- இசை & குரல்: AI SUNO -
பதிவுகள்.காம் வெளியீடான 'ஒரு நகரத்து மனிதனின் புலம்பல்' கவிதைத் தொகுப்பில் இடம் பெற்றுள்ள இக்கவிதை. ஒரு சில மாற்றங்களுடன் பாடலாக்கப்பட்டுள்ளது. யு டியூப்பில் கேட்க - https://www.youtube.com/watch?v=DQRDqnJPwUU
காலவெளிச் சட்டங்களைக் கோத்து உருவானது
இந்த இருப்பு கண்ணம்மா!
இவ்விருப்பும் ஒரு காலவெளிப் படம்
என்பதையுணர்வாயாயடி நீ கண்ணம்மா.
என்னாசை ஒன்று உள்ளதென்பேன்.
என்னவென்று நீ அறியின் நகைக்கக்கூடும்.
கண்ணம்மா, நகைக்கக் கூடும்
அப்போது கண்ணம்மா! அதிகாலைநேரம்.
ஆடியசைந்து நீ வந்தாய் பொழுதின் எழிலென.
அது நினைவிருக்கிறதா? உனக்கு.
அது நினைவிருக்கிறது எனக்கு கண்ணம்மா..
மார்புற நூல்தாங்கி, முகம் தாழ்த்தி
நிலம்பார்த்து நடந்து வந்தாய்.
அது உன் பாணி கண்ணம்மா.
எதிரில் காட்சிகள் தெரிவதெப்படி உனக்கு
என்று வியந்து நிற்பேன் கண்ணம்மா.
இருபுறம் பிரிகுழல் இடைவரை
இருந்தசையும். ,
பொட்டிட்ட வதனத்தில் நகையேந்தி நீ வருவாய்.
பொழுது சிறக்கும் நடந்து வரும் உன் எழிலில்
கண்ணம்மா,
வழக்கம்போல் அசைந்து சென்ற பொழுதொன்றில்
அதிகாலைப்பொழுதொன்றில்.
சந்தி சென்று திரும்புகையில்
ஓரப்பார்வைக்கணை தொடுத்தாய் கண்ணம்மா.
அக்கணத்தைச் சிறைப்படுத்தி
ஆழ்மனத்தினாழத்தே
பத்திரப்படுத்தி வைத்துள்ளேன்
கண்ணம்மா.
அதற்கு எப்போதுமில்லையடி
விடுதலை. ஆயுள் தண்டனைதான்.
திரையிலோடிவிட்ட காட்சிகளை மீண்டும்
'ஓடவிட்டு, ஓடிவிட்ட காட்சிகளில் ஒன்றிக்
கிடப்பதில்லையா கண்ணம்மா!
காலவெளிக் காட்சிகளை அது ஓடவிட்டாலென்ன?
ஆம்! மீண்டும் ஓடவிட்டாலென்ன?
என்று நாம் சிந்திப்பதுண்டு கண்ணம்மா! இல்லையா.
குவாண்டத்திரையில் இருப்புக்குப்
பல நிலைகள் ஓரு
கணத்தில் கண்ணம்மா.
காலவெளித்திரையில்
காலவெளிச்சட்டங்களை இருந்த
காலம் நோக்கி ஓட்டிடும் ஆற்றல்
கை வரப்பெற்றவன் இவன் என்பதை அறியின்
அதிசயித்துப் போவாயடி கண்ணம்மா,
காலவெளித்திரையில்
காலவெளிக்காட்டி இயந்திரத்தை
கையாள்வதில் வல்லவன் இவன் கண்ணம்மா.
காலவெளிக்காட்டி வல்லுனன் இவன் கண்ணம்மா.
No comments:
Post a Comment