Monday, July 8, 2024

எழுத்தாளர் அருண்மொழிவர்மனின் எதிர்வினையும் அதற்கான என் பதிலும்... வ.ந.கிரிதரன் -


எழுத்தாளர் அருண்மொழிவர்மன் அவரது 'வ.ந.கிரிதரன் கட்டுரைகள்' என்னும் என் கட்டுரைத்தொகுதி பற்றி எழுதிய விமர்சனத்துக்கு நான் எழுதிய எதிர்வினைகளுக்குப் பதிலளித்து இன்னுமோர் எதிர்வினையொன்றினை ஆற்றியிருந்தார். நான் என் முதல் எதிர்வினையில் பாரதியாரை அவரது ஆன்மீகக் கருத்துகளூடு, அவரது வர்க்க விடுதலை, பெண் விடுதலை, வர்ண விடுதலை, மானுட விடுதலை, இருப்பு பற்றிய தேடல் போன்ற நிலைப்பாடுகளை அணுகுபவன் என்றும், அவனது முரண்பாடுகள் அவனது அறிவுத்தாகமெடுத்தலையும் விளைவுகள் என்றும் குறிப்பிட்டிருந்தேன். அதனாலேயே என் நூலை என்னை மிகவும் பாதித்தவர்களில் ஒருவரான  அவருக்குச் சமர்ப்பித்தேன் என்பதையும் எடுத்துரைத்திருந்தேன்.

இதற்கான தனது இரண்டாவது எதிர்வினையில் அருண்மொழிவர்மன் பாரதியாரின் இன்னுமொரு கட்டுரையில் பின்வருமாறு கூறியிருப்பார்: "பாரதி “இந்தியா”வில் எழுதி பின்னர் பாரதி விஜயா கட்டுரைகள் என்ற தொகுப்பில் இடம்பெற்றுள்ள “காலாடியில் பிரதிஷ்டை” என்ற கட்டுரை பாரதியின் நிலைப்பாடுகளைச் சுட்டிக்காட்டுகின்றது.  பெப்ரவரி 26, 1910 இல் எழுதப்பட்ட இந்தக் கட்டுரையில் பாரதி குறிப்பிடும் "ஶ்ரீ சிருங்ககிரி ஸ்வாமி உபன்னியாசத்தில் கேட்டுக்கொண்டது போல் நாமெல்லாரும் ஸநாதன தர்மத்தை ஸ்தாபிக்க பெருமுயற்சி செய்யவேண்டும்.” என்னும் கூற்றை எடுத்துக்காட்டி 'சனாதனத்தைக் காக்கவேண்டும், ஆரிய தர்மத்தைக் காக்கவேண்டும் என்கிற வர்ண உணர்வு கொண்ட மதவாதியாகவே பாரதியை இந்தக் கட்டுரை வெளிப்படுத்துகின்றது.' என்று கூறுகின்றார்.

இங்கு தற்போது நாம் நடைமுறையில் இருக்கும் வர்ணப்பிரிவுகளைப்பின்பற்றும் , அதாவது பிறப்பால் ஒருவரது வர்ணம் தீர்மானிக்கப்பட்டு விடுகிறது என்னும் அடிப்படையில் போதிக்கும் மதவாதிகளில் ஒருவராக அருண்மொழிவர்மன் பாரதியாரை இனங்காண்கின்றார். இங்குதான் அருண்மொழிவர்மன் தவறி விடுவதாகக் கருதுகின்றேன்.


பாரதியார் வேதாகமங்களைக் கற்றவர். அவற்றின் அடிப்படையில் அவரது ஆன்மீகக்கருத்துகளிருந்தன. பாரதியார் வர்ண விடுதலைக்கெதிராகப் பாடியவர். மதங்களில் நிலவும் மூடக் கருத்துகளை எதிர்த்தவர். இந்நிலையில் அவர் எவ்விதம் இவ்விதம் பிறப்பால் ஒருவரின் வர்ணப்பிரிவுகளைப் போதிக்கும் வர்ணப்பிரிவுகளை ஆதரிக்கலாம் என்றொரு கேள்வி பலருக்கும் எழலாம். அருண்மொழிவர்மனுக்கும் எழுந்தது. நியாயமானது. ஆனால் பாரதியார் தான் கற்ற வேத நூல்களிலிருந்து அறிந்த , புரிந்த சனாதனத் தர்மம் என்பது பிறப்பால் ஒருவரின் வர்ணத்தைத் தீர்மானித்து விடுகின்றது என்பது அல்ல என்பதை அருண்மொழிவர்மன புரிந்துகொள்ளத்  தவறியதே அவரது பாரதி பற்றிய நிலைப்பாட்டுக்குக் காரணம்.

