Monday, July 15, 2024

வ.ந.கிரிதரனின் 'காலவெளி' கண்ணம்மாக் கவிதைகள் (1) - காலவெளிக் கைதிகள்!


காலவெளியை மையமாக வைத்து நான் பல கண்ணம்மாக் கவிதைகள் எழுதியிருக்கின்றேன். இவை வெறும் காதல் கவிதைகள் மட்டும் அல்ல. இருப்பு பற்றிய தேடல் கவிதைகளும் கூடத்தான். வாசித்துப் பாருங்கள். உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ளுங்கள். இக்கவிதைகள் 'பதிவுகள்' இணைய இதழில் வெளியானவை. பதிவுகள்..காம் வெளியீடாக (2023) வெளியான 'ஒரு நகரத்து மனிதனின் புலம்பல்' என்னும் என் கவிதைத்தொகுப்பிலும் உள்ளடங்கியவை.


 

கவிதை: காலவெளிக் கைதிகள்! - வ.ந.கிரிதரன் -

காலவெளியிடையே கண்ணம்மா உன்
கனிமனம் எண்ணி வியக்கின்றேன்.
காலவெளியிடையே கண்ணம்மா
கணமும் பறந்திட விளைகின்றேன்.
காலவெளிச் சிந்திப்பிலே கண்ணம்மா
களித்திட கணமும் எண்ணுகின்றேன்.
சூழலை மீறியே கண்ணம்மா அவன்போல்
சிந்திக்க விரும்புகின்றேன்.
காலமென்றொன்றில்லை கண்ணம்மா.
வெளியும் அவ்வாறே என்றான் கண்ணம்மா.
காலவெளி மட்டுமே கண்ணம்மா இங்கு
உண்மையென்றுரைத்தான்.
அவனறிவின் உச்சம் பற்றி கண்ணம்மா
பிரமித்துப்போகின்றேன்.
மனத்து அசை இன்னும் முடியவில்லை.
எப்பொழுதென்றாயினும் நீ கண்ணம்மா
எவ்விதம் அவனால் முடிந்ததென்று
எண்ணியதுண்டா ?
நான் எண்ணுகின்றேன் எப்பொழுதும் கண்ணம்மா.\
நான் வியந்துகொண்டிருக்கின்றேன் எப்பொழுதும்
கண்ணம்மா..

நான் எண்ணுவேன் எப்பொழுதும் கண்ணம்மா.
நான் வியந்துகொண்டிருப்பேன் எப்பொழுதும் கண்ணம்மா.
காலமற்ற வெளியில்லை கண்ணம்மா.
வெளியற்ற காலமில்லையா சொல்லம்மா.
காலம் நீயென்றால் கண்ணம்மா
வெளி நானன்றோ இல்லையா?
வெளி நானென்றால் கண்ணம்மா
காலம் நீயன்றோ இல்லையா?
காலவெளியன்றோ நாம் கண்ணம்மா!
காலவெளியன்றோ?

காலவெளியாகக் கண்ணம்மா – நாம்
உள்ளதெல்லாம் கண்ணம்மா
உண்மையா கண்ணம்மா? உண்மையா?
காலவெளிக் கோலமன்றோ கண்ணம்மா
ஞாலத்தில் நம்நிலை.
காலவெளிக் கடக்காக் கைதிகளா நாம் கண்ணம்மா?
கைதிகளா நாம்? ஆம்!
காலவெளிக் கைதிகளே நாம் கண்ணம்மா!

No comments:

வ.ந.கிரிதரனின் கணையாழி சஞ்சிகைக் கட்டுரைகள்

    கணையாழி சஞ்சிகைக்கு எப்பொழுதும் என் இதயத்தில் நன்றி கலந்த உணர்வுடன் கூடியதோர் இடமிருக்கும். கணையாழி சஞ்சிகை பெருந்தொற்றுக் காலகட்டத்தை ...

பிரபலமான பதிவுகள்