Wednesday, July 10, 2024

கவிதை: எங்கோயிருக்கும் ஒரு கிரகவாசிக்கு - வ.ந.கிரிதரன் -


நான் பிரபஞ்சத்தில் அல்லது பிரபஞ்சங்களில் எம்மையொத்த, கீழான அல்லது மேலான உயிர்கள் இருக்கும்  என்பதைத் திடமாக நம்புபவன். அவற்றின் பரிமாணங்கள் எம்மைப்போல் முப்பரிமாணங்களுக்குள் அகப்பட்டவையாக இருக்கத்தேவையில்லை என்பதையும் நம்புகின்றேன். அவை நாம் உருவாக்கப்பட்ட இரசாயனப்பொருட்கள் மூலம் உருவாகியிருக்க வேண்டிய அவசியமும் இல்லையென்பதையும் திடமாக நம்புபவன்.

'எங்கோயிருக்கும் ஒரு கிரகவாசிக்கு' என்னுமிக் கவிதை எண்பதுகளின் ஆரம்பத்தில் என் குறிப்பேடொன்றில் முதன் முதலில் எழுதப்பட்டது. கனடாவிலிருந்து  வெளியான தாயகம் பத்திரிகையில் வெளியானது. பின்னர் எனது கவிதைத்தொகுதிகளான எழுக அதிமானுடா, ஒரு நகரத்து மனிதனின் புலம்பல் ஆகிய தொகுப்புகளிலும் உள்ளடக்கப்பட்டுள்ளது.


எங்கோயிருக்கும் ஒரு கிரகவாசிக்கு - வ.ந.கிரிதரன்  -

முகமில்லாத மனிதர்களிற்காகவும்
விழியில்லாத உருவங்களிற்காகவும்
கவிதைத் தூது விடுப்பர். ஆயின், யான்
அவர்களிற்கல்ல நண்பா! உனக்குத்தான்
அனுப்புகின்றேனிச் செய்திதனை.
உன்னை நான் பார்த்ததில்லை.
பார்க்கப் போவதுமில்லை.
உனக்கும் எனக்குமிடையிலோ
ஒளியாண்டுச் தடைச்சுவர்கள்.
‘காலத்தின் மாய ‘ வேடங்கள்.

ஆயின் நான் மனந்தளர்ந்திடவில்லை.
மனந்தளர்ந்திடவில்லை.
மனந்தளர்ந்திடவில்லை.
நிச்சயமாய் நானுனை நம்புகின்றேன். எங்கேனுமோாிடத்தில்
நீ நிச்சயம் வாழ்ந்துகொண்டு தானிருக்கின்றாய். ஆம்!
வாழ்ந்துகொண்டு தானிருக்கின்றாய்.
காடுகளில் , குகைகளீல் அல்லது கூதற்குளிர்படர்வரைகளில்
உன்
காலத்தின் முதற்படியில்…
அல்லது
விண்வெளியில் கொக்காித்து
வீங்கிக் கிடக்கும் மமதையிலே..

சிலவேளை
போர்களினாலுந்தன் பூதலந்தனைப்
பொசுக்கிச் சிதைத்தபடி அறியாமையில்…

ஒருவேளை
அதியுயர் மனத்தன்மை பெற்றதொரு
அற்புதவுயிராய்…

ஆயினும் உன்னிடம் நான்
அறிய விரும்புவது ஒன்றினையே..
‘புாியாத புதிர்தனைப் புாிந்தவனாய்
நீயிருப்பின்
பகர்ந்திடு.

காலத்தை நீ வென்றனையோ ?
அவ்வாறெனின்
அதையெனக்குப் பகர்ந்திடு.
பின் நீயே
நம்மவாின் கடவுள்.
காலத்தை கடந்தவர் தேவர், கடவுளென்பர்
நம்மவர்.

இன்னுமொன்று கேட்பேன்.
இயலுமென்றா லியம்பிடு.
இவ்வாழ்வில் அர்த்தமுண்டோ ?
இதனை நீ அறிந்தனையோ ?
உண்டெனில் அர்த்தம் தானென்ன ?

சிலர்
அர்த்தமற்ற வாழ்வென்பர்.
யான்
அவ்வாறல்லன்.

அர்த்தம்தனை நம்புபவன். ஆயினும்
அதனையிதுவரை அறிந்திலேன்.
அதனை நீ அறிந்திடின்
அதனையிங்கு விளக்கிடு.

அது போதும்!

அது போதும்!

No comments:

வ.ந.கிரிதரனின் கணையாழி சஞ்சிகைக் கட்டுரைகள்

    கணையாழி சஞ்சிகைக்கு எப்பொழுதும் என் இதயத்தில் நன்றி கலந்த உணர்வுடன் கூடியதோர் இடமிருக்கும். கணையாழி சஞ்சிகை பெருந்தொற்றுக் காலகட்டத்தை ...

பிரபலமான பதிவுகள்