பாரதியார் அறிந்த சனாதன தர்மத்தில் குறிப்பிடப்படும் வர்ணப்பிரிவுகள் என்பது ஒருவரின்  பிறப்பால் ஏற்படுவதல்ல. வர்த்தகர், கல்விமான்கள், தொழிலாளர்கள், போர்வீரர்கள் எனப் பிரிவு பட்டிருக்கும் நான்கு வர்ணப்பிரிவுகள் பற்றி பாரதியார் 'சமூகம்- நாற்குலம்' என்னும் கட்டுரையில் திலகரின் கூற்றை எடுத்துக்காட்டி பின்வருமாறு கூறுவார்:

" திலகர் சொன்னார்:- "பழைய காலத்து நான்கு வர்ணப் பிரிவுக்கும் இப்போதுள்ள ஜாதி வேற்றுமைக்கும் பேதமிருக்கிறது. திருஷ்டாந்தமாக, இப்போது ஒரே பந்தியில்இருந்துண்ண விரும்பாதிருத்தல் சாதிப் பிரிவுக்கு லக்ஷணம் என்று பலர் நினைக்கிறார்கள். பழைய காலத்து விஷயம் இப்படியில்லை.

''நான்கு வர்ணங்கள் பிறப்பினாலேயல்ல, குலத்தாலும் தொழிலாலும் உண்டாயின'' என்று கீதை சொல்லுகிறது. அதன்படி பார்த்தால் இப்போது நமக்குள் க்ஷத்திரியர்எங்கே இருக்கிறார்கள்?நம்மைக் காப்போர் ஆங்கிலேயர்கள்;ஹிந்துக்களுள் க்ஷத்திரியரைக் காணோம். இந்தக் கான்பூர் பெரிய வியாபார ஸ்தலம். ஆனால், இங்குள்ள வைசியர் பிற தேசத்து வியாபாரிகளின் வசத்தில் நிற்கிறார்கள். செல்வத் தலைமை நமக்கில்லை. இப்போதுள்ள பிராமணர் தாமேதேசத்தின் மூளையென்று சொல்லுகிறார்கள். ஆனால், இந்த மூளை மண்ணடைந்துபோய், நாம் வெளியிலிருந்து அதிக மூளை இறக்குமதி செய்யும்படி நேரிட்டிருக்கிறது."

"நான்கு வர்ணத்தாருக்குரிய நால்வகைத் தொழில்களும் ஹிந்துக்களல்லாத பிறர்நியமனப்படி நடக்கின்றன. நாமெல்லோரும் தொண்டர் நிலையிலே இருக்கிறோம்.தேசம் கெட்ட ஸ்திதியிலே இருக்கிறது. உங்களுடம்பில் பிராமணரத்தம் ஓடுவதாகவும் க்ஷத்திரிய ரத்தம் ஓடுவதாகவும் நீங்கள் வாயினால் சொல்லலாம். ஆனால், உங்களுடைய வாழ்க்கை அப்படி இல்லை."

'சமூகம் - பிராமணன் யார்' என்னும் கட்டுரையில் பின்வருமாறு கூறுவார்;

" பிறப்புப் பற்றி பிராமணன் என்று கொள்வோமென்றால்,அதுவுமன்று. மனிதப்பிறவியற்ற ஐந்துக்களிடமிருந்துகூடப் பல ரிஷிகள் பிறந்ததாகக் கதைகளுண்டு. ரிஷ்யசிருங்கர் மானிலிருந்தும்,ஜாம்பூகர் நரியிலிருந்தும், வால்மீகர் புற்றிலிருந்தும், கௌதமர் முயல் முதுகிலிருந்தும் பிறந்ததாகக் கதை கேட்டிருக்கிறோம். அது போக, வஸிஷ்டர் ஊர்வசி வயிற்றில் பிறந்தவர்; வியாஸர் மீன் வலைச்சியின் வயிற்றில் பிறந்தவர்; அகஸ்தியர் கலசத்திலே பிறந்ததாகச் சொல்லுவார்கள்."


