தங்குதற்கும், ஆறுதற்கும்
தருணங்களற்ற நெடும் பயணம்!

என்று முடியும்? எங்கு முடியும்?

நம்பிக்கையினை
நானின்னும் இழக்கவில்லை.

வழிச்சோலைகள், நீர்நிலைகள்
துருவப்பாலை வசங்கள் ஆயின..
பேய்த்தேர் எனவே போயின.
இருந்தும் சிந்தையின்னும்
இழக்கவில்லை நான்.

காலவெளிக் குழந்தை நான்
கண்ட கனவுகள்
நனவிடைதோய்தற் துளிகளாயின.
துருவப்பாலை ஒட்டகம் நான்.
இன்றோ சுடர் தேடுமொரு
துருவத்துப் பரதேசி!

அந்தமிலாவிருப்பு
நம்பிக்கைக் கனவுகள்
மிகப்பயணிக்குமொரு
காலவெளிப்பயணி
நான். பயணிக்கின்றேன்.
பயணிக்கின்றேன். பயணிக்கின்றேன்

No comments:

புகலிடத்து எழுத்தாளர்களே! ஒரு வேண்டுகோள்!

புகலிடத்துக் கலை,இலக்கியவாதிகள் பலர் தனிப்பட்ட தாக்குதல்களில் நேரத்தைச் செலவழிப்பதற்குப் பதில் ஆக்கபூர்வமான வழிகளில் தம் பொன்னான நேரத்தைச் ச...

பிரபலமான பதிவுகள்