இக்கட்டுரையில் மேலும்  அவர் மானுட சமூகத்துக்குத் தொழில் அடிப்படையிலான நான்கு பிரிவுகளும் தேவை என்று கருதுகின்றார் அவர் என்பதைத்தான் அறிய முடிகின்றது. இப்பிரிவுகள் எல்லாம் பிறப்பால் ஏற்படுவதல்ல. யாரும் மேற்படி பிரிவுகளுக்கேற்ற விடயங்களில் பயிற்சி எடுத்து அப்பிரிவுகளில் குறிப்பிடப்படும் வர்ணத்துக்குரியவராக ஆகலாம். இதனைத்தான் வேத நூல்கள் கூறுகின்றன. இப்பிரிவுகளை உள்ளடக்கிய சனாதன தர்மத்தைத்தான் பாரதியார் நம்புகின்றார். யாரும் பிராமணன் ஆகலாம், யாரும் சத்திரியன் ஆகலாம், யாரும் வர்த்தகன் ஆகலாம்., யாரும் சூத்திரன் அதாவது தொழிலாளி ஆகலாம். நாம் வாழும் இன்றுள்ள மானுட சமூகத்தில் இவ்விதம்தானே பிரிவுகள் உள்ளன. இவற்றைத்தான் வேத நூல்கள் கூறுகின்றன என்று பாரதியார் கருதுகின்றார். மேற்படி 'சமூகம் - பிராமணன் யார்' என்னும் கட்டுரையில் வரும் கீழ்வரும் கூற்றும் பாரதியாரின் இத்தகைய மனநிலையையே வெளிப்படுத்துகின்றன:

"பிராமணராக வேண்டுவோர் மேற்கூறப்பட்ட நிலைமையைப் பெற முயற்சி செய்யக்கடவர். க்ஷத்திரியர், வைசியர், சூத்திரர் முதலிய மற்ற லௌகிக வர்ணங்களுக்கும்இதுபோலவே தக்கவாறு லக்ஷணங்கள் அமைத்துக் கொள்க. அவ்வவ்விலக்கணங்கள் பொருந்தியவர்களே அவ்வவ் வருணத்தின்ரென்று மதிக்கத்தக்கவர்கள், அந்த. இலக்கணங்கள்இல்லாதவர்கள் அவற்றையடைய முயற்சி செய்யவேண்டும். போலீஸ் வேவுத்தொழில் செய்பவன் பிராமணன் ஆகமாட்டான்.குமாஸ்தா வேலை செய்பவன் க்ஷத்திரியன் ஆகமாட்டான். சோம்பேறியாக முன்னோர் வைத்துவிட்டுப்போன பொருளை யழித்துத் தின்பவன் வைசியன் ஆகமாட்டான். கைத்தொழில்களையெல்லாம் இறக்கக் கொடுத்துவிட்டுச் சோற்றுக்குக் கஷ்டமடைவோர் சூத்திரர் ஆகமாட்டார்கள். இவர்களெல்லாம் மேம்பாடுடைய ஆரிய வர்ணங்கள் நான்கிற்கும் புறம்பாகிய நீசக் கூட்டத்தார். நமது தேசம் முன்போலக்கீர்த்திக்கு வரவேண்டுமானால், உண்மையான வகுப்புகள் ஏற்படவேண்டும். பொய்வகுப்புகளும் போலிப் பெருமைகளும் நசிக்க வேண்டும். இதுநம்முடைய வேத சாஸ்திரங்களின் கருத்து."

பாரதியார் காணும் சனாதனதர்ம வர்ணப்பிரிவுகள் வேறு. இன்றுள்ள மானுட சமூகத்தில் அருண்மொழிவர்மன் காணும் சனாதனத் தர்ம வர்ணப்பிரிவுகள் வேறு. இதனை உணராதனால்தான் அருண்மொழிவர்மன் பாரதியாரை இன்றுள்ள தவறான சனாதன தர்ம வர்ணப்பிரிவுகளின் அடிப்படையில் இனங்காண்கின்றார். அதிர்ச்சி அடைகின்றார்.

இவ்விடயத்தில் பாரதியாரை விரிவாக ஆராய வேண்டும் என்பதே என்னுடைய நிலைப்பாடு. இவ்விதமான பாரதியாரின் சிந்தனை வெளிப்பாடுகள் எல்லாம் பாரதியாரின்  மீதான என் மதிப்பை இன்னும் அதிகரிக்கவே செய்கின்றன.

No comments:

வ.ந.கிரிதரனின் கணையாழி சஞ்சிகைக் கட்டுரைகள்

    கணையாழி சஞ்சிகைக்கு எப்பொழுதும் என் இதயத்தில் நன்றி கலந்த உணர்வுடன் கூடியதோர் இடமிருக்கும். கணையாழி சஞ்சிகை பெருந்தொற்றுக் காலகட்டத்தை ...

பிரபலமான பதிவுகள்